‘அண்ணாத்த’ Exclusive-ரஜினி சார் மேஜிக்கை அப்படியே கொண்டு வந்திருக்கோம்..!



இயக்குநர்  சிவா  பேட்டி

‘‘‘என் படத்தை நானே என்ஜாய் பண்ணி பார்த்தேன்...’னு முழுப் படத்தையும் பார்த்துட்டு ரஜினி சார் சொன்ன வார்த்தைகள் இப்பவும் என் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு...’’ நெகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார் இயக்குநர் சிவா. ‘சிறுத்தை’ டூ ‘அண்ணாத்த’… தமிழ் சினிமாவில் ஒரு மேஜிக்கே நடத்திட்டீங்களே?

சாய்ராம்! சந்தோஷமான பயணம். கடவுள் என் விஷயத்துல நிறைய கருணை காட்டியிருக்கார். ‘சிறுத்தை’ படம் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் ஓடிட்டு இருந்தப்ப ரஜினி சாருக்கு படத்தை போட்டுக் காட்டினோம். அன்னைக்கு என்னால நகரவே முடியாத அளவுக்கு முதுகு வலி. கொஞ்ச நேரத்துல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார் எனக்கு போன் செய்து, ‘சார் உங்களை பார்க்கணும்னு சொல்றார்’ன்னு கூப்பிட்டார். அடிச்சு பிடிச்சு முதல் பாதி முடியறதுக்குள்ள போயிட்டேன். படம் பார்த்துட்டு இருந்த ரஜினி சாரையே பார்த்துட்டு இருந்தேன்.

இப்பவும் என்னால நம்பமுடியல... படத்தை அவ்வளவு என்ஜாய் செய்து பார்த்தார். படம் முடிஞ்சு என்னை அவ்வளவு பாராட்டினார். போட்டோ எடுக்கும்போதே ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்றோம்’னு சொன்னார். இதோ ‘சிறுத்தை’ வெளியாகி சரியா பத்து வருஷம் கழிச்சு அவர் சொன்ன வார்த்தை நடந்திருக்கு.  குடும்ப சென்டிமென்ட் உங்களுக்குக் கைவந்த கலை... உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க?

தாத்தா எழுத்தாளர் வேலன். அவர் தயாரிப்பாளரும் கூட. அப்பா இயக்குநர் ஜெயகுமார். அம்மா செந்தாமரை. என் மனைவி ராஜலட்சுமி. அக்கா சுவிட்சர்லாந்தில் இருக்காங்க. தம்பி, நடிகர் பாலா... உங்களுக்கே தெரியும். என் அப்பா ஜெயகுமார் சமீபத்தில்தான் இறந்தார். இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா அதுக்கு காரணம் 15 வயசுல என் அப்பா எடுத்த முடிவுதான். என் வயசு பசங்க எல்லாம் கிரிக்கெட் விளையாடிட்டு ஊர் சுத்திகிட்டு இருந்தப்ப அப்பா என்னை எடிட்டிங் ரூம்ல உட்கார வைச்சார். முதல் முதல்ல நான் கத்துக்கிட்டது எடிட்டிங்தான். அப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா, இன்னைக்கு நினைச்சு பார்க்கும்போது அவ்வளவு பெருமையா இருக்கு.

எடிட்டிங் கத்துக்கிட்ட பிறகுதான் ஒளிப்பதிவு பக்கம் திரும்பினேன். அடிப்படைல நான் அம்மா பையன். அவங்க வளர்ப்பு. கொஞ்சம் செல்லம். அதனாலயே யாருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாதுனு எப்பவும் கவனமா இருப்பேன். இன்னைக்கு இவ்வளவு ரிலாக்ஸா, ஹேப்பியா இருக்கேன்னா அதுக்கு என் மனைவி ராஜலட்சுமி முக்கிய காரணம். என் பையன் விஸ்வஜித். என் அத்தனை பாஸிட்டிவ் எனர்ஜியும் என் குடும்பம் எனக்கு கொடுத்தது. என் அப்பா துவங்கி என் பையன் வரை என்னை ரொம்ப சந்தோஷமா வச்சிருக்காங்க.
டெக்னீஷியன் to இயக்குநர்... இந்த கிராஃப் உங்களுக்கு கொடுத்த பிளஸ் என்ன?

என் படங்கள்ல இதுவரை எடுக்கப்பட்ட காட்சி எதுவும் தேவை இல்லைனு எடிட்ல தூக்கிப் போட்டது கிடையாது. ஷூட் நடக்கிறப்பவே காட்சிகளை வீணாக்கக் கூடாதுனு திட்டமிடுவேன். ஏன்னா இதுல தயாரிப்பாளர் பணம் மட்டுமில்ல... பெரிய ஸ்டார் ஆரம்பிச்சு கடைக்கோடி டெக்னீஷியன் வரை அத்தனை பேருடைய உழைப்பும் இருக்கு. இந்த திட்டமிடல் நான் டெக்னீஷியனா இருந்தப்ப கத்துக்கிட்டது.

‘அண்ணாத்த’ பெயர்க் காரணம் என்ன?

தமிழ் கலாசாரத்தைப் பொறுத்தவரைக்கும்  அண்ணன் உறவு அவ்வளவு முக்கியமான ஓர் உறவு. அதேபோல ரஜினி சாரைப்  பொறுத்தவரை அவர்கிட்ட ரசிக்கும்படியான ஒரு குறும்புத்தனமும் இருக்கும்.  மரியாதைக்குரிய அண்ணன், தந்தை ஸ்தானத்திலேயும் இருக்கக் கூடிய ரஜினி சார்  போலவே அவருடைய குறும்புத்தனத்தை அடையாளப்படுத்தக் கூடிய வார்த்தைதான் ‘அண்ணாத்த’. அந்த குறும்போடுதான் பாடலில் கூட அவர் நடனமாடி  இருப்பார். நிறைய பேர் அந்த நடனத்தை வியந்து சொன்னாங்க. படத்திலே சூரி  ஆரம்பிச்சு சதீஷ், ரெடின் கிங்ஸ்லி அத்தனை பேரும் ரஜினி சாரை ‘அண்ணாத்த’னு செல்லமா கூப்பிடுவாங்க.

படத்தின் கதை பற்றி சொல்லுங்களேன்…
எனக்கு  மட்டுமில்ல... உலகின் அத்தனை மொழிகளிலும் எப்போதும் எவர்கிரீன் கான்செப்ட்  குடும்ப சென்டிமென்ட்தான். அந்த சென்டிமென்ட்டை எப்பவும் விட மாட்டேன்.
‘அண்ணாத்த’ படத்தின் கதையும் குடும்ப சென்டிமென்ட் +  ஆக்‌ஷன்தான். படத்திற்கு எந்தக் கட்டும் இல்லாம UA கிடைச்சிருக்கு.கதை கேட்டவுடன் ரஜினி சார் என்ன சொன்னார்? ‘விஸ்வாசம்’ பார்த்துட்டு சார் என்னை போனில் கூப்பிட்டார். அது ஒரு நீண்ட நேர  போன் கால். ‘ரொம்ப அழகான ஒரு படம் எடுத்துருக்கீங்க... காட்சிகள் கோர்வையா  இருக்கு’ன்னு ரொம்ப நேரம் பாராட்டினார். அதோடு என்னை வீட்டுக்கும்  கூப்பிட்டார்.

அந்த சந்திப்பில் திரும்பவும் ‘விஸ்வாசம்’ படத்தைப் பாராட்டியவர், ‘சிறுத்தை’ பார்த்துட்டு சொன்ன அதே வார்த்தையை திரும்பவும் சொன்னார்... ‘நம்ம ஒரு படம் பண்ணலாம்...’
இதுக்கு மேல  என்ன வேணும்? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பத்து நாட்கள் கழிச்சு அவரை  சந்திச்சேன். அவருக்காகவே உருவாக்கின கதையை முழுமையா கூட சொல்லலை... 30, 40  நிமிடங்கள்தான் பேசியிருப்போம். சட்டுனு ‘ஓகே’ சொன்னார். கதை  அவருக்கு அந்தளவு பிடிச்சுப் போச்சு.

தமிழ் சினிமாவின் பாதி நடிகர்கள் ‘அண்ணாத்த’ல இருக்காங்களே..?

ரஜினி  சார் ஓகே சொன்ன அடுத்த செகண்ட் சன் பிக்சர்ஸ் தயாரிப்பது முடிவாச்சு. இது இரட்டிப்பு சந்தோஷம். சாய்ராம்... எல்லாம் கைகூடி வந்தது இறைவன் அருள்.
என்னுடைய டெக்னீஷியன் குழு அப்படியே ‘அண்ணாத்த’ல இருக்காங்க. எல்லாரும் கதை கேட்டு அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் கதை சொல்லச் சொல்ல கதை அப்டேட் ஆகிகிட்டே இருந்தது. என் வாழ்க்கைல மறக்கவே முடியாதது சன் பிக்சர்ஸ் மாறன் சாரும் காவ்யா மேடமும் கொடுத்த சப்போர்ட். இப்படியொரு தயாரிப்பாளர் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்.

பாடலில் ரஜினி சார் துள்ளிக் குதித்து நடனமாடி இருக்காரே..?

படம்  ஆரம்பித்த நாளிலிருந்தே ரஜினி சாருக்கு ஒவ்வொரு நாளும் அவருக்குப் பிடித்த  மாதிரியான விஷயங்கள் சரியா நடந்துச்சு. என்னுடைய ஷூட்டிங் எப்பவும் காலை 7  மணிக்கு சரியா ஆரம்பிச்சுடும். முதல்நாள் ஷூட் 7 மணிக்கு ஷாட் ரெடி  அப்படின்னு சொன்னவுடன் ரஜினி சார் மேக்கப் எல்லாம் முடிச்சுட்டு வெளியே  வந்தார். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் துவங்கி அத்தனை குழுவும்  ரெடியா நின்னுட்டு இருந்தாங்க.

‘ஹேய்! இவங்கல்லாம் எப்ப  ரெடியானாங்க... எங்க இருந்தாங்க...’ன்னு ஆச்சர்யமா கேட்டார். ‘இதுதான் ரொம்ப கரெக்டான ஷூட்டிங் ஸ்பாட்’னு  பாராட்டினார்.
என்னைப் பொறுத்தவரை 7 மணிக்கு சரியா ஷூட்டிங் ஸ்டார்ட்  ஆகிடும். தொடர்ந்து சரியான நேரத்தில் காலை உணவு இடைவேளை உண்டு. அதேபோல் ஷூட்ல பிரேக்கும் உண்டு. வேளாவேளைக்கு ஒவ்வொருத்தரும் சாப்பிடணும்னு ரொம்ப கண்டிப்பா இருப்பேன்.

இதெல்லாம் பார்த்துட்டு ரஜினி  சாருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. ஒவ்வொரு நாளும் படத்தை அவர் என்ஜாய் செய்ய  ஆரம்பிச்சுட்டார். நாங்களே கேட்காமல் நிறைய இடங்கள்ல எனர்ஜியா சில  விஷயங்கள் செய்தார். அப்படி ஒரு சம்பவம்தான் பாட்டில் துள்ளிக்  குதித்து நடனமாடினது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்... இதுவே ஒரு மேஜிக்... கூடவே குஷ்பூ, மீனா... இந்த மிகப்பெரிய மேஜிக்கை எப்படி நடத்தினீங்க?

இந்தக்  கேள்வியை ரஜினி சார் உட்பட அத்தனை பேரும் கேட்டாங்க. நயன்தாரா மேடத்தை எனக்கு பதினைந்து வருடங்களா தெரியும். தெலுங்குப் படங்கள்ல நான் ஒர்க் செய்தப்ப ஆரம்பிச்ச  நட்பு அப்படியே ‘விஸ்வாசம்’ வரை தொடர்ந்தது.‘அண்ணாத்த’ படத்தை ‘நானே செய்யறேன்’னு  அவங்களே முன் வந்தாங்க. என் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தா கதை கூட  கேட்காம ஓகே சொல்லி இருப்பாங்க! ஹீரோயின் என்கிறதைத் தாண்டி கனமான  பாத்திரத்தில் நயன்தாரா மேடத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

இந்த படத்தின் மையக்கரு... கதை... அத்தனையும்  கீர்த்தி சுரேஷைச் சுற்றித்தான் நடக்கும். கீர்த்தி சுரேஷுக்கு சார் மேலே  அவ்வளவு மரியாதை.குஷ்பூ மேம், மீனா மேம்... நீங்க சொன்ன மாதிரி இது மிகப்பெரிய மேஜிக்தான். ரஜினி சார் படங்கள்னாலே ஒரு காலத்தில் ஜோடி குஷ்பூ  மேடம் அல்லது மீனா மேடம்தான். ஆனா ‘அண்ணாத்த’ல குஷ்பூ - மீனா மேடம் கேரக்டர்ஸ் சஸ்பென்ஸ்.

இவங்களைத் தவிர ஜெகபதி பாபு  சார், பிரகாஷ்ராஜ் சார், வேல ராமமூர்த்தி சார், சூரி, சதீஷ், ஜார்ஜ்  மரியான், அர்ஜய், விஸ்வநாத், அபிமன்யூ சிங், ரெடின் கிங்ஸ்லி, லிவிங்ஸ்டன்,  பாண்டியராஜன்... இப்படி திருவிழா மாதிரி என்ஜாய் பண்ண ஒரு கூட்டமே ‘அண்ணாத்த’ல இருக்கு.ஒரு மாஸ் நடிகர், ஓர் இயக்குநருக்கு 2வது படம் கொடுப்பதே பெரிய விஷயம். அஜித் கூட 4 படங்கள் எப்படி சாத்தியப்பட்டது?

‘அண்ணாத்த’ அறிவிப்புக்கு அஜித் சார் என்ன சொன்னார்?கொரோனா பரவல், ஊரடங்கு... இப்படி பல இடையூறுகள் வந்ததே... ‘அண்ணாத்த’ ஷூட்டை எப்படி எடுத்தீங்க..?
90களின் சூப்பர் ஸ்டாரை ‘அண்ணாத்த’ல பார்க்கலாம்னு சொல்லி இருக்கீங்க... படத்தின் ஆக்‌ஷன் பத்தி சொல்லுங்க?உட்பட இன்னும் சில கேள்விகளுக்கு இயக்குநர் சிவா அளித்த பதில்... அடுத்த இதழில்...

ஷாலினி நியூட்டன்