மிஸ் & மிஸஸ் தமிழ்நாடு 2022



லாக்டவுன், கொரோனா என்ற பீதி எல்லாம் சற்றே தணிய இதோ நகரம் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டது. பல கட்டுப்பாடுகள், வெறும் 100 நபர்கள் என திட்டமிட்டு நடந்து முடிந்திருக்கிறது ‘மிஸ் தமிழ்நாடு 2022’ மற்றும் ‘மிஸஸ் தமிழ்நாடு 2022’.
‘‘பொதுவா ஃபேஷன் நிகழ்ச்சிகள் இரவு 12 மணி வரை அல்லது அதற்கு மேல் கூட நடக்கும். ஆனால், இம்முறை இரவு 10 மணிக்கெல்லாம் முடிச்சுட்டோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி ரெண்டு டோஸ் போட்டிருக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு களும் கொடுத்திருந்தோம்...’’ என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல்.

‘‘நான் கிரண் குல்சார். சென்னைதான் சொந்த ஊர்...’’ மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் மிஸ் தமிழ்நாடு 2022. ‘‘செட்டிநாடு வித்யாஸ்ரமத்துல படிச்சுட்டு எஸ்.ஆர்.எம்ல பி.டெக் முடிச்சிருக்கேன். அப்பா மோகன்குமார், எனக்கு ஏழு வயதிருக்கும்போதே இறந்திட்டார். அம்மா நிலோஃபர், தனியார் கல்லூரில அட்மின் டிபார்ட்மென்ட்ல இருக்காங்க.
காலேஜ் டேஸ்லயே எனக்கு மாடலிங், ரேம்ப் வாக்ல ஆர்வம் அதிகம். முதல்ல ஃபேஸ் ஆஃப் சென்னை போட்டி, அதிலே ஜெயிச்சு, சின்னச் சின்ன ரேம்ப் வாக் கடந்து இப்ப ‘மிஸ் தமிழ்நாடு 2022’.

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம் பார்த்துதான் கலந்துகிட்டேன். வாக்கிங், ஸ்டைலிங், பேச்சு எல்லாமே யூடியூப் மூலமாதான் கத்துக்கிட்டேன். போட்டி நெருங்கும்போது
அவங்களே குரூமிங் கிளாஸ் எல்லாம் நடத்தினாங்க. ‘மிஸ் சௌத் இந்தியா’ போட்டிக்கான வாய்ப்பு இருக்கு. அதிலே கலந்துகிட்டு பெஸ்ட் கொடுக்கணும். அடுத்து கிடைக்கற வாய்ப்புகள் எதுவா இருந்தாலும் அதை சரியா பயன்படுத்தணும்...’’ புன்னகைக்கிறார் கிரண் குல்சார்.

‘‘நான் கிருபாதேவி. ஃபிட்னஸ் டிரெயினர்...’’ பூரிப்புடன் பேசத் தொடங்கினார் ‘மிஸஸ் தமிழ்நாடு 2022’. ‘‘என் கணவர் மயில்வாகனன் தணிகைவேல். எங்களுக்கு 12 வயசுல மகன் இருக்கான். அவன் பெயர் மகி கணேஷ். திருமணம், குழந்தைன்னு ஆனதும் பெரும்பாலான பெண்கள் மாதிரி நானும் குண்டாகிட்டேன்! 20 கிலோ அதிகம்! கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒரு மாரத்தான் ரன்னர். ஒரு நாள் கண்ணாடி என்னையப் பார்த்து திட்டுச்சு. அன்னைக்கு மீண்டும் ஃபிட்னஸ்க்கு திரும்பிட்டேன்.

கணவர், குடும்பம் கொடுத்த ஆதரவால ஏறிய வெயிட்டை குறைச்சேன்... இதோ ‘மிஸஸ் தமிழ்நாடு 2022’ கிரீடத்துக்கும் சொந்தக்காரி ஆகிட்டேன். நம்மை நாம் நல்லா கவனிச்சுக்கிட்டாலே நம்மை சுத்தி இருப்பவர்களை சிறப்பா கவனிப்போம். இதுதான் நான் கத்துக்கிட்ட பாடம். இன்னைக்கு என்னையும் சேர்த்து 1000க்கும் மேலான பெண்களை திருமணம், குழந்தைக்கு அப்பறமும் கூட ஃபிட்டா மாத்தியிருக்கேன். அழகா இருக்கோமோ இல்லையோ, ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்...’’ என்கிறார் கிருபாதேவி.

ஷாலினி நியூட்டன்