இவர்தான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்!



தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.என்.ரவி என்கிற  ரவீந்திர நாராயண் ரவி. பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவில் பிறந்த இவர், 1974ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர், 1976ல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். இவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றிவிட்டு பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலானார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.அந்தப் பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாகச் செயல்பட்டார்.

உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐபி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் இப்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என்.ரவிக்கும் நெருக்கம் உண்டு என்கிறார்கள்.2012ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கூட்டு புலனாய்வுக் குழுவின் தலை
வராக நியமிக்கப்பட்டார். 2014ம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி நாகாலாந்தில் நாகா சமாதானப் பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

2018ம் ஆண்டு அக்டோபரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரானவர், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி அன்று நாகாலாந்து ஆளுநரானார். பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் இவர் தமிழக ஆளுநராக இப்போது இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்குப் பின்னால் வலுவான காரணம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

  நாகாலாந்து மாநிலத்தைப் பிரித்து, அதனுடன் அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை ஒன்றிணைத்து, ‘நாகாலிம்’ என்கிற தனி நாடு கோரி ஆயுதமேந்திய போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசுடன் 1997ல் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, ஆயுதப் போராட்டத்துக்கு ‘நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து (ஐசக் - முய்வா)’ போன்ற அமைப்புகள் முற்றுப்புள்ளி வைத்தன. அன்றிலிருந்து இன்றுவரை, இந்தச் சமாதான ஒப்பந்தத்தை இறுதிவடிவம் செய்யத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

2014ல் மோடி அரசு பொறுப்பேற்றவுடன், இந்திய அரசின் சார்பில் நாகாலாந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவுக்கான தலைவர் பொறுப்பு ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டது. அப்போது இவர் ‘நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து (ஐசக் - முய்வா)’ அமைப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்ததாகவும் இதனால் மற்ற இயக்கங்களும், அரசியல் அமைப்புகளும் கோபம் அடைந்து பேச்சுவார்த்தைக்கு வரத் தயங்கியதாகவும் அப்போது பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்தே நாகாலாந்தின் ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்பட்டதாகவும், சமாதானப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவதற்காகவே இப்போது நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்து இவரை ஒன்றிய அரசு விடுவித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஜான்சி