வா தல...வந்து தெறிக்கவிடு..!



அமெரிக்க அதிபரிடம் மட்டும்தான் நம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை அப்டேட்’ கேட்கவில்லை. மற்றபடி கிரிக்கெட் வீரர் மொயீன் அலி துவங்கி, மோடி வருகை வரை தல வெறியர்கள் ‘அப்டேட்’ கேட்டு அட்ராசிட்டி செய்துவிட்டனர். ஒரு பக்கம் விஜய், கமல் என அத்தனை பேரும் அப்டேட்டுகளை தெறிக்க விட... பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தல ரசிகர்கள் பொங்கி எழுந்து மீம்ஸாலும் டிரெண்டாலும் ‘வலிமை அப்டேட்’ கேட்டு படக் குழுவினரையே மிரள வைத்து விட்டனர்.  

எனவேதான் அஜித்தின் ஃபேவரைட் ஆன வியாழக்கிழமை வெளியிடாமல் ஞாயிற்றுக்கிழமை சுடச்சுட ‘வலிமை’ அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு விட்டார்கள்.
போதாதா..? ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.பின்னே... 700 நாட்கள் காத்திருப்பாயிற்றே!ஆனால், இந்த 700 நாட்களில் நடந்தவை அனைத்தும் தன்னம்பிக்கை + விடாமுயற்சி கட்டுரைக்கு நிகரானவை. சந்தர்ப்ப சூழ்நிலை நாம் நினைத்ததற்குமாறாக அமைந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடி, நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வழிகாட்டியாக இந்த 700 நாட்கள் அமைந்திருக்கிறது.

 போனி கபூரின் பேவியூ புரஜெக்ட்ஸ் எல்.எல்.பி தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படம் ஆகஸ்ட் 29, 2019 அன்று தொடங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.பின்னர் அக்டோபர் 18 அன்று போனி கபூரின் அலுவலகத்திலேயே பூஜை போடப்பட்டது. அன்றே படத்தின் பெயர், ‘வலிமை’ என்றும் அறிவித்தனர்.

இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு நீரவ் ஷா. கலை தோட்டா தரணி என பக்காவாக டெக்னிக்கல் டீம் அமைந்துவிடவே ரசிகர்களின் பல்ஸ் பூஜை முடிந்ததுமே எகிறத் தொடங்கிவிட்டது. அத்துடன் படத்தின் வில்லன் என எஸ்.ஜே.சூர்யா, அஜய் தேவ்கன், அரவிந்த் சுவாமி ஆகியோர்களின் பெயர்கள் அடுத்தடுத்து அடிபட்டு கடைசியில் தெலுங்கு ‘ஆர்.எக்ஸ் 100’ படப் புகழ் ஹீரோ கார்த்திகேயா ஒப்பந்தமானதும் வாவ் பொக்கேவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பரிமாறிக் கொண்டார்கள்.  

டிசம்பர் 13, 2019 அன்று படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அதிரடி ஆக்‌ஷன் எபிசோடுடன் ‘வலிமை’ டேக் ஆஃப் ஆனது. இந்த ஆக்‌ஷன் எபிசோட் முடிந்ததும் சென்னை ஷெட்யூல் ஆரம்பமாகும் என்ற நிலையில் எதிர்பாராதவிதமாக பைக் விபத்தில் அஜித் சிக்கினார். இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

ஆனால், விபத்தையே ரஸ்க் ஆக சாப்பிடும் அஜித், இம்முறையும் சிகிச்சைக்குப் பின் எனர்ஜி குறையாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். திட்டமிட்டபடி ஆக்‌ஷன் ப்ளாக் முடிந்ததும் சென்னை ஷெட்யூல் தொடங்கியது.எல்லாம் நல்லபடியாகச் சென்ற நேரத்தில் கோவிட் 19 தன் ருத்ரதாண்டவத்தைத் தொடங்கியது. இதனால் ‘வலிமை’ ஷெட்யூல்ஸ் அனைத்தும் பாதிக்கப்பட்டன. சுவிட்சர்லாந்தில் கார் மற்றும் மோட்டார் பந்தயத்தை உள்ளடக்கிய சில காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டிருந்ததும், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ பகுதிகளில் எடுக்கப்படவிருந்த காட்சிகளும் இதனால் பாதிக்கப்பட்டன.

வெளிநாட்டில் படப்பிடிப்பு சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்பட்டபோது இயக்குநர் எச்.வினோத் கலங்கவில்லை; அஜித்தும் அவரை கலங்க விடவில்லை. ‘உங்களால் முடியும்...’ என அஜித் கொடுத்த உற்சாகத்தில் தன் குழுவினருடன் அமர்ந்து இங்கேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்தும் விதமாக கதையின் பரபரப்பு குறையாமல் எச்.வினோத் மாற்றினார். இவை எல்லாம் ஒரு பக்கம் நடக்க...

கொரோனா பொது ஊரடங்கு சமயத்தில் பல படங்களின் அறிவிப்புகளும் புரொமோஷன்ஸும் வெளியாகின.இதேபோல் ‘வலிமை’ புரொமோஷனும் நடைபெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமையவே, ‘வலிமை’ அப்டேட் கேட்டு படக்குழுவினரின் கதவை முதலில் தட்டினர். தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள்... என எட்டு திசைகளிலும் கதவைத் தட்டி ஒட்டுமொத்த திரையுலகையே வியக்க வைத்தனர்.  

இதற்கிடையில்தான் முன்னறி விப்பு எதுமின்றி திடீரென ஜூலை 12ம் தேதி காலையில் அறிவிக்கப்பட்டு மாலையில் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்ததுள்ளது படக்குழு. அத்துடன் அஜித்துடன் யாரெல்லாம் நடித்துள்ளார்கள், படப்பிடிப்பின் நிலவரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டு ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளனர்.அவ்வளவுதான்.

ஐந்தே நிமிடங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட மோஷன் போஸ்டர் என்ற சாதனையில் தொடங்கி அதிக லைக்ஸ், அதிக பகிரல் என நொடிக்கு நொடி வைரல் மோடில் பரபரக்கிறது ‘வலிமை’.இன்னும் சில பேட்ச் ஒர்க்ஸ் மட்டுமே இருப்பதாகவும், அவையும் ஜரூராக ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.வா தல... வந்து தெறிக்க விடு..!

ஷாலினி நியூட்டன்