கவிதை எழுதும் ஒன்பது வயது சிறுவன்!



நான் காலத்தை நிறுத்தி வைத்துக்
கடலில் போட்டேன்
காலம் கடலில்
கண்ணாடி போல மின்னியது
நான் காலத்தை முழுங்கி
நானே காலமாய் மாறினேன்
நான் காலத்தை முழுங்கியதும்
ஒரு மீன் போல் குதித்தேன்
காலம் என்னைக் கட்டிப்பிடித்தது
காலம் எனக்கு வானத்தில்
வீடு கட்டியது
நான் காலத்தைப் பார்த்து வரைந்து
காற்றில் மாட்டினேன்...

- கீச் மழலைக் குரலில் நிறுத்தி நிதானமாகக் கவிதை ஒன்றைச் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் ஒன்பது வயதே நிரம்பிய மகிழ் ஆதன்.கடந்த ஏப்ரல் மாதம், ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ என்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் இந்தச் சிறார் கவிஞர்.

சிறார் கவிதை நூல் என்பது அநேகமாக இதுவே முதல்முறை எனலாம். இத்தனை சிறுவயதில் கவிதை எப்படி என்கிற வியப்பு மேலோங்க, மகிழ் ஆதனைப் பார்க்கக் கிளம்பினோம்.

கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் இருக்கிறது மகிழ் ஆதனின் வீடு. தந்தை ஆசைத்தம்பி கவிஞர் ப்ளஸ் பத்திரிகையாளர். தாய் சிந்து ஆசிரியப் பயிற்சி முடித்தவர். தம்பி நீரனுடன் விளையாடிக் கொண்டே டிஸ்கவரி சேனலில் கிச்சன் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார் மகிழ் ஆதன்.

‘‘இந்த சின்ன வயசுல மகிழுக்கு எப்படி கவிதை வருதுனு தெரியல. அவன் நான்கு வயசுல இருந்தே கவிதை சொல்லத் தொடங்கிட்டான். அப்ப அவனுக்கு எழுதவும் தெரியாது. ஆரம்பத்துல கேட்டுக்கிட்டு மட்டுமே இருந்தோம். அப்புறம், ஒரு நோட்டுல எழுதி வைக்க ஆரம்பிச்சோம். இப்ப அவனே எழுத்துப் பிழையுடன் எழுத ஆரம்பிச்சிருக்கான்…’’ என ஆச்சரியம் விரிய பேசத் தொடங்கினார் தாய் சிந்து.

‘‘முன்னாடி என்னுடன் சர்ச்சுக்கு வருவான். அப்புறம், நேரமில்லாததால போகமுடியல. அதனால அவன், ‘இப்பெல்லாம் அம்மா ஏன் ஏசப்பா கோயிலுக்கு அழைச்சிட்டுப் போகமாட்டேங்கிறாங்க’னு அவங்க அப்பாகிட்ட கேட்டிருக்கான். அதுக்கு அவர், ‘ஏன், உனக்கு ஏசப்பா பிடிக்குமா’னு கேட்டிருக்கார். ‘ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னவன், ‘ஆனா, ஏசப்பா நிஜம் அல்ல. வரைஞ்சது’னு சொல்லியிருக்கான். அவர், ‘ஏசப்பா உங்கிட்ட பேசியிருக்காரா’னு கேட்டிருக்கார். ‘இல்ல’னு சொன்னவன், கொஞ்சம் இடைவெளிவிட்டு, ‘நம்மளும் வரைஞ்சதுதான். நம்மள யாரோ வரைஞ்சு இங்க அனுப்பியிருக்காங்க’னு சொல்லியிருக்கான்!

அவருக்கு ஆச்சரியமா இருந்திருக்கு. ‘யாருடா நம்மள வரைஞ்சு அனுப்பியிருக்காங்க’னு கேட்டிருக்கார்.‘ஸ்பைடர்மேன்’னு சொல்லியிருக்கான். அவனுக்கு ஸ்பைடர்மேன்னா ரொம்பப் பிடிக்கும். ‘நீ சொல்றது எல்லாம் கவிதை மாதிரி இருக்குடா’னு அவர் சொல்லியிருக்கார்.அதுதான் அவனுக்குள்ள விதையா முளைச்சிருக்கும்னு நினைக்கிறேன். அதன்பிறகு, கவிதைகள் நிறைய சொல்ல ஆரம்பிச்சிட்டான். கொரோனாவுக்கு முன்னாடி விடுமுறை நாட்கள்ல வெளியே போவோம். அதை கவனிப்பான். இப்ப மாடிக்குப் போய் வானம், நட்சத்திரம்னு பார்க்கிறான். அதை வச்சு வார்த்தைகளைக் கோர்த்து கவிதையா வெளிப்படுத்துறான்.

வார்த்தைகளை வெளிப்படுத்துறதில் ஏதோ திறமை அவனுக்குள்ள இருக்கு. சொற்சேர்க்கைகள் நல்லா வருது. சின்னக் குழந்தைகள் மொழியை கத்துக்கிறப்ப அழகழகா சொற்சேர்க்கைகள் இருக்கும். மகிழின் பெரியப்பா பையனுக்கு சாயங்காலம்னு சொல்லத் தெரியாது. ‘வெயில் காய்ஞ்சுபோச்சு’னு சொல்வான்.அதுவொரு அழகான வெளிப்படுத்தும் தன்மை. இதுமாதிரி நிறைய குழந்தைகளைக் கவனிச்சிருக்கேன். ஆனா, நம்ம பெற்றோர் ரசிக்கிறது குறைவு. நாங்க அதை மகிழ் ஆதன்கிட்ட கவனிச்சு கவிதை மாதிரி நல்லாயிருக்குனு சொன்னது அவனுக்குள்ள ஓர் உந்துதலை ஏற்படுத்தியிருக்கு.

ஆரம்ப காலத்துல என்கிட்டதான் நிறைய கவிதைகள் சொன்னான். இப்ப அவங்க அப்பா வீட்டுல இருந்து வேலை பார்க்கிறதால அவர்கிட்ட அதிகமா சொல்றான்...’’ என்கிற சிந்துவை புன்னகையுடன் பார்க்கிறார் மகிழ் ஆதன்.‘‘அவனுக்கு புதுப்புது வார்த்தைகள் எல்லாம் எப்படி தெரிய வருதுனும் தெரியல. ஒருநாள் மாடியில் துணி காயப்போடும்போது ‘ஈரத்தைப் பார்த்தால் என் கனவு என்னவாகும்’னு சொன்னவன், சட்டென ‘தேவகதை ஆகும்’னு சொன்னான்.அந்தத் ‘தேவகதை’ என்கிற வார்த்தையை எங்க கத்துக்கிட்டான்னு தெரியாது. தேவதையைத்தான் தேவகதைனு சொல்லியிருக்கான்னு பின்னாடி தெரிஞ்சது.

நாம் பேசுறது, அவன் டிவியில் பார்க்குறது எல்லாம் கலந்த கலவையா புது வார்த்தைகள் வருதுனு நான் நினைக்கிறேன். முன்னாடி ‘சுட்டி டிவி’யில் டோராவின் பயணங்கள், ஜாக்கி சான், வருத்தப்படாத கரடி சங்கம்னு பார்ப்பான். அதுல குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரி சில வார்த்தைகள் வரும். அதிலிருந்து வார்த்தைகள் சேகரிப்பான்னு எனக்கு தோணுது.
அடுத்து, அவங்க அப்பாகிட்ட நிறைய கதைகள் கேட்பான். அதிலிருந்தும் வார்த்தைகளை உள்வாங்குவான். பிறகு எல்லாத்தையும் சேர்த்து ஒரு கவிதையாக்குவான்னு நினைக்கிறேன்.

அவன் எப்பவும் கவிதைகளை கஷ்டப்பட்டு சொன்னது கிடையாது. விளையாடிட்டு இருப்பான். நான் சமையறையில் வேலையா இருப்பேன். அப்ப வந்து கவிதை சொல்வான். அதை எழுதி வைப்பேன். அப்புறம், ‘நல்லாயிருக்கா’னு கேட்பான். ‘நல்லாயிருக்கு’னு சொன்னா ‘ஓகே’னு விளையாடப் போயிடுவான்.இல்லைனா, அவனே நாலஞ்சு வரிகள் சொல்லிச் சொல்லி பார்த்து, ‘இதுல எது செட்டாகுது’னு கேட்பான். அவனுக்கு பிடிச்சிருந்ததை எழுதி வைப்பேன். ஆனா, எந்தச் சூழ்நிலையிலும் அவனுக்கு நாங்க அழுத்தம் கொடுத்ததில்ல. அவனுக்கா தோன்றப்ப சொல்லும்போது மட்டுமே நான் எழுதி வைக்கிறேன்.

படிப்பிலும் அப்படிதான். அழுத்தம் கொடுக்கிறதில்ல. இப்ப மாடம்பாக்கம் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கிறான். அவன் இஷ்டத்துக்கு அவனை விடுறோம். அடிப்படையா உள்ள விஷயங்களை மட்டும் அவன் புரிஞ்சுக்கும்படி செய்றேன்.அவன் ஆறு வயசுக்குள்ளயே 200க்கும் மேற்பட்ட கவிதைகள் சொல்லியிருந்தான். ஆனாலும் புத்தகமாகப் போட எங்களுக்கு ரொம்பத் தயக்கமா இருந்துச்சு.

ஏன்னா, அவனுடைய சில கவிதைகளை எடுத்து அவங்க அப்பா சில நெருங்கிய நண்பர்கள்கிட்ட பகிர்ந்திருக்கார். அவங்க, ‘மழலை மேதை என்பது பெரிய சுமை’னு சொல்லியிருக்காங்க. ஓவியம், நடனம்னா பிரச்னையில்ல. இசை, கவிதைனா இந்த வயசுக்கு அதிகம்தான்னு ஃபீல் பண்ணியிருக்காங்க. இதனால, ஆரம்பத்துல நாங்க ரொம்ப பயந்தோம்.
நாங்க அவனுக்கு பயிற்சி கொடுக்குறோம்னு நினைக்கிறாங்க. கவிதை எழுத பயிற்சி கொடுக்க முடியாது. சின்ன வயசுல அவனுக்குச் சொல்லிக் கொடுத்த ரைம்ஸ் கூட ரொம்ப கம்மிதான். ஆனா, அந்த ரைம்ஸ் மாதிரி ஒரு கவிதை கூட அவன் எழுதல.

பிறகு அவங்க அப்பாவின் நண்பர் ஒருவர், ‘இளவயசுல நல்ல விஷயம் நடந்தா அவனுக்கு ரொம்ப ஊக்கமா இருக்கும். பெரியவனானதும் சின்ன வயசுலயே புத்தகம் வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். ஆனா, வராமல் தடுத்திட்டாங்க’னு அவன் நினைச்சிடக் கூடாதுனார். அதனால, ரொம்ப யோசிச்சு புத்தகமா கொண்டு வந்தோம். சுமை ஏறாமல் பார்த்துக்கிறோம். அவன்கிட்ட, ‘உனக்கு சந்தோஷமா இருந்தா கவிதை எழுது.

இல்லனா விட்டுடு’னு நானும் அவன் அப்பாவும் அடிக்கடி சொல்றோம்...’’ என நெகிழ்கிறார் சிந்து. ‘‘இந்தாண்டுதான் மகிழ் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கலாம்னு முடிவெடுத்தோம். இதை ‘வானம் பதிப்பக’த்தின் மணிகண்டன்கிட்ட கேட்டோம். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. முதல்ல நாங்க  300 கவிதைகள்ல இருந்து 125 கவிதைகளை மணிகண்டனுக்கு அனுப்பி வைச்சோம். அவர் 75 கவிதைகள் தேர்ந்தெடுத்தார். அதில் நாங்க சில கவிதைகளை இதற்குப் பதில் இதை போடலாம்னு சொன்னோம். அப்படி வந்ததுதான் இந்தப் புத்தகம்.

இதற்கு எழுத்தாளர் பா.வெங்கடேசன் பின்னட்டைக்கான வாசகம் எழுதித் தந்தார். புத்தகம் வந்தபிறகு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்னன், கவிஞர் சுகுமாரன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, உள்ளிட்ட பலருக்கும் அனுப்பினோம். எல்லோரும் படிச்சிட்டு சிலாகிச்சு பாராட்டினாங்க.

ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.இப்ப அவனே பிழைகளுடன் கவிதை எழுத ஆரம்பிச்சிருக்கான். அவங்க அப்பா திருத்தி மட்டும் கொடுக்குறார். இந்த ரெண்டு மாசத்துல 75 கவிதைகள் வரை எழுதியிருக்கான். எல்லாமே பெரிய கவிதைகள். சீக்கிரம் இதையும் நூலாக்கணும்…’’ என உற்சாகமாக சிந்து முடிக்க, மகிழ் ஆதனிடம் பேசினோம்.

‘‘எனக்கு மழை, வானம், நட்சத்திரம் பார்க்கிறப்ப எப்போதாவது கவிதை சொல்லத் தோணும். ஒரு மனநிலை வரும். அப்ப அம்மாகிட்ட போய் சொல்வேன். கவிதை தவிர ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். ஷட்டில்காக், கிரிக்கெட், ஃபுட்பால் எல்லாம் விளையாடு வேன்.ஆனா, இங்க விளையாடுறது பிடிக்காது. ஏன்னா, சிக்சர் அடிக்க முடியாது. கார்ல அடிச்சிட்டா திட்டுவாங்க. அதனால, ஃபுட்பால் விளையாடு வேன். எனக்கு மரங்கொத்தி, கொண்டலாத்தி, மீன்கொத்தி பறவைகள் எல்லாம் பிடிக்கும். பெரியவனாகி விஞ்ஞானியாகவும், சமையற் கலைஞராகவும் ஆகணும். கார், லாரி எல்லாம் ஓட்டணும்…’’ என மழலைக்குரலில் மகிழ் ஆதன் சொல்ல சிரிப்பால் வீடு நிரம்புகிறது.  

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்