பாட்ஷா in அமெரிக்கா



சமீபத்தில் அமெரிக்கா சென்ற ரஜினி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் லேட்டஸ்ட் வைரல்.கூடுதல் காரணம், அப்புகைப்படத்தில் ரஜினியோடு இடம்பெற்றிருந்த ஒரு நாயும்தான்!அச்சு அசலாக ‘பாட்ஷா’ படத்தை நினைவுபடுத்திய அப்புகைப்படத்தில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தவர் சதீஷ் ராஜேந்திரன்.அமெரிக்காவில் வசித்து வரும் சதீஷ் ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டோம். இனி அவர்...

அமெரிக்காவில் பெரும்பாலும் யாரும் மாஸ்க் அணிவதில்லை! ஆனால், கிட்டத்தட்ட எல்லோரும் தடுப்பூசி போட்டுவிட்டோம். நான் வசிப்பது அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பிலடெல்ஃபியா நகரத்தில். ஐடி நிறுவனம் ஒன்றில் மானேஜராக இருக்கிறேன்.
என் மனைவி ஷோபனா குழந்தைகள் நலமருத்துவர். விடுமுறையில் குடும்பத்துடன் நியூயார்க்குக்கு சென்றோம். இடையில் வர்ஜீனியாவில் உள்ள என் நெருங்கிய நண்பரிடம் மொபைலில் பேசினேன். காரணம், இந்தியாவின் மோஸ்ட் வான்டட் விவிஐபி அவர் வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்று எனக்குக் கிடைத்த செய்திதான்.

ஆமாம்... அந்த விவிஐபி என் நண்பரின் வீட்டுக்கு வந்து சில நாட்கள் ஆகியிருந்தன. அந்த விவிஐபி யார் என புரிந்திருக்குமே..? ரஜினிதான்! கோவிட் காலம் என்பதால் தலைவர் யாரையும் சந்திக்கவில்லை என்றார் என் நண்பர்.என் நண்பர் தலைவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தது நிச்சயம் நான் செய்த புண்ணியம்தான். அமெரிக்காவுக்கு எப்பொழுது தலைவர் வந்தாலும் என் நண்பரின் வீட்டில்தான் தங்குவார்.

அந்தளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள்.இந்த விஷயம் எனக்கு முன்பே தெரியும். எனவே, நண்பர் சொன்ன கோவிட் காலம் என்பது சரியாகப்பட்டாலும் என் மனதில் கிளர்ந்தெழுந்த ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தலைவரைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆசை விஸ்வரூபம் எடுத்தது. சட்டென்று ‘தலைவரை நான் சந்திக்க விரும்புகிறேன்...’ என்றேன்.

மறுமுனையில் என் நண்பர் கேஷுவலாக, ‘இன்று இரவு வருகிறீர்களா...’ என்று கேட்டார். எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. பழம் நழுவி பாலில் விழும் சமயத்தில் தவறி கீழே விழும் நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும்..? அப்படியிருந்தது என் நிலை. காரணம், நான் இருக்கும் இடத்திலிருந்து என் நண்பரின் வீட்டுக்கு இரவுக்குள் செல்ல முடியாது. என்ன செய்வதென்று தெரியாமல் என் நிலையை நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டேன்.‘கவலைப்படாதே... இன்னும் ஒரு வாரம் இங்கதான் தலைவர் இருப்பார்...' என்றார் நண்பர்.

போன உயிர் அப்பொழுதுதான் திரும்பி வந்தது!ஜூலை 3ம் தேதி காலை என் நண்பரைத் தொடர்பு கொண்டேன். பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின், ‘இன்று தலைவரைப் பார்க்க
முடியுமா’ என்று கேட்டேன். ‘மதியத்துக்கு மேல் சார் கொஞ்சம் ஃப்ரீதான். வாருங்கள்...’ என்றார் நண்பர்.என் இடத்திலிருந்து சாலை வழியாக இரண்டரை மணி நேரம் பயணம் செய்து நண்பரின் வீட்டுக்கு வந்தோம்.

வரவேற்று அமர வைத்து நண்பர் எங்களுடன் பேச ஆரம்பித்தார்.எனக்கோ இருப்பு கொள்ளவில்லை. பார்வையால் நண்பரின் வீட்டை அலசினேன். எங்குமே தலைவர் இருப்பதற்கான சுவடு தெரியவில்லை. ‘ஏமாறப் போகிறோமோ’ என்ற பயம் மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமித்தது.

சரியாக அப்பொழுது பார்த்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறைக்கு வந்தார் சூப்பர் ஸ்டார். அப்படியே வானத்தில் பறப்பது போல் இருந்தது. அந்த சின்ன இடைவெளியிலும் அவரது வேகம் என்னை ஆச்சரியப்படுத்தியது. விசாரிப்புகள்.

சிரிப்பு.கேஷுவலாக இருந்தது எங்கள் உரையாடல். அவ்வப் போது என் நண்பர் வளர்க்கும் செல்ல நாய், எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடியது. அது லேப்ரடூடுல் என்னும் வகையைச் சார்ந்தது. ஒரு கட்டத்தில் ரஜினி அருகே நாய் அமர... ‘பாட்ஷா’ பட நினைவுகள் என்னுள் வந்து அலைமோதின.

‘எங்கள் நண்பர்கள் சிலர் உங்கள் படங்களை இங்கே விநியோகிக்கிறார்கள்...’ என்று நான் சொன்னதும் ரஜினி ஆர்வமானார். அது குறித்து அவர் விசாரிக்க... நான் பதில் சொல்ல... நேரம் போனதே தெரியவில்லை.

என்னைக் குறித்தும் என் குடும்பம் பற்றியும் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாகவும் தலைவர் அக்கறையுடன் விசாரித்தார். அவரைக் குறித்து நாங்கள் கேட்டதற்கும் பொறுமையாக பதில் அளித்தார். வாஷிங்டன் டிசியில் உள்ள உணவகங்களில் சாப்பிடுவது அவருக்கு மிகவும் விருப்பமான விஷயமாம்.‘டாக்டர் செக்கப் முடிந்தது.

மை ஹெல்த் ஈஸ் பர்ஃபெக்ட்’ என்று ரஜினி சொன்னதும் உண்மையிலேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது. ‘உங்கள் நண்பரின் உபசரிப்பும் அவர் காட்டும் அன்பும் ஈடு இணையற்றது. இங்கு நான் அவ்வளவு ரிலாக்ஸாக இருக்கிறேன்...’ என ரஜினி நெகிழ்ந்தபோது என் நண்பரை நினைத்து அவ்வளவு பெருமைப்பட்டேன்.

‘வருடத்துக்கு ஒருமுறை உங்கள் நண்பரின் வீட்டுக்கு வந்து சில நாட்கள் ஓய்வெடுப்பேன். இங்கிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பது எனக்கு எனர்ஜியைத் தருகிறது...’ என்று தலைவர் சொன்னதும் சட்டென, ‘எங்கள்  வீட்டுக்கு டின்னருக்கு வாருங்கள்...’ என்று நானும் என் மனைவியும் அழைத்தோம்.யோசிக்காமல் ‘ஸ்யூர்... ஸ்யூர்... நெக்ஸ்ட் டைம் வர்றப்ப கண்டிப்பா வரேன்...’ என தன் ஸ்டைலில் ரஜினி சொன்னது இப்பொழுது வரை என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஆரம்பத்தில் நான் சொன்னதை மீண்டும் படியுங்கள். நான் அமெரிக்க சூழ்நிலையைத்தான் சொன்னேன். தமிழ்நாடு சூழ்நிலையை நன்கு அறிவேன். எங்களுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை என்றாலும் என் பெற்றோர், சகோதரர் எல்லாம் சென்னையில்தான் வசிக்கிறார்கள். தயவுசெய்து சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம் அணிய மறக்காதீர்கள்!

வேதா