‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’... சன் பிக்சர்ஸ் + விஜய் சேதுபதி காம்பினேஷன்... எம்ஜிஆர் மனம் திறக்கிறார் இயக்குநர் பொன் ராம்



‘‘தீபாவளி வெளியீடு என்பதால் அதிகாலையில் ஜெமினி லேப்பில் ஃபைனல் வெர்ஷன் பார்த்தேன். பொழுதுபோக்கு அம்சங்களோடு படம் பிரமாதமாக வந்திருக்கு. திரைக்கு வரவேண்டிய படம் இப்ப ஓடிடில வெளி வருது. நிச்சயம் தியேட்டர்ல ரிலீசானா ரசிகர்கள் எப்படி வரவேற்பாங்களோ அப்படி ஓடிடிலயும் படம் பார்த்து கொண்டாடுவாங்க. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ‘எம்ஜிஆர் மகன்’ இயக்குநர் பொன்ராம்.

‘எம்ஜிஆர் மகன்’ல என்ன ஸ்பெஷல்?

இந்த டைட்டிலை ஒரு கியூரியாசிட்டிக்காக வைச்சோம். சத்யராஜ் சார் பெயர் எம்.ஜி.ராமசாமி. நாட்டு வைத்தியர். ஊருக்கு உதவும் நல்ல மனசுக்காரர். அதனாலயே அவர் கேரக்டரோடு எம்ஜிஆர் பெயர் ஓட்டிக்கிச்சு. கதைனு பார்த்தா புதுசா எதுவும் இருக்காது. பார்த்து, பழக்கப்பட்டதுதான். ஆனா, பார்க்கிற மாதிரி ஃப்ரெஷ் ஆக இருக்கும். அப்பா - மகன் உறவு காலத்துக்கு காலம் மாறிக்கிட்டே இருக்கு. அந்த வகைல இப்போதைய அப்பா - மகன் உறவை நெகிழ்ச்சியாவும் சுவாரஸ்யமாவும் சொல்லியிருக்கோம்.   

சத்யராஜ், சசிகுமார், சமுத்திரக்கனினு பெரிய நட்சத்திரங்களை எப்படி டீல் பண்ணீங்க?

சத்யராஜ் சாரை வைத்து படம் எடுப்பவர்கள் திரும்பவும் அவருடன் படம் பண்ண ஆசைப்படுவாங்க. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்குப் பிறகு அவரோடு இணையும் வாய்ப்பு இப்பதான் கிடைச்சது. ஏற்கனவே அவர் கூட ஒர்க் பண்ணியிருப்பதால் ஈசியா எங்களால ஜெல் ஆக முடிஞ்சுது. சசிகுமார் இதுல சத்யராஜ் மகனா வர்றார். இருவரும் நேர் எதிர் கேரக்டர். இருவருக்குமான நக்கல், நையாண்டி, ஆக்‌ஷன் கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. உள்ளூர பாசத்தை அழகா இரண்டு பேரும் வெளிப்படுத்தியிருக்காங்க.

சமுத்திரக்கனி அண்ணனை எப்பவும் ‘சார்’னுதான் அழைப்பேன். ‘ரஜினி முருகன்’ கதையை அவர்கிட்ட சொன்னப்ப ‘என்னடா என்னை வில்லனா காட்டப்போறீயா..? நான் வாத்தியார், அதிகாரி வேடங்கள் பண்ணிட்டு இருக்கேன்டா...’ என்றார். ‘அண்ணே நீங்க ஏற்கனவே ‘சுப்ரமணியபுரம்’ல வில்லனா பண்ணிட்டீங்க. இதுல நீங்க நெகட்டிவ் கேரக்டர் இல்ல... நெகட்டிவ் ஷேட் இருக்கிற ஒரு சுவாரஸ்யமான காமெடி ரோல்’னு சொன்னதும் ‘உன்மேல நம்பிக்கை இருக்குடா’னு ‘ரஜினி முருகன்’ல நடிச்சார். ‘எம்ஜிஆர் மக’னுக்கு கதை சொல்ல போனப்ப ‘இப்பவும் வில்லன் ப்ளஸ் காமெடியா’னு சிரிச்சுகிட்டே கேட்டார். ‘இல்லணே... ‘ரஜினி முருகன்’ல ‘போட்ட முதல எடுத்துட்டோம்ல’னு கடைசி ஷாட்ல சொல்வீங்க இல்லையா..? அதனோட தொடர்ச்சி’னு சொன்னதும் சிரிச்சுகிட்டே வந்தார். உண்மைல இந்தப் படத்துல அதகளம் செய்திருக்கார்.

சசிக்கும் கனிக்கும் எப்பவும் நல்ல பாண்டிங் உண்டு. ஆனா, அதை படத்துல காட்டமாட்டாங்க. சமீபத்துல வந்த ‘உடன்பிறப்பே’லயும் அது இருக்காது. ‘எம்ஜிஆர் மகன்’ல ஃப்ரெண்ட்லி மாமன், மச்சானா வர்றாங்க. ரெண்டு பேருமே சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர்கள். ஆனா, இதுல நடிகர்களா மட்டும்தான் தங்கள் பங்களிப்பை செய்திருக்காங்க.  சரண்யா பொன்வண்ணன் அம்மா ரோல் பண்ணியிருக்காங்க. சத்யராஜ் சார் ஜோடியா முதன் முறையாக இதுல வர்றார். இருவரும் காமெடி ப்ளே பண்ணக்கூடியவங்க. அது படத்துல பக்காவா
வந்திருக்கு.

நாயகியா மிருணாளினி. ‘சூப்பர் டீலக்ஸ்’ல சின்ன ரோல் பண்ணவங்க. அவங்க ஹீரோயினா பண்ற முதல் படம். ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி சூப்பராக வந்திருக்கு. இரண்டு பேரும் பொய் சொல்லும் கேரக்டர். அப்படினா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் இருக்காங்க. பழகருப்பையா வில்லனா வர்றார். அவருடைய மகனா ‘ஜூனியர் எம்ஜிஆர்’ ராமச்சந்திரன் நடிச்சிருக்கார். இவர் முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாவின் அண்ணன் மகன்.  

பாடகர் அந்தோணிதாசனுக்கு இசை அமைப்பாளராக இதுதான் முதல் படமா?

ஆமா. அந்தோணிதாசன் பாடகராதான் எனக்கு அறிமுகமானார். அவர்கிட்ட மியூசிக் மைண்ட் செட் இருப்பது பேசறப்ப தெரிஞ்சுது. அதை வெளிய கொண்டுவர நினைச்சேன். அது இந்தப் படத்துல கைகூடியிருக்கு. பாடல்கள் ஏற்கனவே டிரெண்டிங்ல இருக்கு. பின்னணி இசையை நோபல் ராஜா  பண்ணியிருக்கார்.‘நெடுநல்வாடை’ல ஒளிப்பதி வாளர் வினோத் ரத்தினசாமியின் ஒர்க் பிரமாதமா இருந்தது. அவரை விரும்பி இப்படத்துக்கு அழைச்சேன். ரொம்ப நேர்த்தியா படமாக்கியிருக்கார். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிச்சிருக்காங்க.

நீங்கள் சிவகார்த்திகேயனை வைத்து ஹாட்ரிக் அடித்த இயக்குநர். ‘டாக்டர்’ எப்படி?

என் படத்துல சிவா சார் மாஸாக இருப்பார். இதுல அவருடைய நடிப்பு புதுவிதமா இருந்தது. எந்த இடத்திலும் பழைய சாயல் தெரியாம புதிய பரிமாணத்தில் பண்ணியிருந்தார். அவருடன் மூணு படங்கள் பண்ணியது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். நான்கு வரில ஒரு டயலாக்கை அவருக்கு நான் எழுதி அதை அவர்கிட்ட சொல்ல முற்படறப்ப மூணாவது லைனை அவரே சொல்ல ஆரம்பிச்சுடுவார். அதுதான் அவருக்கும் எனக்குமிடையே உள்ள புரிதல். எனக்கு என்ன தேவைனு அவருக்கும் அவருக்கு எது சரியா இருக்கும்னு எனக்கும் தெரியும். அதனாலதான் இந்த ஹாட்ரிக் மேஜிக் நடந்தது. இந்த பாண்டிங் இறைவன் கொடுத்தது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் -2’ டாக் வருதே?

இது நான் மட்டுமே முடிவு பண்ணும் விஷயம் கிடையாது. காலம் வரும்போது நடக்கும்.

‘விஜய் சேதுபதி 46’ எந்த நிலைல இருக்கு?

சன் பிக்சர்ஸ், விஜய்சேதுபதி என்ற பெரிய செட்டப் படம் அது. விஜய்சேதுபதி போலீஸா வர்றார். ஒரு ஷெட்யூல் முடிஞ்சுடுச்சு. இரண்டாவது ஷெட்யூலில் விஜய்சேதுபதிக்கு வேற கெட்டப். மற்ற படங்களின் கன்டினியூட்டி இருப்பதால் வெயிட் பண்றோம். டிசம்பரில் எங்க படத்துக்கு வர்றார். வந்ததும் படத்தை முடிச்சுடுவோம்.

சன் பிக்சர்ஸ்ல படம் பண்ணும் அனுபவத்தை எப்படி பார்க்கறீங்க?

ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்கும் நிறுவனம். அந்த நிறுவனத்துல படம் இயக்குவதை பாதுகாப்பா உணருகிறேன். ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் சமயத்துல பிரச்னை இருந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் பிரச்னைகளைக் கடந்துதான் வந்தது. அதனால சன் பிக்சர்ஸ்ல படம் இயக்குவது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, நிறைவைத் தருது.

எஸ்.ராஜா