இடஒதுக்கீட்டுக்கு வயது 100
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நேருக்கு நேர்
மக்களால் எளிதாக அணுகக் கூடியவர். முற்றிலும் வேறுபட்ட அரசியல்வாதி. தன்னை எப்போதும் எளியவர்களோடு வைத்துக் கொள்பவர். அறிமுகமில்லாதவர் கைபேசியில் தொடர்பு கொண்டாலும் எடுத்துப் பேசுபவர்... என்றெல்லாம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம். உங்கள் அரசியல் பயணம் எப்படி ஆரம்பித்தது..?
அப்பா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய செயலாளர், பெரம்பலூர் மாவட்ட செயலாளர், 1989ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1996ம் ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்பை அப்பா இழந்த சமயத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அதற்கு நிற்க ஆள் இல்லை. ஏனெனில் 96 தேர்தலில் எதிர் அணியில் பாமக நின்றார்கள். பீகார் மாதிரி பூத் கேப்ச்சரிங் செய்து, மாநில வன்னியர் சங்க தலைவர் தீரன் அதில் வெற்றி பெற்றார். இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் நின்றால் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று பலர் தயங்கினார்கள்.
அந்த நேரத்தில் நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தொழில் செய்து கொண்டிருந்தேன். 91 மற்றும் 96 சட்டமன்றத் தேர்தல்களில் அப்பாவுடன் இணைந்து தேர்தல் பணியாற்றினேன். நேரடியாக தேர்தலில் நிற்கவில்லையே தவிர அப்பாவுடன் இருந்து கட்சிப் பணியும் ஆற்றி வந்தேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்க யாரும் முன்வரவில்லை என்ற நிலையில் உள்ளூர் தோழர்கள் அப்பாவிடம் வலியுறுத்தினார்கள். சில காரணங்களுக்காக அவரும் மறுக்கவே நானே நின்றேன்.
அதிமுகவும், பாமகவும் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கூட்டணி வைத்து நின்றார்கள். பாமகவின் காடு வெட்டி குரு அந்த சமயத்தில் பவர்ஃபுல் லீடராக இருந்தார். அப்படி இருந்தும் அந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினராக 50 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றேன். ஒட்டுமொத்த பெரம்பலூர் மாவட்டத்துக்கும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரானேன். அங்கு ஆரம்பித்தது எனது நேரடி அரசியல் வாழ்க்கை.பிறகு ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். 2001ல் மறுபடியும் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக வெற்றி பெற்றேன். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன்.
இக்காலத்தில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது. அந்த வகையில் ஜெயங்கொண்டத்தில் பாதியும், குன்னத்தில் பாதியும் சேர்ந்தது. 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியில் நின்றேன். அந்த தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 23 பேரில் நானும் ஒருவன். 2016ல் அரியலூர் தொகுதியில் நின்று வெறும் இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 2021ல் குன்னம் தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிவித்தார் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக மக்கள் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தார்கள். உங்கள் துறையில் உள்ள சவால்கள் என்னென்ன..?
மராத்தா இட ஒதுக்கீடு வழக்குக்குப் பிறகு உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொள்வார்கள் என்கிற சூழலில், அதை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது 69% இட ஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு இருக்கிறது. முந்தைய காலங்களிலேயே 9வது அட்டவணையில் பாதுகாப்பு இருப்பதினால், அதை வைத்து 69%ஐ பாதுகாக்க முடியும்.
தமிழ் நாட்டில் 1921ல் நீதிக் கட்சி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு இது நூறாவது ஆண்டு. தொடர்ந்து நாம் கைப் பற்றி வருகிற ஓர் உரிமைப் பிரச்னை இது. ஒன்றிய அரசு எல்லா இடங்களிலும் கை வைத்து வரும் சூழலில், அதை எதிர் கொண்டு நம் சமுதாய மக்களுக்காக போ ராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இந்த நேரத்தில் இருக்கிறோம்.
நவீன முறையில் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி சரியான விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க சாத்தியமுண்டா? அம்பாசங்கர் கமிஷன்படி நவீன முறையில் அதற்கான முயற்சி எடுத்தவரே கலைஞர் அவர்கள்தானே! அவர் வழியில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் இதை சாத்தியப் படுத்துவார். இலக்கியத் துறையிலும் தடம் பதித்து வருகிறீர்கள்... திராவிட இயக்கப் பற்றுள்ள அனைவருமே இலக்கியத்துறையிலும் தடம் பதிப்பார்கள். ஏனெனில் படிப்பதும் எழுதுவதும் விமர்சனம் செய்வதும்தான் திராவிட கருத்தியலின் மையம்.அந்த வகையில் முகநூலில் கணக்கு திறந்ததும் தினமும் சந்திக்கும் பிரச்னைகளை கற்பனையில்லாமல் அரசியல் விமர்சனத்துடன் எழுதினேன். அதற்கு வரவேற்பு கிடைக்கவே எழுதியவற்றை தொகுத்து நூலாகக் கொண்டு வந்தேன்.
2011 -16 காலக்கட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ‘நக்கீரன்’ வாரம் இருமுறை பத்திரிகையில் சட்டமன்ற விமர்சனம் எழுதினேன். ‘அமேசான்’ தளமானது ஆண்டுதோறும் தங்கள் ‘கிண்டில்’ பதிப்பில் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதுவதெல்லாம் இலக்கியமே இல்லை என வலதுசாரிகள் தொடர்ந்து செய்து வரும் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக இயக்கத் தோழர்களும் இயக்க அனுதாபிகளும் ஆண்டுதோறும் அப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் எனது பங்களிப்பாக எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு வரலாற்றை ‘தோழர் சோழன்’ என்ற நாவலாக எழுதினேன். அதற்கு பரிசு கிடைத்தது. படித்து முடித்த ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் எனக் கூறுகிறதே..? வருத்தமான விஷயம். அறியாமையால் இப்படிச் சொல்கிறார்கள். உண்மையில் எந்த சாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அதே சாதியின் பெயரால் அவர்களை முன்னிலைக்கு கொண்டு வந்தால்தான் சமமற்ற நிலை மாறும். ஏற்றத் தாழ்வற்ற சமூகம் உருவாக வேண்டுமென்றால் இட ஒதுக்கீடு அவசியம். துறை சார்ந்த யோசனை அல்லது செயல் திட்டமாக எதை வைத்துள்ளீர்கள்..?
சாதியை ஆயுதமாக பயன்படுத்தி இன்றைய இளைஞர்கள் வீணடிக்கப்படுகிறார்கள். இளைய சக்திக்கு கல்வியை முழுமையாக வழங்கி வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களது ஆற்றலும் திறமையும் சமூக உயர்வுக்கு முழுமையாகப் பயன்படும். இதற்கான நடவடிக்கையை முதல்வரின் வழிகாட்டுதலுடன் துறை ரீதியாக செய்யப் போகிறோம்.
செய்தி: அன்னம் அரசு
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|