தீபாவளியால் தலைநிமிரும் இந்தியா!



தீபாவளி வந்தாலே இந்தியர்களிடம் உற்சாகம் கரைபுரளத் தொடங்கிவிடும். அது எந்த மதத்தவராக இருந்தாலும் சரி, தீபாவளி என்றால் கொண்டாட்டம்தான். காரணம், தீபாவளி என்பது இந்தியர்களுக்கு மதச் சடங்கும் பண்பாட்டுத் திருவிழாவும் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்தின் பொருளாதார உற்சவம் இது.
தீபாவளி காலத்தில்தான் எளிய மனிதர்கள் உட்பட எல்லோரிடமும் பணப் புழக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சம்பளதாரர்களுக்கு போனஸ் வருமானம், கடைக்காரர்களுக்கு விற்பனை உயர்வு, ஊடகங்களுக்கு விளம்பர வருமானம் என்று இந்தியப் பொருளாதாரத்தின் அத்தனை உள் நீரோட்டங்களிலும் உயிர்ச்சத்து பாய்ந்து உற்சாகம் கரை ததும்பும்.

இந்த தீபாவளியும் இதில் விதிவிலக்கல்ல என்பதன் ஆனந்த அறிகுறிகள் இப்போதே தெளிவாகத் தெரிகின்றன.கடந்த வருடம் கொரோனாவால் நிகழ்ந்த லாக்டவுன் இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. அதன் சரிவுகளிலிருந்து இன்னமுமேகூட நம்மால் முழுமையாக மீள முடியவில்லை என்பதே உண்மை. ஆனால், அப்படியான நெருக்கடியான சூழலில்கூட கடந்த வருட தீபாவளி காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சற்றே தலை நிமிர்ந்தது. இந்த வருடம் அந்த சூழல் இன்னமும் மேம்பட்டுள்ளது.

*அசத்தும் ஆன்லைன் விற்பனை

முன்பு எல்லாம் தீபாவளி என்றால் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைக்குச் சென்று அடித்துப் பிடித்து துணி வாங்குவார்கள். சிலர் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் கடைகளுக்குத்தான் ஓட வேண்டும். இப்போது சூழல் அப்படி இல்லை. ஆன்லைன் ஷாப்பிங் வந்தபிறகு வீட்டிலிருந்தபடியே வேண்டியதை ஆர்டர் செய்துகொள்ள முடிகிறது.

கடந்த தீபாவளியின்போதே அமேசான், வால்மார்ட் உட்பட எல்லா சில்லறை விற்பனையாளர்களையும் சேர்த்த தீபாவளி விற்பனை ரூபாய் 29 ஆயிரம் கோடி என்கிறது ரெட்ஷீர் கன்சல்டன்ட் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 55% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் போன வருடம் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.இந்த வருடமும் ஆன்லைன் விற்பனை களை கட்டுகிறது. சென்ற வருடத்தைவிட சிறப்பான ஆன்லைன் வர்த்தகம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள். கடந்த வருடத்தின் வருமானத்தை இந்நேரம் ஆன்லைன் சந்தைகள் கடந்திருக்கும் என்ற நிலையில் இது ஆன்லைன் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் தீபாவளிதான்.

*நேரடிச் சந்தையின் ஏறு முகம்

கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என்று நம்பப்படும் நிலையில் இந்தியச் சந்தை தீபாவளியை நோக்கி மேலும் உற்சாகமாக ஆனந்த நடை போடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் ஆன்லைன் ஷாப்பிங் எல்லாம் வந்துவிட்டாலும் நம் மக்களுக்கு குடும்பத்தோடு துணிக் கடைகளுக்கும் பிற கடைகளுக்கும் போய் துணி எடுப்பதில்தான் ஆனந்தமே இருக்கிறது என்பதால் நேரடி விற்பனைக் கடைகளின் ஆதிக்கத்தில்தான் இந்தியச் சந்தை இன்றும் உள்ளது. தீபாவளி சில்லறை விற்பனையில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து சதவீதம் இவர்களிடம்தான் இன்னமும் உள்ளன என்ற நிலையில் தீபாவளி உற்சவத்தில் இவர்களும் இவ்வருடம் மொத்தமாக அள்ளப் போகிறார்கள்.

*அதிகரிக்கும் வாகன விற்பனை

இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கணிசமாகக் குறைந்து வருகின்றன. ஆனால், தீபாவளி சமயத்தில் மட்டும் இவற்றின் விற்பனை மளமளவென அதிகரிக்கின்றன என்கின்றன ஆய்வுகள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாகனங்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்தது என்கிறது ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று. இந்த ஆண்டும் இந்த விற்பனை உயர்வு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் வாகன விற்பனையாளர்கள்.

*கிரெடிட் கார்டுக்கு க்ரீன் சிக்னல்

இந்தியர்களின் கடன் அட்டை கடந்த இரண்டு வருடங்களாகவே சைலண்ட் மோடுக்குச் சென்றுவிட்டதாகத்தான் நம்பப்படுகிறது. ஆனால், தீபாவளி என்று வந்துவிட்டால் மட்டும் நம் ஆட்கள் கொரோனா, லாக்டவுன், நெருக்கடி காலம் எதனையும் பார்ப்பதில்லை. போன வருட தீபாவளியின்போதே கிரெடிட் கார்டு பயன்பாடு கணிசமாக அதிகரித்தது என்கின்றன புள்ளிவிவரங்கள். குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம், மூன்றாம் வாரத்தில் கிரெடிட் கார்டு உபயோகம் வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்திருக்கிறது. இது தீபாவளிக்கு மக்கள் தாராளமாகச் செலவழித்ததையே காட்டுகிறது.

*புதிய உச்சங்கள் தொடும் பங்குச் சந்தை

கடந்த சில மாதங்களாகவே இந்தியப் பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் இன்று இந்தியப் பங்குச் சந்தையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த வாரம் சென்செக்ஸ் அறுபத்தோராயிரம் புள்ளிகளையும் நிஃப்ட்டி பதினெட்டாயிரம் புள்ளிகளையும் கடந்து புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை.
இப்படியான சூழலில் தீபாவளி முஹூரத் விற்பனை சக்கைப் போடு போடும் என்று முதலீட்டாளர்கள் குஷியில் இருக்கிறார்கள். தீபாவளிக்காக இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் பெரு நிறுவனங்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று முஹூரத் எனப்படும் நல்ல நேர பங்கு விற்பனை நடப்பது வழக்கம். தேசிய அளவிலான பண்டிகை நாள் விற்பனை என்பதால் இந்த முஹூரத் விற்பனை எப்போதுமே களை கட்டும். இந்த வருடம் நவம்பர் நாலாம் தேதியான தீபாவளி யன்று மாலை ஆறு மணி முதல் ஏழேகால் மணி வரை சுபமுகூர்த்த நேரத்தில் முஹூரத் விற்பனை நடைபெற உள்ளது. கடந்த வருடம்  சென்செக்ஸ் நாற்பத்தி மூன்றாயிரம் புள்ளிகளாகவும் நிஃப்ட்டி பனிரெண்டாயிரத்து எழுநூறு புள்ளிகளாகவும் இருந்தபோதே முஹூரத் விற்பனை கனஜோராக நடந்தேறியது.

இவ்வருடமோ தீபாவளி தொடங்குவதற்கு இரு மாதங்கள் முன்னமே இந்தியப் பங்குச் சந்தை காளை போல் சீறத் தொடங்கிவிட்டது என்ற நிலையில் தீபாவளி முஹூரத் விற்பனை அட்டகாசமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

*அதிகரிக்கும் வரி வருமானம்

இப்படி தீபாவளியால் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எல்லா துறையிலும் விற்பனையும் வருமானமும் அதிகரிப்பதால் அரசுக்கு செல்ல வேண்டிய வரிவிகிதங்களும் கணிசமாக உயரும். இதனால், அரசின் வரி வருவாயும் உயரும். அரசால் பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களை எளிதாகக் கையாள முடியும். சரிந்து கிடக்கும் பொருளாதாரம் மேலும் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்க முடியும்.

இந்த தீபாவளி நம் பொருளாதார சரிவுகளுக்கு நிரந்தரமான நல்ல விடிவைத் தந்துவிடாதுதான். ஆனால், பசியோடு தூங்கிக் கொண்டிருப்பவனுக்கு ரொட்டி கிடைத்தது போல், தளர்ந்துகிடக்கும் பொருளாதாரம் கொஞ்சம் தளிர்க்க உதவுகிறது. அப்படியான வகையில் இந்த தீபாவளி நமக்கு முக்கியமானதாகிறது. எனவே, இதனை உற்சாகமாகவே வரவேற்போம். ஹேப்பி தீபாவளி!

இளங்கோ கிருஷ்ணன்