Family Tree - பீர் தயாரிப்பில் மகாராஜா!



உலகின் பழமையான மதுபான வகைகளில் ஒன்று, பீர்

சமீபத்தில் கூட 13 ஆயிரம் வருடங்கள் பழமையான பீரைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மட்டுமல்ல; தண்ணீர், தேநீருக்கு அடுத்து மனிதர்களால் அதிகமாக பருகப்படும் பானமும் பீர்தான். இதுபோக பல நாடுகளின் கலாசாரத்தில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது இந்த மதுபானம். அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படும் பீர் திருவிழா வெகு பிரபலம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பீரை தயாரிக்கும் நிறுவனங்களில் முதன்மையானது ‘ஹெய்ன்கன்’. 157 வருடங்களாக இயங்கி வருகிறது இக்குடும்ப நிறுவனம். ஐரோப்பாவின் மிகப்பெரிய பீர் தயாரிக்கும் நிறுவனமான இது, உலகளவில் பீர் தயாரிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ‘ஹெய்ன்கன்’, ‘டைகர்’, ‘ஆம்ஸ்டெல்’, ‘எடெல்வைஸ்’ என ஏராளமான பிராண்டுகளில் இதன் தயாரிப்புகள் கிடைக்கின்றன.

ஜெரார்டு அட்ரியான் ஹெய்ன்கன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். நெதர்லாந்தின் முக்கிய பானமாக உருவெடுத்த பீர், அங்கே நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளிலும் இடம்பிடித்து அசத்தியது. அதனால், வசதிபடைத்த பலரும் பீர் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இப்படியான ஒரு சூழலில் 1841ம் வருடம் நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் பிறந்தார் ஜெரார்டு அட்ரியான் ஹெய்ன்கன். உலகின் முதல் தரமான பீரைத் தயாரிக்கும் ‘ஹெய்ன்கனு’க்கு வித்திட்டவர் இவர்தான்.

ஜெரார்டின் தந்தையான கார்னிலியஸ் ஹெய்ன்கன் ஊர் அறிந்த பிசினஸ்மேன். அவரது அம்மாவான அன்னாவும் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நல்ல வசதி இருந்ததால் எதிர்காலம் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் வளர்ந்தார் ஜெரார்டு. அவரது பள்ளிப்பருவத்திலேயே தந்தை இறந்துவிட்டார். சொத்து முழுவதும் அம்மாவின் கைக்கு வந்தது. ஜெரார்டு கேட்டதை எல்லாம் அம்மா செய்து தந்தார்.

இந்நிலையில் ஆம்ஸ்டர்டாமில் 1592ம் வருடத்திலிருந்து ‘டி ஹுய்பெர்க்’ எனும் பீர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கிவந்தது. ஆம்ஸ்டர்டாமைச் சுற்றியிருந்த 69 பீர் தயாரிக்கும் நிறுவனங்களில் ‘டி ஹுய்பெர்க்’தான் பெரியது. இருந்தாலும் ‘டி ஹுய்பெர்க்’கை விற்கப்போவதாக ஓர் அறிவிப்பு வெளியாகி பலரை ஆச்சர்யப்படுத்தியது. அப்படி ஆச்சர்யப்பட்டவர்களில் ஒருவர், ஜெரார்டு.

ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அவர்  ‘டி ஹுய்பெர்க்’கின் விற்பனை அறிவிப்பு தனக்காகவே நிகழ்ந்ததாக நினைத்துக்கொண்டார். உடனே அந்நிறுவனத்தை வாங்குவதற்காக அம்மாவிடம்  பணம் கேட்க, அம்மாவும் தலையசைக்க, 1864ல் ‘டி ஹுய்பெர்க்’கை தன்வசமாக்கினார் ஜெரார்டு. அப்போது அவரது வயது 22. நிறுவனத்தை வாங்கிய சில நாட்களிலேயே ‘ஹெய்ன்கன் அண்ட் கோ’ என்று பெயரை மாற்றிவிட்டார்.

ஆரம்பத்தில் ஒரு தொழில் செய்கிறோம் என்ற அளவில் மட்டுமே இயங்கினார். நாட்கள் செல்லச் செல்ல பீர் தயாரிப்பின் மீது ஜெரார்டுக்குக் காதல் மலர்ந்தது. அதிலிருந்து உயர்ந்த தரமுள்ள பிரீமியம் லேகர் பீர் மட்டுமே தயாரிக்கத் தொடங்கினார். மற்ற வகை பீர்களைவிட பிரீமியம் லேகருக்கு ஆகும் தயாரிப்புச் செலவும், காலமும் அதிகம். லாபமும் குறைவு. அதனால் அப்போதிருந்த பெரும்பாலான நிறுவனங்கள் லேகர் பீரில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால், மக்களுக்கு நல்ல வகையான பீரைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கினார் ஜெரார்டு. இதற்காக ஐரோப்பா முழுவதும் பயணித்து லேகர் பீருக்கான மூலப்பொருட்களைக் கண்டறிந்தார். அதில் ஒன்று, யீஸ்ட். யீஸ்ட்டிலும் தரமான ஒன்றைக் கண்டுபிடித்தார் ஜெரார்டு. அதற்கு ‘ஏ-யீஸ்ட்’ என்று பெயர். இன்றும் ‘ஹெய்ன்கன்’ பீரின் முக்கிய மூலப்பொருளே ‘ஏ-யீஸ்ட்’தான்.

அத்துடன் பீரின் தரத்தை உறுதி செய்வதற்காக தரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை உருவாக்கினார் ஜெரார்டு. இதுதான் பீரின் தரத்தைச் சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம். அந்தக் காலத்தில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் பீரைத் தயாரித்தவுடன் பேரலில் வைத்து விற்றுவிடும். ஜெரார்டு மட்டுமே பீரைத் தயாரித்த பிறகு, அதன் தரத்தை சோதித்து விற்பனை செய்தார். ஜெரார்டின் இந்த அணுகுமுறை மதுபானங்களுக்கும், அதை அருந்துபவர்களுக்கும் ஒரு மரியாதையைப் பெற்றுக்கொடுத்தது. மட்டுமல்ல; ஜெர்மனியில் பீர் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட புது தொழில்நுட்பத்தையும் நெதர்லாந்துக்குள் கொண்டு வந்தார். உற்பத்தி பல மடங்கு பெருகியது; விற்பனையும் அதிகரித்தது.

நெதர்லாந்தின் முக்கிய பீராக புகழடைந்தது ‘ஹெய்ன்கன்’. 300 வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த ‘டி ஹுய்பெர்க்’கின் பெயர் ஆம்ஸ்டர்டாமைத் தாண்டி பெரிதாக மக்களிடம் சென்றடையவில்லை. ஆனால், இருபதே வருடங்களில் நெதர்லாந்து முழுவதும் பிரபலமானது மட்டுமல்லாமல் பிரான்ஸில் இறக்குமதி செய்யும் முக்கிய பீராக புகழடைந்தது ‘ஹெய்ன்கன்’.
ஆம்ஸ்டர்டாமில் இருந்த ஆலை உற்பத்திக்குப் போதுமானதாக இல்லை. அதனால் நகரத்தின் மையத்தில் பிரமாண்டமான மது தயாரிப்பு ஆலையை நிறுவினார் ஜெரார்டு. பழைய ஆலை இருந்த இடம் புதுப்பிக்கப்பட்டு அலுவலகமாக மாற்றப்பட்டது.

பீர் தயாரிப்பில் புதுமையைப் புகுத்துவதில் ஆர்வமுடையவராக இருந்த ஜெரார்டு பாட்டம் பீர் என்று ஒரு வகை மதுவை நெதர்லாந்து மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பல சர்வதேச விருதுகளை அள்ளியதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பியர்களின் விருப்பமான மதுவாக பிரபலமானது பாட்டம் பீர். நெதர்லாந்தின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான பீர் தயாரிக்கும் நிறுவனம் என்ற அங்கீகாரத்தை ‘ஹெய்ன்கன்’ பெற்ற பிறகே மரணமடைந்தார் ஜெரார்டு. அவருக்குப் பின் வந்த தலைமுறைகள் உலகளவில் சிறப்பான ஓர் அங்கீகாரத்தை ‘ஹெய்ன்கன்’னுக்கு பெற்றுத் தந்துவிட்டனர்.

ஃப்ரடி ஹெய்ன்கன்

மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஃப்ரடி ஹெய்ன்கன்தான் உலகளவில் ‘ஹெய்ன்கன்’ நிறுவனத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தவர். ஜெரார்டின் மூத்த பேரன் இவர். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, 1941ல் நெதர்லாந்துக்குத் திரும்பி ‘ஹெய்ன்கனி’ல் வேலைக்குச் சேர்ந்தார் ஃப்ரடி. அப்போது ஃப்ரடியின் குடும்பத்துக்குச் சொந்தமானதாக ‘ஹெய்ன்கன்’ இருக்கவில்லை. ஆம்; ஃப்ரடியின் தந்தையான ஹென்றி பியர் செம குடிகாரர். 20 வருடங்களுக்கு மேலாக ‘ஹெய்ன்கனி’ன் நிர்வாகப் பொறுப்பு ஹென்றியிடம் இருந்தது. ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி நிறுவனத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.

இந்நிலையில்தான் ‘ஹெய்ன்கனி’ல் வேலைக்குச் சேர்ந்தார் ஃப்ரடி. விரைவிலேயே நியூயார்க்கிலிருந்த அலுவலகத்துக்கு தலைவரானார். நிறுவனத்தை மீட்டெடுப்பதிலும், மார்க்கெட்டிங்கிலும் ஆர்வமாக இருந்தார் ஃப்ரடி. அதனால் ரகசியமான முறையில் ‘ஹெய்ன்கனி’ன் பங்குகளை வாங்கிக் குவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் ‘ஹெய்ன்கனி’ன் 50.05 சதவீத பங்குகள் ஃப்ரடியின் வசமாக, மீண்டும் குடும்ப நிறுவனமாக மலர்ந்தது ‘ஹெய்ன்கன்’. குடும்ப நிறுவனத்தின் சேர்மனாக பதவியேற்றதும் பீரை விளம்பரம் செய்தார் ஃப்ரடி. நெதர்லாந்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் பீர் என்ற பெருமையைப் பெற்றது ‘ஹெய்ன்கன்’. ‘மார்க்கெட்டிங் மாஸ்டர்’ என்று புகழப்பட்டார் ஃப்ரடி. இவர் காலத்தில்தான் அசுர வளர்ச்சியை எட்டியது ‘ஹெய்ன்கன்’.

அதே நேரம் ஒரு துயரமான சம்பவமும் நிகழ்ந்தது. ஆம்; 1983ல் ஃப்ரடியையும், அவரது கார் டிரைவரையும் ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் கடத்திவிட்டது. 21 நாட்கள் பணயக் கைதிகளாக ஃப்ரடியும், அவரது டிரைவரும் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டனர். உலகமெங்கும் வெளியான முக்கிய நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியானார் ஃப்ரடி. பணயத்தொகை கொடுத்த பிறகே ஃப்ரடி விடுவிக்கப்பட்டார். ஃப்ரடி குடும்பம் கொடுத்த பணயத்தொகையின் இன்றைய மதிப்பு சுமார் 138 கோடி ரூபாய்.

ஃப்ரடி விடுவிக்கப்பட்ட சில நாட்களில் அவரைக் கடத்திய கும்பலைக் காவல்துறையினர் பிடித்துவிட்டனர். பணயத் தொகையில் சிறு பகுதியை மட்டுமே ஃப்ரடியால் திரும்பப் பெறமுடிந்தது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து டச்சு மொழியில் ‘The Heineken Kidnapping’ என்ற படமும், ஆங்கிலத்தில் ‘Kidnapping Freddy Heineken’ என்ற படமும் வெளியாகியிருக்கின்றன.

முக்கிய நிகழ்வுகள்

1873ல் ரோட்டர்டாமில் முதல் கிளையைத் திறந்தது ‘ஹெய்ன்கன்’.அமெரிக்காவில் 1920 - 33 வரை மது தயாரிப்பு, விற்பனை, இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நீக்கப்பட்டதும் நியூயார்க்கிற்கு ‘ஹெய்ன்கனி’ன் பீர்தான் முதலில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு பீர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியது. அன்றிலிருந்து அமெரிக்காவில் முக்கியமான வெளிநாட்டு பீர் பிராண்டாக ஜொலித்துவருகிறது ‘ஹெய்ன்கன்’. 1965ல் பீருக்கு என்று பிரத்யேகமான பாட்டில்களை வடிவமைத்தது ‘ஹெய்ன்கன்’. இதுதான் இன்றைய பீர் பாட்டில்களுக்கு முன்னோடி.

இன்று

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் தலைமையகம் இயங்கிவருகிறது. 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். 70க்கும் மேலான நாடுகளில் 165க்கும் அதிகமான நாடுகளில் கிளை பரப்பியிருக்கிறது ‘ஹெய்ன்கன்’. இதில் இன்டர்நேஷனல், லோக்கல், ஸ்பெஷல் என 250க்கும் மேலான பிராண்டுகளில் பீர்களும், சிடர் எனும் மதுபான வகையும் தயாராகின்றன.

வருடந்தோறும் சுமார் 2500 கோடி லிட்டர் பீரை உற்பத்தி செய்கிறது ‘ஹெய்ன்கன்’. நான்காம் தலைமுறையைச் சேர்ந்த சார்லீன் டி கார்வாலோவிடம்தான் நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகள் இருக்கின்றன. நெதர்லாந்தின் முதல் பணக்காரப் பெண்மணியும் இவரே. 2021ம் வருடத்தின் முதல் அரையாண்டின் நிகர வருமானம் 87,078 கோடி ரூபாய்!  

த.சக்திவேல்