ஃபேஸ்புக்கின் பெயர் மாறுகிறது!



ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றியிருப்பதாக வெளியான செய்திதான் டாக் ஆஃப் த வோர்ல்ட். இதன் பின்னணியில் இருப்பது மெட்டாவெர்ஸ் (metaverse) எனும் புதிய மெய்நிகர் உலகம் என்கிறார்கள்.  கடந்த அக்டோபர் 4ம் தேதியன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாக கருதப்படுகிறது. உலகப் பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியலில் சரசரவென்று மார்க் ஜூக்கர்பர்க்கை கீழே தள்ளிவிட்டது இந்த அவுட்டேஜ். மீண்டும் அக்டோபர் 9ம் தேதியும் இன்ஸ்டா, மெசெஞ்சர் முடங்கின.

இப்படி அடுத்தடுத்து தொழில்நுட்ப சவால்களை ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அந்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஃபேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசின் அழுத்தம் காரணமா?

ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தனது வீச்சை விஸ்தரித்துவிட்டதாக அந்நாட்டின் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளும் சாடி வருகின்றன. அதனால் ஃபேஸ்புக் மீது கட்டுப்பாடுகள் அவசியம் என்று இருபெருங் கட்சிகளுமே கூறி வருகின்றன.

அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனலின் 60 நிமிடங்கள் (‘60 Minutes’) என்ற நிகழ்ச்சியில் பேசிய டேட்டா சயின்டிஸ்ட் ஒருவர், ‘ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு, அதன் வலைப்பக்கத்தால் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுகிறது என்பதும், ஃபேஸ்புக் வாயிலாக வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் நன்றாகவே தெரியும்.

ஆனாலும், அது தன்னை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வாழ்நாளிலேயே ஃபேஸ்புக் போன்ற மோசமான நிறுவனம் ஒன்றை சந்தித்ததே இல்லை...’ என்று கூறியிருந்தார்.

37 வயதான பிரான்சாஸ் ஹாகன் என்ற அந்த நபர் கூகுள், பிண்டெரஸ்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். அவர் வெளிப்படையாக அப்படியொரு பேட்டியளித்த 24 மணி நேரத்துக்குள் ஃபேஸ்புக், இன்கின் என அனைத்து சமூக வலைத்தளங்களும் ஒரே நேரத்தில் முடங்கின.ஏற்கெனவே, கடுமையான எதிர்ப்புக்கு இடையேதான் இன்ஸ்டகிராம் தனது ‘இஸ்டாகிராம் ஃபார் கிட்ஸ்’ திட்டத்தைக் கைவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெட்டாவெர்ஸ் எனும் மெய்நிகர் உலகம்

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் உலகமே நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் இணைய வசதியால் தொடர்பு கொள்ள முடிகிறது. நேரில் கண்டிராத ஒருவரைக் கூட சமூக வலைத்தளங்களின் மூலம் நண்பர்களாக்கிக் கொள்ள முடிகிறது. இந்த இணைய உலகின் அடுத்த கட்டம்தான் மெட்டாவெர்ஸ். மெட்டா - யுனிவெர்ஸ் என்கிற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் மெட்டாவெர்ஸ்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகிற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பதுதான் இதன் அர்த்தம். மெட்டாவெர்ஸ் என்ற பதம் முதன் முதலில் 1992ம் ஆண்டு நீல்ஸ் ஸ்டீஃபன்சன் எழுதிய, ‘ஸ்நேக்ராஸ்’ என்கிற அறிவியல் கதையில் வெளியானது. மக்கள் தங்களுக்கென அவதாரங்களைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம்தான் மெட்டாவெர்ஸ் என அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மெட்டாவெர்ஸ் கோட்பாடு அடிப்படையில் உருவான மற்றொரு நாவல் ‘ரெடி பிளேயர் ஒன்’. இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதனை 2018ம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டிருந்தார்.

இப்போதுள்ள ரோப்லாக்ஸ், ஃபோர்ட்நைட் ஆகிய ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் அடிப்படையில் உருவானவையே. நாம் இருக்கும் சூழலை கற்பனைச் சூழலாக மாற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி, அந்தக் கற்பனைச் சூழலில் நாமே இருப்பதாக உணரச்செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி... இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை விர்ச்சுவலாக வாழச் செய்யும் இடம்தான் மெட்டாவெர்ஸ். இப்போது ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில் நுட்பம் இனி மக்களை தங்களுக்கு பிடித்தமான தோற்றம் கொண்ட அவதார்களை உருவாக்கி மெய்நிகர் உலகில் வாழச் செய்யப் போகிறது.

க்ரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணத்தைக் கொண்டு விர்ச்சுவல் நிலங்களை வாங்கி நமக்கு பிடித்தமான சூழலை உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போது ஃபேஸ்புக் நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தில்தான் கவனம் செலுத்துகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் விர்ச்சுவல் விளையாட்டுத் தளமான ஆக்குலஸ் (Oculus) ஆகியவற்றை மெட்டாவெர்ஸ் மூலம் இணைத்து புதிய தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவது மார்க் ஜூக்கர்பர்க்கின் திட்டம்.

இது சாத்தியப்பட 15வருடங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது. இப்போது ஃபேஸ்புக் மூலம் நாம் இதுவரை நேரில் கண்டிராதவர்களுடன் கூட நட்பு பாராட்டுகிறோம். இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படும் போது மெய்நிகர் உலகில் அந்த நண்பர்களோடு நாம் விளையாடலாம், இசை நிகழ்ச்சிக்குச் செல்லலாம். ஆனால், இது மனிதர்களுக்கு இடையிலான நேரடி தகவல் தொடர்பை ரத்து செய்து மனிதர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்கிற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.l

அன்னம் அரசு