சிங்கப் பெண்ணே..!



ஓட்டத்தில் சாதித்து ஒலிம்பிக்கிற்கு தேர்வான மதுரை ரேவதியின் கதை

மதுரையைச் சேர்ந்த ரேவதிக்கு வயது 23. எப்போதுமே பேசப்பட்டு வருகிற பெருமைக்குரியது மதுரை. இப்போதும் ரேவதியால் நாடு முழுவதும் இந்நகரம் மீண்டும்
பேசு பொருளாகி இருக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இம்மாத இறுதியில் துவங்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் தேர்வான 5 தடகள நட்சத்திரங்களில் ஒருவர் ரேவதி. இப்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சியில் இருக்கிறார். ஜூலை 4ல் நடந்த தகுதிச்சுற்றில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து ரேவதி சாதனை புரிந்ததன் வழியாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி இருக்கிறார்.

எல்லோரையும் போல் இல்லாமல், பெற்றோரை இழந்ததுடன், தன்னைத் துரத்திய வறுமையையும் துரத்திக் கொண்டே, இந்த ‘ஓட்டச் சாதனையை’ ரேவதி எட்டிப் பிடித்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.‘‘பிள்ளைங்களுக்கு நாலஞ்சு வயசு இருக்குறப்பவே, என் மருமகன் வீரமணி வயித்துவலியிலும், அடுத்த வருசமே மூளைக்காய்ச்சல்ல மகள் ராணியும் என் பேத்திங்க ரேவதியையும் அவ தங்கை ரேகாவையும் விட்டுட்டு போய்ச் சேர்ந்துட்டாங்க...’’ என்று ஆரம்பித்தார் பாட்டி ஆரம்மாள்.

‘‘அதுக்கும் முன்னால என்னோட வீட்டுக்காரரும் நல்லபாம்பு கடிச்சு செத்துப்போயிட்டாரு. ஆதரவா எங்களை எடுத்துப் பாக்க யாரும் இல்லை. அவங்களுக்கான ஒரே புடிதளம் நான்தான்னு ஆகிப்போச்சு. களையெடுக்க, நாத்து நடுறதுன்னு போயிட்டு வர்ற காசை வச்சுத்தான் பசி போக்கிக்கிட்டோம். காய்கறி விக்கிறது வரைக்கும் பார்த்துட்டேன். ஆத்திர அவசரம்னா கடன் வாங்கிக்கிறது... கூலி வேலையிலும், நூறுநாள் வேலைக்குப்போயும் கிடைக்கிற காசை வச்சு வாங்குன கடனை அடைக்கிறதுன்னு காலம் போயிருச்சு...’’ கலங்கிய கண்களுடன் பேச்சை நிறுத்தியவர் சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘பள்ளியில படிக்கிறப்போ ஓட்டப்பந்தயத்துல ரேவதிக்கு ரொம்ப ஆசை. ‘ஓடவெல்லாம் வேணாம்... கீழே விழுந்தா கால் கை அடிபட்டு வேதனையாயிடும்’னு சொல்வேன். வெயில்ல வெறுங்காலோட ஓடுறப்பவும், எக்சைஸ் பண்றப்பவும் அவ படுற கஷ்டத்தப் பார்த்து ரொம்பக் கவலையா இருக்கும். ‘இப்படி எல்லாம் கஷ்டப்பட்டாத்தான் ஆயா ஜெயிக்க முடியும்’னு சொல்லி பேத்திங்க ஆறுதல்படுத்துவாங்க. சின்ன பேத்தி ரேகா புட்பால் நல்லா விளையாடும். இப்போ போலீஸ் வேலைக்கு போயி சென்னையிலதான் இருக்கு.

பள்ளியில படிக்கிறப்போ விளையாட்டு சொல்லிக் கொடுக்குற கண்ணன் வந்தாரு. ‘உங்க பேத்தி ஓட்டத்துல நல்லா இருக்கு... ஓட வைக்கிறேன். நல்லா வரும்’னு சொன்னாரு. சத்தான சாப்பாடு, போக்குவரத்துன்னு ரொம்பவே உதவிகளும் செஞ்சாரு. இப்போ ஒலிம்பிக்னு பெரிய ஓட்டப்போட்டிக்கு எடுத்திருக்காங்கன்னு சொன்னாங்க. செஞ்ச முயற்சிக்கு இந்த பிள்ளைங்க முன்னேறி வந்துட்டது சந்தோஷமா இருக்கு. இவ்வளவு கஷ்டத்துலயும் புள்ளைங்கள படிக்க வச்சு ஆளாக்கிக் கொண்டு வந்திட்டீங்கன்னு ஊருக்காரங்க சொல்றப்போ பட்ட கஷ்டமெல்லாம் கரைஞ்சு, மறைஞ்சு போச்சு.

நம்ம நாட்டுக்காக எம் பேத்திங்க நிறைய ஜெயிச்சு வரணும். ஏங் கண்ணோட, கருத்தோட பேத்திங்களுக்கு கல்யாணத்தையும் பண்ணிப் பார்த்துடணும்... அதாங்க ஆசை...’’ என்கிறார் ஆரம்மாள்.‘‘மதுரை சக்கிமங்கலம்தான் சொந்த ஊரு. இன்னைக்கு இந்த உயரத்தைத் தொடுறதுக்கான முதல் நன்றிக்கடனை எங்க பாட்டிக்குத்தான் சொல்லணும்...’’ நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் ரேவதி.

‘‘எங்களை ஆரம்பத்துல இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு அவங்க வளர்த்திருக்காங்க. ‘பொம்பளப் புள்ளைங்க விளையாட்டுலயும், படிப்புலயும் என்னத்த சாதிக்கப் போகுது... ஏதாவது வேலைக்கு அனுப்பு. கஷ்டப்படாதே'னு பாட்டிக்கு ஊர்ல சிலரு அட்வைஸ் பண்ணாங்க. ஆனாலும் அதுக ஆசைப்பட்டத நாம கொடுக்கணும்னு எங்களோட ஆசையை நிறைவேத்துறதுல உறுதியா இருந்தாங்க.

அடுத்ததா என்னோட கோச் கண்ணன் சாரை சொல்லணும். 2ம் வகுப்புல இருந்து பனிரெண்டு வரைக்கும் மதுரை மூன்று மாவடியில் உள்ள ஒரு அரசு பள்ளியிலதான் படிச்சேன். ஸ்கூல் லெவல்ல ஜோனல், டிஸ்ட்ரிக்ட்னு அப்போதைக்கு கொஞ்சமா கிடைச்ச பயிற்சிகளை வச்சு கலந்துக்கிட்டேன். பிளஸ் 2லதான் ஸ்டேட் மீட்டில் ஃபைனல்ல என்ட்ரி ஆனேன். அப்போ கால்ல போட ஷூ இல்லாம வெறுங்கால்ல ஓடுனதைப் பார்த்துத்தான் கோச் கண்ணன் சார், ‘ஷூ வாங்கித் தர்ரேன்... எப்படியும் ஓடி ஜெயிக்கணும்'னாரு.

தொடர்ந்து படிக்க முடியல. டூவீலர் ஒர்க்‌ஷாப்ல வேலைக்கு போனேன். வீடு தூரம், பயிற்சிக்கு வந்து போறது கஷ்டம், வசதியும் இல்லைன்னு அவரிடம் சொன்னேன். விளையாட்டு வீரருக்கான ஒதுக்கீட்டில், தங்குறதுக்கு விடுதியோடு, சாப்பாடும் கிடைக்கிறா மாதிரி மதுரை லேடிடோக் கல்லூரியில் பிஏ தமிழும் வாங்கித்தந்து, விளையாடுறதுக்கு சப்போர்ட்டும் பண்ணாங்க. அந்த கல்லூரியும் உதவியா இருந்துச்சு.

படிப்பையும் முடிச்சு மெல்ல தேசிய போட்டிகள் வரைக்கும் முன்னேறினேன். படிப்புக்கும், விளையாட்டுக்கும் அவரு செஞ்ச உதவிகளுக்கும், ஊக்கத்துக்கும் வணங்குறேன். இப்போ பஞ்சாப் பாட்டியாலாவுல ஜெர்மனைச் சேர்ந்த ஹெலினா கோச்சிங் கொடுக்குறாங்க. மதுரை ரயில்வே கோட்டத்துல கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன்ல எனக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை தந்து, ரயில்வே நிர்வாகமும் பெரிய உதவிகளை செஞ்சது. இவங்களோடு இன்னும் நிறையப்பேரு எனக்கு அடுத்தடுத்து காட்டுன அன்பாலயும், உதவியாலயும்தான் இந்த இடத்திற்கு வர முடிஞ்சிருக்கு.

காலேஜ் வயசுல ஒலிம்பிக் போகணும்னு சும்மா சொல்லிட்டு இருப்பேன். ஆனா, இப்போ தேர்வாகி அதுவே நிஜமாகி இருக்குறது ரொம்ப எமோஷனலா இருக்கு. கண்டிப்பா என்னோட பெஸ்ட்டைக் கொடுப்பேன். இந்தியாவுக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்ப்பேன்...’’ உறுதியாகச் சொல்கிறார் ரேவதி. ‘‘பலருடைய உதவிகள் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளா தொடர்ந்த ரேவதியின் கடுமையான பயிற்சிகள்தான் அவருக்கு கைகொடுத்திருக்கு...’’ திட்டவட்டமாகச் சொல்கிறார் பயிற்சியாளர் கண்ணன்.

‘‘தேசிய, மாநில போட்டிகள்ல பல்வேறு பதக்கங்களை ரேவதி வென்றிருக்காங்க. கடுமையான உழைப்புடன், உரிய நேரத்துக்கும் மேலா ஈடுபாட்டோடு பயிற்சி செஞ்சதுதான் ரேவதியின் வெற்றிக்கு காரணம். நிச்சயம் உலக அரங்கில் வென்று முத்திரை பதிப்பார்...’’ பெருமையுடன் சொல்கிறார் கண்ணன்.  

செய்தி: செ. அபுதாகிர்

படங்கள்: மீ. நிவேதன்