இந்த பெண் இயக்குநரை உங்களுக்குத் தெரியுமா..?



“கடல் ரொம்பப் பிடிக்கும். அதன்மீதான ஈர்ப்பு எப்போதும் உண்டு. அதற்குத் தகுந்தாற்போலவே கடல் அருகே வீடு. ஒரு நாள் கடலோடு உரையாடாமலோ அல்லது பார்க்காமல் இருந்துவிட்டாலோ அந்த நாள், நாளாக இருக்காது. அது ஒரு தனி ரசனை.
என்னுடைய முழு சந்தோஷமே கடல்தான்...” என்கிற திரைப்பட இயக்குநர் எர்த்லிங் கெளசல்யாவின் திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாக எப்போதும் கடல் இருக்கிறது.“சொந்த ஊர் பாண்டிச்சேரி. கட்டடக் கலை படிப்பிற்காக கேரளா சென்றேன். இது நமக்கு சரியான பாதையில்லையென்று பாதியிலேயே நிறுத்தி, மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். அதிலும் மனம் போகாமல் எழுத்து பக்கம் நகர்ந்தேன்.

சிறு வயதிலிருந்தே எழுத்து மீது இருந்த காதலை அப்போது உணர்ந்தேன். இன்று வரை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கடிதம் மட்டுமே எழுதி வருகிறேன். இது என்னை ஒரு புத்தகம் எழுத உந்தியது. அதை 2008ம் ஆண்டு வெளியிட்டேன்.
எழுதிய புத்தகத்தின் கதைகளை வைத்து படம் எடுக்கலாம் என்கிற யோசனை வந்தவுடன், நண்பர்களான தாஸ், ஸ்டான்சின் ரகு, ரமேஷ் ஆகியோருடன் பகிர்ந்து பட வேலைகளைத் தொடங்கினோம். நாங்கள் வெவ்வேறு வேலைகள் செய்து வந்தாலும், படப்பிடிப்பின்போது ஒன்றுகூடுவோம்...” என்கிற கௌசல்யா தனது படங்கள் பற்றிப் பேசினார்.

“கலை மீது அதீத ஆர்வம். ஒரு படம் இயக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன்; கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குறும்படங்கள் சமூகத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். அத்துடன் பெண்ணைப் பற்றிப் பேசும்.நாம் பார்க்கும் படங்களில் பொதுவாக பெண்கள், சமைப்பது, வீட்டு வேலை செய்வது போன்றுதான் இருக்கும்.

நிஜ வாழ்வில் பெண்கள் பல சாதனைகள் செய்து வருகிறார்கள். இதையே மையமாக வைத்து, கடந்த பத்து ஆண்டுகளில், பெண்களின் நிஜ வாழ்க்கை குறித்தும், அவர்களின் சுதந்திரம் பற்றியும் பேசியதோடு, சமூகம் குறித்தும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என 12 படங்களை எடுத்துள்ளோம்.

2011ம் ஆண்டு Metroxical New York’ ஆவணப் படம், பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் திரைப்பட விழாவில் ‘சினிமா பாரடைசோ’ விருது பெற்றது. இதனையடுத்து 2015ம் ஆண்டு, லட்சுமிபிரியா, ஹரீஷ் நடிப்பில் வெளியான ‘களவு’ குறும்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. 2017ம் ஆண்டு ‘அந்தாதி’ என்கிற மலையாளப் படம் கேரளாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.

ஒரு பெண்ணின் உடலே அவளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை, அந்தப் பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்கிற கருவை வைத்து எடுத்த ‘என் உடம்பு’ குறும்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல பாராட்டும் கிடைத்தது. இதில் செம்மலர் அன்னம் நடித்திருந்தாங்க...” என்கிற கௌசல்யா, திரைப்படம் குறித்தான தனது பார்வையைப் பகிர்ந்தார்.

“சினிமா என்ற கலையை மக்களிடத்தில் எவ்வாறு தரவேண்டுமென்று யோசிப்பது அவசியம். இப்போது, இந்திய - தமிழ் சினிமா ரொம்பவே மாறி இருக்கிறது. நல்ல படங்களும், புதிய முயற்சிகளும் வெற்றி பெற்று வருகின்றன. சொல்லப்போனால் சுதந்திரமாக எடுக்கப்படும் சினிமாக்களுக்குத்தான் எதிர்காலம் உண்டு.

அதற்கு போராட்டங்களையும் சந்திக்க வேண்டும்.எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களிலிருந்து அணுகினால்தான் அதனுடைய உண்மையான, தெளிவான வடிவம்  கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்கு திரைப்படங்களை ரசித்து, அனுபவித்து துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்...” என்கிற கௌசல்யா இப்போது ‘நீ ஸ்ட்ரீம்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தனது ‘அஷ்வமித்ரா’ திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்டார். 

“பெரியவங்களாகிய நாம் எப்போதுமே குழந்தைகளோடு பழகும்போது, நமக்குத்தான் எல்லாம் தெரியும், குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது என்கிற ஒரு எண்ணத்தோடுதான் பழகுகிறோம். ஒரு குழந்தையின் எமோஷனல் இன்டலிஜென்ஸ், அதாவது மனதின் புத்திசாலித்தனத்தை குறைவாக எடை போடுகிறோம்.

அந்த விஷயத்தை எப்படி மாற்ற முடியும் என்கிற எண்ணத்தில் உருவானதுதான் ‘அஷ்வமித்ரா’. எந்த ஒரு பெரிய விஷயத்தையும் மிக எளிமையாக பார்க்கக்கூடிய ஒரு கண்ணோட்டம் குழந்தைகளுக்கு உண்டு. அதேபோல் எந்த ஒரு சின்ன விஷயமும் அவர்களை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதையும் இப்படத்தில் அடிக்கோடிட்டுள்ளேன்.

மிகக் குறைவான நேரத்தில் திரைக்கதை முடித்தபின் யாரை நடிக்க வைக்கலாம் என்ற யோசனை வந்தபோது, ஏற்கனவே எங்கள் குழுவின் தயாரிப்பில் இரு குறும்படங்களில் நடித்திருந்த ஹரீஷ் உத்தமனை தேர்வு செய்தோம். அவர் இதுவரை வில்லனாகவே பல பெரிய படங்களில் நடித்திருந்தார். இதுவரை அவர் ஏற்காத கதாபாத்திரம் இது. அதை முழு ஈடுபாட்டோடும், நுணுக்கமாகவும் செய்து கொடுத்து, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.  

மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ஐந்தரை வயது தாரிதாவிடம், ஷூட்டிங் போவதற்கு முன் இரு வாரங்கள் தினமும் விளையாட்டாக இந்தக் கதையைச்சொல்லி அவளுடைய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். ஹரீஷும் ஒரு வாரம் தாரிதாவுடன் ஒத்திகை பார்க்க புதுச்சேரி வந்தார். குழந்தைகளைக் காட்சிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

சவாலானதும் கூட. இருந்தாலும், தாரிதாவுடனான ஒத்திகை எங்களைக் கைவிடவில்லை.  இவர்களோடு லிவிங் ஸ்மைல் வித்யா, மகேஸ்வரி இணைந்து நடித்துள்ளனர். இதில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் புதுச்சேரியில் உள்ள நமது வங்கக் கடல்...” என்கிறார் எர்த்லிங் கௌசல்யா.

அன்னம் அரசு