‘தண்ணீர்’ நாவலை அப்பா எழுதினார்...சொந்த செலவில் 2.47 ஏக்கர் குளத்தை புனரமைத்து கிராம மக்களுக்கு கொடுத்திருக்கிறார் மகன்!
மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் தன்னுடைய ‘தண்ணீர்’ நாவலில் சென்னை நகரில் வாழும் நடுத்தர மனிதர்களின் வாழ்வில் தண்ணீர் பிரச்னை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி சொல்லியிருப்பார்.
இந்தத் தண்ணீர் பிரச்னையைப் பார்த்து வளர்ந்தவர் அசோகமித்திரனின் மகன் ரவிசங்கர். அதனால்தான் சமீபத்தில் தன் தந்தையின் நினைவாக கடலூர் அருகே குமுடிமூலை என்கிற கிராமத்தில் குளம் ஒன்றை தூர்வாரி அந்த மக்களுக்கு ஆத்மார்த்தமாக அர்ப்பணித்துவிட்டு வந்திருக்கிறார். ‘‘எங்களுடைய பங்களிப்பா ஒரு குளம் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறதை நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும் அப்பாவின் நினைவாக செய்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருது...’’ என நெகிழ்வாகப் பேசுகிறார் ரவிசங்கர். ‘‘நான் அசோகமித்திரனின் மூத்த மகன். 1988ல் சிஏ முடிச்சதும் மூன்றாண்டுகள் கவுகாத்தியில் பணியாற்றினேன். 91ல் திருமணமாச்சு. பிறகு ஹைதராத்பாத்திற்கு மாற்றலாகி வந்தேன். அப்புறம், 2010ல் சென்னைக்கே வந்துட்டேன்.
எனக்கு பாரம்பரிய விஷயங்கள்ல அதீத ஆர்வம் உண்டு. சென்னைக்கு வந்ததும் இங்குள்ள பாரம்பரிய இடங்களை ஒரு குழுவுடன் சேர்ந்து பார்வையிட்டு வந்தேன். அப்ப ‘சானிடேஷன் ஃபர்ஸ்ட் இந்தியா’ என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பத்மப்ரியா பழக்கமானாங்க. இவங்க நிறுவனம் நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி பெற்று அதன்மூலம் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு எகோசான் கழிப்பறையை கட்டித்தர்றாங்க.
சமூகத்துல பின்தங்கிய மக்கள் வாழ்ற இடங்கள்ல தண்ணீர் பிரச்னை இருக்கும். ஃப்ளஷ் பண்ண தண்ணீர் இருக்காது. அதனால, அந்த இடங்களுக்கு ஏற்ற கழிப்பறை எகோசான்தான்னு அந்தத் தொண்டு நிறுவனம் இதுல பணி செய்றாங்க. இதுக்கிடையில், நான் 2014ல் அபிராமபுரத்துல இருக்கும்போது ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ ஏரியா பத்திரிகையில் ‘பெண்கள் பள்ளியில் கழிப்பறையை புதுப்பிக்கப் போறோம். அதுக்கு நிதி வேணும்’னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க. அதைப் பார்த்ததும் பண்ணுவோம்னு தோணுச்சு. ஐம்பது சதவீத வேலைக்கான நிதி கொடுத்தேன். அதுதான் பொதுக் காரியங்கள் செய்றதுக்கு நான் அளிச்ச முதல் நன்கொைட.
இந்நேரம் பத்மப்ரியா ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டித்தரணும்னு சொல்லி, போதிய நிதிக்காக நான் பணியாற்றுகிற நிறுவனத்தின் சிஎஸ்ஆர் திட்டத்திற்கு அனுப்பும்படி கேட்டாங்க. ஆனா, எங்க நிறுவனத்துல அதுக்கான ஒதுக்கீடு ஏற்கனவே முடிஞ்சிருந்தது. இதுக்கு பெரிய நிதி தேவை.
என்னாலும் தனியா பண்ணமுடியாது. ஆனா, இந்தப் பணி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, நான் பத்மப்ரியாகிட்ட தனியா ஒருத்தருக்கு ஒரு கழிப்பறை வேணும்னா என் சொந்தப் பணத்திலிருந்து செய்து கொடுக்கலாம்னு சொன்னேன். சரினு எனக்காக செய்ய முன்வந்தாங்க.
நான் பயனாளர்கள் எப்படியிருக்கணும்னு ஒரு வகைப்பாட்டை சொன்னேன். அதாவது அந்த வீடு, பெண்ணை நம்பியிருக்கிற வீடா இருக்கணும். அப்படியில்லனா, அந்த வீட்டுல இருக்கிற பெண் மாற்றுத்திறனாளியா இருக்கணும்.
அல்லது வீட்டுல வேறு யாரும் மாற்றுத்திறனாளியா இருக்கலாம். வெளியே போய் கழிப்பறைக்குப் போக முடியாத சூழல்ல இருப்பாங்க. அவங்க யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் கழிப்பறைக்குப் போகணும். அவங்களுக்குக் கட்டித்தரலாம்னு சொன்னேன். அவங்க அப்படியான நபர்களைத் தேர்ந்தெடுத்து தந்தாங்க.
என்னுடைய முதல் பயனாளர் கடலூர் மாவட்டத்துல இருக்கிற குண்டியமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்னு ஒருத்தர். ஏன் இந்தக் கிராமத்தை தேர்ந்தெடுத்தோம்னா ‘சானிடேஷன் ஃபர்ஸ்ட் இந்தியா’ நிறுவனம் கடலூர் பகுதியில்தான் நிறைய பணிகள் செய்றாங்க.
அதனால, அந்தப் பகுதியில் நபர்களை தேர்ந்தெடுத்தாங்க. இந்த நபர் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது கீழ விழுந்து அடிபட்டுட்டார். அவரால் வேலைக்குப் போக முடியாது. அவருடைய மனைவியும், ரெண்டு பெண்களும்தான் குடும்பத்தை நடத்துறாங்க. அவருக்கு ஒரு கழிப்பறை கட்டித் தந்தால் மொத்த குடும்பமும் அவருக்கு இதுக்காக செலவழிக்கிற நேரம் குறையும். அவரும் காலைக்கடனுக்காக குடும்பத்தை நம்பியிருக்க வேண்டாம். அதனால அவருக்கு எகோசான் கழிப்பறையும், படிக்கட்டில் ஏறாமல் இருக்க சாய்வுதளத்துடன் கூடிய பாதையும் அமைச்சுக் கொடுத்தோம். சமீபத்துல கூட நத்தம்மேடு என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரோஸ்மேரினு ஒரு பெண்ணுக்கு பண்ணிக் கொடுத்தோம். இப்படியா ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு கழிப்பறைனு செய்ய ஆரம்பிச்சேன். இதுவரை பத்து எகோசான் கழிப்பறை கட்டித் தந்திருக்கேன்...’’ என்கிறவர், நீர்நிலையை தூர்வாரிய விஷயத்திற்கு வந்தார்.
‘‘2018ம் ஆண்டு என் முதல் எகோசான் கழிப்பறையைத் திறக்க குண்டியமல்லூர் கிராமத்துக்கு பத்மப்ரியாவின் குழுவுடன் போயிட்டு வந்தேன். அப்ப வரும்போது அந்த வருஷம் மழையில்லாமல் தண்ணீருக்காக எல்லோரும் கஷ்டப்பட்ட விஷயத்தைப் பத்தி பேசிட்டு வந்தோம். அந்த சமயத்துல நான்தான் ஏதாவது நீர்நிலையை தூர்வாரி சரி செய்து கொடுக்கலாமேனு சொன்னேன். அதுக்கு நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அவங்க சானிடேஷன் துறையில் மட்டும்தான் பண்றாங்க. இருந்தாலும் நான் கேட்டேன்னு சம்மதிச்சு, சிதம்பரம் தாலுகாவுல குமுடிமூலைனு ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்தாங்க.
இது 2 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமம். அங்க ஊர் நடுவுல பழமையான பிள்ளையார் கோயில் குளம் இருக்கு. 2.47 ஏக்கர். அதாவது, ஒரு ஹெக்டேர் பரப்பளவுள்ள குளம். ஒருகாலத்துல இந்தக் குளத்துல குடிக்க, குளிக்க, விவசாயம் பண்ணனு மக்கள் இருந்திருக்காங்க.
இப்ப அப்படி இல்ல. பத்மப்ரியாவும், அவருடன் இந்தப் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த ஆறுமுகம் என்பவரும் என்கிட்ட பட்ஜெட் கேட்டாங்க. எனக்கு தெரியல. ஆனா, மூணு வருஷங்கள் எடுப்போம். மெதுவா செய்வோம். அதே நேரம், புனரமைச்ச பிறகு கிராம மக்களும் இதைப் பராமரிக்கணும். அப்பதான் அடுத்தடுத்து இதுமாதிரியான செயல்பாடுகள்ல நம்மால் இறங்க முடியும்னு சொன்னேன்.
சரினு, குடிமராமத்துல வராத அந்தக் குளத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனா, மாவட்ட நிர்வாகத் தரப்புல இருந்து ஒப்புதல் கிடைக்க சில சிக்கல்கள் இருந்தது. ஒருகட்டத்துல இந்தப் பணியே வேண்டாம், விட்டுடலாம்னு கூட நினைச்சோம்.
அப்புறம், ஊர் மக்களே சேர்ந்து போய் மாவட்ட நிர்வாகத்திடம் பேசினாங்க. பிறகு, பத்திரிகைத் துறையில் இருக்கிற என் தம்பி ராமகிருஷ்ணன் இப்போது சென்னை மாநகராட்சி கமிஷனரா இருக்கிற ககன்தீப் சிங் பேடி சாரிடம் பேசினான். அவர் ஏற்கனவே கடலூர் மாவட்ட ஆட்சியரா இருந்தவர். அதனால, அவர்மூலம் புரியவச்சு ஒப்புதல் வாங்கினோம்.
முதல்கட்டமா, 2019ல் தூர்வாரி ஆழப்படுத்தினோம். அடுத்து, தண்ணீர் வர்ற கால்வாயை சரி செய்தோம். பிறகு, 2020ல் ஒரு கட்டமாகவும், 2021ல் இன்னொரு கட்டமாகவும் பண்றதா திட்டம் வச்சிருந்தோம்.
ஆனா, 2020ல் கொரோனாவால் பண்ண முடியல. பணி செய்ய நேரம் கிடைச்சப்ப சரியான மழை. ஏற்கனவே தூர்வாரியிருந்ததால குளமும் நிறைஞ்சிடுச்சு. ஆக, சுற்றிலும் சுவர் கட்டணும்னா இருக்கிற தண்ணீரை இறைக்கணும். தொடர்ந்து மழை இருந்ததால் கஷ்டமாகிடுச்சு. அதனால, இந்த ஆண்டுதான் எல்லா பணிகளையும் செய்து முடிச்சோம்.
குளத்தின் நான்கு பக்கத்துல ஒரு பக்கம் அரசு கட்டின சுவரே நல்லாயிருந்தது. மத்த மூணு இடங்கள் பழுதாகிக் கிடந்துச்சு. அந்த மூணு பக்கமும் சுவர் கட்டினோம். ஆடு, மாடுகள் குளத்துல இறங்க சாய்வுதளம் ஒண்ணும் அமைச்சோம். பிறகு, நாலு பெஞ்சு போட்டோம். 2020ல் லாக்டவுன் நேரத்துல குழந்தைங்க எல்லாம் வெளியே உட்கார்ந்து படிச்சிட்டு இருந்திருக்காங்க.
இதை பத்மப்ரியா எங்கிட்ட சொன்னதும் அவங்களுக்காக பெஞ்சுகள் பண்ணிக் கொடுப்போம்னு செய்தோம். இப்ப குழந்தைங்களை விட பெரியவங்கதான் அங்க ஓய்வெடுக்கிறதா சொல்றாங்க. அது இன்னும் சந்தோஷத்தைத் தருது.
இந்த பெஞ்சு போடணும்னு சொன்னதும் எனக்கு அப்பாதான் முதல்ல நினைவுக்கு வந்தார். நாங்க தி.நகர்ல வசிக்கும்போது அவர் நடேசன் பார்க் பெஞ்சுல உட்கார்ந்துதான் அநேக கதைகள் எழுதுவார். நான் நிறைய முறை அதை பார்த்திருக்கேன்...’’ என்கிற ரவிசங்கர், கடந்த செப்டம்பர் 4ம் தேதி இந்தக் குளத்தைத் திறந்து வைத்துள்ளார்.
‘‘2019ல் இதற்கு அடிக்கல் நாட்டும்போது அம்மா ராஜேஸ்வரியும் உடன் வந்தார். இந்தமுறை கொரோனாவால் அவரை அழைச்சிட்டு வரல. நானும், என் மனைவி உமாவும் சேர்ந்து திறந்து வச்சோம். அதுல அப்பாவின் புகைப்படம் போட்டே கல்வெட்டு மாதிரி வச்சிருந்தாங்க. என்கிட்ட யாருக்கு அர்ப்பணிக்கிறீங்கனு கேட்டாங்க. நான் அப்பாவின் பெயரைச் சொன்னேன். ஏன்னா, அவர் மூச்சுக்கு அடுத்தபடியா தண்ணீரைத்தான் பார்த்தார்னு சொல்லணும். அதனால் அவர் பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கும்னு செய்தேன். அவங்க, அப்பாவின் உருவத்தை மரத்துல செதுக்கி ஒரு நினைவுப் பரிசா எனக்கு அளிச்சாங்க. அது நெகிழ வச்சது. இது வெறும் திட்டம் என்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவி பண்ணணும்னு உணர்வுபூர்வமா செய்த விஷயம். நம்ம வீட்டுல ஏதாவது கட்டடம் கட்டணும்னா எப்படி நாம் மெனக்கெட்டு செய்வோமோ அதுமாதிரி செய்தோம்.
‘காசு என்னோடதா இருக்கலாம். ஆனா, சொத்து உங்களோடது’னு அந்த மக்கள்கிட்ட சொன்னேன். அவங்க, ‘நீங்க அடுத்தமுறை வாங்க சார்... இதைவிட சுத்தமாகவும், மரங்கள் எல்லாம் நட்டும் ரொம்ப அருமையா வச்சிருப்போம். பாருங்க’னு நம்பிக்கை தந்திருக்காங்க. எனக்கு அதுவே போதும்...’’ என்கிறவர், ‘‘எதிர்காலத்துல இன்னும் பெஞ்ச் போடணும்னு ஐடியா வச்சிருக்கோம். தவிர, டெலஸ்கோப் ஒண்ணு வச்சு குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு வகை செய்யலாம்னு இருக்கோம்.
அதனுடன் ஒரு ஷெட் அமைச்சு அவங்க படிப்பிற்கு உதவலாம்னு ஒரு யோசனையும் இருக்கு. இப்போதைக்கு என்னுடைய திட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு எகோசான் கழிப்பறை கட்டித்தர்றதுதான். அது எப்பவும் தொடரும்...’’ என ஆத்மதிருப்தியுடன் சொல்கிறார் ரவிசங்கர்.
பேராச்சி கண்ணன்
|