தங்க இடமில்லாமல் தவித்த சூப்பர் ஸ்டாரின் பேரனும், உதவிய தமிழ்நாட்டு முதல்வரும்!



தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளியைத் தாண்டி திரையரங்குகளில் ஓடியது. தங்கத்தட்டில் சாப்பிட்டார், பன்னீரில் குளித்தார் என்று இப்போதும் அவரைப் பற்றிய கதையை யாராவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி திரையுலகில் ஒரு மன்னரைப் போல வலம் வந்த பாகவதரின் பேரன் சாய்ராமோ வாடகை கூடக் கொடுக்க முடியாமல் மிகுந்த வறுமையில் தவித்தார். இதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாய்ராமிற்கு ஐந்து லட்ச ரூபாயுடன் தங்குவதற்கு வீடும் வழங்கியுள்ளார். இந்த செய்திதான் திரைவட்டாரத்தில் இப்போது ஹாட் டாக்.

“தாத்தா தியாகராஜ பாகவதர் - பாட்டி ராஜம்மாளின் ஒரே மகள் அமிர்தலட்சுமி. அவருக்கு நான் உட்பட மூன்று மகன்கள்; ஒரு மகள். சிறுவயதிலேயே அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க. ராஜம்மாள் பாட்டிதான் எங்களை வளர்த்து, படிக்க வச்சி எல்லாமுமாக இருந்தாங்க.
எங்களோட பள்ளிப்படிப்பு செலவுகளை எம்ஜிஆர்தான் பார்த்துகிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டோம். 2008ல பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுச்சி. அப்ப முதல்வர் கலைஞர் அய்யாகிட்ட முறையிட்டோம். அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார்.

போட்டோகிராபரான எனக்கு சொந்தமா கேமராகூட இல்லை. லாக்டவுன்ல வேலை வாய்ப்பு எதுவுமே இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டோம். ஏதாவது கூலி வேலைக்குப் போலாம்னு பார்த்தா அதுவும் கிடைக்கல. பிள்ளைகளின் படிப்புச்செலவுக்கு நடிகர்கள் பார்த்திபனும் சிவகுமார் குடும்பத்தினரும் உதவுறாங்க.

போன வருசம் இதே மாசத்துல எடப்பாடி பழனிச்சாமி அய்யா, ‘திரைப்படத்துறையிலும், பாரம்பரிய இசைத்துறையிலும் தியாகராஜ பாகவதரின் பன்முகப் பங்களிப்பையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையில், திருச்சி மாவட்டத்தில் 50 லட்சத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் உருவச் சிலையுடன்கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்...’ என்று அறிவித்தார்.

அப்ப ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம சிரமப்பட்டேன். உதவி கேட்டு இதே சட்டசபை வளாகம், முதல்வர் அலுவலகம்னு நாள் கணக்கா காத்திருந்தேன்.

மனு கொடுத்தா உதவி பண்ணுவாருனு பல நாள் சோறு, தண்ணி இல்லாம காத்துக்கிடந்தேன். மனு கொடுக்க வந்தப்ப மயங்கி விழுந்திருக்கேன். பல நாள் இங்கேயே தூங்கியிருக்கேன். ஆனா, எதுவுமே நடக்கலை.இப்ப என்னைப் பத்தின தகவல் தெரிஞ்ச உடனேயே ஸ்டாலின் அய்யா உதவி செய்துட்டாரு...’’ என்ற சாய்ராம் சிறிது நேரம் மௌனமாக நின்றார்.
“நாங்க எல்லாரும் கூட்டுக்குடும்பமாத்தான் இருக்கோம். சூளைமேட்டில் உள்ள அண்ணண் வீட்டில் வசிக்கிறோம். அதுவும் வாடகை வீடுதான். தங்கையின் கணவரும்
இறந்துட்டார்.

கொரோனா தொற்று காரணமா நானும், எங்கள் குடும்பத்தினரும் வேலையை இழந்துட்டோம். நான் செக்யூரிட்டி, சமையல்னு எல்லா வேலைக்கும் போனேன். கிடைச்ச சம்பளத்தை வச்சு வாடகை கொடுக்க முடியல. இப்ப ஸ்டாலின் அய்யா மூலமா வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கி இருக்காங்க.  வாடகை வீட்டுல இருந்து சொந்த வீட்டுக்குப் போறோம்னு நினைக்குறப்ப சந்தோஷமா இருக்கு. அரசு எங்களுக்குக் கொடுத்த வீட்டுலயும் கூட்டுக்குடும்பமாத்தான் வசிக்கப்போறோம்...’’ என்ற சாய் ராம் சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘1944ல் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கி தாத்தா சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு நிரபராதி எனத் தீர்ப்பு வந்தாலும், வழக்கு நடத்தியே மொத்த சொத்தும் காலியானது. நாங்க தங்கத்தட்டில் சாப்பிடலை. காலண்டரில்தான் கடவுள் உள்ளார். அதனால் பன்னீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் கூட ஏற்படலை. அடுத்த வேளை உணவுதான் எங்களின் இலக்காக இருந்துச்சு...’’ என்று சாய்ராம் முடிக்கும்போது அவரது கண்கள் கலங்குகின்றன.

வசூல் மன்னன்!

மாயவரத்தில் 1910ம் வருடம் பிறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. பாகவதர் சிறுவனாக இருந்தபோதே குடும்பம் திருச்சியில் குடியேறியது. இவருக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம். வசூல் மன்னனாக இருந்தாலும் இவரது திரை வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. சர்க்கரை நோய் பாதிப்பினால் 49 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் செல்வச்செழிப்பில் திளைத்தார். 1934ல் ‘பவளக்கொடி’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானர்.

இந்தப்படத்தில் 55 பாடல்கள். இதில் பெரும்பாலான பாடல்களை பாகவதரே பாடியிருந்தார். தமிழ்நாடு முழுவதும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி ‘பவளக்கொடி’க்கு பெரிய வரவேற்பு கிடைத்தது அப்போதைய ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உலகப்போருக்கு நிதி திரட்ட அவர்கள் இயக்கிய ஒரு நாடகத்தை பாகவதர் நடித்துக் கொடுத்தார். அந்த நாடகம் எதிர்பார்த்ததைவிட அதிகமான வசூலைக் கொடுத்தது. அதனால் பாகவதருக்கு சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் மற்றும் திருச்சிக்கு அருகே உள்ள திருவெறும்பூர் என்ற விவசாய வளமிக்க ஊரில் பாதியை பரிசாகத் தந்தனர்.

அதை வாங்க மறுத்த பாகவதர், ஊரை மீண்டும் ஆங்கிலேயர்களிடமே தந்துவிட்டார். அத்துடன் ஒரு லட்ச ரூபாயை இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு நிவாரண நிதியாக வழங்கிவிட்டார்.

இப்போதும் தமிழ்நாட்டில் யாராவது ஒருவர் இவரது சிக்னேச்சர் சிகையலங்காரமான பாகவதர் கிராப்பை வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!  

திலீபன் புகழ்