ரத்த மகுடம் -156



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றான் சாளுக்கிய ஒற்றன்.அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் பார்வையால் அலசினார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர். கணங்கள் உருண்டோடின. அமைதி யின் ஆட்சி ஒற்றனின் மென்னியை அழுத்துவதாக இருந்தது. பூமி பிளந்து தன்னை அப்படியே உள்வாங்கிவிடாதா என ஏங்கினான்.‘‘வினா ஒன்றைத் தொடுத்தேன்...’’ விக்கிரமாதித்தரின் குரல் நிதானமாக ஒலித்தது.‘‘ஆம் மன்னா...’’ உதடுகளைப் பிரித்து சிரமப்பட்டு பதில் சொன்னான் ஒற்றன்.
‘‘அதற்கு என்ன விடை..?’’ஒற்றன் தன் தலையைக் குனிந்து கொண்டான்.‘‘இதுதான் பதிலா..?’’ விக்கிரமாதித்த ரின் குரலில் அளவுக்கு மீறி அமைதி தென்பட்டது.

அந்த அமைதிதான் தன்னை பலியிடுவதற்கான ஆயுதம் என்பது அந்த ஒற்றனுக்கு தெளிவாகப் புரிந்தது. தன் இறப்பை எதிர்நோக்கி குனிந்த தலையை நிமிராமல் நின்றான்.
‘‘கங்க நாடு நம் சாளுக்கிய தேசத்துக்கு உட்பட்ட சிற்றரசுதானே..?’’இதற்கும் மவுனமாக நிற்பது சரியல்ல என ஒற்றனுக்குப் புரிந்தது. நிமிர்ந்தான். ‘‘ஆம் மன்னா...’’
‘‘கங்க நாட்டில் எந்த விசேஷ வைபவங்கள் நடைபெற்றாலும் முதல் அழைப்பு சாளுக்கிய மன்னருக்குத்தான் விடுக்கப்படும் அல்லவா..?’’வெட்டப்படவிருக்கும் தன் சிரசை மட்டும் ஒற்றன் அசைத்தான்.

‘‘கங்க மன்னரின் வீட்டில் எப்பொழுது எந்த வைபவம் நடைபெற்றாலும் முதலில் ஜோதிடரை அழைத்து திதி, நட்சத்திரம் பார்த்து முகூர்த்தத்தை குறிக்க மாட்டார்கள். மாறாக, சாளுக்கிய மன்னரை நேரில் சந்தித்து அவரால் எப்பொழுது தங்கள் நாட்டுக்கு வர முடியும் என்று கேட்டு அறிந்து அவர் வருகை புரியும் காலத்தில் இருக்கும் முகூர்த்த நாளில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவார்கள். சாளுக்கிய மன்னர் தலைமையேற்காத எந்த விசேஷமும் கங்க மன்னர் குடும்பத்தில் நடைபெற்றதில்லை... இது உண்மைதானே..?’’
‘‘...’’‘‘உன்னைத்தான் கேட்டேன்...’’ விக்கிரமாதித்தர் சொற்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

‘‘உ...ண்...மைதான்  ம...ன்...னா...’’‘‘இல்லை...’’ கண்களைச் சிமிட்டினார் சாளுக்கிய மன்னர். ‘‘நீ பொய் சொல்கிறாய்! சாளுக்கிய மன்னரான நான் பங்கேற்காத விழாக்களும் கங்க மன்னன் பூவிக்கிரமனின் அரண்மனையில் நடைபெற்றுள்ளது...’’ ஒற்றனை நெருங்கிய விக்கிரமாதித்தரின் கண்கள் அனலைக் கக்கின. ‘‘ஆம்... விழாக்கள்தான். விழா அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட விழா! பூவிக்கிரமனுக்கு மகள் பிறந்திருக்கிறாள்... அவளுக்கு ரங்கபதாகை என கங்க மன்னர் பெயர் சூட்டியிருக்கிறார்...

வளர்த்து ஆளாக்கி இப்பொழுது என் எதிரியான பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனுக்கு மருமகளாக்கப் போகிறார்! இவ்வளவும் என் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர் எனக்கே தெரியாமல் செய்திருக்கிறார்! இத்தனை வருடங்களாக இது எதுவும் அறியாமல் பேரரசர் என்ற பட்டத்துடன் நான் வாழ்ந்திருக்கிறேன்... கங்க நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு சாளுக்கிய ஒற்றர் படை இயங்கி வந்திருக்கிறது... அப்படித்தானே..?’’
‘‘...’’

‘‘அப்படித்தான்! ‘கங்க மன்னர் பூவிக்கிரமர் தன் மகள் ரங்கபதாகையை பல்லவ இளவரசரான இராஜசிம்மனுக்கு மணமுடிக்கப் போகிறார்’ என சில கணங்களுக்கு முன் நீ சொன்னதற்கு அர்த்தம் இதுதான்!

இதன் வழியாக சாளுக்கிய தேசத்தை ஆட்சி செய்யத் தெரியாத முட்டாள் என என்னை இகழ்ந்திருக்கிறாய்...’’சட்டென விக்கிரமாதித்தரின் பாதங்களில் விழுந்து கதறினான் ஒற்றன். ‘‘சாளுக்கிய தேசத்தின் மீது ஆணையாக கனவிலும் அப்படி நான் கருதவில்லை மன்னா... நினைக்கவும் மாட்டேன்...’’விக்கிரமாதித்தரின் முகம் இறுகியது. ‘‘எழுந்திரு...’’ஒற்றன் எழுந்து நின்றான். ஆனாலும் தன் கால்கள் நடுங்குவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.‘‘ரங்கபதாகை யார்..?’’
‘‘...’’
சாளுக்கிய மன்னரின் வதனத்தில் வெறுப்பு தெறித்தது. ‘‘இதைக் கூட அறிந்துகொள்ளாமல் ஒற்றனாக இருக்கிறாய்...’’ இமைகளை மூடித் திறந்தார். ‘‘என் வினாவுக்கான விடை யாரிடம் இருக்கிறது..?’’இம்முறையும் ஒற்றன் மவுனமே சாதித்தான். ஒற்றனாக இருப்பதற்கே தனக்கு தகுதியில்லை என்பது அக்கணத்தில் அவனுக்குப் புரிந்தது.

தன் சிரசை, தானே சீவிக்கொண்டு அதே இடத்தில் இறந்துவிடலாமா என யோசித்தான்.சாளுக்கிய மன்னர் தன் கையை உயர்த்தி ஏதோ சொல்ல முற்பட்டார்.சட்டென ‘‘என்னிடம் சில விவரங்கள் இருக்கின்றன மன்னா...’’ என்ற குரல் அந்த அறையில் ஓங்கி ஒலித்தது.குரல் வந்த திசையை நோக்கி தன் விழிகளை விக்கிரமாதித்தர் திருப்பினார்.அறைக் கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘அந்த விவரங்கள் ஒருவேளை தங்கள் வினாவுக்கான விடைகளாக இருக்கலாம் என்பதால்தான் தங்கள் அனுமதிக்காகக் காத்திராமல் அறைக்கதவைத் திறந்துகொண்டு வந்தேன்... இதற்காக மன்னர் என்னை மன்னிக்க வேண்டும்...’’ விக்கிரமாதித்தரை வணங்கினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். சாளுக்கிய மன்னரின் நயனங்கள் போர் அமைச்சரின் கண்களுடன் உறவாடின. ஓரிரு கணங்களுக்குப் பின் அறிந்துகொண்டதற்கு அறிகுறியாக தன் தலையை அசைத்த மன்னர், ஒற்றனைப் பார்த்தார்.செய்தி புரிந்தது. மன்னரையும் போர் அமைச்சரையும் வணங்கிவிட்டு ஒற்றன் விடைபெற்றான்.வெளியே காவலுக்கு நின்றிருந்த வீரன், ஒற்றன் வெளியேறியதும் ஓசை எழுப்பாமல் கதவை மூடினான்.

ஸ்ரீராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர். ‘‘என்ன விவரங்கள்..?’’
‘‘ரங்கபதாகை யாருடைய மகள் என்ற விவரம்...’’

‘‘ம்...’’‘‘ரங்கபதாகை இப்போது கங்க அரண்மனையில்தான் இருக்கிறாள்... ஆனால், அவள் பூவிக்கிரமனின் வாரிசு அல்ல... உறவினர்...’’
‘‘ம்...’’‘‘ஆனால், ரங்கபதாகை இளவரசிதான்...’’
‘‘எந்த நாட்டு இளவரசி..?’’
ஸ்ரீராமபுண்ய வல்லபர் தயங்கினார்.

‘‘சொல்லுங்கள்...’’
சொன்னார் சாளுக்கிய போர் அமைச்சர்.
அதிர்ந்தார் சாளுக்கிய மன்னர். எதை எதிர்பார்த்தாலும் இதை மட்டும் விக்கிரமாதித்தர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகம் காட்டியது. ‘‘என்ன... அவர் மகளா ரங்க பதாகை..?’’
‘‘ஆம் மன்னா... அவரது மகளேதான்..! கூடவே இன்னொரு விஷயம்...’’‘‘என்ன..?’’ ‘‘ரங்க பதாகையும் சிவகாமியும் இரட்டைப் பிறவிகள்!’’

அடுத்த மூன்று நாட்கள் இடைவிடாமல் பயணம் செய்த பிறகு கரிகாலன் மேற்கு மலைத் தொடர் காட்டு முகப்பை அடைந்து அங்கு தங்கும்படி படைகளுக்கு உத்தரவிட்டான்.
அடுத்த இரண்டு நாட்களில் கோட்டத் தலைவர்கள் ஒவ்வொருவராக சின்னஞ்சிறு படைகளுடன் வந்து சேர்ந்தார்கள். பல்லவர் படை பெருகிக் கொண்டிருந்தது.
கரிகாலன் சொற்படி உபதளபதிகள் அவற்றை எப்படி எப்படித் தங்கள் பெரும் படையுடன் இணைக்க வேண்டுமோ அப்படி இணைத்தனர்.

மேற்கு மலைத் தொடரின் அந்த அடிவாரம் படைகளால் நிரம்பியதால் அதன் சிகரங்கள் பழைய பல்லவர்களின் கிரீடம் போலக் காட்சியளித்தன.
பாசறையில் இருந்த கரிகாலனின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் பூத்தன. ‘‘கரிகாலரே...’’
அழைப்பைக் கேட்டு வாயிலை நோக்கினான்.
புரவிப் படை உபதளபதி வல்லபன் அங்கு நின்றிருந்தான்.

‘‘வா வல்லபா... என்ன விஷயம்..?’’
‘‘காஞ்சியில் சிறு படைதான் இருக்கிறதாம்... இப்பொழுதுதான் ஒற்றர்கள் அனுப்பிய தகவல் கிடைத்தது... புரவிப் படை, காலாட்படை இரண்டுமாகச் சேர்ந்து பத்தாயிரத்துக்குள்தான் காஞ்சிக்கு உள்ளும் புறத்திலும் இருக்கிறதாம்...’’
‘‘எஞ்சிய சாளுக்கியப் படைகள் என்னவாகின..?’’
‘‘சாளுக்கிய மன்னர் அவற்றை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாராம்...’’
கரிகாலனின் கண்களில் சிந்தனை படர்ந்தது.

‘‘இப்பொழுது காஞ்சியை நாம் தாக்கினால் என்ன..?’’
‘‘வேண்டாம் வல்லபா...’’
‘‘ஏன் கரிகாலரே..?’’‘‘காஞ்சியைத் தாக்க நாம் சாலைகளில் செல்லவேண்டும். அப்படிச் சென்றால் நம் படைபலம் சாளுக்கியர்களுக்கு தெரிந்து விடும். தவிர காஞ்சிக்கு நாம் செல்வதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரும் தடுக்க மாட்டார்.

காஞ்சியின் சிற்பங்களை முன்னிட்டு நாம் அதை தாக்கமாட்டோம் என்பதை அவர் நன்றாகவே அறிவார். தவிர காஞ்சியில் இருந்து ஒதுங்கி தென்திசைச் சாலையில் நாம் சென்றால் வழிநெடுக உள்ள சாளுக்கிய ஒற்றர்கள் அவ்வப்பொழுது நமது முன்னேற்றத்தை விக்கிரமாதித்த மன்னருக்கு அறிவிப்பார்கள்.

நமது படைபலத்தை, வரும் வழியை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணரும் சாளுக்கிய மன்னர் நம்மை வளைக்கவும் முறிக்கவும் வலை விரிப்பார். எப்படி விரிப்பார் என்பது நமக்குத் தெரியாது. எனவே, சுலபமாக நம்மை ஒற்றர்கள் அணுகமுடியாத, அணுகினாலும் முழுதும் நம்மைப்பற்றி ஏதும் அறியமுடியாத வனங்களின் பாதுகாப்புள்ள மலைவழியே நாம் செல்வதே நல்லது...’’சொன்ன கரிகாலனை வியப்புடன் பார்த்தான் வல்லபன்.

‘‘என்ன பார்க்கிறாய் வல்லபா..?’’‘‘தங்களைப் பார்க்கும்போது எப்பொழுதும் கல்லணையை அமைத்த சங்ககால சோழ மாமன்னர் கரிகால பெருவளத்தாரைப் பார்ப்பது போலவே இருக்கும். ஏன் அப்படித் தோன்றுகிறது என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால், அப்படி தோன்றுவது சரிதான் என்பதை இப்படையெடுப்பில் உணர்த்துகிறீர்கள்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் சோழர்கள் இன்று பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருந்தாலும் அவர்களது வீரமும் விவேகமும் ராஜ தந்திரமும் அப்படியேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறீர்கள்...’’ மனமார வணங்கி விடைபெற்ற வல்லபனை வாஞ்சையுடன் பார்த்தான் கரிகாலன்.

அடுத்த இரண்டு நாட்களும் அவன் திட்டமிட்டபடியே மலை வழியே படைகள் நகர்ந்தன.நான்காம் நாள் நள்ளிரவு படைகள் ஓய்வெடுக்க அனுமதித்த கரிகாலன், தன் தந்தையின் கூடாரத்தில் மந்திராலோசனையைக் கூட்டினான்.

‘‘அடுத்த மூன்று நாட்களில் நாம் மலை வழியில் இருந்து சம நிலத்துக்கு இறங்கும்படியாக இருக்கும்... நம் மன்னர் பரமேஸ்வரவர்மர் ஆந்திராவில் இருந்து படைகளைத் திரட்டிக்கொண்டு வனத்துக்கு அந்தப் பக்கமாக வருகிறார்... நம் இரு படைகளும் மலையில் இருந்து இறங்கும்போது இரண்டறக் கலக்கும்...’’ என்றபடி தன் இடுப்பில் இருந்த கச்சையை எடுத்து விரித்தான்.

குறுக்கும் நெடுக்குமாக, மேலும் கீழுமாக அக்கச்சையில் இழுக்கப்பட்டிருந்த கோடுகளை அனைவரும் கவனித்தார்கள்.சோழ மன்னர் உதட்டைச் சுழித்தார். ‘‘உறையூர் காவிரிக்கு தெற்கில் இருக்கிறது... நீ மலையில் படைகளை இறக்கும் பாதை அதற்கு நேர் எதிரில் இருக்கிறது... அப்படியானால் எதற்காக காவிரியை மீண்டும் நாம் தாண்ட வேண்டும்..?’’‘‘கரிகாலன் கச்சையின் இன்னோர் இடத்தை விரலால் சுட்டிக் காட்டினான். ‘‘இந்த இடத்தில்தான் நாம் சாளுக்கியப் படைகளை சந்திக்கப் போகிறோம்...’’‘‘இது உறையூரில் இருந்து ஒரு காதத்துக்கு மேல் இருக்கிறது...’’ என்றார் சோழ மன்னர்.

‘‘சரியாக ஒன்றே கால் காதம்...’’ என்றான் கரிகாலன்.‘‘இங்கு சந்திக்க வேண்டிய அவசியம்..?’’‘‘இங்குதான் பெரிய சமவெளி இருக்கிறது. சாளுக்கியர்களுடன் மோத வசதியான இடம் இதுதான். தோப்புகள் தொலைவில் இருப்பதால் தேவையான வியூகத்தை நாம் வகுக்கலாம்...’’‘‘இது தென் நெடுஞ்சாலையில் இருந்து ஒதுங்கியிருக்கிறதல்லவா..?’’‘‘ஆம் தந்தையே...

நம் ஆளுகைக்கு உட்பட்ட சிறு கிராமம் ஒன்றும் இதன் அருகில் இருக்கிறது...’’‘‘கிராமத்தின் பெயர்..?’’ சோழ மன்னர் கேட்டார்.கரிகாலன் நிதானமாகச் சொன்னான். ‘‘இந்தக் கிராமத்தை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், இனி தெரியாமல் இருக்காது. வரலாற்றில் இடம்பிடித்து சரித்திரத்தில் பதியப் போகிறது...’’நிறுத்திய கரிகாலன் எல்லோரையும் பார்த்துவிட்டு சொன்னான்.‘‘இந்த கிராமத்தின் பெயர், பெருவளநல்லூர்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்