இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் லூப் படம் இதுதான்...ஜாங்கோ டீம் சந்திப்பு
‘அனலே அனலே நீ அழகின் அனலே...’ ஜிப்ரான் இசையில் ‘ஜாங்கோ’ படத்தின் மெலோடி பாடல். ‘சூரியன் எஃப்.எம்’மில் சிங்கிள் வெளியீட்டை முடித்து கேக் வெட்டி கொண்டாடிவிட்டு கிளம்பியவர்களை மொத்தமாகப் பிடித்தோம்!
தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் மனோ கார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஹீரோ சதீஷ்குமார், நாயகி மிருணாளினி ரவி, நடிகர்கள் கருணாகரன், டேனியல், தங்கதுரை உள்ளிட்ட படக்குழுவினர் பதிலுக்கு நம்மைச் சுற்றி ரவுண்டு கட்டினர்! இந்தியாவின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் லூப் கதைதான் ‘ஜாங்கோ’. இந்த கான்செப்ட்டை எப்படி பிடிச்சீங்க... என தயாரிப்பாளர் சி.வி.குமாரை நோக்கி ஷூட் செய்தோம். சிரித்தபடியே சொல்ல ஆரம்பித்தார். ‘‘இந்தப் படத்தோட இயக்குநரான மனோ, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ படங்கள்ல அசிஸ்டெண்ட்டா இருந்தார். அவரோட ஒர்க்கை நான் பார்த்துக்கிட்டே இருப்பேன். ஒருநாள் ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தார். அது செம கமர்சியல் படம். செம காமெடி படம் கூட. இருந்தாலும் வேற ஸ்கிரிப்ட் இருக்கானு கேட்டேன். அப்ப அவர் கொடுத்ததுதான் ‘ஜாங்கோ’.
யாருமே முயற்சி செய்யாத விஷயங்களைச் செய்யணும் என்பதுதான் என் பாலிசி. அதுக்கு ‘ஜாங்கோ’ செட் ஆச்சு. எத்தனையோ ஹாலிவுட் படங்கள் டைம் லூப் கான்செப்ட்ல வந்திருக்கு. ஆனா, தமிழ்ல... ஏன், இந்தியாவுலயே இப்படி வந்ததில்ல.தமிழுக்கு ஏத்த மாதிரியான விஷயங்களை மனோ அழகா தன் ஸ்கிரிப்ட்டுல வைச்சிருந்தார். பொதுவா டைம் லூப் கான்செப்ட்ல மூணாவது டைம் ஒரு விஷயம் ரிப்பீட் மோட் காட்டினா ‘என்னடா இது’னு பார்வையாளர்கள் நெளிவாங்க. அந்த இடைவெளியை மனோ ரொம்ப அழகா நிரப்பியிருக்கார்.
தயாரிப்பாளரா என்னை ‘ஜாங்கோ’ இம்ப்ரஸ் செய்த மாதிரி படம் பார்க்கறவங்களையும் இம்ப்ரஸ் செய்யும்...’’ என மனோவின் தோளைத் தட்டிக் கொடுத்தபடி சி.வி.குமார் சொல்ல, கூச்சத்துடன் நெளிந்தபடி மனோ கார்த்திகேயன் பேசத் தொடங்கினார்.
‘‘ஆக்ச்சுவலி சிவி சார் மாதிரியான தயாரிப்பாளராலதான் இந்தக் கதையப் புரிஞ்சிக்க முடியும். எனக்கு தேனி பக்கத்துல ஒரு கிராமம். திருப்பூர்ல ஒரு கம்பெனியிலே குவாலிட்டி கன்ட்ரோலரா இருந்தேன். சினிமாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.திருப்பூர்ல ஷூட்டிங் பண்ண வந்த ஒரு டீம் கூடவே சென்னை வந்தேன். அறிவழகன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அப்புறம் ‘முண்டாசுப்பட்டி’ ராம் சார் கூட பயணம். பிறகு ‘இன்று நேற்று நாளை’ ரவி சார் கூட டிராவல். இதோ இப்ப ‘ஜாங்கோ’ டைரக்டர்...’’ என மனோ சொல்லி முடிக்க கருணாகரன், டேனியல், தங்கதுரை கேங் நுழைய... சைலண்ட்டாக சி.வி.குமாரும், மனோ கார்த்திகேயனும் ஒதுங்கினர்.
வந்தவர்களை வரவேற்று, ‘‘அடடே வாங்க விஞ்ஞானிகளே... கொரோனா டேஸ் எப்படி போச்சு..?’’ என்றுதான் கேட்டோம். அவ்வளவுதான், அட்ராசிட்டி ஆரம்பமானது. அதை கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் அப்படியே எழுதுவதுதான் சாலச் சிறந்தது!கருணாகரன்: சாப்ட்டு பேசலாமா? டேனியல்: இல்லை, வேண்டாம்னு சொன்னா நாம என்ன விட்ருவோமா? தங்கதுரை: நான் பால் பூத்ல மட்டன் வாங்கினேன், செம காமெடி. கியூல நிக்கறேன், ஒருத்தன் ‘அண்ணேன் மாஸ்க்க கழட்டுங்க போட்டோ எடுத்துக்கறேன்’னு சொல்றான். டேய் ஏன்டா’ன்னு தோணுச்சு.டேனியல்: நீ ஆவின் பால் கடையா... நான் மெடிக்கல் ஷாப்.
ஹி... ஹி... கருணாகரன்: ஆக மொத்தம் படத்தைப் பத்தி பேசப் போறதில்லை. கொரோனா டேஸ் எப்படிப் போச்சுன்னு கேட்டது குத்தமா? சரி, நானே படம் பத்தி பேச ஆரம்பிக்கறேன்... நானும் டேனியலும் ஒரு டைம் மெஷின், டைம் லூப் ஸ்பெஷலிஸ்ட். அப்பறம் எந்தப் படத்துல போலீஸ்னாலும் நம்மைத்தானே கூப்பிடறாங்க? 12 படங்கள்ல ஐயா போலீசா நடிச்சிருக்கேனே! இதுலயும் போலீஸ்.
இயக்குநர் மனோவுக்கு இது முதல் படம் மாதிரியே தெரியலை. அதேபோல் சி.வி.குமார் சார்கிட்ட நான் ஆபீஸ் ஐடி கார்டு வாங்கி வெச்சிக்கலாம் போல. கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி அவரோட அத்தனை படங்கள்லயும் நடிச்சுட்டு இருக்கேன். தமிழ் சினிமாவிலே நல்ல ஸ்டெப்னு ‘ஜாங்கோ’வை சொல்லலாம்.டேனியல்: எப்பவும் ஹீரோவுக்கு நண்பனா வருவேன் இல்லையா..? இதுல டைம் லூப்புக் குள்ள ஹீரோ பாதிக்கப்படும்போது அதுல நான் சில விளைவுகளைச் சந்திக்கிற மாதிரி கதைப் போக்கும் என் கேரக்டரும் இருக்கு. உண்மைலயே வித்தியாசமான கதை. தங்கதுரை: எல்லா சாஸும் சாப்பிட முடியும்... ஆனா, ஒரு சாஸ் சாப்பிட முடியாது. அது என்ன?டேனியல்: பிசாசு! அதான?
தங்கதுரை: போன வாரம் என் புத்தகம் ரிலீஸ் ஆச்சு... அதைப் படிச்சிட்டியா? கருணாகரன்: அடங்க மாட்டீங்களா... படம் பத்தி பேசுங்கய்யா... தங்கதுரை: நான் ஒரு சீன் நடிச்சு ஒரே டேக்ல ஓகே வாங்கிட்டேன். எல்லாம் கை தட்டுறாங்க. அடடேன்னு யோசிச்சா, போங்க திரும்ப அதே சீன்’னு சொல்றாங்க. அப்பறம்தான் தெரிஞ்சது இது டைம் லூப் படம்னு! ஒரே சீன் திரும்பத் திரும்ப வருமாம்! நான் ஹீரோவுக்கு நண்பன்... ரூம் மேட். லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன். ஷூட்டிங் செம ஜாலியா இருந்துச்சு. மிருணாளினி ரவி: ஆமா... செம ஜாலியா இருந்துச்சு. இவங்க மட்டும் இல்லைன்னா ஷூட்டிங் ஸ்பாட்ல நான்லாம் தூங்கி விழுந்திருப்பேன்...
-என்றபடி ஜாலி கேங்கில் மின்னலென இணைந்தார்கள் நாயகி மிருணாளினி ரவியும், நாயகன் சதீஷ்குமாரும். மிருணாளினிதொடர்ந்தார். மிருணாளினி: பெரும்பாலும் நைட் ஷூட்தான். இவங்கதான்... இந்த கேங்தான் யூனிட்டை தூங்க விடாம பார்த்துக்கிட்டாங்க! ‘ஜாங்கோ’ எனக்கு முதல் படம். டிக்டாக் கொடுத்த பிரபலத்துல சினிமா என்ட்ரி. இதுல கேர்ள் நெக்ஸ்ட் டோர் ஹீரோயின். ‘ஜாங்கோ’ தவிர ‘எனிமி’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘கோப்ரா’னு பிசியா இருக்கேன். இந்தப் படத்திலே ஹீரோ சதீஷ்குமார் பார்க்க ரொம்ப அமைதியான ஆளு.
தங்கதுரை: ஆமா ஜாலியான ஆளு... ஆனா, ரிவர்ஸ்ட் மேன். கருணாகரன்: ரிவர்ஸ்டா? ரிசர்வ்டா? பாவம்... அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு... ரைட்டு. அப்பா ஹீரோ... ஏதாவது பேசு! சதீஷ்குமார்: கோயமுத்தூர் வாசி. டெக்ஸ்டைல் சம்பந்தமா படிச்சுட்டு பிசினஸ் செய்துட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே நடிப்புல ஆர்வம். காத்திருந்ததுக்கு செம வாய்ப்பா ‘ஜாங்கோ’ அமைஞ்சிருக்கு. சி.வி சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். முதல் படமே சயின்ஸ் ஃபிக்ஷன் டைம் லூப் படம். பெருமையா இருக்கு...’’ -என சதீஷ் முடிக்க, அனைவருமாக சேர்ந்து ஜிப்ரானை முன்னால் தள்ளிவிட்டனர்.
ஜிப்ரான்: ‘‘கொரோனாவுக்குப் பிறகு சிங்கிள் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ்னு நாங்கதான் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். ஆரம்பப் புள்ளியா நாங்க இருக்கோம்னு நினைக்கும்போது ஹேப்பியா இருக்கு. ‘ஜாங்கோ’ல மூணு பாடல்கள். ரொம்ப நாளா ஹாலிவுட் பாணி டைம் லூப், சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துல மியூசிக் பண்ணணும்னு ஆசை. அது இப்ப நிறைவேறியிருக்கு. புது கான்செப்ட்டை எல்லோருக்கும் புரியும்படி மனோ எடுத்திருக்கார். நிச்சயம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்...’’ -என்று ஜிப்ரான் சொல்லி முடிக்க ‘ஹே...’ என ‘ஜாங்கோ’ டீம் துள்ளிக் குதித்தனர்!
ஷாலினி நியூட்டன்
|