சிறுகதை-தினம் தினம் தீபாவளி!
‘‘கண்ணா... நாளை காலை மதியும், மாப்பிள்ளையும் வந்திடுவாங்க. உன் பொண்டாட்டியை தயார் செய்ய வேண்டியது உன் வேலை...’’ வாசுகி, மகன் கமலக்கண்ணனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட, அவன் போகும் அன்னையின் முதுகை முறைத்தான். பொண்டாட்டியை தயார் பண்றதாவது? முதலில் அவள் பொண்டாட்டிதானா? கல்யாணமாகி மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. இன்னமும் தானும், அவளும் கணவன் மனைவிதானா என்ற சந்தேகம்தான் அவனுக்கு.இதோ அவர்களுடனேயே திருமணம் ஆனவர்கள்தான் அவனது தங்கை வெண்மதியும், கார்த்திகேயனும். ஆனந்தமாக அவர்களது தலை தீபாவளியைக் கொண்டாட இங்கே வருகிறார்கள்.
கமலக்கண்ணனுக்கும் இதுதான் தலைதீபாவளி. அவனுக்கும் மாமியார் வீட்டிலிருந்து அழைப்பு வந்ததுதான். ஆனால், அவன்தான் வேலை இருப்பதாக மறுத்து விட்டான். அவர்களும் சரியென்று போய்விட்டார்கள். கொஞ்சம்கூட வருத்தமில்லையே என்று வருத்தப்பட்டது கமலக்கண்ணனும், வாசுகியும்தான்.மகளை தீபாவளிக்கு அழைத்துப் போனால் திரும்பவும் இந்த வீட்டிற்குள் நுழைய விடுவார்களோ என்னவோ... என்ற பயமாயிருக்கும். தன் மனைவி வீட்டினரைப் பற்றி உதடு இகழ நினைத்துக் கொண்டான்.
மூன்று மணி் பின் மதிய வெயிலில் திடுமென சாமரத் தென்றல் போலொரு குளிர்ச்சி தோன்ற நிமிர்ந்து பார்த்தவன், அணிந்திருந்த புடவைத் தலைப்பு பூவிதழ் அவிழ்வது போன்ற மென்மையுடன் அசைய, இவனைக் கடந்து போனவளைப் பார்த்தான்.சித்தாரா... அவனது மனைவி. மூன்று மாதங்களுக்கு முன்பு திடீர் விபத்தாக இவன் வாழ்க்கைக்குள் நுழைந்தவள். இகழ்ந்து வளைந்த தன் இதழ்களைக் கவனித்தபடி கடந்தவளைக் கண்டதும் கோணிய இதழ்களைச் சரிப்படுத்திக் கொண்டான். அவள் வீட்டின் பின்புறத் தோட்டத்திற்குச் செல்ல, அவனும் பின் தொடர்ந்தான்.
சின்ன தொட்டியில் குபீரென பூத்திருந்த செவ்வந்திப் பூக்களை சிறு கத்திரி வைத்து கவனமாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தாள். இவன் பின்னாலிருப்பது தெரியாமல் இருக்காது. ஆனாலும் கவனிக்காதது போல் பாவனை. கமலக்கண்ணன் பற்களை சத்தமில்லாமல் நறநறத்துக் கொண்டான்.சித்தாரா இப்படித்தான் இருந்தாள். எங்கேயோ யாருடைய வீட்டிலோ இருப்பது போன்ற உரிமையற்ற விலகலுடனேயே வலம் வந்து கொண்டிருந்தாள். லேசாக தொண்டையைச் செருமிப் பார்த்தான். ம்ஹூம், பலனில்லை.
அம்மா... மனதிற்குள் அம்மாவைத் திட்டினான். திடீரென்று நீங்கள் கூட்டி வந்து மணவறையில் உட்கார வைத்தவள்தானேம்மா இவள்? இவளை சமாதானப்படுத்துவதை நீங்களே செய்ய வேண்டியதுதானே? எதற்கு என்னை இழுக்குறீர்கள்?சித்தாரா கூடை நிறைய பூக்களுடன் திடுமென திரும்பி விட, கமலக்கண்ணன் உரசலைத் தவிர்க்க வேகமாகப் பின்வாங்கினான்.
‘‘என்ன?’’‘‘வ... வந்து... உன்னிடம்... உ...உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்...’’‘‘பேசலாமே! மாடிக்கு போய்விடலாம்...’’அதுதான் பிரச்சனையே!
அவள் மாடியேறத் தொடங்கி விட, கமலக்கண்ணனும் பின் தொடர்ந்தான். முன்னால் சிறு சிட் அவுட், அடுத்து பெரிய அறை, அறையை ஒட்டிய நீள பால்கனி என சகல வசதிகள் கொண்டது அவனது படுக்கையறை. இப்போது தலை தீபாவளிக்கு கணவனோடு வரும் வெண்மதி தாங்கள் ஒரு வாரம் தங்குவதற்கு இந்த அறையே வேண்டுமென்கிறாள். உடனே சரியென்க இது இப்போது கமலக்கண்ணன் அறை மட்டுமில்லையே! அவளிடம் ஒரு வார்த்தை கேட்டுச் சொல்கிறேனேம்மா... போனில் தங்கையிடம் இவன் பேச, ‘‘என்னண்ணா பேச்சு ஒரு மாதிரி மாறியிருக்கிறது...’’ என்றவளின் குரல் தொனி மாறியிருந்தது.
‘‘பொண்டாட்டி பக்கம் போய்விட்டாயா? அதுவும் அவள் பக்கமா?’’ என்றவளின் கேள்விக்கு கமலக்கண்ணனுக்கு எரிச்சல் வந்தது. இவனது இந்த திடீர் திருமணத்தில் தங்கையின் பங்கும் இருக்கிறதே! அதனை இவள் உணரவில்லையே! வாயை இறுக்கிக் கொண்டான்.‘‘மாப்பிள்ளையுடன் வரும்போது உனக்கு நீ கேட்ட ரூம் தயாராக இருக்கும்...’’ போனை கட் செய்தான்.
‘‘நாளை மதியும், மாப்பிள்ளையும் தலை தீபாவளிக்கு வருகின்றனர்...’’ பால்கனி வாசலில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்தாராவிடம் சொன்னவனுக்கு உள்ளே திக்... திக்தான்.
உன் தங்கைக்கு மட்டும்தான் தலை தீபாவளியா? எனக்கில்லையா... எனக் கேட்டுவிட்டால்?‘‘ம்... சரி...’’ என வெளியே கவனம் காட்டி நின்றவளின் காது ஜிமிக்கியைப் பார்த்தபடி ‘‘வீட்டு மாப்பிள்ளை, நம் வீட்டில் முதல் பண்டிகை. தேவையான வசதிகள் செய்து கொடுப்பது நம் கடமை...’’காற்றிலசையும் கொடியாய் தலை திருப்பினாள். ‘‘ஒண்ணும் புரியவில்லை. ஏன் துண்டு துண்டாகப் பேசுகிறீர்கள்? என்ன விசயமென்று கரெக்டாக சொல்லுங்கள்...’’ காது ஜிமிக்கிகள் அவளுக்குத் தலையாட்டின.
‘‘நம் வீட்டில் இந்த அறைதான் கொஞ்சம் வசதியாக இருக்கும். வெண்மதி இந்த அறை வேண்டுமென்கிறாள். ஒரு வாரம்தான்...’’ நாவல்பழமென உருண்டு இவனைப் பார்த்த விழிகளில் பேச்சை பாதியில் நிறுத்தினான். இப்போது எதற்கு இப்படிப் பார்க்கிறாளாம்?‘‘அப்போ இது உங்கள் அறை இல்லையா?’’ஏதேதோ ஆட்சேப பேச்சுகளை எதிர்பார்த்தவன் இந்தக் கேள்வியில் அயர்ந்தான். உன் தங்கைக்கு இருக்கும் உரிமை உனக்கு இந்த வீட்டில் இல்லையா என்ற பொருள் தரும் கேள்விதானே இது? மிக நாசூக்காக அவனது உரிமையைச் சுட்டுகிறாள். இவள்... இவ்வளவு புத்திசாலியா?
அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் பீரோ திறந்து தனது உடைகளைப் பெட்டியில் அடைத்துக் கொண்டிருந்தாள். உடனே தயாராகி விட்டாள். மிக லேசாக அவள் மேலொரு வாஞ்சை வந்தது. தனது உடைகளையும் பேக்கில் அடைத்தவன், ‘‘கீழே கடைசி அறை நமக்கு. ஒரு வாரம் மட்டும்தான்...’’ கொஞ்சம் பயத்துடன்தான் சொன்னான். ஏனெனில் அது மிகச் சிறிய அறை.
‘‘ம்...’’ என்ற ஒற்றையெழுத்தைத் தவிர வேறு பதிலில்லை அவளிடம்.ஒற்றைக் கட்டில் கிடந்த குறுகலான அறையின் தரையில் சலனமின்றி ஒடுங்கிப் படுத்திருந்தவளைப் பார்த்திருந்தவனுக்குள் சலனம்.
ஆர்ப்பாட்டமாக வந்திறங்கிய கார்த்திகேயனிடம் தலை தீபாவளி மாப்பிள்ளை என்ற மமதை சற்று அதிகமாகவே இருந்தாற் போலிருந்தது.‘‘காலையில் எட்டு மணிக்கு எனக்கு காலை டிபன் தயாராக இருக்க வேண்டும் அத்தை. பதினோரு மணிக்கு காபி. மதிய சாப்பாடு ஒரு மணிக்கு. நைட் எட்டு மணிக்கு டின்னர். ஏதாவது அவுட்டிங் ஏற்பாடு செய்தீர்களானால் முதலிலேயே சொல்லி விட வேண்டும்...’’தொடர்ந்த அவன் அலப்பறைகள் கமலக்கண்ணனுக்கு எரிச்சலைக் கொடுக்க, வாசுகி முகத்தின் இதழ்கள் மட்டும் இளித்தபடியே இருந்தன. வீட்டு மாப்பிள்ளையாம். சகித்துக் கொள்ளத்தான் வேணுமாம்.
கார்த்திகேயனின் உபசார எதிர்பார்ப்பைக் கூட கமலக்கண்ணன் சகித்துக் கொள்வான். ஆனால், சித்தாராவிடம் அவன் காட்டிய அலட்சியத்தை... இத்தனைக்கும் இந்த நிலைமைக்குக் காரணமே கார்த்திகேயனும், அவன் குடும்பமும்தான்.பெண் கொடுத்து பெண் எடுப்பதாக சம்பந்தம் பேசி திருமணம் முடிவானது அவர்கள் இரு குடும்பத்திற்குள்ளும். கார்த்திகேயனின் தங்கை சரிதா கமலக்கண்ணனுக்கென மணம் பேசப் பட்டவள், திருமணநாள் காலை அவள் காதலனுடன் ஓடிப் போக, இரண்டாக பேசப்பட்ட திருமணத்தை என்ன செய்வதென தவித்திருந்தனர் இரு வீட்டினரும்.
மகன் திருமணம் மட்டுமாவது நடக்கட்டுமென கார்த்திகேயனின் அப்பா கேட்க, தன் மகன் வாழ்க்கை என்னாவதென திகைத்து நின்ற வாசுகியின் முன் தன் மகளைக் கொணர்ந்து நிறுத்தினாள் நர்மதா.அவள் வாசுகியின் பள்ளிக்காலத் தோழி. திருமணத்திற்கென வந்திருந்தவள். அன்றைய சூழ்நிலையில் எதையும் யோசிக்கும் நேரமின்றி, தானே சித்தாராவின் கை பிடித்து அழைத்துப் போய் மகனருகில் அமர்த்தினாள் வாசுகி.‘‘ஆயிரம் இருந்தாலும் என் தங்கை சரிதா போல் வராது. ஆனாலும் நீங்க பாவம்தான்...’’ மனைவி மடித்துக் கொடுக்க, வாய்க்குள் வெற்றிலையை அமுக்கியபடி பேசுபவனை அறையும் ஆவல் வந்தாலும் தங்கைக்காக கட்டுப்படுத்தினான் கமலக்கண்ணன்.
‘‘உங்கள் தங்கைக்கும் இது தலை தீபாவளியா மச்சான்?’’ ‘‘ஆமாம், நாங்க அவுங்களை அழைத்து...’’ தனது உளறலை உணர்ந்து, நாக்கைக் கடித்தான்.‘‘ஆக மூன்றே மாதங்களில் உங்கள் தங்கையை மன்னித்து ஏற்றுக் கொண்டீர்கள்...’’ திருமணத்திற்கு முதல் மாதம் தனது காதலை சரிதா சொல்ல, உன்னால் எனது திருமணமும் நிற்க வேண்டுமா என கார்த்திகேயன் கோபப்பட, இறுதியில் அனைவருமாக மணமேடை வரை கொண்டு வந்து ஒரு திருமணத்தை மட்டும் முடித்து விடுவோமென முடிவெடுத்து செயல்படுத்த... நிர்ப்பந்தக் கைதியாக்கப்பட்ட தனது பிறந்த வீட்டு நிலைமையை உணர்ந்து கணவனை வெறித்தாள் வெண்மதி.
அதன்பிறகு கார்த்திகேயனிடம் மயான அமைதி.தீபாவளி முடிந்த மறுநாளே தலை தீபாவளி தம்பதியர் கிளம்பி விட, அவர்கள் அறை அலமாரியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த கணவனை விழி விரித்துப் பார்த்து நின்றாள் சித்தாரா. அவளுடைய புடவை, ஜாக்கெட்டுகளையும் சேர்த்து அழகாக அடுக்கிக் கொண்டிருந்தான்.
‘‘நேற்று காலை கேசரி கிண்டி முடித்ததும் வாயில் வைத்து ருசி பார்த்தாயே, அப்போதே தோன்றியது. அது அடுப்படி. பக்கத்தில் அம்மா வேறு. முடியவில்லை. இப்போது...’’ மனைவியை நெருங்கி அவள் முகம் பற்றி இழுத்து இதழணைத்தான்.கணவனின் முதல் முத்தத்தில் திணறி சிவந்து முகம் மூடியவளின் கைகளை விலக்கி கண்களோடு கலந்து ‘‘இனி நமக்கு தினம் தினம் தீபாவளிதான்...’’ என்றான்.
பத்மா கிரகதுரை
|