விளிம்பு நிலை மக்களோட பிரச்னைகளை பேசியிருக்கோம்!



தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் கோடம்பாக்கத்தை மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இம்மாத வெளியீடாக வரவுள்ளது விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’. ‘ஆள்’, ‘மெட்ரோ’வுக்குப்பிறகு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுக்கு இது ஹாட்ரிக் படம். விஜய் ஆண்டனிக்கு 14 வது படம். ‘‘நான் இயக்கிய ‘மெட்ரோ’வைப் பார்த்துவிட்டு விஜய் ஆண்டனி சார் விஷ் பண்ணினார். வாழ்த்துதலோடு அறிமுகமான எங்க நட்பின் நீட்சி சேர்ந்து படம் பண்ணுமளவுக்கு வந்திருக்கு...’’ நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் ஆனந்தகிருஷ்ணன்.

‘‘சாரிடம் தொடர்ந்து பேசறப்ப, ஒரு கதை வைச்சிருக்கேன்... கேட்க முடியுமானு அப்ளிகேஷன் போட்டேன். சாரும் அவருடைய அலுவலகத்துக்கு வரச் சொல்லி பொறுமையா முழுக் கதையையும் கேட்டார். அதுதான் ‘கோடியில் ஒருவன்’.இது விளிம்பு நிலைல உள்ள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம்.
நம் நாட்ல கோடிக்கணக்குல அடித்தட்டு மக்கள் இருக்காங்க. ஆனா, அவங்க வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் படு மோசமான நிலைல இருக்கு. குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்ல, சுகாதார வசதிகள் இல்ல, சாலை வசதி இல்ல, கழிவுநீர் வசதி இல்ல. இது போன்று ஏராளமான பிரச்னைகளோடு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியும் அதற்கான தீர்வையும் யதார்த்தமா சொல்லியிருக்கிறேன்.

நம் அரசாங்கம் ஆக்கபூர்வமாக பல நல்ல திட்டங்கள் கொண்டு வருது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படுது. ஆனா, பலன் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை. எளிய மக்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் கழிவு நீர் வசதிகள் என்பது மிகவும் மோசமான நிலையில் இருக்கும். அதிகாரிகள் நினைச்சா அந்த மாதிரி பகுதிகளைத் தனியார் குடியிருப்புப் பகுதி போல் சுத்தமாக வைத்திருக்க முடியும். அதற்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்களும் அதிகம்.

ஆனா, அதுபோன்ற மக்கள் நலப் பணிகளில் ஏன் சுணக்கம் நடக்கிறது என்பதைத்தான் எங்கள் ஹீரோ மக்களில் ஒருவனாகக் கேள்வி கேட்கிறார். அந்த வகையில் சாமான்ய மக்களின் குரலைப் பதிவு செய்யும் இந்தப் படைப்பு மூலம் ஒருசில மாற்றங்கள் நிகழ்ந்தா அதுவே எங்க வெற்றி...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஆனந்தகிருஷ்ணன்.

விஜய் ஆண்டனி ஹேண்ட்சம் லுக்கில் இருக்கிறாரே?

படத்துல அவருடைய கேரக்டர் பெயர் விஜயராகவன். ஏழைப் பிள்ளைகளுக்கு டியூஷன் கற்றுக் கொடுத்துக்கொண்டே சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகக் கூடிய மாணவர். அந்த மாதிரி மாணவர்கள் மூளைக்குள் எப்போதும் படிப்பு மட்டுமே இருக்கும். வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டார்கள். அந்த மாதிரி எக்ஸாம் எழுதுகிறவர்களால் லவ் பண்ண முடியாது. நண்பர்களாகச் சேர்ந்து என்ஜாய் பண்ண முடியாது.விஜய் ஆண்டனி சார் பொதுவெளியில் அதிகம் பேசாதவர்.

அவருடைய அந்த நேச்சர் கேரக்டருக்கு அருமையாக செட்டாயிடிச்சி. நாங்க கமிட் பண்ணும்போது சாருக்கு நிறைய கமிட்மென்ட் இருந்தது. இதுல கேஷுவல் லுக் தேவைப்பட்டது. அதுக்காக அதிகம் மெனக்கெட்டு ஸ்டூடண்ட் லுக்கை கொண்டு வந்தார். பொதுவாக விஜய் ஆண்டனி சார் அவர் பண்ணும் கேரக்டருக்கு நியாயம் பண்ணக்கூடியவர். இதுல ஆக்‌ஷன் சீன்ல பெரிய ரிஸ்க் எடுத்து பண்ணிக்கொடுத்தார். உயரமான கட்டடங்களை டூப் இல்லாமல் ஜம்ப் பண்ணினார். இந்த மாதிரி முயற்சியை முதன் முறையாக எங்க படத்துலதான் பண்ணினார்.

ஒரு காட்சியில் 80 அடி உயரத்தில் நின்று கொண்டு டயலாக் பேச வேண்டும். இது உச்சகட்ட ரிஸ்க். ஏன்னா, அவ்வளவு உயரத்திலிருந்து தரையைப் பார்த்தாலே தலை ‘கிர்’ருன்னு சுத்தும்.
ஒரு காட்சியில் கார் சுவரில் மோதி டுவிஸ்ட்டாவது போல் எடுத்தோம். அதிலும் டூப் வேண்டாம்னு சொல்லிட்டார்.

ஷூட்டிங்கில்தான் இப்படி என்றால் போஸ்ட் புரொடக்‌ஷனில் அவருடைய எனர்ஜி வேற லெவல். இந்தப் படத்துக்கு எடிட்டிங்கும் அவரேதான். அவர் கதையோடு பின்னிப் பிணைந்திருந்ததால் எடிட்டிங்கில் மேலும் படத்தை மெருகேற்றினார். அடிப்படையில் எனக்கும் எடிட்டிங் தெரியும் என்பதால் எடிட்டிங் மேடையிலும் நாங்கள் கை குலுக்கிக் கொண்டோம்.
படத்துல லவ் இருக்கிறதா?

அதுக்குதான் ஆத்மிகா இருக்காங்களே! ‘மீசைய முறுக்கு’ பண்ணியவர். படத்துல எந்தக் கேரக்டரும் வான்டட்டாக திணிச்ச மாதிரி இருக்காது. அதுமாதிரிதான் ஹீரோயின் கேரக்டர். கதை ஹீரோவைச் சுற்றி நடந்தாலும் ஹீரோயின் கேரக்டரும் பேசப்படுமளவுக்கு அழுத்தமாக இருக்கும். ஆத்மிகாவுக்கு இயல்பா நடிப்பு வருகிறது. நான் லவ் படம் டைரக்‌ஷன் பண்ணியதில்லை. படத்துல வர்ற ரொமான்ஸ் ஏரியாவுல எனக்கான வேலையை எளிதாக்கிட்டார்.

வில்லனாக யார் பண்றாங்க?

‘கே.ஜி.எஃப்’ ராமச்சந்திர ராஜு பண்றார். இந்தப் படத்துல நிறைய வில்லன்கள் இருந்தாலும் இவருடைய நடிப்பு தனித்துவமாக இருக்கும். நாங்கள் கேட்டதும் பண்ணினார். தமிழில் நாங்கதான் முதலில் அப்ரோச் பண்ணியிருந்தோம். ‘சுல்தான்’ முதல் படமாக வெளிவந்துவிட்டது. ராமச்சந்திர ராஜு எப்போதும் நடிப்பு பசியில் இருக்கக்கூடியவர். நடிப்புக்கு நிறைய தீனி வேணும்னு எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். டைரக்‌டர்களின் எதிர்பார்ப்புகளை மீறி நிறைய மேஜிக் பண்ணக்கூடிய வெரி டேலன்ட்டட் ஆர்ட்டிஸ்ட். அத்துடன் சூப்பர் சுப்பராயன், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோரும் இருக்கிறார்கள்.

பாடல்கள் ஹிட்டாகியிருக்கே?

அதுக்கு மியூசிக் டைரக்டர் நிவாஸ் கே.பிரசன்னாவுக்குத்தான் நன்றி சொல்லணும். டைரக்டருக்கு ஏற்ற மாதிரி தன்னை டியூன் பண்ணிக்கொண்டு டியூன் போட்டுத்தருவார். சாங்ஸ், டிரைலருக்கு ஏற்கனவே மில்லியன் கணக்கில் லைக்ஸ் கிடைச்சிருப்பது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. படத்துல ஆறு பாடல்கள். மோகன்ராஜன், அருண்பாரதி எழுதியிருக்காங்க. ‘ஸ்லம் ஆந்தம்’ பாடலை சுப்பு எழுதியிருக்கிறார். பின்னணி இசை ஹரீஷ்.

கேமராமேன் உதயகுமார் என்னுடன் ‘ஆள்’, ‘மெட்ரோ’ படங்கள் பண்ணியவர். உதவி இயக்குநராக இருந்த சமயத்திலிருந்து இருவரும் நண்பர்கள். படத்துல சிட்டி, வில்லேஜ்னு ரெண்டு வேரியேஷன் இருக்கு. குன்றுகள் நிறைந்த தேனியைக் குன்றாமலும், அதற்கு நேர் எதிராக உள்ள சென்னையை கார்ப்பரேட்  லுக்கிலும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். வேலை விஷயத்தில் தீயா இருப்பார்.

ரோப்பில் தொங்கியவாறு படமாக்கியது, குப்பை, சகதியில் இறங்கி படமாக்கியது என்று அவருடைய அர்ப்பணிப்புக்கு நிறைய விஷயத்தைச் சொல்லலாம். படத்துல செட் அவ்வளவாக இருக்காது. லைவ் லொகேஷன்லதான் எடுத்தோம். ஒரிஜினாலிட்டியை சேதாரமில்லாம்ல் தட்டித் தூக்கியிருக்கிறார். அடித்தட்டு மக்களின் நிஜ  பின்புலத்தையும், இனி வரும் காலங்களில் கட்டமைப்பு எப்படி இருக்கணும் என்பதையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் பாப்பநாடு உதயகுமார் பிஸியாக சுத்தக்கூடியவர். திறமையானவர். நாம கொடுக்கிற பட்ஜெட்டில் நிறைவா நிறைய விஷயத்தைப் பண்ணிக்கொடுப்பார்.
‘செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ டி.டி. ராஜா தயாரிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பாக டாக்டர் தனஞ்செயன் வெளியிடுகிறார்.
நீங்கள் டைரக்ட் பண்ணுவதாக அறிவிக்கப்பட்ட ‘பிச்சைக்காரன் - 2’ படத்தை இப்போது விஜய் ஆண்டனி டைரக்ட் பண்ணுவது பற்றி?

‘கோடியில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு எங்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒரு படம் இருந்தது. அந்தப் படங்களை முடித்துவிட்டு நாங்கள் ‘பிச்சைக்காரன் - 2’ பண்ணுவதாக இருந்தோம். ஆனால், ஒரு இயக்குநராக ‘கோடியில் ஒருவன்’ வெளியான பிறகே நான் வேறு படத்துக்குச் செல்ல வேண்டும். அதே சமயம் ‘பிச்சைக்காரன் - 2’ முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டதால் என்னால் இணைய முடியாத சூழ்நிலை.

உங்களைப் பற்றிச் சொல்லவேயில்லையே?

எனக்கு பாண்டிச்சேரி. படிச்சது விஸ்காம். மறைந்த இயக்குநர் திருப்பதிசாமி என்னுடைய மாமா. அவர் இறக்கும்போது நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். அவருடைய இன்ஸ்பிரேஷன்லதான் நான் சினிமாவுக்கு வந்தேன். இயக்குநர் சுசி கணேசன் சாரிடம் சினிமா கற்றுக்கொண்டேன்.விதார்த் நடித்த ‘ஆள்’ என்னுடைய முதல் படம். ‘மெட்ரோ’ படத்தை தயாரித்து இயக்கினேன். ‘கோடியில் ஒருவன்’ என்னுடைய மூணாவது படம்.

எஸ்.ராஜா