லவ் ஸ்டோரி-திருமணம் என்பது இருவர் இணைந்தாலும்... இரண்டு குடும்பங்கள் இணைவதாகவே பொருள்!



கணேஷ் வெங்கட்ராம்

மும்பையில்தான் பிறந்து வளர்ந்தேன். எப்பவும் என்னை சினிமா கவர்ந்திழுத்துக் கொண்டே வந்திருக்கு. மும்பையின் வெவ்வேறு மதங்கள், மொழி, மனிதர்கள்னு அந்த ஊரில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கு. காதல்னு முதன் முதலில் கேள்விப்பட்டது, அறிந்ததெல்லாம் சினிமா மூலமாகத்தான். நான் எப்போதும் குடும்பத்தோடு ரொம்பவும் ஒன்றிணைந்து இருப்பேன். நாம் என்ன அந்தஸ்தில் இருந்தாலும் குடும்பம் என்கிற அமைப்பு முக்கியம்னு நினைப்பேன்.

வரப்போகிற காதலியோ மனைவியோ எப்படியிருப்பாங்கன்னு ஒரு கற்பனையிருந்தது. ஆனால், சினிமாவில் வருகிற ஹீரோயின்களைப் பார்த்திட்டு அதெல்லாம் மாறிக்கிட்டே இருக்கும். தெளிந்து மேலே வளரும் போதுதான் எந்த மாதிரி லைஃப் பார்ட்னர் இருக்கலாம்னு ஒரு புரிதல் வந்திருக்கு.
படிப்பு முடிச்சுட்டு சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருந்தேன். அப்படியிருக்கும்போது இது எனக்கான தொழில் கிடையாதுன்னு புரிஞ்சது. வேற என்னவோ ஒரு விஷயத்தில்தான் நான் போய் இறங்கணும்னு தோணுது.

திடீர்னு ‘மிஸ்டர் இந்தியா’வில் ஜெயிக்கிறேன். எனக்கே என் மேலே நம்பிக்கை வருது. நம்ம கிட்டே ஏதோ ஒரு திறமை இருக்குன்னு புரியுது.
உடனே வேலையை விட்டுட்டேன். மாடலிங், சீரியல்னு போய்க்கொண்டு இருந்தது. இங்கே ‘அபியும் நானும்’ படத்தில் த்ரிஷாவின் சிங் காதலராக வந்தேன். அப்புறம் கமல் சாரோட ‘எனக்குள் ஒருவன்’, மோகன்லால், அமிதாப்போடு நல்ல படங்கள் அமைந்தது.

அப்புறம் சென்னைக்கே வந்திட்டேன். கேரியர் நல்லாப் போக, உடன் பகிர்தலாக பெஸ்ட் ஃபிரண்ட் யாருமே இல்லை. நல்ல பார்ட்னர் வரும்போது விட்டுக் கொடுத்தல், புரிதல், சீரான அன்பு, இரண்டு பேரும் பரஸ்பரம் அவங்க மேம்பாட்டுக்கு உதவியாக இருப்பதுன்னு எல்லாமே நல்லபடியாக இருக்கும்னு நினைச்சேன். ஒரு தேவதை வருவதாக இருந்தால் ஒரு சொர்க்கம் ரெடியாக இருக்கணும்னு ஒரு வீட்டை வாங்கி வச்சிட்டேன்.

அப்படி ஒரு நேரத்தில்தான் நிஷாவை சந்திச்சேன். கலா மாஸ்டர் தனியார் தொலைக்காட்சி ஒண்ணுல ஒரு ரியாலிட்டி ஷோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதில் நடுவரும், தொகுப்பாளரும் நான்தான். ஒரு பெண் தொகுப்பாளினி தேவைப்பட்டாங்க. சன் டிவியில் மகாபாரதத்தில் திரௌபதியாக நிஷா பிரபலமாகி இருந்தாங்க.

அப்ப அவங்களை சந்தித்தேன். நாலு ஷோ பண்ணிட்டு, அடுத்தடுத்த எனது சினிமா வாய்ப்பு
களினால் விலகிட்டேன். அவங்களோட ஒர்க்கிங் அனுபவம் சிறப்பாக இருந்தது. அவங்க பண்ற ஷோவைப் பார்த்து ‘நல்லாயிருக்கு’ன்னு குறுஞ்செய்தி அனுப்புவேன். அப்படித்தான் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் தானாகவே நண்பர்கள் ஆகிட்டோம். ஒரு காஃபி ஷாப்ல மீட் பண்ணலாம்னு முதல் தடவையாக பேசப்போய் ஐந்து மணி நேரமாக பேசிக்கிட்டே இருக்கோம். நான் அப்படிப் பேசுற ஆளில்லை. ஆனால், பேச விஷயமிருந்தது. பேசும்போதே அவ்வளவு நிம்மதியாக இருக்கு.
இரண்டு பேரும் அவங்கவங்க பிரியங்களை, உணர்வுகளை, குடும்பத்தை, கஷ்டங்களை, மகிழ்ச்சியை புரிந்துகொள்ள முயற்சி செய்துகிட்டே இருக்கோம். கால் மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து காபி பருகாத எனக்கு என்ன ஆயிற்று! நான் டான்ஸ் கிளாஸ் போகலாம்னு நினைக்க, அவங்க எனக்கும் டான்ஸ் பிடிக்கும்னு சொல்றாங்க.

எங்களுக்குள்ளே ஒரு புரிதல் இருந்தது. தினமும் டான்ஸ் கிளாஸில் சந்திக்க ஆரம்பிச்சோம். சின்னச்சின்ன விஷயத்திற்கும் அவங்க கிட்டே ஒப்பீனியன் கேட்க தொடங்கிட்டேன். அவங்களும் அதை சின்ன விஷயமாக நினைக்காமல் பதில் சொல்றாங்க.

ஷாப்பிங் போய் டிரஸ் வாங்கினால் ‘இது எப்படியிருக்கு’ன்னு வாட்ஸ்அப்பில் படம் அனுப்புவாங்க. இயற்கையாக படிப்படியாகப் போகுது. ஐ லவ் யூன்னு சொல்லலை. ‘நீ எனக்கு ஸ்பெஷல்’னு அவளும், ‘நீயும் எனக்கு ஸ்பெஷல்’னு நானும் நெனைக்க ஆரம்பிச்ச நேரம்.

ஒரு நாள் டான்ஸ் கிளாஸ்க்கு விடுமுறை கிடைக்க fisherman cave-க்கு லன்ச்சுக்கு போனோம். அன்னிக்குத்தான் வெளிப்படையாகப் பேசினாம். அப்பதான் சேர்ந்து முதல் தடவையாக செல்ஃபி எடுத்தோம். அன்னிக்கு கடற்கரையில் நடக்கும்போது முதல் தடவையாக அவள் கையைப் பிடித்துக்கொண்டேன். அன்பு, ஆறுதல், ஆதரவு எல்லாம் ஒரே ஒரு பொண்ணுகிட்டே கிடைச்சு அதை நாம் ஃபீல் பண்றதுதான் லவ்!

அப்ப கிறிஸ்துமஸுக்கு பக்கம். அப்படியே நடந்து வர்றோம். சர்ச் அப்படியே அமைதி கூடி கிடக்குது. பிரார்த்தனைகள் இறைந்து கிடக்கிற அந்த தேவாலயத்தின் உள்ளே போனோம். இரண்டு பேரும் மண்டியிட்டு அமர்ந்தோம். அங்கே அப்படியொரு தெளிவு கிடைக்குது. என் ஸ்பெஷல் நிஷான்னு அப்படியே தெரிய வருது.

அவங்களோட மரியாதை, பணிவு, நல்ல  நகைச்சுவை உணர்வு, சுத்தி இருக்கிறவர்களை நன்றாக பார்த்துக் கொள்வது எல்லாம் ஞாபகத்தில் வருது. இந்த புனிதமான இடத்தில் காதலைச் சொல்றதுதான் சரின்னு நினைக்கிறேன். இது சரியான நேரம்னு நினைச்சு எல்லாம் சொன்னேன். அவளுக்கு வார்த்தையே வரவில்லை.

தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறாள். என்னடா தப்பாக சொல்லிட்டமான்னு தவிக்கிறேன். அப்புறமே அது சந்தோஷத்திற்கான அழுகைன்னு புரியுது.
நிஷா அங்கேயிருந்த பைபிளை யதேச்சையாக புரட்டி ஒரு வரியை வாசிக்கத் தொடங்குகிறாள். ‘இந்த நிமிஷத்திலிருந்து உன் வாழ்க்கை ஆரம்பமாகிறது’ என வார்த்தைகள் தென்பட மூடி வைத்து நெகிழ்கிறாள்.

இருவரும் அவரவர் குடும்பங்களில் பேச ‘ஓகே’னு உத்தரவு கிடைத்தது. நான் அவங்க வீடு செல்ல, அவள் என் இல்லம் பார்த்தாள். இரு வீட்டார் சம்மதத்தோடு எங்கள் திருமணம் நடந்தது. எனக்கு பயணங்கள் செல்வது பிடிக்கும். அவளுக்கும் அப்படியே. ஏரோப்ளேனிலிருந்து குதிக்கப் பிடிக்கும். அவளும் அதில் பயமற்று இருந்தாள். எனக்குப் பிடித்த தில் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் அவளுக்கும் இஷ்டமாகி இருந்தது. ஐரோப்பாவைச் சுற்றி வந்தோம்.

எங்க புரொஃபஷன்லயும் சரி… பர்சனல் லைஃப்லயும் சரி… ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைச்சோம். திருமணம் என்பது, இருவர் இணைந்தாலும், இரண்டு குடும்பங்கள் இணைவதாகவே பொருள். என் அம்மாவை நிஷா பிரியமாக கவனித்தாள். எங்கள் அன்பின் பரிசாக தமைரா வந்தாள். தமைரா என்றால் கடவுளின் அருள் எனப்பொருள்.

இவ்வளவு நாட்களைக் கடந்து வந்து பார்த்தால் அவளுடன் நாட்களைப் பகிர தீர்மானித்தது நல்ல முடிவே. ஒரு கணமும் மனம் இருண்டு நாங்கள் விலகியதில்லை. எங்கே நின்றுகொண்டு இருந்தாலும், யாரோடு பேசிக்கொண்டு இருந்தாலும், ஒரு சின்ன பார்வையில் எங்களால் நிறைய அன்பை துளித் துளியாய் பரிமாறிக் கொள்ளமுடியும். புரிந்துகொண்டதை இன்னமும் கூட பேசலாம்… உணர்ந்து கொண்டதை…?

நா.கதிர்வேலன்