சர்வதேச விருதுகளை அள்ளிய தமிழ் த்ரில்லர்!
பட வெளியீட்டுக்கு முன்பே சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது, சிறந்த இயக்குநருக்கான விருது என பல சர்வதேச விருதுகளை இண்டோ - பிரெஞ்ச் ஃபிலிம் பெஸ்டிவல், கூடோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது ‘கொடியன்’. இந்தப் படத்தில் ‘மூடர் கூடம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் டோனி சான் இயக்குநராக களம் காண்கிறார். ‘‘இது ஆரம்பம்தான்... இன்னும் சிறப்பான படைப்புகளை வருங்காலத்தில் தருவோம்...’’ என்று நம்பிக்கையோடும் புன்னகையோடும் ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் டோனி சான்.உங்களுடைய சினிமா டிராவல் எப்படி ஆரம்பித்தது?
எனக்கு டிராவல் பிடிக்கும். அந்த ஆசைதான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்திருக்குன்னு சொல்லலாம். பிறந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால், யாதும் ஊரே யாவரும் கேளிர்தான். படிக்கும் காலத்தில் ஜர்னலிஸம் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜர்னலிஸ்ட் ஆகியிருப்பேன்.வீட்ல இராணுவத்தில் சேரச் சொன்னாங்க. அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. பெயருக்கு பின்னாடி டிகிரி போடுவதில் ஆர்வம் இல்லாததால் விருப்பமில்லாமலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது திரைப்படக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டிடியூட் எனக்கு போதிமரம் மாதிரி. அநேகமாக ஒரு நாள் தவறாமல் கல்லூரிக்குப் போன ஒரே மாணவன் நானாகத்தான் இருந்திருப்பேன்.இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே வந்தபிறகு ஆபாவாணன் டீம் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் சார், ஓம் பிரகாஷ், கிருஷ்ணசாமி என்று பல ஒளிப்பதிவாளர்களிடம் வேலை செய்தேன். பல பேரிடம், பல மொழிகளில் பணிபுரிந்ததால் பரவலான அனுபவம் கிடைத்தது.ஒளிப்பதிவாளராக நான் பண்ணிய முதல் படம் ‘மூடர் கூடம்’. இப்போ இசைஞானி இளையராஜா சார் அண்ணன் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பேய் பசி’, சுசிகணேசன் உதவியாளர் ராமு இயக்கத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் நடிக்கும் ‘ரூஸ்டர்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறேன்.
டைரக்டராக மாறினாலும் ஒளிப்பதிவுதான் என்னுடைய அடையாளம். அதனால் அதை விடமாட்டேன்.டைரக்ஷன் வாய்ப்பு எப்படி கிடைத்தது? சினிமாவில் வாய்ப்பு நம்மைத் தேடி வராது. நாம்தான் தேடிப் போகணும். பெற்ற கடனுக்காக என்னோடு சேர்ந்து என் அப்பாவும் எனக்காக தயாரிப்பாளர் தேடலில் இறங்கினார். ஒளிப்பதிவாளராக பிஸியாக இருந்ததால் டைரக்ஷன் பண்ணுவதற்கு ஒரு வருடம் டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி வைத்திருந்தேன். அப்போது அப்பா வழியில் தயாரிப்பாளர் நேரு நகர் நந்து சாரை மீட் பண்ணி கதை சொன்னேன். அவருக்கு என் கதையையும் தாண்டி என் திறமை மீது நம்பிக்கை இருந்ததால் படம் பண்ண சம்மதித்தார். டைட்டில் மிரட்டலாக இருக்கிறதே?
இது த்ரில்லர் படம். ஒரு வகையில் பரீட்சார்த்த முயற்சி என்று கூட சொல்லலாம். திகில் படம் என்றால் சீட் நுனியில் உட்கார வைக்க வேண்டும், ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியாகும் படங்களிலிருந்து இது மாறுபட்டது. இது பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட படமாக இல்லாமல் சினிமாவுக்கான இலக்கணத்தோடு உருவாகியுள்ள படம். இந்த மாதிரி கதையை நான் ஏன் கையில் எடுத்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியும்.
‘ஃபைவ் ‘சி’ஸ் ஆஃப் சினிமாட்டோகிராஃபி’ என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய ஒளிப்பதிவு மேதை ஜோசப் வீ மேஸ்செல்லி சினிமாவைப் பற்றி கூறும்போது, ‘படைப்பாளியின் படைப்புகளில் அவர் வாழ்ந்த விதமும் வளர்ந்த சூழலும் ஏதேனும் ஒரு வகையில் படைப்பை ஆக்கிரமித்திருக்கும்...’ என்று குறிப்பிடுகிறார்.அதேபோல், விஷயம் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு ரசனையுடைய ரசிகர்கள் அதை பல கோணங்களில் அவரவர் வாழ்க்கைச் சூழலின் தாக்கத்தோடு பார்க்க முடியும் என்பதுதான் நிதர்சன உண்மை.
இது வழக்கமான த்ரில்லர் பார்மூலாவில் தயாரான படம் இல்லை. ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளோம். அது வெளியாகும்போதுதான் எங்கள் முயற்சி சரியா, தவறா என்பது தெரியும். அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடியாத வகையில் ஒரு எட்ஜ் ஆஃப் சீட் த்ரில்லராக இருக்கும்.
புதுமுகங்களைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
இந்த கதையை எழுதும்போது விஜய் சேதுபதி மைண்ட்ல இருந்தார். அவரை நடிக்க வைப்பதற்கான முயற்சியும் நடந்தது. ஆனால், அவர் படு பிஸியாக இருந்தார். அதேசமயம் பட்ஜெட்டையும் கணக்கில் எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் படம் டிராவல் சம்பந்தப்பட்டது. ஒரு ஷாட்டிற்கு ஒரு லொகேஷன் செல்ல வேண்டியிருந்து . அதனால் காலம், நேரம் பார்க்காமல் வேலை செய்யக்கூடிய ஆர்ட்டிஸ்ட்ஸ் தேவைப்பட்டார்கள். அதுக்காகவே கால்ஷீட் சிக்கல் வராதநிலையில் இருந்த ஆர்ட்டிஸ்ட்டுகளை செலக்ட் பண்ணினோம். ‘காக்கா முட்டை’யில் நடித்த நிவாஸ் ஆதித்தன் ஹீரோ. ஹீரோயின் நித்ய கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். மெயின் வில்லனாக ‘பில்லா’, ‘சூது கவ்வும்’ படங்களில் நடித்த யோக் ஜேப்பி வர்றார்.
யோக் ஜேப்பி பற்றி சொல்ல வேண்டும். தியேட்டர் பேக்ரவுண்டிலிருந்து வந்ததால் பெர்ஃபாமன்ஸ் எல்லாமே கிளாஸ் ரகம். ‘தங்க மீன்கள்’ லிஸி ஆண்டனி இருக்காங்க. முக்கியமான வேடத்தில் புதுமுகம் விக்டர் பிரபாகர் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா தேடக் கூடிய நடிகராக மாறிடுவார். தேசிய விருது பெறுவதற்கு என்னுடைய ஆர்ட்டிஸ்ட்ஸ் தகுதியானவர்கள். எங்கள் படத்தில் நடித்தவர்கள் ஸ்டார்ஸ் கிடையாது.
ஆனால், இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்டார்ஸ் ஆகிவிடுவார்கள்.ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்கும்போது 100 சதவீத பட்ஜெட்டில் 70 சதவீதம் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் சம்பளத்துகே போய்விடும். 30 சதவீதத்தில்தான் படப்பிடிப்பு நடக்கும். நாங்கள் பெரும்பாலும் அறிமுகம் என்பதால் 70 சதவீத பட்ஜெட்டை படத்திற்கும் 30 சதவீதத்தை ஆர்ட்டிஸ்ட்சுக்கும் மற்ற செலவுகளுக்கும் ஒதுக்கியதால் நினைத்த மாதிரி படம் எடுக்க முடிந்தது.
த்ரில்லர் கதைகளில் மியூசிக் டைரக்டர் என்ன பண்ணியிருக்கிறார் என்பது க்ளியரா தெரிஞ்சிடும். அதை புரிஞ்சி பிரமாதமா ஸ்கோர் பண்ணியிருக்கிறார் கேபர் வாசுகி. இதற்கு முன் ‘ஏலே’ பண்ணியிருக்கிறார். கிரிநந்த், விஜய் கார்த்திகேயன் ஆகியோர் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள்.லெனின் உதவியாளர் மீனாட்சிசுந்தர் எடிட்டிங். ‘சக்கரவர்த்தி ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நேரு நகர் நந்து, பத்ரி நாராயணன் இணைந்து தயாரித்துள்ளனர். இது அவர்களுக்கு இரண்டாவது படம். என்னை நம்பி பணம் போட்டவர்களுக்கு இந்தப் படம் லாபம் பண்ணிக்கொடுக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்த படம் என்ன, எப்போது?
ஜோதிகா, நயன்தாராவுக்கு ஏற்ற மாதிரி வுமன் சென்ட்ரிக் கதையும்; தனுஷ், விஜய் சேதுபதிக்கு ஏற்ற மாதிரி கமர்ஷியல் கதைகளும் ரெடி. அவர்களைச் சந்தித்து கதை சொல்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது, அமைந்தால் நலம். சினிமாவில் இப்போது திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?இண்டஸ்ட்ரியில் இப்போதும் டி.எஃப்.டி. மாணவர்கள்தான் பிஸியாக இருக்கிறார்கள். ‘ராட்சசி’ இயக்குநர் கெளதம் ராஜ், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், ‘திட்டம் இரண்டு’ கேமராமேன் கோகுல் பினாய் போன்றவர்கள் இன்ஸ்டிடியூட் தயாரிப்புகள்தான்.
சினிமாவுக்கு கற்றல் முக்கியம். எந்த இன்ஸ்டிடியூட்டுக்கும் போகாமலேயே கை, கால் அசைத்து நடித்துவிட முடியும். அதையும் தாண்டி கிராஃப்ட்டை விதிகளின்படி பின்பற்றி வடிவமைக்க படிப்பு முக்கியம். ஆகையால் சினிமாவை முறைப்படி கத்துக்க முன்வரணும். அதுக்காக இன்ஸ்டிடியூட்டில் படிக்கலைன்னா டைரக்ஷன் பண்ண முடியாது என்று சொல்லமாட்டேன். ஒரு கதாசிரியருக்கு இலக்கிய வாசிப்பு இருந்தால் நடை நல்லாயிருக்கும் என்பது போல சினிமா கல்வி படைப்பாளிக்கு முக்கியம். இப்போது ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள ஆன்லைன் போதும். அதே கல்வியை குரு அருகிலிருந்து கற்றுக்கொள்ளும்போது அதன் வலிமை அதிகம்.
எஸ்.ராஜா
|