Eligible குணச்சித்திர நடிகை!



எனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் எப்படி பெஸ்ட்டாக நடிக்கலாம் என்று நினைக்கும் ஆள் நான்...’’ தெளிவாகச் சொல்கிறார் நடிகை லிஸ்ஸி ஆண்டனி. தமிழ்த் திரையுலகின் மோஸ்ட் வாண்டட் குணச்சித்திர நடிகையாக இவர் உருவெடுத்து வருகிறார். இயக்குநர் ராமின் ‘தங்க மீன்கள்’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘மேதகு’ வரை தனது கதாபாத்திரத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்திருக்கும் லிஸ்ஸியின் திரைப்பயணம் சுவாரஸ்யமானது.

”ராம் சாரின் ‘தங்க மீன்கள்’ மூலமாகத்தான் திரைத்துறைக்கு வந்தேன். அந்த படம் வெளியாவதற்குள் சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. திரைத்துறையில் எனக்கு பெரிய அறிமுகமில்லை. சுயம்பு என்று சொல்லலாம். எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக கேரக்டரை தேர்ந்தெடுத்து சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அப்படித்தான் ‘தங்க மீன்கள்’, ‘குக்கூ’, ‘பரியேறும் பெருமாள்’,  ‘இஸ்பேட் ராஜா...’ படங்களில் தனித்துவம் காண்பித்தேன். இந்த வளர்ச்சி வருவதற்கு பத்து வருடங்களாகி இருக்கிறது...’’ புன்னகைக்கும் லிஸ்ஸிக்கு, கொரோனா முதல் லாக்டவுன் சமயத்திலிருந்து நல்ல நேரம் ஆரம்பித்ததாம். ‘‘‘விக்டிம்’ என்கிற ஆந்தாலஜி கதைத் தொகுப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தமம்’மில் நடித்திருக்கிறேன். முதல் லாக்டவுன் முடியும் சமயத்தில் கூப்பிட்டார்கள். அங்கு ஆரம்பித்து மடமடவென ‘ராங்கி’, ‘நெற்றிக்கண்’, ‘சாணிக் காயிதம்’, ‘ரைட்டர்’ படங்களில் நடித்து முடித்து, இப்போது ‘பொம்மை நாயகி’யில் நடித்து வருகிறேன்.

எல்லா படங்களிலும் ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாக இருந்தாலும், ‘சாணிக் காயிதம்’ படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறேன்...” என்கிற லிஸ்ஸி, சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுக்க காரணம் தனது நிதானம் மட்டுமே என்கிறார். ‘‘‘தங்க மீன்களி'ல் நடித்தபிறகு வந்த வாய்ப்புகள் பர்ஃபார்மன்ஸ் ஓரியண்டடாக இல்லை. எனவே தவிர்த்துவிட்டேன். ஒருவேளை வந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தால் இப்பொழுது நீங்கள் தேடி வந்து பேட்டி எடுக்கும் நிலையை அடைந்திருக்க மாட்டேன்.

இன்று என்னைத் தேடி படங்கள் வருகின்றன. இதை முக்கியமாக கருதுகிறேன்...” என்கிற லிஸ்ஸி, நடிப்புத் துறைக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்திருக்கிறார்.  

‘‘ராம் சார்தான் ஓர் இடத்தில் என்னைப் பார்த்து, ‘இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பீங்க...’ என்று சொல்லி நடிக்க அழைத்து வந்தார்.

இல்லையென்றால் நான் பார்த்த ஷிப்பிங் வேலையில் இருந்திருப்பேன். இன்று ஓரளவு நடிகையாக பெயர் எடுக்க என் குடும்ப பின்னணியும் ஒரு காரணம். வீட்டில் எல்லோருமே பாடுவார்கள். ஏதேனும் ஓர் இசைக் கருவியை வாசிப்பார்கள்.

அடிப்படையில் நானும் கிளாசிக்கல் டான்சர்தான். இப்படி ஏதோ ஒரு வகையில் கலை எனக்குள் இருந்திருக்கிறது. படித்து முடித்ததும் வேலைக்கு செல்வதே நோக்கமாக இருந்தது. ‘தங்க மீன்கள்’ என்னை நடிகையாக்கியது.

இப்போது நடிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். அதோடு வீட்டில் பையனுடனும் நேரம் செலவிடுகிறேன்...’’ என்கிற லிஸ்ஸி, ‘தரமணி’ தனக்கு முக்கியமான படம் என்கிறார்.
‘‘என்னை மீறி ஒரு விஷயம் ‘தரமணி’யில் செய்தேன். அது சேலஞ்சிங்காகவும் இருந்தது. டப்பிங் சமயத்தில் ஸ்கிரீனில் என்னைப் பார்த்து எனக்கே பயம் வந்தது!’’ என்கிறவர், திரைப்
படங்கள் மட்டுமின்றி, குறும்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பு தவிர புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்ட லிஸ்ஸி வரும் காலத்தில் எழுத்தாளராக வேண்டும்... இயக்குநராக வேண்டும்... என்ற கனவுடன் இருக்கிறார்.  
                                       
அன்னம் அரசு