தீபாவளி பண்டிகையும் ரஜினியின் அதிரடி ஹிட் படங்களும்!



தீபாவளி என்றால் பட்டாசு, ஸ்வீட், புத்தாடையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வருகிறதென்றால் ரசிகர்களுக்கு சொல்லவே வேணடாம். இந்த ஆண்டும் அவர்களுக்கு

சந்தோஷமான தீபாவளிதான்.சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ இந்த தீபாவளிக்கு ரிலீஸாகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம், தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் முதல் தணிக்கைச் சான்றிதழ் பெற்றது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற டி.இமானின் இசையில் ‘அண்ணாத்த’ பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ரஜினி என்றாலே வசூல் சக்கரவர்த்தி என்ற பெயர் உண்டு. இதுவரை அவர்  நடித்த தீபாவளி படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அவரது முதல் தீபாவளி வெளியீடு என்ற பெருமை ‘மூன்று முடிச்சு’ படத்திற்கு உண்டு. 22.10.1976 அன்று தீபாவளிக்கு வெளியான ரஜினி - கே.பாலசந்தர் காம்போவின் இரண்டாவது தமிழ்ப் படமிது.
கமல்ஹாசன், ஸ்ரீதேவி போஸ்டர்களில் மிளிர்ந்தாலும் காட்சிகளின் வாயிலாக பரபரப்பாக பேசப்பட்டது ரஜினியின் நடிப்புதான். இந்தப் படத்துடன் சிவாஜியின் ‘சித்ரா பவுர்ணமி’, ஜெய்சங்கரின் ‘வாயில்லா பூச்சி’, முத்துராமனின் ‘பேரும் புகழும்’, ஏவிஎம் ராஜனின் ‘தாய் இல்லாத குழந்தை’, ஜெய்கணேஷின் ‘அக்கா’ ஆகிய படங்கள் வெளியாகின. அத்தனையையும் வசூலில் தூக்கிச் சாப்பிட்டது ‘மூன்று முடிச்சு’.

‘கருப்பா இருக்கிற புதுப்பையன் செம ஸ்டைலா கலக்கியிருக்கார்’ என்று அந்த தீபாவளியின் டாக் ஆஃப் த டவுன் ரஜினியாகத்தான் இருந்தார். ‘ஸ்வீட் ராஸ்கல்’ என கே.பாலசந்தரால் ரஜினி வர்ணிக்கப்பட்ட நடிப்பு, ‘மூன்று முடிச்சு’ மூலம் பெரும் பயணத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது.

1978ம் ஆண்டு ரஜினியின் திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். அவர் நடித்த மூன்று படங்கள் தீபாவளிக்கு ரிலீசாயின. சினிமா ரசிகர்களால் என்றும் கொண்டாடப்படும் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படம் 30.10.1978 அன்று வெளியானது. தமிழில் வெளியான கடைசி கருப்பு வெள்ளைப் படங்களில்  ஒன்றான இப்படம், தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசைப் பெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் நடித்த இப்படம் இன்றளவும் கலை ரசனை உள்ளவர்களால் கொண்டாடப்படுகிறது.

ரஜினிகாந்த், ப்ரியா நடித்த ‘தாய் மீது சத்தியம்’ இதே தீபாவளிக்குத்தான் வெளியானது. ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் கௌபாய் தோற்றத்தில் ரஜினி நடித்த துவக்க கால படமிது.
சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இசையில் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம். கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த், சரிதா நடிப்பில் ‘தப்புத் தாளங்கள்’ படமும் இதே தீபாவளிக்குத்தான் வெளியானது.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்டது. கமல்ஹாசன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்தப் படத்திற்காக, சிறந்த வசனகர்த்தா விருது, பாலசந்தருக்குக் கிடைத்தது. விஜயபாஸ்கர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘என்னடா பொல்லாத வாழ்க்கை...’ கவியரசர் கண்ணதாசனின் தத்துவமாக எதிரொலித்தது. மதுரை சிவம் தியேட்டரில் இப்படம் 84 நாட்கள் ஓடியது.

1979ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தேவர் பிலிம்ஸ் சார்பில் ரஜினிகாந்த், ப்ரியா நடிப்பில் ‘அன்னை ஓர் ஆலயம்’ வெளியானது. யானைகளை வைத்து சாண்டோ சின்னப்பா தேவர் எழுதி வைத்திருந்த கதையை அவரது மகன் சி.தண்டாயுதபாணி தேவர் பிலிம்ஸ் என்ற பேனரில் தயாரித்தார். தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இயக்கினார். தூயவன் உரையாடலை எழுதினார்.

குட்டி யானை கணேஷ் செய்த சுட்டித்தனம் படத்தின் ஹைலைட்டானது. இசைஞானியின் இசையில் ‘நதியோரம் நாணல் ஒன்று நாணம்...’ என்ற பாடல் பட்டையைக்கிளப்பியது. 126 நாள் ஓடி வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்த தீபாவளியான 6.11.1980 அன்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் ரஜினிகாந்த், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடிப்பில் ‘பொல்லாதவன்’ வெளியானது. அதே தீபாவளிக்கு சிவாஜிகணேசன் நடித்த ‘விஸ்வரூபம்’, துரை இயக்கிய ‘எங்கள் வாத்தியார்’, எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் நடித்த ‘பொற்காலம்’ ஆகியவை வெளியாகின. ஆனால், ‘பொல்லாதவன்’ வெற்றி பெற்றது.

1983ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த ‘வெள்ளை ரோஜா’, கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’, டி.ராஜேந்தரின் ‘தங்கைக்கொரு கீதம்’, கார்த்திக் நடித்த ‘அபூர்வ சகோதரிகள்’, மோகனின் ‘மனைவி சொல்லே மந்திரம்’ ஆகிய படங்களுடன் ரஜினிகாந்த், பூர்ணிமா, ஜெய்சங்கர் நடித்த ‘தங்கமகன்’ வெளியானது.  

பழம்பெரும் இயக்குநர் ஏ.ஜெகநாதன் இயக்கிய இப்படத்தில் இசைஞானியின் இசையில் ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்...’ பாடல் புகழ் பெற்றது. இப்படம் மதுரை மீனாட்சி தியேட்டரில் 247 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.1984ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த், ராதிகா, கார்த்திக், துளசி நடிப்பில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ தீபாவளியை ஒட்டி வெளியானது. விசு திரைக்கதை எழுதிய இப்படம், ரவுடியாயிருந்த கதாநாயகன் காதலி மூலம் திருந்தி உழைத்து தொழிலதிபராகும் கதை.

இப்படம் சென்னை சக்தி அபிராமியில் 154 நாட்களும், அலங்காரில் 126 நாட்களும், மகாராணியில் 105 நாட்களும், மூலக்கடை வெங்கடேஸ்வராவில் 100 நாட்களும், பரங்கிமலை ஜோதியில் 100 நாட்களும், திருச்சி காவேரியில் 105 நாட்களும், மதுரை நடனாவில் 154 நாட்களும், கோவை அர்ச்சனாவில் 150 நாட்களும், சேலம் சந்தோஷில் 100 நாட்களும் ஓடி சாதனை படைத்தது.

இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் 1985ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி வெளியான படம் ‘படிக்காதவன்’. 6 வருடங்களுக்குப் பின் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தில் நடித்தனர். தமிழகம் முழுவதும்  வெள்ளி விழா கொண்டாடிய படமிது.

1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா நடிப்பில் ‘மனிதன்’ வெளியானது. ஏவிஎம். தயாரிப்பில் சந்திரபோஸ் தொடர்ந்து இசையமைத்த படங்களில் இதுவும் ஒன்று. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இப்படத்தின் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதினார். இது 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.

‘எனது கருப்பு ராஜகுமாருடன் கைகுலுக்கிக் கொள்கிறேன்’ என்ற பாரதிராஜாவின் கரகரத்த குரலுடன் கேசட் வந்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘கொடி பறக்குது’. 1988ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தீபாவளி ரிலீஸ். ரஜினிகாந்த், அமலா, ஜனகராஜ், மணிவண்ணன் நடித்த இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்தார். மணிவண்ணனுக்கு இயக்குநர் பாரதிராஜா டப்பிங் பேசினார்.

1989ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமலா, ஆர்.எஸ்.சிவாஜி, ஸ்ரீவித்யா நடிப்பில் வெளியான  ‘மாப்பிள்ளை’ திரைப்படம் மதுரை, சென்னை, கோவையில் 8 தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ 1991ம் ஆண்டு  டிசம்பர் 11ம் தேதி தீபாவளிக்கு வெளியானது. தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலும் இப்
படம் பெரும் வெற்றியை ஈட்டியது. சென்னை சக்தி அபிராமியில் 175 நாட்கள், மதுரையில் 165 நாட்கள், கோவையில் 150 நாட்கள், 15 திரையங்குகளில் 100 நாட்கள், 85 திரையரங்குகளில் 50 நாட்களென வசூலில் சாதனை படைத்தது. மலேசியாவில் 66 நாட்கள் இப்படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1992ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ரஜினிகாந்த், குஷ்பு நடிப்பில் ‘பாண்டியன்’ வெளியானது. சென்னை பேபி ஆல்பர்ட்டில் 116 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது.1995ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா நடிப்பில் ‘முத்து’ வெளியானது.

இப்படத்தில் ரஜினி பேசிய, ‘நா எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ வசனம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கான அத்தாட்சியாகப் பார்க்கப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பியதுடன், ஜப்பானிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

தீபாவளிக்கு வெளியான ‘முத்து’ 175 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியது. கடந்த 46 ஆண்டுகள் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீபாவளி படங்கள்தான் சாதனைகள் படைத்துள்ளன என்று நினைக்க வேண்டாம். அவரது ஒவ்வொரு படமும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

சாதாரண பஸ் நடத்துநராக இருந்து இன்று உலகம் போற்றும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள அவரின் கடினமான உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளிக்கு வெளியாகும் ‘அண்ணாத்த’ படமும் ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இளமை கொஞ்சும் அவரது ஸ்டில்கள் வெளிப்படுத்துகின்றன. வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்.

ப.கவிதா குமார்