கருப்பட்டி கடலைமிட்டாய் தயாரிக்கும் எஞ்சினியர்!
‘‘நம்மூர்ல 1960க்கு முன்பு வரை கருப்பட்டியில் செய்யப்பட்ட இனிப்புகளே அதிகம். வெல்லம் வந்ததும் கருப்பட்டி இனிப்புகள் எல்லாம் காணாமல் போயிடுச்சு. குறிப்பா, கருப்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியே அழிஞ்சுபோச்சு. ‘ஒருகாலத்துல அப்படி ஒண்ணு இருந்தது தம்பி’னு பெரியவங்க சொல்லிக் கேட்ட நிலையில்தான் நான் இந்தத் தொழிலுக்குள்ள வந்தேன். இப்ப கருப்பட்டி கடலைமிட்டாயை எல்லோர்கிட்டயும் பரவலா கொண்டு சேர்த்திருக்கேன்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ உற்சாகம்பொங்க பேசுகிறார் ஸ்டாலின் பாலுச்சாமி. எஞ்சினியரிங் பட்டதாரியான இவர், ஆறு ஆண்டுகள் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் கம்பெனியின் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரிவில் கைநிறைய சம்பளத்துடன் பணி செய்தவர். இப்போது கருப்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியை குடும்பத்துடன் செய்து வருகிறார்.
எந்தக் கலப்படமும் இல்லாமல் கடலையில் தொடங்கி கருப்பட்டி வரை எல்லாவற்றையும் உற்பத்தியாளர்களிடமே நேரடியாகப் பார்த்துப் பார்த்து வாங்கி, கையினாலேயே இந்தக் கருப்பட்டி கடலைமிட்டாயை தயாரிக்கிறார். இதனால், தரமும் சுவையும் கூட வாடிக்கையாளர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக இதனை, motherway.in என்கிற இணையதளம் வழியே இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி. பிஇ முடிச்சதும் கோவையில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்தேன். என் நேச்சருக்கும் என் பணிக்கும் பொருந்திப் போகல. இருந்தும் பணி செய்தேன். ஏன்னா, என்னுடையது நடுத்தரக் குடும்பம். அப்பா பாலுச்சாமி போஸ்ட் ஆபீஸ்ல கிளார்க்கா இருந்தார். அம்மா சாந்தி வீட்டுல தையல் வகுப்பு எடுத்திட்டு இருந்தாங்க. வீட்டுப் பொருளாதாரச் சூழலால் கடன் வாங்கித்தான் படிப்பை முடிச்சேன். அப்புறம், அந்த வேலையில் இருந்தே கடனை அடைச்சேன்.
இந்நேரம் என் அண்ணன் வினோத், ‘குக்கூ’ காட்டுப்பள்ளி அமைப்புடன் இணைஞ்சு வேலை பார்த்திட்டு இருந்தார். இதனால, நேரம் கிடைக்கிறப்ப அங்க போய் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகள்ல கலந்துப்பேன். அங்க குழந்தைகள் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருப்பாங்க. அதுக்குக் காரணம் அவங்க அவங்களா இருக்குறதுதான்னு தெரிஞ்சது. அந்த உற்சாகம் எனக்குள்ளும் வந்தது. அந்தத் தருணம்தான் எனக்கான தேடல் பத்தின புரிதல் கிடைச்சது.
ஒருகட்டத்துல எஞ்சினியரிங் பணி நமக்கானதல்லனு தோண, வேலையிலிருந்து விலகிட்டேன். 2015ன் தொடக்கத்திலிருந்து ஆறுமாசம் குக்கூ காட்டுப்பள்ளியில் முழுநேரமா இருந்தேன். இந்நேரம், திருமணம் முடிவாகிற சூழல் வந்தது. எனக்கான பொருளாதாரம், வாழ்வியல் பத்தி யோசிக்கிறப்ப சிவராஜ் அண்ணா, ‘நமக்கென நல்ல ஆரோக்கிய தின்பண்டங்கள் இங்க எதுவும் இல்ல. அதனால, கடலைமிட்டாய் தொழிலை சிறப்பா செய்யலாமே’னு சொன்னார்.
அவர் ஏன் அப்படி சொன்னார்னு தெரியல. ஆனா, 2015ம் ஆண்டு அக்டோபர் மாசம் நான் கடலைமிட்டாய் தொழிலைத் தொடங்கிட்டேன்...’’ என்கிற ஸ்டாலின் நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘முதல்ல எங்க ஊரைச் சுத்தி இருந்த அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, கழுகுமலை, திருச்செந்தூர், தூத்துக்குடினு எல்லா ஊர்களுக்கும் போனேன். இந்த ஊர்கள் எல்லாமே கடலைமிட்டாய்க்கு புகழ் வாய்ந்தது. அங்க அலைஞ்சு திரிஞ்சு கடலைமிட்டாயை மட்டும் வாங்கிட்டு வருவேன்.
அப்பதான், ஒரு நாளைக்கு டன் கணக்கா உற்பத்தி பண்ற பெரிய நிறுவனங்களும் இருக்குது. அதேபோல, ஒரு வீட்டுல மண் அடுப்பை வச்சு குடும்பமா சிறுதொழிலா செய்றவங்களும் இருக்காங்கனு தெரிஞ்சது. ஆறு மாசம் ஒரு நல்ல சுவையுள்ள கடலைமிட்டாய்க்காக ரொம்ப அலைஞ்சேன். எதுவும் கிடைக்கல. இந்நேரம், கடலைமிட்டாய் பத்தின புத்தகங்களைத் தேடினேன். இன்டர்நெட்ல, யூடியூப்ல அது சம்பந்தமான செய்திகள் பார்த்தேன். அப்ப 1960க்கு முன்னாடி கருப்பட்டி கடலைமிட்டாய் நம்ம ஊர்ல இருந்திருக்குனு தெரிஞ்சது. இதை சிவராஜ் அண்ணாகிட்ட சொன்னதும், அவர் கருப்பட்டி கடலைமிட்டாயே செய்யலாம்னு ஊக்கம் தந்தார்.
இதன்பிறகு, இன்னொரு ஆறு மாசம் நான் கருப்பட்டி கடலைமிட்டாய் நோக்கி பயணிச்சேன். கருப்பட்டி கடலைமிட்டாய் எந்தெந்த ஊர்ல இருந்தது... யார் அதைத் தொழிலா செய்தாங்கனு தேடினேன். இதை கழுகுமலை, திருச்செந்தூர் பகுதிகள்ல செய்திருக்காங்க. ஆனா, என்னால் அப்படி ஒண்ணு இருந்ததை கண்டுபிடிக்க முடியல. முன்னாடி செய்த மாஸ்டர்களும் உயிருடன் இல்ல. சில வயசானவங்க கருப்பட்டி கடலைமிட்டாய் சாப்பிட்டிருக்கேன்னு அதன் சுவையை விளக்கினாங்க. அவ்வளவுதான்.
இந்நேரம், என் நண்பனின் தந்தை தஞ்சாவூர்ல கடலைமிட்டாய் தொழிலை செய்திட்டு இருந்தார். அவர் பெயர் கூடலிங்கம். இதில் அவருக்கு 35 ஆண்டுகள் அனுபவம். ரொம்ப நல்லா பண்ணிட்டு இருந்தார். அவர் செய்ததை சாப்பிட்டு பார்த்தேன். சின்ன வயசுல நான் ருசிச்ச அதே சுவை அவரின் கடலைமிட்டாயில் இருந்துச்சு. இவர்தான் நமக்கு குருனு அவர்கிட்ட கத்துக்க போனேன்.
எனக்கு எந்த செயற்கைப் பொருளும் சேர்க்காமல் தரமான நல்ல சுவையுடன் ஒரு கடலைமிட்டாயை செய்யணும்னு ஆசை. அந்தக் காலத்துல எப்படி இருந்ததோ அதேமாதிரி. அதை கூடலிங்கம் அப்பா எனக்குக் கத்துத் தந்தார். அவர் வெல்லத்துல செய்தாலும் என் வற்புறுத்தலுக்காக கருப்பட்டியில் செய்து காட்டினார். கடலையை ஏன் கையினால் வறுக்கணும்... கருப்பட்டி பாகினை எந்தப் பதத்தில் காய்ச்சணும்... உள்ளிட்ட இதுக்கென உள்ள நெறிமுறைகளை அவரிடமிருந்து கத்துக்கிட்டேன்.
அப்புறம், வீட்டுல மண் அடுப்பு போட்டு செய்ய ஆரம்பிச்சேன். எந்த இடத்திலும் இயந்திரமோ, கருவிகளோ பயன்படுத்தக்கூடாதுனு உறுதியா இருந்தேன். இப்பவரை கையினாலேயே தயாரிப்பு வேலைகளை செய்றேன்...’’ என்கிறவருக்கு அவ்வளவு எளிதாக கருப்பட்டி கடலைமிட்டாய் செய்முறை கைகூடவில்லை. ‘‘பனங்கருப்பட்டியில் கடலைமிட்டாய் செய்றது அவ்வளவு எளிதா இருக்கல. சரியான பதத்துல கடலைமிட்டாய் வரவேயில்ல. ரொம்ப சிரமப்பட்டேன். அப்புறம், இது வெல்ல கடலைமிட்டாயை விட மூணு மடங்கு உற்பத்திச் செலவும் அதிகம். அதனால, என்ன பண்றதுனு தெரியாமல் முழிச்சேன்.
இந்நேரம், முகநூல் பக்கம் ஆரம்பிச்சு இதுசம்பந்தமா எழுதலாம்னு சிவராஜ் அண்ணன் சொன்னார். அதன்படி செய்தேன். அப்ப, இதை முன்னாடி செய்தவர்களின் பிள்ளைகள் இதுசம்பந்தமான அனுபவங்களை முகநூல்ல பகிர்ந்தாங்க. அப்படியா நிறைய விஷயங்கள் கிடைச்சது. எனக்கு நல்ல பதத்தில் கருப்பட்டி கடலைமிட்டாய் வரவே ஒண்ணே கால் ஆண்டுகள் ஆச்சு. பிறகு, இதனை தெரிஞ்ச நண்பர்களுக்கு கொடுத்தேன்.
முகநூல்ல எழுதுறதால நிறைய பேர் கேட்டாங்க. அவங்களுக்கும் கொடுத்தேன். கேட்ட கடைகளுக்கும் கொண்டு சேர்த்தேன். இதன்பிறகு, இதை தரமான பேக்கிங் செய்யணும்னு தோணுச்சு. ஏன்னா, இந்தப் பொருள் சரியா போய்ச் சேராததற்குக் காரணம் பேக்கிங்தான். அதனால, எல்லா தரப்பு மக்களும் சாப்பிடணும்னா பேக்கிங் குவாலிட்டியா இருக்கணும்னு முடிவெடுத்தேன். ஆனா, வெல்ல கடலைமிட்டாயைவிட இதன் விலை அதிகம் என்கிறதால சகஜமா உள்ளூர் ஆட்கள்கிட்ட சேர்க்க முடியல. இதனால, இயற்கை அங்காடி நடத்துகிறவர்களிடம் எடுத்திட்டுப் போனேன். அவங்கதான் நமக்கு முதல் வாடிக்கையாளரா இருந்து வரவேற்றாங்க. ரெண்டு வருட காலக்கட்டம் அவங்களுடனே என் வணிகம் நடந்தது.
இதுக்காக நான் மார்க்கெட்டிங் எதுவும் செய்யல. ஆனா, நிறைய பேர் தரம் பார்த்து வாங்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா மக்கள்கிட்ட போய்ச்சேர்ந்தது. முதல் மூணு ஆண்டுகள் கருப்பட்டி கடலைமிட்டாய் தவிர வேறு எந்த பொருட்களும் உற்பத்தி பண்ணல. இதை மட்டும் உருப்படியா செய்வோம்னு செய்தேன். இதுக்கிடையில் மக்களும் எங்க குழந்தைகளுக்கு அதேபோல தரமான எள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, கடலை உருண்டை செய்து தரமுடியுமானு கேட்டாங்க. சரினு அதையும் செய்யத் தொடங்கி இப்ப சிறப்பா போயிட்டு இருக்கு.
இதுல என் அம்மாவின் உதவி அதிகம். இதுக்காகவே என் பிராண்டுக்கு ‘motherway’, அதாவது தாய்வழினு பெயர் வச்சேன். தவிர, அப்பாவும் அம்மாவும், இப்ப மனைவி கௌதமியும் எனக்கு பக்கபலமாக இருந்து உதவுறாங்க. இதை நான் குடும்பத் தொழிலாவே பண்ணிட்டு இருக்கேன். 97 வயசான என் அப்பத்தா முதல்கொண்டு குடும்பத்துல உள்ள ஒன்பது பேரும் இந்தத் தொழில்ல இருக்கோம். அப்பத்தாதான் எள்ளை புடைச்சு கொடுக்கறாங்க. இதுதவிர, பேக்கிங் உள்ளிட்ட வேலைகள் செய்ய 16 பேர் இருக்காங்க.
நாங்க வருகிற ஆர்டரைப் பொறுத்து அந்நாளுக்கான உற்பத்தியை செய்றோம். இப்ப திருமண வீடுகள், பிறந்தநாட்கள், அலுவலக நிகழ்வுகள்னு எல்லாத்துக்கும் கருப்பட்டி கடலைமிட்டாய் கொடுக்குறாங்க. இதுக்கு இயற்கையை நோக்கிய தேடல் ஒரு காரணம். தவிர, தரமான நம்மூர் தின்பண்டங்களுக்குத் திரும்புவோம் என்கிற விழிப்புணர்வும் மக்கள்கிட்ட வளர்ந்திருக்கு. அப்புறம், நிறைய பள்ளிகள்ல குழந்தைங்க பிறந்தநாளுக்கு கடலைமிட்டாய்தான் கொடுக்கணும்னு விதி வச்சிருக்காங்க. அவங்ககிட்ட நம்ம கடலைமிட்டாய் போகுது...’’ என்கிறவருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய ஆர்டர்கள் வந்திருக்கிறது.
‘‘ஆனா, நான் மறுத்துட்டேன். ஏன்னா, நான் உள்ளூர்க்காரங்களுக்காகத்தான் செய்றேன். எனக்கு ஏற்றுமதி செய்றதுல ஆர்வமில்ல. இதை உள்ளூர் மக்களுக்குக் கொண்டு சேர்க்கணும் என்பதே என் ஆசை. ஆனா, எங்ககிட்ட இருந்து வாங்கிட்டுப் போய் வெளிநாடுகளுக்கு அனுப்புறாங்க. அது தனி. ஆனா, நான் மதர்வே வெப்சைட் வழியா இந்தியா முழுவதும் விற்பனை செய்றேன்...’’ என்கிறவர், ‘‘கருப்பட்டி கடலைமிட்டாய்க்கு மீண்டும் ஒரு தொடக்கப்பள்ளியா நானும் என் குடும்பமும் இருந்திருக்கோம்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு.
என்னை மேற்கோளா வச்சிட்டு இப்ப நூறு கம்பெனிகளுக்கு மேல் இதை பண்றாங்க. நானும் இதைத் தொழிலா செய்யணும்னு ஆசைப்பட்டு என்னை நோக்கி வர்றவங்களுக்கு கத்துக் கொடுக்குறேன். அப்படி வந்த ஆறேழு பேர் இதைத் தொழிலா செய்திட்டும் இருக்காங்க. என் ஆசையெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் கருப்பட்டி கடலைமிட்டாய் தொழில் செய்ற ஒரு குடும்பம் இருக்கணும் என்பதே...’’ என்கிறார் ஸ்டாலின் பாலுச்சாமி.
பேராச்சி கண்ணன்
|