திதீ



சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளிய மராத்தியப் படம் ‘திதீ’. ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே வசித்து வரும் ராம்ஜி தீவிரமான பாண்டுரங்க பக்தர்.
பல வருடங்களாக பாண்டுரங்கனை தரிசிக்க யாத்திரை செல்பவர். சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய மகனுக்குத் திருமணமானது. மருமகள் கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்நிலையில் ராம்ஜியின் கிராமத்தில் கடுமையான மழை பொழிந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வெள்ளத்தில் ராம்ஜியின் மகன் அடித்துச்செல்லப்பட்டு இறந்துவிடுகிறார்.

30 வருடங்களுக்கு மேலாக நம்பி வந்த கடவுள் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நிலைகுலைந்துபோகிறார் ராம்ஜி. கடவுள் பொய்யா... இல்லை மனிதர்கள் பொய்யா... என்று கடவுள், வாழ்க்கை, மரணம் குறித்து பல கேள்விகள் அவருக்குள் எழுகின்றன. சுற்றியிருப்பவர்கள் ராம்ஜியைத் தேற்ற முயற்சிகள் செய்கின்றனர்.

ஆனால், எதுவும் நடப்பதில்லை. ராம்ஜி எப்படி மீண்டு வருகிறார் என்பதே திரைக்கதை.மழை பெய்யும் ஓர் இரவில் படத்தின் கதை நகர்வது சிறப்பு. மழையின் சத்தமே பின்னணியாக இசைப்பது கதையின் சூழலை வலுவாக்குகிறது. படத்தின் இயக்குநர் சுமித்ரா  பாவே.