சனக்



கடந்த வாரம் சுடச்சுட நேரடியாக ‘ஹாட்ஸ்டாரி’ல் இறங்கியிருக்கிறது ‘சனக்’ இந்திப் படம். தற்காப்புக் கலையில் வித்தகன் விவான். அவனுடைய மனைவி அன்ஷிகாவுக்கு இதயத்தில் பிரச்னை. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் இதயம் நின்றுபோகும். ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அன்ஷிகாவைச் சேர்க்கிறான் விவான். வீட்டைவிற்று அறுவை சிகிச்சைக்கான 75 லட்சத்தைக் கட்டுகிறான். அன்ஷிகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றியடைகிறது. மகிழ்ச்சியுடன் மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனைக்கு வருகிறான் விவான்.

அந்த நேரத்தில் ஒரு தீவிரவாதக் கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கிருப்பவர்களைப் பணயக்கைதிகளாக வைக்கிறது. அந்தப் பணயக்கைதிகளில் அன்ஷிகாவும் ஒருவர். ஆயுதங்களுடன் இருக்கும் தீவிரவாதக் கும்பலிடமிருந்து மனைவியையும், மற்றவர்களையும் விவான் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை.எங்கேயும் நிற்காமல் ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை. ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரமிப்பைத் தருகின்றன. திரில்லிங் படப்பிரியர்களுக்கு செம விருந்து. விவானாக கலக்கியிருக்கிறார் வித்யூத். படத்தின் இயக்குநர் கனிஷ்க் வர்மா.

தொகுப்பு: த.சக்திவேல்