இவர் படத்தில் குரூப் டான்சர்... இவுங்க படங்களில் டான்ஸ் மாஸ்டர்! கூல் ஜெயந்தின் கூலான வெள்ளிவிழா



அறிமுகப் படத்தி லேயே ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு பெற்றவர் டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த். போட்டி நிறைந்த சினிமா துறையில் 500 படங்கள், 800 பாடல்கள் என்று சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளில் வெளியான ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இவருக்கு சினிமாவில் இது 25ம் ஆண்டு.

பல விருதுகளுக்கு சொந்தக்காரரான கூல் ஜெயந்த்தான், ‘என்ன விலை அழகே...’ (காதல் தேசம்), ‘என்ன அழகு...’ (லவ் டுடே) ‘அன்னக்கிளியே...’ (ஃபோர் தி பீப்புள்’), ‘மொட்டு ஒன்று மலர்ந்திட...’ (குஷி), ‘ஏப்ரல் மாதத்தில்...’ (வாலி), ‘மனசே மனசே...’(நெஞ்சினிலே) போன்ற ஹிட் பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டர். இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படத்துக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
‘‘மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன். அவருடைய நடனத்தைப் பார்த்துதான் எனக்கு நடனத்தின் மீது ஆர்வம் பிறந்தது. சும்மா ஜாலிக்காக நடனமாடினேன். அப்புறம் அதையே ஏன் தொழிலா பண்ணக்கூடாதுனு நண்பர்களுடன் சேர்ந்து ‘சவுத் சிட்டி பாய்ஸ்’ குழுவை ஆரம்பிச்சு திருவிழா, கச்சேரி மேடைகள்ல ஆட ஆரம்பிச்சேன்.

அப்ப புலியூர் சரோஜா அக்கா, ரஜினி சாரின் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்துக்காக ப்ரேக் டான்ஸ் ஆட ஆடிஷன் நடத்துவதாக கேள்விப்பட்டு நானும் என் குழுவினர் சிலரும் கலந்துகிட்டோம். ஆனா, நான் மட்டுமே செலக்ட் ஆனேன். ‘ஒரு பண்பாடு இல்லாமல் பாரதம் இல்லை...’ - இதுதான் நான் வெள்ளித்திரைல தோன்றிய முதல் பாடல்.

இரண்டு வருட போராட்டத்துக்குப் பிறகு நடன இயக்குநர்கள் சுந்தரம், ராஜுசுந்தரம், பிரபுதேவா ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தேன். ‘ஜென்டில்மேன்’, ‘ஆசை’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன்...’’ என்று  ஃப்ளாஷ்பேக் பகிர்ந்தவர் சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே டான்ஸ் மாஸ்டராக புரோமோஷன் பெற்றுள்ளார்.

‘‘இயக்குநர் கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ படத்துக்கு ராஜுசுந்தரம் மாஸ்டர்தான் கமிட்டாகியிருந்தார். ‘ஹலோ டாக்டர்’ பாடலை எடுக்கும்போது ராஜுமாஸ்டர் வேறு ஒரு படப்பிடிப்புக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அந்தப் பாடலுக்கு நான் க்ளாஷ் ஒர்க் பண்ணினேன். என்னுடைய ஒர்க் டெடிகேஷன், சின்சியாரிட்டியை ஆரம்பத்திலிருந்து கவனித்து வந்த கதிர் சார் என்னை டான்ஸ் மாஸ்டராக்குவதாக சொன்னார்.என்னுடைய குருநாதர்களான சுந்தரம், ராஜு சுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களிடம் இதுபத்தி சொன்னப்ப, என்னை ஆசீர்வதிச்சு அனுப்பினாங்க.

‘காதல் தேசம்’ படத்தில் ‘கல்லூரி சாலை...’, ‘என்னை காணவில்லையே...’, ‘தென்றலே...’ உட்பட மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்தேன்...’’ என்ற கூல் ஜெயந்த், விஜய்க்கு ‘ப்ரெண்ட்ஸ்’, ‘லவ்டுடே’, அஜித்துக்கு ‘வாலி’, ‘ஜனா’, ‘ராசி’, சூர்யாவுக்கு ‘உன்னை நினைத்து’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, பிரசாந்த்துக்கு ‘ஹலோ’ என அடுத்தடுத்து ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்.

‘‘இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்தான் என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம். விஜய் சார் படங்கள்ல ரிலாக்ஸா பணிபுரியலாம். எல்லாவற்றையும் உன்னிப்பா கவனிச்சு ‘டேக்’ போகலாம் என்பார். நீண்ட நேரம் ப்ராக்டீஸ் எடுக்க மாட்டார். எல்லாமே சிங்கிள் டேக்தான்.

அஜித் சார் காட்சிக்கு தரும் அதே முக்கியத்துவத்தை பாடலுக்கும் கொடுப்பார். பாடகர் ஹை பீட்ச்ல பாடியிருந்தா அதை தன் உடல் மொழியில் கொண்டுவர மெனக்கெடுவார். கூடவே தன்னுடைய ஸ்டைலையும் மூவ்மெண்ட்டுல கலப்பார்.சூர்யா சார் பாடலை எப்படி படமாக்கப் போகிறோம் என்பதை டீடெயில் பண்ணச் சொல்வார். பல நேரங்கள்ல ஹோம் ஒர்க் பண்ணிட்டுதான் செட்டுக்கு வருவார். பிரசாந்த் சார் மாஸ்டர் சொல்வதையும் கேட்டு ஃபைன் டியூன் பண்ணி பிரமாதப்படுத்துவார்...’’ என நடிகர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்தவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள் ஏராளமாக உண்டு.

‘‘மலையாளத்தில் ஹிட் அடித்த ‘ஃபோர் தி பீப்புள்’ தமிழில் பரத் நடிக்க ‘4 ஸ்டூடண்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘அன்னக்கிளி...’ பாடலைப் படமாக்க நான், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உள்ளிட்டோர் சாலக்குடி ஃபால்ஸுக்கு போனோம்.பார்த்தா செம மழை. தயாரிப்பாளரோ ஒரே நாள்ல பாடலை ஷூட் செய்யச் சொன்னாங்க. அதே லொகேஷன்ல இன்னொரு பக்கம் வேறு ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.இந்த சவால்களோடுதான் அந்தப் பாடலைப் படமாக்கினோம். பாடலும் பெரிய ஹிட். சிறந்த நடனத்துக்கான விருதும் அந்தப் பாடலுக்கு கிடைச்சது.

அஜித் சார் நடித்த ‘வாலி’ படத்தில் இடம் பெற்ற ‘ஏப்ரல் மாதத்தில்...’ பாடலை சென்னையில் படமாக்கினோம். ஃபைனல் பிஜிஎம்ல சிம்ரன் மட்டும் சில் - எஃபெக்ட்டில்  டான்ஸ் ஆடுவார். கொஞ்ச நேரத்துல சன் செட்டாகக்கூடிய சூழ்நிலை இருந்ததால் அதற்குள் பாடலை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏன்னா, அடுத்த நாள் சிம்ரன் மேடம் வேறு ஒரு படத்துக்கு போயாகணும். அவ்வளவு நெருக்கடியிலும் சிம்ரன் மேடம் மிகப் பிரமாதமாக டான்ஸ் பண்ணினார். பாடலும் செம ஹிட்டடித்தது...’’ என ஒர்க்கிங் ஸ்கில் பகிர்ந்த கூல் ஜெயந்த் இன்றும் லைம்லைட்டில் ஜொலிக்கிறார்.

‘‘மறைந்த ஜனநாதன் சார் கூட ஏற்கனவே ‘இயற்கை’, ‘பேராண்மை’ படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். ‘பேராண்மை’ முதல்நாள் படப்பிடிப்புல நான் கோரியோகிராஃப் அமைச்ச ‘காட்டுப் புலி அடிச்சு...’ பாடலை படமாக்கினாங்க. இப்படியொரு பெருமையை எனக்கு ஜனா சார் கொடுத்து கவுரவிச்சார்.அவரோட கடைசிப் படமான ‘லாப’த்துல ஜெகபதிபாபு, தன்ஷிகா நடனமாடும் பாடலுக்கு டான்ஸ் அமைச்சிருக்கேன். ‘லாபம்’ ஆடியோ ஃபங்ஷன்ல என்னை மேடையேற்றி ஜனா சார் ஆச்சர்யப்படுத்தினார்.

அவராலதான் இந்த செகண்ட் இன்னிங்ஸ் சிறப்பா தொடங்கியிருக்கு...’’ நெகிழும் கூல் ஜெயந்த், இப்போதைய பாடல்களில் குரூப் டான்சர்ஸ் இடம்பெறாதது காலத்தின் கட்டாயம் என்கிறார்.‘‘கதையை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கு. வாழ்க்கை ஒரு வட்டம் என்னும்போது சினிமால திரும்பவும் குரூப் டான்சர்ஸ் வருவாங்க. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு...’’ என்னும் கூல் ஜெயந்துக்கு ரஜினி, கமல் படங்களில் பணிபுரிய வேண்டுமென்பது ஆசை.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்