டோக்கியோ செல்லும் தமிழக தடகள வீரர்கள்!



சுதந்திரத்திற்குப் பிறகு தடகளத்தில் ஒரு பதக்கம் கூட இந்தியா வாங்கவில்லை. ஆனால், அந்தக் கனவு வரும் 23ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிறைவேறும் என நம்பிக்கை விதைக்கிறார்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியிருக்கும் தடகள வீரர், வீராங்கனைகள்.

ஒலிம்பிக் தடகளத்திற்கு இந்தமுறை தமிழகத்தில் இருந்து ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகிய ஐவர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ஐந்து லட்சம் ரூபாய் அளித்து பாராட்டியிருந்தார். இதில், ஆரோக்கிய ராஜீவும், நாகநாதன் பாண்டியும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும்; ரேவதி, சுபா, தனலட்சுமி ஆகிய மூவரும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் கலப்புப் பிரிவிலும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆரோக்கிய ராஜீவ்

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர் ஆரோக்கிய ராஜீவ். ஆனால், அந்தமுறை தொடர் ஓட்டத்தில் பதக்கக் கனவு கைகூடவில்லை. பிறகு விடாமல் எடுத்த பயிற்சியால் இரண்டாவது முறையாக இந்த ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான ஆரோக்கிய ராஜீவின் குடும்பம் வறுமையான பின்னணி கொண்டது. அப்பா சௌந்தரராஜன்தான் அவருக்கு ரோல் மாடல்.

குடும்ப சூழலால் கல்லூரி படிக்கும்போதே ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் சிப்பாய் பணியில் சேர்ந்தார். அங்குதான் தன்னை மெருகேற்றிக்கொண்டார். 2014ல் தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நானூறு மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், 2017ல் இந்தியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் வென்றார். இதே ஆண்டு ஒன்றிய அரசு இவருக்கு அர்ஜுனா விருது கொடுத்து கவுரவித்தது.

2018ல் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், 400 மீட்டர் தொடர் ஓட்டம் கலப்புப் பிரிவில் தங்கமும் வென்றார்.
2019ல் தோஹாவில் நடந்த 400 மீட்டர் கலப்புப் பிரிவில் வெள்ளியைத் தட்டினார். அப்போதிலிருந்து 2021 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார் ஆரோக்கிய ராஜீவ்!

நாகநாதன் பாண்டி

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரியும் நாகநாதன் பாண்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கபுலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டுதான் சென்னை காவல்துறையில் சேர்ந்துள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் காவல்துறை சார்பில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார்.
கடந்த மார்ச்சில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 46.09 நொடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நாகநாதன் பாண்டி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். இப்போது இவருக்கு காவல்துறை அதிகாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனலட்சுமி சேகர்

கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டி நடந்தது. இதில் நூறு மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டி சந்த்தை பின்னுக்குத்தள்ளி தங்கப் பதக்கம் வென்றவர் தனலட்சுமி சேகர். பிறகு, 200 மீட்டர் ஓட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டினார்.

இந்த இரண்டும்தான் இப்போது அவரை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வைத்திருக்கிறது. முதலில் நானூறு மீட்டர் தொடர் ஓட்ட கலப்புப் பிரிவுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பூவம்மாதான் தகுதி பெற்றிருந்தார். அவருக்கு காயம் ஏற்பட தனலட்சுமிக்கு அடித்தது சான்ஸ்! திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். இதனால், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார். அவரின் அம்மா வயல்வெளிகளில் கூலி வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.

இதனை அறிந்த தனலட்சுமியின் பயிற்சியாளர் மணிகண்டன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததுடன் வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கான பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறார். கொரோனா நோய்த் தொற்று காலத்திலும், விடாமல் அதிகாலையே எழுந்து பயிற்சி எடுத்திருக்கிறார்.

சுபா வெங்கடேசன்

திருச்சி அருகே திருவெறும்பூரைச் சேர்ந்தவர் சுபா வெங்கடேசன். தேசிய அளவில் 20 பதக்கங்களையும், சர்வதேச அளவில் 3 பதக்கங்களையும் பெற்றவர். கடந்த மார்ச்சில் நடந்த தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவருக்கு பதிமூன்று வயதில் சென்னையிலிருக்கும் தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணைய விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது. அங்கே தன்னை நன்றாகச் செதுக்கியிருக்கிறார். இதற்கு அவரின் தாத்தாவே காரணம் என்கிறார். காவல்துறையில் பணியாற்றிய அவர் தாத்தா, விளையாட்டில் வளர நிறைய ஊக்கம் அளித்திருக்கிறார்.

பேராச்சி கண்ணன்