பிளாக் விடோ
மார்வல் காமிக்ஸின் முக்கிய பெண் கதாபாத்திரமான பிளாக் விடோவை வைத்து தனியாக வந்திருக்கும் படம்தான் ‘பிளாக் விடோ’. ‘ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். அலெக்ஸியும், மெலினாவும் ரஷ்ய உளவாளிகள். அமெரிக்காவில் இருக்கும் ஒரு ரகசிய திட்டத்தை திருடுவதற்காக கணவன் - மனைவி போல நடித்து, வாழ்ந்து வருகிறார்கள். இதற்காக நடாஷா, யெலினா என்ற இரு பெண் குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
ரகசிய திட்டத்தைத் திருடியதும் அதை ஒப்படைக்க குடும்பத்துடன் கியூபா செல்கின்றனர். அங்கேதான் அவர்களின் பாஸ் டிரிகோவ் இருக்கிறார். ரகசிய திட்டத்தை டிரிகோவ்விடம் ஒப்படைத்ததும் அலெக்ஸியும், மெலினாவும் வெவ்வேறு திசைக்குக் கிளம்பி விட, சிறுமிகளான நடாஷாவும், யெலினாவும் வலுக்கட்டாயமாக ரெட் ரூமிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
ரெட் ரூம் என்பது என்ன... நடாஷா எப்படி பிளாக் விடோவாக பரிணமிக்கிறாள்... பிளாக் விடோ யார்... போன்ற கேள்விகளுக்கு பதிலாக விரிகிறது திரைக்கதை.சேஸிங் காட்சிகளிலும், ஆக்ஷனிலும் மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ படப்பிரியர்களுக்கு செம விருந்து. படத்தின் இயக்குநர் கேட் ஷார்ட்லேண்ட்.
|