தடுப்பூசி விளக்கு!



ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அமெரிக்கப் பிரபலங்கள் வரை பலரின் சமூக வலைத்தளப் பக்கங்களை அலங்கரித்து வரும் ஒரு பெயர், லாரா வெய்ஸ்.கொலராடோவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார் லாரா. கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ‘மாடெர்னா’ எனும் தடுப்பூசியைச் செலுத்தியிருக்கிறார். மக்களின் உயிரைக்காப்பாற்றும் தடுப்பூசி மருந்து உள்ள குப்பிகள் காலியான பிறகு குப்பைத்தொட்டிக்குப் போவது லாராவை வருந்தச் செய்திருக்கிறது.

காலி குப்பிகளைப் பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினார். அப்படி பாதுகாப்பதன் மூலம் மக்களின் மனதில் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். உடனே செயலில் இறங்கிவிட்டார். ஆம்; நூற்றுக்கணக்கான காலி குப்பிகளைக் கொண்டு அழகான ஓர் அலங்கார விளக்கை உருவாக்கிவிட்டார் லாரா. அந்த அலங்கார விளக்கைத்தான் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். ஒரே நாளில் லாராவும் வைரலாகிவிட்டார்.

த.சக்திவேல்