நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் இருந்து எடுத்த ஒரு துளிதான் ‘ஜெய் பீம்’!



‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ என அரிதான பயோபிக் படங்கள்... நடிப்பிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முதிர்ச்சி... சூர்யாவின் கிராஃப் நாளுக்கு நாள் அப்டேட் ஆகி வருவது பிளசன்ட் சர்ப்ரைஸ். 
பத்திரிகையாளரும் ‘கூட்டத்தில் ஒருவன்’ இயக்குநருமான த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. தீபாவளி சிறப்பாக இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவை சந்தித்தோம்.

முதல்முறையாக வழக்கறிஞர் கேரக்டர்... அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?

வழக்கறிஞரைத் தாண்டி ஒரு நல்ல மனிதருடைய பயோபிக் இது. நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் இருந்து எடுத்த ஒரு துளிதான் ‘ஜெய் பீம்’. ஒரு சாதாரண மனுஷனால இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா... இவ்வளவு சாதனைகள் செய்ய முடியுமானு வியக்க வைக்கும் மனிதர்தான் நீதிபதி சந்துரு.
ஸ்கிரிப்ட் படிக்கிறப்ப என்னையும் மீறி பல இடங்கள்ல எமோஷனல் ஆனேன். இதுதான் ரியல் ஹீரோயிஸம். அவர் வாழ்க்கைல ஒவ்வொரு வழக்கும் ஒரு கதைதான். அதுல 1993ல நடந்த ஒரு குறிப்பிட்ட வழக்கும் அதைச் சார்ந்த நீதியும்தான் படம்.
நீதிபதி சந்துரு சுமார் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லியிருக்கார்... அப்படியிருக்கிறப்ப இந்த வழக்குல என்ன ஸ்பெஷல்?  

படத்தை பார்க்கிறப்ப நீங்களே புரிஞ்சுப்பீங்க. அந்த வழக்கு தொடர்பான விஷயங்களை, நிகழ்வுகளை படிக்கிறப்ப என்னையும் அறியாம நிறைய இடங்கள்ல வருத்தப்பட்டேன். அதை படமா எடுத்தே ஆகணும்னு முடிவு செய்தேன்.  ஒரு நடிகராக சினிமா துறையில் நீங்கள் கொண்டுவர நினைக்கும் மாற்றம் என்ன?  நடிகர்களுடைய மிகப்பெரிய மூலதனம் அவர்களுடைய உடல்தான். குறிப்பா ஸ்டண்ட் ஊழியர்களுக்கு அவர்களுடைய ஆரோக்கியம் ரொம்பவே அவசியம். ஆனா, இங்க போதிய மெடிக்கல் இன்சூரன்ஸ், மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு வசதிகள் குறைவா இருக்கு. நிச்சயம் அதற்கான முயற்சிகள் எடுக்க முயற்சிப்பேன்.

ஏன் ‘ஜெய் பீம்’?
நடிக்கிறது மட்டும் என் வாழ்க்கை இல்ல. அதனாலதான் கடந்த 18 - 20 வருடங்களா ‘அகரம்’ ஃபவுண்டேஷன் மூலமா நிறைய ஏழை எளிய மக்களுக்கு உதவறோம். பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் நேரடியாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு ‘அகரம்’ வழியா கிடைச்சிருக்கு. என்னுடைய கருத்துக்கு நிறைய பேருடைய ஆதரவும் கிடைக்கிறப்ப படத்துலயும் சில கருத்துகளை எடுத்துச் சொன்னா நிச்சயம் மக்கள்கிட்ட சேரும்னு ஒரு நம்பிக்கை. அதன் வெளிப்பாடுதான் ‘ஜெய் பீம்’.

இன்னமும் பெண்கள் நிறைய இடங்களில் அடக்குமுறையை சந்திச்சிட்டுதான் இருக்காங்க. உங்க மனைவிக்கு ஆத்மார்த்தமா சப்போர்ட் செய்கிற ஒரு ஆணா அந்த சில ஆண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? இந்த உலகத்தில் மனுஷனா பிறந்த அத்தனை பேருக்கும் கனவுகளும் ஒருசில குறிக்கோள்களும் இருக்கு. இதை நிறைவேற்ற யாரும் யாருக்கும் அனுமதி கொடுக்கணும்னு அவசியம் கிடையாது.

நடிப்பது... ஷூட்டிங் இதெல்லாம் ஜாலியான ஒரு விஷயம். ஆனா, ஒருநாள் வீட்ல குழந்தைகளை பார்த்துக்கும்போதுதான் அதுல எவ்வளவு பொறுப்புகள், சவால்கள் இருக்குன்னு தெரியும்.

ஒரு நாளைக்கே அப்படீன்னா தினமும் குழந்தைகளைப் பார்த்துகிட்டே, குடும்பத்தையும் கட்டுக்கோப்பா நடத்திட்டு, வேலையும் செய்கிற என் மனைவி ஜோதிகா மட்டுமில்ல... அத்தனை பெண்களுமே கிரேட்தான்.

அவங்களுக்கு சப்போர்ட் செய்யலைன்னா கூட பரவாயில்லை... அடக்க நினைக்க வேண்டாம். குறிப்பா ‘அனுமதி’ என்னும் வார்த்தையே வேண்டாம். நீதிபதி சந்துருவிடம் இருந்து நீங்க கத்துக்கிட்ட நல்ல விஷயங்கள் என்னென்ன..?

ஒரு தனிநபர் 25 பெண்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க முடியுமா? ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை நிலையை மாற்ற முடியுமா? இப்படி பல கேள்விகள் சந்துரு சாரைப் பார்த்து எனக்கு தோணுச்சு. நமக்குக் கிடைச்ச அத்தனை விஷயங்களுக்கும் பின்னால யாரோ ஒருவருடைய அல்லது எத்தனையோ பேருடைய போராட்டம் இருக்கு. இது நமக்கே தெரியாது. அப்படித்தான் இன்னைக்கு நாம அனுபவிக்கிற பல விஷயங்களுக்குப் பின்னாடி சந்துரு சாரும் ஒரு காரணமா இருக்கார்.

ஆர்டிஐ ஆக்ட் ஆரம்பிச்சு, சத்துணவு கூடத்தில் பெண்களுக்கு வேலை துவங்கி... பல மாற்றங்களுக்கு காரணம் சந்துரு சார்தான். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமா எடுக்கறதும் அவர் கேரக்டரில் கோட்டு போட்டு நடிக்கறதும் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய ஆசீர்வாதம். அவர் இந்த கதைக்கு ஓகே சொன்னதே எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரம். அவர்கிட்ட இருந்து தினம் தினம் கத்துக்க அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

இயக்குநர் ஞானவேல் பற்றி சொல்லுங்க?
அவர் ஒரு ஜர்னலிஸ்ட். அதனால கதைக் கருவை ஆழமா ஆராய்ஞ்சு எழுதியிருந்தார். வசனம் துவங்கி கேரக்டர் ஸ்கெட்ச் வரை அவ்வளவு உழைச்சிருக்கார். எங்கயும் ஹீரோ சூர்யா தெரியாம அந்த கேரக்டர் மட்டுமே வெளிப்படற மாதிரி ஸ்கிரிப்ட் எழுதியிருக்கார். இந்தப்படம் உண்மைக்கு நெருக்கமா இருக்கும். அதற்கு இயக்குநர் ஞானவேலின் பங்கு ரொம்ப முக்கியமானது.இந்தப் படத்தில் உங்களுடைய கேரக்டர் சிறப்புத் தோற்றமா அல்லது படம் முழுக்க பயணிப்பீர்களா?

நிச்சயம் கௌரவத் தோற்றம் கிடையாது. 20 நிமிடங்கள் வந்துட்டுப் போகலை. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்... அவரின் வாழ்வாதாரத்திற்கான வழக்கு... அது சார்ந்த கதைதான் ‘ஜெய் பீம்’. அந்த வாழ்வாதாரத்திற்காக போராடிய வழக்கறிஞர் சந்துருவாக நான். நிச்சயம் கெஸ்ட் ரோல் இல்ல.இந்தியாவிலேயே அதிக வழக்குகளுக்கு தீர்ப்பு எழுதியவர் நீதிபதி சந்துரு. அவரின் புத்தகங்களைப் படிக்கும்போது வேறு எந்த வழக்கை படமாக்கும் ஆர்வம் ஏற்பட்டது?

அவருடைய ஒவ்வொரு வழக்கையும் ஒவ்வொரு படமா எடுக்கலாம். வாய்ப்பு கிடைச்சா சந்துரு சார் பயோபிக்கை ஒரு சீரிஸ் ஆகக் கூட செய்யலாம். ஆனா, இன்னொரு வழக்குனு கேட்டா... நிச்சயம் இப்ப சொல்ல மாட்டேன். வேறு யாராவது அதை படமா எடுத்துட்டா அந்தக் கதை எனக்கு கிடைக்காம போய்டுமே!

இது பயோபிக் படமா அல்லது சமூகப் பிரச்சனையை முழுக்க பேசப் போகிறதா? எந்த ஆதரவும் இல்லாத ஒரு பெண் அவங்க வாழ்க்கைக்காக போராடும்போது ஹைகோர்ட் வரை எப்படி அந்தப் பெண்ணால் வர முடிஞ்சுது... அதுக்கு அந்தப் பெண்ணுக்கு அறிமுகமே இல்லாத ஒரு மனிதர் எப்படி உதவி நீதி வாங்கிக் கொடுத்தார்... என்பதற்குப் பின்னால் ஒரு டிராவல் இருக்கு இல்லையா..? இதுதான் படம். இந்தப் பயணத்துல அந்தப் பெண் சந்திச்ச சமூகப் பிரச்னைகள் அனைத்தும் படத்தில் வரும்.

சமீபகாலமாகவே சமூகம் சார்ந்த படங்களில் நீங்களும் ஜோதிகாவும் நடிச்சிட்டு இருக்கீங்க... இது அக்கறையா? கோபமா? அல்லது எதிர்காலத் திட்டமா?

நமக்கு ஒரு களம் கிடைச்சிருக்கு. அதை பயன்படுத்தி எந்த அளவுக்கு சமூகப் பிரச்னைகளைப் பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசுறோம். இதைத் தாண்டி எந்த எதிர்காலத் திட்டமும் கிடையாது. எங்களை நம்பி எழுத்தாளர்களும் இயக்குநர்களும் இந்த மாதிரி கதைகளைக் கொண்டு வராங்க. நாங்க அந்தப் பொறுப்புணர்ச்சிக்கு நேர்மையா நடந்துக்கறோம்.
ஓடிடி தளத்துல நம் கருத்தை சுதந்திரமா சொல்ல முடியும்னு நினைக்கிறீங்களா?

எந்தத்  தளமா இருந்தாலும் முறைப்படி சென்சாருக்கு போயிட்டுதான்  அந்தந்த தளத்துல ரிலீஸ் ஆகுது. இதனால தியேட்டரில் ஒரு  கருத்தைச் சொல்ல முடியுது... ஓடிடி களத்தில் வேறொரு கருத்தைச் சொல்ல முடியுதுனு இல்லை. எல்லா படமும் நம்முடைய சென்சாருக்கு  உட்பட்டுதான் ரிலீஸ் தளங்களுக்கு பயணிக்கிது.

‘ஜெய் பீம்’ மாதிரியான கதைகள் சினிமாவை அடுத்த தளத்திற்கு பயணிக்க வைக்கும்னு நினைக்கிறீங்களா?இதற்கான பதிலை இப்படி சொல்ல விரும்பறேன். உண்மைச்  சம்பவங்களை மையமா வைத்து ‘சூரரைப்போற்று’, ‘ஜெய் பீம்’ மாதிரியோ அல்லது விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அடிப்படையா வைச்சோ படம் எடுக்கும்போது நிச்சயம் ஏதோ ஒரு  பாதிப்பை மக்கள்கிட்ட ஏற்படுத்தும்.
 
‘எதற்கும் துணிந்தவன்’ எப்படி வந்துட்டு இருக்கு..? சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் படமாச்சே... சூப்பரா வளர்ந்துட்டு இருக்கு. இது பக்கா கமர்ஷியல் படம். அதேநேரம் அழுத்தமான கதையும் சென்டிமென்ட்டும் படத்துல உண்டு.
                    
ஷாலினி நியூட்டன்