காவிரி to தாமிரபரணி...நீர்நிலைகளை சீரமைக்கும் இளைஞர்...



‘‘கஜா புயல் தாக்கின நேரம் நான் துபாய்ல இருந்து ஊருக்கு வந்திருந்தேன். அப்ப ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் நிறைஞ்சிருந்துச்சு. யார்கிட்டயும் நம்பிக்கையில்ல. எதிர்மறை எண்ணங்களே மேலோங்கி காணப்பட்டுச்சு. எங்க ஊர்ல தென்னை மரம் அதிகம். ஒரு ஏக்கர் தென்னை மரத்துல வர்ற வருமானமும், ஐந்து ஏக்கர் நெல்ல வர்ற வருமானமும் ஒண்ணு. இதனால, எங்க மக்கள் எல்லோரும் தென்னை விவசாயம் செய்தாங்க. இப்ப புயல் வந்ததும் நல்லா விளைஞ்ச 80 சதவீத மரங்கள் விழுந்திடுச்சு. இதனால, வாழ்வாதாரமே இல்லாம தவிச்சாங்க.

இனி ஒரு தென்னங்கன்றை வளர்த்து விளைச்சல் எடுக்கணும்னா குறைஞ்சது ஐந்தாண்டுகள் ஆகும். அதுவரை என்ன பண்றது? அப்பதான் இவங்கள அரிசி, கரும்பு எல்லாம் பயிரிட வைப்போம்னு நினைச்சேன். ஆனா, தண்ணீர் பெரிய பிரச்னையா இருந்துச்சு. அங்கிருந்து ஆரம்பிச்சது எங்க பணி.
இன்னைக்கு தாமிரபரணி வரை வந்திருக்கு...’’ நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார் நிமல் ராகவன். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த இளைஞர். கடந்த மூன்று ஆண்டுகளில் 96 ஏரி, குளங்களைச் சீரமைத்து அதில் தண்ணீரைப் பெருக்கியிருக்கிறார். இவரின் செயலை அங்கீகரித்த மத்திய அரசின் நீர்வளத்துறை, உத்தரப்பிரதேசத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து ஒரு நீர்நிலையை சீரமைக்கக் கேட்டுக் கொண்டது.

இதுமட்டுமல்ல; திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கேட்டுக்கொண்டதற்கிணங்க தாமிரபரணி நதிக்கரைகளை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இதனுடன் கூடங்குளம் அருகே இடிந்தகரையில் ஒரு குளத்தை மீட்டெடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். ‘‘இது நாங்க சீரமைக்கிற 97வது குளம். 12 ஏக்கர் கொண்டது. இந்தக் குளத்துக்கு பக்கத்துல 1975ம் ஆண்டு தடுப்பணை கட்டியிருக்காங்க. இதிலிருந்து 50 மீட்டர் தொலைவுல கடல் வருது. இந்தத் தடுப்பணையில் பிரச்னை என்கிறதால கடல்நீர் உள்ளே ஏறிடுச்சு. இப்ப அதை புனரமைக்கிற பணிகளைத் தொடங்கியிருக்கோம். சீக்கிரமே நன்னீரைக் கொண்டு வந்திருவோம்...’’ என நம்பிக்கை பொங்க பேசும் நிமல் ராகவன் ஒரு பிஇ பட்டதாரி. இதற்குள் வந்த கதையை பகிர்ந்தார்.

‘‘சொந்த ஊர் பேராவூரணி. அப்பா ராகவன் விவசாயி. எங்க குடும்பமே பெரிய விவசாயக் குடும்பம். நான் பிஇ முடிச்சதும் வேலைக்கு துபாய் போயிட்டேன். லீவுக்கு ஊருக்கு வரும்போது கஜா புயல். இந்நேரம் ஊருக்கு ஏதாவது பண்ணுவோம்னு முடிவெடுத்தேன். அதனால, துபாய் வேலையிலிருந்து விலகினேன். அப்பாவும், அம்மாவும் நிறைய சப்போர்ட் பண்ணினாங்க. பிறகு ஊர் பசங்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டேன்.

பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஒரத்தநாடு, மன்னார்குடினு தொண்ணூறு ஊர்கள்ல இந்தப் பணியை முன்னெடுத்தோம். இதுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரகுமான் ஃபவுண்டேஷன், சூரியன் எஃப்.எம்., ஆல் இந்தியா ரேடியோனு நிறைய பேர் மூலம் உதவிகள் கிடைச்சது. அதெல்லாம் வாங்கிப் பண்ணிட்டு இருந்தோம்.

பிறகு, ஊர் பக்கம் எங்கள மாதிரியான குழுக்களுடன் இணைஞ்சு பணிகள் செய்தோம். ஆனா, எவ்வளவுநாள் இப்படி நிவாரணப் பணிகள் பண்ணிட்டு இருக்கிறதுனு கேள்வி வந்தது. அப்ப எங்களுக்கு தண்ணீர் பெரிய பிரச்னையா இருந்துச்சு. அதனை சரிபண்ண நாங்க கையிலெடுத்ததுதான் இந்த நீர்நிலை மேம்பாட்டுத் திட்டம். இதுக்காக, ‘கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்’னு (KAIFA) ஓர் அமைப்பைத் தொடங்கினோம். சுருக்கமா இதன்பெயர் ‘கைஃபா’.

இதை நானும், என் பள்ளி சீனியர் நவீன் ஆனந்தன் அண்ணனும் சேர்ந்து ஆரம்பிச்சோம். பிறகு, எங்களுடன் கார்த்திகேயன் வேலுச்சாமி, பிரபாகரன், தங்க கண்ணன்னு இன்னும் மூணு பேர் இணைஞ்சாங்க. அப்புறம் இது ஒரு பெரிய குழுவா மாறுச்சு. முதல்ல எங்க பேராவூரணி பெரிய குளத்தையே எடுத்தோம். பேராவூரணி ஊருக்கான பெயர்க் காரணமே அந்தப் பெரிய ஊரணிதான். ஆனா, தூர்வாறாமல் மோசமா கிடந்தது. 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளத்தை சீரமைக்கிற பணியைத் துவக்கினோம்.

குறிப்பா, கல்லணைக் கால்வாயில் பிரச்னை இருந்துச்சு. காவிரி நீரை குளத்துக்கு கொண்டு வர்ற வரத்துவாரிகள் சீரமைக்கப்படாமல் கிடந்தது. கிட்டத்தட்ட 107 நாட்கள் வேலை பார்த்தோம். அடுத்த ரெண்டு மாசத்துல தண்ணீர் நிரம்பிடுச்சு. எங்களுக்கு வந்த பொதுப்பணித்துறை ரிப்போர்ட்படி, 50 அடி வரை தண்ணீர் வந்திடுச்சுனு சொன்னாங்க. இது எனக்கு பெரிய உத்வேகத்தைத் தந்தது. ஏன்னா, முப்பது ஆண்டுகள் எந்தப் பணியும் செய்யாமல் கிடந்த ஒரு குளம் நாலு மாசம் வேலையில் மாறியிருக்கு என்பதுதான்.

அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு ஊரா பண்ண ஆரம்பிச்சோம். பத்து ஊர்கள் வரை செய்து முடிச்சதும், ‘மில்கி மிஸ்ட்’ நிறுவன உரிமையாளர் சதீஷ்குமார் சார் எங்களுக்கு ஒரு ஜேசிபி வண்டியை ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தந்தார். அதை வச்சு தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டைனு ஐந்து மாவட்டங்கள்ல செய்ய ஆரம்பிச்சோம். இதை BounceBackDelta என்கிற ஹேஷ்டேக்ல பண்ணினோம். இப்படியா, இதுவரை 96 நீர்நிலைகளை தூர்வாரி, கால்வாய்களை மறுசீரமைப்பு செய்து தண்ணீர் கொண்டு வந்தோம். நாங்க பணி செய்த முக்கால்வாசி நீர்நிலைகள் மழையால் இன்னைக்கு நிரம்பிக் காட்சியளிக்குது...’’ என உற்சாகம்பொங்க பேசியவர், தொடர்ந்தார்.

‘‘இதனால, மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் எங்களை அழைச்சாங்க. இந்திய ராணுவத்துடன் சேர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ்ல ஒரு நீர்நிலையை சரிசெய்து தரும்படி கேட்டாங்க. இப்ப அங்க பணிகள் போயிட்டு இருக்கு. அப்புறம், உடன்குடியில் செல்வகுமார்னு ஒரு காவல் உதவி ஆய்வாளர். அவர் சிவகங்கையில் நீர்நிலைகளை சீரமைக்கும் குழுவைச் சேர்ந்த வள்ளி சரண் அக்காவிடம் அவங்க ஊர்ல ஒரு குளத்தை சீரமைக்கணும்னு கேட்டிருக்கார். வள்ளி சரண் அக்காவுடனும் இணைஞ்சு நாங்க வேலை செய்றோம். அப்படியா உடன்குடி போனோம். அப்பதான் நாங்க வேலை பார்க்க வேண்டியது இந்தப்பகுதிகள்னு எங்களுக்கு தோணுச்சு. உடனே, அங்க வேலைகளை ஆரம்பிச்சோம். அதைப் பார்த்திட்டு இடிந்தகரையில் கேட்டாங்க. இப்படியா வேலைகள் போயிட்டு இருக்கு.

இதன்பிறகு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சார் எங்க பணிகளைப் பத்தி கேள்விப்பட்டார். அப்புறம் அங்குள்ள, ‘நம் தாமிரபரணி’ அமைப்பின் செந்தில்முருகன் எங்களைத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் பேச வச்சார். இப்ப ஆட்சியர் தாமிரபரணி நதிக்கரைகளில் மியாவாக்கி முறையில் காடுகளை அமைக்கிறதில் தொடங்கி குப்பைகளை அகற்றுதல் வரை செய்யச் சொல்லியிருக்கார். இதை BounceBackThamirabarani என்கிற ஹேஷ்டேக்கில் ‘நம் தாமிரபரணி’ அமைப்புடன் இணைஞ்சு செய்றோம். அங்க நமக்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு வாகன உதவிகளை செய்றாங்க. அப்புறம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சார் புதுக்கோட்டையில் ரெண்டு ஏரிகளை சுத்தம் பண்ணச் சொல்லியிருக்கார். அதையும் பண்றோம்.

பொதுவா, நாங்க எல்லா பணிகளையும் பொதுப்பணித்துறையுடன்  இணைஞ்சே செய்றோம். அவங்க எப்படி செய்யணும்னு சொல்வாங்க. அதன்படி செய்வோம். சில இடங்கள்ல ஆக்கிரமிப்புகள் இருக்கும். அதை நாம் எடுக்கும்போது பிரச்னைகள் வரும். அப்ப நாம் அவங்கள பகைக்கிறமாதிரி ஆகிடும். முன்னாடி நாங்களே நேரடியாக பேசி பண்ணினப்ப நிறைய பிரச்னைகளைச் சந்திச்சோம். என்னுடைய உறவினர்களே நிறைய பேர் இப்ப என்கிட்ட பேசமாட்டாங்க.

அதனால, பொதுப்பணித்துறையினரிடமே அளந்து கொடுக்க சொல்லிடுறோம். பிறகு நாங்க வேலைகளை ஆரம்பிக்கிறோம். எங்க பணி ஏரிக்கு நீர் வருகிற வரத்து வாய்க்காலை சரி செய்றதும், ஏரியை தூர்வாருறதும், கரைகள் அமைக்கிறதும், உள்ளே உள்ள மண்ணை ஒரு கைப்பிடி அளவுகூட வெளியில் போகாமல் அதனைக் கொண்டே ஏரியின் நடுவில் குறுங்காடுகள் அமைக்கிறதும்தான். ஏரியின் கரைகள் பலமாக இருக்க வெட்டி வேர்களை வைப்போம். பிறகு, பனை விதைகளை தூவுவோம். இந்தமாதிரி ஏழு லட்சம் மரக்கன்றுகள் வச்சிருக்கோம். 2 லட்சம் பனைவிதைகள் தூவியிருக்கோம்.

நடுவில் குறுங்காடுகள் அமைக்கக் காரணம், ஒண்ணு, தூர்வாறும் மண் வெளியே போகாது. ரெண்டாவது, அங்க பலவகை மரக்கன்றுகள் நடுறதால பறவைகள் நிறைய வரும். அதில் பல்லுயிர் பெருக்கம் நடக்கும். புங்கன், வேம்புனு 80 வகையான நாட்டு மரக்கன்றுகள் மண்அரிப்பைத் தடுக்கும். கீேழ மழைநீரைச் சேர்த்து வைக்கும். இதுல நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு. அப்புறம், மரக்கன்று வளர்க்க பாதுகாப்பான இடமும் கூட. ஆடு, மாடுகளால் போக முடியாது...’’ என்கிற நிமலின் லட்சியம் தமிழகத்தை முப்போகம் விளையும் பூமியாக்க வேண்டும் என்பதே.

‘‘ஒருகாலத்துல முப்போகம் விளைஞ்ச பூமி இதுனு நம்ம பெரியவங்க சொல்லிக் கேட்டிருப்போம். அதுமாதிரி முப்போக விவசாயம் இங்க நடக்கணும்னு ஆசைப்படுறேன். அப்புறம், தண்ணீரை யாரும் காசு கொடுத்து வாங்கக் கூடாது. நிலத்தடி நீரைப் பெருக்கணும். எங்க ஊர் பக்கம் ஆயிரம் அடியில் போர்வெல் போட்ட இடங்களெல்லாம் இப்ப மாறிட்டு வருது. ஏன்னா, எங்க பணிகளால் நிலத்தடி நீர் அதிகரிச்சிருக்கு. தொடர்ந்து இந்தப் பணிகளை எல்லா இடங்களிலும் முன்னெடுக்கும்போது இன்னும் அதிகரிக்கும். எதிர்காலம் சிறப்பானதா மாறும்.

அதேநேரம், நாமும் தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தணும். அரசை குற்றம் சொல்லிட்டே இருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான். நாம் நூறை பேரை திட்டவோ, நூறு பேரை திருத்தவோ வேண்டியதில்ல. நாம் சரியாக இருந்தால் போதும். முதல்ல மாற்றம் என்பது நம்மில் இருந்தே வரவேண்டும்...’’ என்கிறார் நிமல் ராகவன்.  

பேராச்சி கண்ணன்