கன்னியாகுமாரி to காஷ்மீர் 20 வருடங்கள்...96 ஆயிரம் கிமீ...வாவ் தம்பதி



கருப்பையாவும் சித்ராவும் ஓர் ஆச்சரியமூட்டும் தம்பதியினர். இருவரும் இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நடந்தும், சைக்கிளிலும் கடந்த இருபது ஆண்டுகளில் 96 ஆயிரம் கிமீ தூரம் பயணித்திருக்கிறார்கள்.
இருவருமே காந்திய சிந்தனையில் அதீத நாட்டம் கொண்டவர்கள். இதனால் தீவிரவாதம் இல்லாத இந்தியா, மக்கள் ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம், உலக அமைதி, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போது 75வது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு அம்ருத் மஹோத்சவம் என்கிற பெயரில் ஒருங்கிணைந்த இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குச் சமர்ப்பண யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். கொடி காத்த குமரன் பிறந்த சென்னிமலையில் தொடங்கி பாரதியார் சிறிது காலம் வாழ்ந்த புதுச்சேரி வரை இந்த நடைபயணத்தை மேற்கொள்வது திட்டம்.
ஆனால், சுமார் 200 கிமீ தூரம் நடந்து வந்தவர்களுக்கு ஆத்தூர் அருகே ஒரு கிராமத்தில் நாய்களால் தொல்லை. அப்போது சித்ரா கீழே விழுந்துவிட, மருத்துவ சிகிச்சைக்காக சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய நிலை.

‘‘இந்தப் பயணம் மொத்தம் 28 நாட்கள், 400 கிமீனு திட்டமிட்டு இருந்தோம். முதல்ல, கொரோனாவால் இயற்கை எய்திய மக்களுக்கும், இனி இதுபோன்ற மரணம் தழுவாமல் இருப்பதற்கும் உலக நன்மை வேண்டி புதுச்சேரி ஆரோவில் வரை பயணிக்கலாம்னு நினைச்சோம். லாக்டவுன் இருந்ததால, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்குச் சமர்ப்பண யாத்திரையாகத் தொடங்கி பாரதியின் நினைவுநாளில் முடிக்கலாம்னு ஆரம்பிச்சோம்.

ஆனா, எதிர்பாராவிதமா சித்ரா அம்மா கீழ விழுந்திட்டாங்க. இந்த மாதிரி பிரச்னையெல்லாம் எங்க பயணத்துல நாங்க அடிக்கடி சந்திக்கிறதுதான். அதனால, இதுவும் கடந்து போகும். சீக்கிரமே புதுச்சேரி நோக்கி எங்க பயணத்தைத் தொடங்கிடுவோம்...’’ என நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் கருப்பையா.

அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கருப்பையாவிற்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்கிற கிராமம்.
‘‘இப்ப எனக்கு ஐம்பது வயசாகுது. ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்காங்க. எல்லோருமே மதுரைக்கு வந்துட்டோம்.

நான் பொது வாழ்க்கைக்கு வந்து 33 ஆண்டுகளாகுது. பிளஸ் டூ முடிச்சதும் மதுரையில் புக் பைண்டிங் அண்ட் கம்போஸிங்னு தொழிற்படிப்பு ரெண்டு ஆண்டுகள் படிச்சேன். அப்புறம், காமராசர் பல்கலைக்கழகமும், காந்தி அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும்  காந்திய சிந்தனை படிப்பு முடிச்சேன்.

படிக்கும்போதே காந்திய சிந்தனை வந்திடுச்சு. காந்தி சுடப்பட்டது, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது, உலக நாடுகள்ல முக்கிய தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்னு எல்லாம் படிக்கிறப்ப உலக அளவுல அமைதி வேண்டும் என்கிற கோட்பாட்டை எனக்குள்ள ஏற்படுத்துச்சு.என் முதல் பயணம் 1992ல் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு குழுவா ஆரம்பிச்சது. அப்ப நான் தொழிற்கல்வி மாணவன். 57 நபர்கள் கொண்ட குழு 1600 கிமீ தூரம் மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா வரை 47 நாட்கள் பயணிச்சோம்.

இந்தப் பயணத்திற்காக எங்களுக்கு மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் சர்வோதயா அமைப்பு ஒரு மாசம் பயிற்சி அளிச்சாங்க. அங்க, எப்படி மாமிசம் உண்ணாத வாழ்க்கையை வாழணும், அகிம்சையை எப்படி கடைப்பிடிக்கணும், மதநல்லிணக்கம் உள்ளிட்ட கோட்பாடுகளை எப்படி முன்னெடுக்கணும், மது போதையற்ற ஒரு இளைஞனாக எப்படி வாழணும் ஆகிய காந்திய சிந்தனைகளைக் கத்துக் கொடுத்தாங்க. அதில் நான் தேர்வாகி பயணிச்சேன்.

அதன்பிறகு, இதை ஏன் நாம் தனிப்பட்ட முறையில் செய்யக்கூடாதுங்கிற எண்ணம் மனசுல உருவாச்சு. அப்படியா இந்தியா முழுவதும் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி பயணிக்க ஆரம்பிச்சேன்...’’ என்கிறவர், சித்ராவை சந்தித்த கதையைத் தொடர்ந்தார். ‘‘இவங்கள 2000ல்தான் திருமணம் பண்ணினேன். என்னுடைய முதல் திருமணம் 1993ல் நடந்தது. பையனும், பொண்ணும் பிறந்தாங்க. அந்த ஆறு ஆண்டுகள் நான் எந்தப் பயணமும் மேற்கொள்ளாமல் அமைதியா இருந்தேன். அப்புறம், மனைவி இயற்கை எய்திட்டாங்க.

சித்ரா அம்மாவிற்கு கவுந்தப்பாடி அருகே ஓடந்துறை கிராமம். அவங்க கணவர் 1998ல் இறந்திட்டார். அவங்களுக்கும் ஒரு பையன், ஒரு பொண்ணு. சமீபத்துல பையனும் தவறிட்டார்.

அப்ப நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்னு ஒரு அமைப்பு நவீன சுயம்வரம் நடத்தினாங்க. எங்கள மாதிரி உள்ளவங்க அதில் விண்ணப்பிக்கலாம்னு சொன்னதா நினைவு. அதில், நூற்றுக்கணக்கான ஜோடிகள் இணைஞ்சாங்க. அப்படியா நான் சித்ராவை மணந்தேன். அவங்க என்னைவிட மூன்று ஆண்டுகள் மூத்தவங்க. கைத்தறி நெசவாளரா காந்திய சிந்தனையுடன் இருந்தவங்க. அந்த உணர்வுதான் எங்களைச் சேர்த்து வச்சது. இனி நாட்டுக்காக நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போம்னு இருவரும் இணைந்து பயணிச்சிட்டு இருக்கோம்.  

இன்றுவரை 96 ஆயிரம் கிமீ தூரம் நடந்தும், சைக்கிளிலும் கடந்திருக்கோம். மகாத்மா காந்தி தேர்ந்தெடுத்த வாகனம் சைக்கிள். அதனால, சைக்கிளில் பயணம் செய்றோம்.
முதலில், சிவகாசியில் இருந்து சென்னை வரை தமிழகத்திற்கான நதிநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு, கல்வி சம்பந்தமான கோரிக்கைகளுடன் 700 கிமீ பயணிச்சோம். பிறகு, கர்மவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் இருந்து 11 மாநிலங்கள் கடந்து காஷ்மீர் போய் அடைந்தோம்.

எப்பவும் ஒரு நாளைக்கு 60 முதல் 80 கிமீ தூரம் பயணிப்போம். கிராமங்கள் வரும்போது உள்ளே போய் துண்டுப் பிரசுரம் வழங்குவோம். இதுவே எங்க தலையாய பணி. நான் இதுக்காக இந்தி கத்துக்கிட்டேன். எனக்கு தமிழ் தவிர இந்தியும், ஆங்கிலமும் தெரியும். அவங்களுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்னு நான்கு மொழிகள் தெரியும். எழுத்தைவிட பேசும்போது நிறைய விஷயங்கள் மக்கள்கிட்ட போய்ச் சேரும். மக்களாலும் எளிதா புரிஞ்சுக்க முடியும். அதனாலயே மொழிகளைக் கத்துக்கிட்டோம்.

நாங்க வெறும் பயணம் மட்டும் போறதில்ல. நண்பர்கள் பேச அழைக்கிற கூட்டத்திற்கும் போறோம். வடமாநிலங்கள்லயும் பேசியிருக்கோம். எங்களுக்கு இந்தியா முழுவதும் நண்பர்கள் இருக்காங்க...’’ எனச் சிரிக்கிறவரைத் தொடர்கிறார் சித்ரா.‘‘நாங்க சந்திக்காத பிரச்னைகளே இல்ல. உதாரணத்திற்கு, கமலேஷ் குமாரி என்கிற பெண் போலீஸ், நாடாளுமன்றத்துல தீவிரவாதத் தாக்குதல்ல இறந்தாங்க. இதை கண்டிச்சு தீவிரவாதம் இல்லாத இந்தியா தொடரணும்னு கன்னியாகுமரியில் இருந்து டில்லி வரை 3,400 கிமீ தூரம் பயணிச்சோம்.

அப்படி போகும்போது குஜராத்ல கோத்ரா சம்பவம் நடக்குது. அப்ப எங்க யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டுச்சு. அங்க பாமர மக்கள்தான் எங்களைக் காப்பாத்தி எஸ்பி அலுவலகத்துல கொண்டுபோய் விட்டாங்க. அவங்க எங்களை பத்து நாட்கள் அங்க தங்க வச்சு தாராவிக்கு அனுப்பி வச்சாங்க. அதன்பிறகு மீண்டும் தில்லிக்குப் பயணிச்சோம்.
எங்களின் இந்த யாத்திரையைக் கேள்விப்பட்டு தமிழக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா இவருக்கு அரசுப் பணி கொடுத்தாங்க.

‘இப்படியொரு அருமையான பணி செய்ற உங்களுக்குனு ஒரு வாழ்வாதாரம் வேணும்’னு சொல்லி சிவகாசி சிட்கோவில் வேலை கொடுத்தாங்க. ஆனா, அவர் மறுத்துட்டார்.
அதேபோல, காமராசர் நூற்றாண்டு விழாவின்போது இடம் கொடுக்க முன்வந்தாங்க. அதையும் நாங்க பெற்றுக் கொள்ளல.அடுத்து இந்தியா- பாகிஸ்தான் நட்புறவுக்காக வாகா எல்லை போகலாம்னு முடிவெடுத்தோம். 2009ல் மதுரையிலிருந்து வாகா எல்லைக்குப் பயணிச்சோம்.

அப்படி போகும்போது பஞ்சாப்ல மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுச்சு. நாங்க சாலையில் ஓரமா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தோம். அப்ப ஒரு சுமோ கார் என்மீது மோதி சுமார் 3 கிமீ தூரம் இழுத்துக்கிட்டே போயிடுச்சு. ஆனா, அவர் மயிரிழையில் உயிர் தப்பிச்சார். எனக்கு என்ன நடந்ததுனே தெரியாது.

அவர்தான் தமிழ்நாட்டுல உள்ள முக்கியமான தொண்டு நிறுவனங்களுக்குத் தகவல்கள் அனுப்பி அவங்க மூலம் உதவிகள் பெற்று அங்குள்ள மருத்துவ மனையில் சேர்த்தார். விபத்து நடக்க காரணமான அந்த நபரை மன்னிச்சு, மருத்துவ செலவை மட்டும் ஏற்கச் சொன்னார். அப்புறம், மதுரைக்கு கொண்டு வந்து இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து... மூணு மாசம் நான் ரொம்ப சிரமப்பட்டேன்.

பிறகு மறுபடியும் பயிற்சி எடுத்து, மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கே போனோம். அங்கிருந்து எங்க பயணத்தை மறுபடி யும் தொடங்கி வாகா எல்லையை அடைஞ்சோம்...’’ என நினைவுகளை சித்ரா அடுக்க, கருப்பையா தொடர்கிறார்.‘‘இந்தமுறை, எங்களுக்கு அரியானாவில் இருக்கிற தமிழ்ச்சங்கத்தினர் உதவினாங்க.

அவங்க வாகா எல்லையில் உள்ள இந்திய கமாண்டர் படைக்கு எங்களைப் பத்தின எல்லா தகவல்களையும் அனுப்பியிருக்காங்க. அதனால, அங்க சித்ரா அம்மாவை தேசியக் கொடியை ஏந்தி அந்த எல்லைக்கும் இந்த எல்லைக்கும் இடையில் ஓட வச்சாங்க. இதை 15 ஆயிரம் பேர் சுற்றிலும் நின்று பார்த்து கைதட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.  

அப்புறம் அயோத்தி, காஷ்மீர் எல்லாம் பயணிச்சோம். அப்ப காஷ்மீர்ல மூவர்ணக் கொடி பறக்க முடியாத சூழல் இருந்தது. அதனால, அங்க போய் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
அடுத்து, சபர்மதி ஆசிரமத்துல தண்டி யாத்திரையிலும் நாங்க கலந்திருக்கோம். உப்பு சத்தியாக்கிரகத்தின் நினைவா மத்திய அரசே எங்களை தேர்வு பண்ணி அந்த யாத்திரையில் கலந்துக்க வைச்சாங்க.

திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாக்கிரகம் நடத்திய ராஜாஜியின் பாதையிலும் நடந்து போயிருக்கோம். அந்தச் சாலைக்கு உப்பு சத்தியாக்கிரகச் சாலை அல்லது தியாகிகள் நடந்து சென்ற சாலைனு பெயர் வைக்கச் சொல்லி சென்னை திருவான்மியூர் வரை ஐநூறு கிமீ தொலைவை 12 நாட்கள் நடந்தோம்...’’ என்கிறவர்களின் லட்சியம் ஒரு லட்சம் கிமீ தூரத்தைக் கடக்க வேண்டும் என்பது.  

‘‘மகாத்மா காந்தி 79 ஆயிரம் கிமீ நடந்திருக்கார். ஆச்சார்யா வினோபா பாவே ஒரு லட்சம் கிமீ நடந்துதான் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கு பெற்றுக் கொடுத்தார். நாங்களும் ஒரு லட்சம் கிமீ நடக்கணும்னு முடிவு செய்திருக்கோம். இந்த இலக்கை எட்டியதும் இதுவரை நாங்க ஆவணப்படுத்தியிருந்ததை நூலாகக் கொண்டு வரலாம்னு இருக்கோம். ஏற்கனவே லிம்கா, கின்னஸ் எல்லாம் எங்க நடைபயணத்தை அங்கீகரிக்க முன்வந்தாங்க. ஆனா, நாங்க மக்கள் மனதில் பதியிறதுதான் விருப்பம்னு நிராகரிச்சிட்டோம்...’’ என நெகிழ்ந்து சொல்கிறார்கள் இருவரும்.  
 
பேராச்சி கண்ணன்