சிறுகதை - தென்றலே... பாட்டெழுது!
யாமினி குடை மிளகாய், வெண்ணெய், லெமன் கிராஸ் என்று எடுத்து வைத்துவிட்டு, தோட்டத்திற்குப் போனாள்.சின்னஞ்சிறு பூவாளியில் நீர் நிரப்பிக்கொண்டு தொட்டிச் செடிகளிடம் செல்ல, பார்வை இஞ்சிச் செடியிடம் போனது. ஊய் என்று கத்த வேண்டும் போலிருந்தது. வேர் பிடித்து முளைவிட்டிருந்தது இஞ்சிச் செடி. தாய்லாந்து இஞ்சி.
குழந்தை போல கவனித்து வந்ததற்குப் பலன், அவள் வீட்டிலும் வளர்ந்துவிட்டது.உள்ளே வந்தாள். பாஸ்கர் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். ‘ஓ டியர் இன்னிக்கு உங்களுக்கு சர்ப்ரைஸ், மெக்சிகன் ரைஸ் செய்யப் போகிறேன், மல்ட்டி குசைன் உங்களின் பிரத்யேக விருப்பம் அல்லவா?’செல்பேசி அழைத்தது. விஷால் பேசினான். “மேம்... ப்ரொகிராம் கோட் வேணும்... இன்னிக்கு நான் கொஞ்சம் சீக்கிரமா போகிறேன் ஆபீசுக்கு... அந்த கோவிந்த் சிங் கம்பெனி வேலையை முடிச்சா உங்களுக்கு அடுத்த பூனம் சொல்யூஷன்ஸ் வேலை ஆரம்பிக்க சரியா இருக்கும் இல்லையா?”“கிரேட் விஷால்... மெயில் பண்றேன்.. நானும் இன்னிக்கு ஒன்பது மணிக்கு முன்னாலயே வரேன்.. ஐ ட்ரூலி அப்ரிஷியேட் யூ விஷால்...” “தாங்க் யூ மேம்... தொந்தரவு பண்ணிட்டேனா காலைலயே?”
‘‘நிச்சயமா இல்லே... ஹேப்பி விஷால்... குட் டே...”உள்ளே பாடல் ஓடியது. பழைய பாடல்தான். ஆனால், நினைக்கும்போதெல்லாம் மயிலிறகை வைத்து வருடும் பாடல். ‘மாலையில் யாரோ மனதோடு பேச...’ முதல் வரியே திரும்பத் திரும்ப ஓடியது. பாறைமேல் சாய்ந்துகொண்டு, கால்களில் தண்ணீர் ஓட ஓட அந்தக் கதாநாயகி போல வானத்தைப் பார்த்து லயிக்க வேண்டும் போல இருந்தது.
பாஸ்கர்! பாஸ்கர்! எவ்வளவு காலம் ஆகிவிட்டது நாம் மலைப் பிரதேசம் போய்? ஏதேதோ வேலைகள். என்னென்னவோ சவால்கள். நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட பணிகள். இருக்கட்டும். கப்பல் கட்டுகிற பொறியாளருக்கும், மென்பொருள் எழுதுகிற இஞ்சினியருக்கும் பெரும் பொறுப்புகள் இருக்கிறதுதானே? இந்த மாதம் எப்படியாவது திட்டமிட்டு விடலாம் பாஸ்கர். அக்டோபரில் வாகமன் போகலாம். பருந்துப்பாறை, பைன் மரக்காடுகள், மலையேற்றம் என்று வாழ்வின் ரம்மியமான பொழுதுகளை மனதில் ஏற்றிக் கொண்டு வரலாம்.மெக்சிகன் புலாவ் தன் மணத்தால் வீட்டை நிறைத்து, குடை மிளகாய் கிரேவி தன் நிறத்தால் கண்களை ஆக்கிரமித்து, வெள்ளரி சாலட்டும் வெங்காய ராய்த்தாவும் மேசையை அழகுபடுத்த அவள் திருப்தியுடன் ‘தென்றலே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது...’ என்று உள்ளே பாடி முடித்தாள்.
இதமான குளிர்நீர், சந்தன சோப்பு என்று குளியல் முடிந்தது. இன்று வானம் சாந்தமாக இருக்கிறது. வெளிர் நிற உடைகள் பொருத்தமாக இருக்கும். இளம் மஞ்சள் குர்த்தாவும் ஷார்ட் லெக்கின்ஸும் அணிந்தாள். கறுப்புப்பூக்கள் போட்ட ஷோல், கறுப்புப் பொட்டு, காதணி என்று அணிந்து கொண்டாள். கண்ணாடியில் பார்த்தாள். சிறப்பு என்று புன்னகைத்துக் கொண்டாள். பாஸ்கர் எழுந்திருந்தான்.
“மார்னிங் யாமினி... இன்னிக்கு நான் டிராப் பண்ணட்டுமா?” என்றான் லேசான புன்னகையுடன்.“மார்னிங் பாஸ்... பரவால்ல... எனக்கு டிரைவிங் இப்போ பிரச்னையே இல்லே. அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் கூட பண்ணிட்டேன்... நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க பாஸ்...”அவனுக்குப் பிடித்த ராகி பானம் தயாரித்து தானும் ஒரு கோப்பை எடுத்துக் கொண்டாள்.
“ஓ ரெடி பண்ணிட்டியா? இன்னிக்கு இதுல பாதாம் பவுடர் கொஞ்சம் கலந்து குடிக்கலாம்னு நெனைச்சேன்...”“வாவ் .. நானும் அதையேதான் நினைச்சேன், கலந்தேன் .. எப்படி இருக்கு?”ஒன்றும் சொல்லாமல் குடித்தான். முகத்தில் ஏதோ மாறியதைப் போலிருந்தது. பிரமையாகக் கூட இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
“உங்களுக்கு இன்னிக்கு சர்ப்ரைஸ் உணவு பாஸ்... பேக் பண்ணிட்டேன். சாப்பிட்டுட்டு சொல்லுங்க. கெளம்பட்டுமா?” “ஒரு நிமிஷம்... அக்டோபர்ல ஒரு டிரிப்... போகலாமா?”‘‘கண்டிப்பா... வாகமன்? எனக்கு ட்ரெக்கிங் போகணும்னு இருக்கு...”அவன் முகம் மேலும் மாறியது. கூடு விட்டு கூடு பாய்கிறாளா இவள் என்று அவன் நினைப்பதைக் காட்டிக் கொடுத்தது முகம்.
“சரி... வாகமன்... யாமினி... எல்ஐசி. பிரீமியம், அம்மாக்கு பணம் டிரான்ஸ்பர், டூரிசம் பேமெண்ட்னு பண்ணணும்... என் பாஸ்வேர்ட் மறந்து போச்சு... சொல்லு”“ஹா ஹா...’’ என்று சிரித்தாள். “எல்லாம் பண்ணியாச்சு பாஸ்... ஜஸ்ட் வங்கி பாஸ்புக் பாருங்க... அம்மா உடனே போன் பண்ணிட்டாங்க கூட...
அப்புறம், உங்க பாஸ்வேர்ட் சொல்லட்டுமா? ஜென்னி மார்க்ஸ்... உங்களோட நர்சரி ஸ்கூல் தோழி... ஆனால், நான் உங்க லாப்டாப்பை தொடக்கூட இல்லே... என் மொபைல்ல இருந்தே பண்ணிட்டேன்... அது அழகான பெயர், அதனால நினைவு இருக்கு… வரட்டுமா பாஸ்? மிஸ் யூ... சாயங்காலம் நிறைய பேசலாம்...” என்று அவனை அணைத்து முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினாள் அவள். அவன் முகம் சுத்தமாக விழுந்திருந்தது. எதையோ எதிர்பார்த்து, எதையோ இழந்ததைப் போலிருந்தது.சாவியை எடுத்துக்கொண்டு அவள் கிளம்பினாள்.அலுவலக நாள் இன்று சுவாரஸ்யமாகவே இருந்தது. விடுமுறை முடிந்து சசி வந்து விட்டாள். இனிய தோழி. எதைப் பற்றியும் அவளிடம் பேச முடியும். சரியான புரிதலும் தேடலும் உள்ளவள். விஷால் அருமையாக முக்கால்வாசி வேலையை முடித்திருந்தான். சரிபார்த்து கோவிந்த் கம்பெனிக்கு அனுப்பினாள். உடனே பாராட்டி வந்த மெயிலை விஷாலுக்கு அனுப்பினாள். நல்ல மாணவனை உருவாக்கி விட்ட குருவின் பெருமிதம் உள்ளே ஓடியது.
தூய்மைத் தொழிலாளி பென்சிலம்மாவின் மகனுக்கு மாதாந்திர படிப்புச் செலவுப் பணம் கொடுத்த்போது மனம் அமைதியுடன் ஒரு வெளிச்சக் கீறலைப் பார்த்தது.
“வா யாமி... பசி கொல்லுது...’’ என்று சசி வந்தாள்.“வாவ்... இது மெக்சிகன் ரைஸ்தானே? தொட்டுக்க? ஓயே... இது காப்சிகம் கிரேவிதானே? ஹய்யோ! அப்படியே நான் எடுத்துக்கறேன்... நீ என் வெந்தயக் குழம்பை எடுத்துக்கோ...” என்று பரபரத்தாள்.“வாவ்... வெந்தயக் குழம்பா? எவ்ளோ பிடிக்கும் தெரியுமா எனக்கு? நீ அதுல எக்ஸ்பர்ட் இல்லையா சசி? கொடு கொடு...”
ஆனால், முழுமையாக வேறு குழம்பாக இருந்தது அது. லேசான கசப்பு, வெல்லத்தின் அடிநாதம், நீட்டு மிளகாயின் காரம், சின்ன வெங்காயத்தின் ருசி என்று எதுவுமே எடுபடவேயில்லை. வெறும் புளித்தண்ணீரை அரைகுறையாகக் கொதிக்க வைத்ததுபோல... என்ன இது?
“என் மாமியார் செஞ்சது யாமி... என்ன பாக்கறே?” என்று சசி புன்னகைத்தாள்.“வந்து... அது அது. .. உன் ஸ்டைல்ல இல்லயேன்னு... நல்லாத்தான் இருக்கு... ஆனா...” யாமினி தடுமாறினாள்.
“யூ ர் ரைட் யாமி... அது வெறும் புளிக்கரைசல்தான். எனக்கும் தெரியும். ஆனா, புதுசா ஒரு பிலாசஃபி கத்துக்கிட்டேன் யாமி.. டிபெண்டன்சி... ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கறது... அதுல ஒரு அழகு இருக்கு... நெருக்கமும் இருக்கு... மாமியார் கொஞ்ச நாளா சோர்வா, பலகீனமா இருந்தாங்க... உடல் ஆரோக்கியத்துல ஒரு குறைவும் இல்லே.
யோசிச்சேன். நானே எல்லா ஏரியாவையும் ஆக்கிரமிச்சு சர்வாதிகாரம் பண்றேனோன்னு தோணிச்சு. அவங்கள அப்பப்போ சில வேலைகளை செய்ய வெச்சேன். உங்க கையால பாத்தி கட்டுங்க, நீங்க மாவுல உப்பு கரைச்சு விடுங்க, இந்த மயில்கோலம் போட சொல்லிக் கொடுங்க, ‘புதியபறவை’ல சிவாஜி காரெக்டருக்கு என்ன பேர்... இப்படியெல்லாம் கேட்டு அவங்களை செய்ய வெச்சு ஒரு முக்கியத்துவத்தை அவங்க மனசுல உண்டாக்கினேன்.
இப்போ ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஹாப்பி. சின்ன விட்டுக் கொடுத்தல்தான்... பட் கிரேட் ரிசல்ட்... ஆமாம்... இதுல என்ன ரகசிய கூட்டுப் பொருள் போட்டே யாமி, இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு?”யாமினி யோசித்துக் கொண்டே இருந்தாள்.
அடுத்த நாள் அலவலகம் கிளம்பும்போது பாஸ்கர் எழுந்து வந்தான்.“பாஸ் என்னை டிராப் பண்ண முடியுமா? இன்னும் எனக்கு ரிவர்ஸ் கியர், யூ டர்ன் எல்லாம் சரியாவே வரலே... நீங்க டிரைவிங் எக்ஸ்பர்ட் இல்லையா? ப்ளீஸ்...” என்றாள். ஓரக்கண்ணால் பார்த்தாள்.முகம் மலர அவன் “இட்ஸ் மை சந்தோஷம் யாமு... வா வா...” என்றான்.“தாங்க் யூ ... அப்புறம் இன்னிக்கு பிட்லா டிரை பண்ணேன்... வேர்க்கடலை வேகவே இல்லே... சாரி பாஸ்...”அவன் முகம் மேலும் மலர்ந்தது. “அதனால என்ன யாமு? பல்லுக்கு நல்லதுதானே கடிச்சு சாப்பிட்டா? நான் இன்னிக்கு சேமியா உப்புமா செய்யட்டுமா, டின்னருக்கு?”“இசிட்? எனக்கு ரொம்ப பிடிச்ச உப்புமா அது... ஓடி வரேன் பாஸ்... தாங்க் யூ பாஸ்...”அவன் அவளை அணைத்து முத்தமிட்டான். புதிய நெருக்கமும் இசைவும் தெரிவதை அவள் உணர்ந்தாள்.
- வி. உஷா
|