தில்லை



‘‘சங்கர், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே? தில்லைனு ஒரு நண்பர் லண்டன்லேர்ந்து வர்றார். நம்ம படத்தையெல்லாம் அங்க ரிலீஸ் பண்றது அவருதான். ஜி.ஆர்.டி.ல ரூம் போட்டிருக்கு. டீடெயில் உனக்கு அனுப்புறேன். கொஞ்சம் ரிசீவ் பண்ணி செட்டில் பண்ணிட்டு வந்திர்றியா? எனக்கு திடீர்னு கமல் கிட்டேர்ந்து போன்.

மீட் செய்தே ஆகணும்...” என்றார் நண்பர் சுரேந்தர். பெரிய தயாரிப்பாளர். மிக நெருக்கமானவர். மறுக்க முடியாமல் கிளம்பிப் போனேன்.ஏர்போர்ட் வாசலில் ரிசீவ் செய்ய வந்தவர்களின் கூட்டத்தை விட டிரைவர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. லண்டன் ஃப்ளைட் அரைவ் ஆகி அரை மணி ஆகியிருந்தது. செல்போன் அடித்தது. “அலோ... செங்கர்தானே? எங்க இருக்கிறியள்?” என்று இலங்கைத் தமிழில் பேசினார்.

நான் இடம் சொன்னேன். “போனை ஆனிலேயே வையுங்கோ” என்று வாசல் வந்ததும், நான் சொன்ன அடையாள இடத்தைப் பார்த்தார். நான் உத்தேசமாய் அவராய்த்தான் இருக்குமென்று கையசைத்தேன். ரொம்பவும் தெரிந்தவர் போல கையசைத்தபடி என்னை நோக்கி வந்தார்.  
ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். நல்ல உயரம். கருகும்மென்ற நிறம். முன்பற்கள் கொஞ்சம் வெளியே தெரிந்தபடி இருக்க உயரமும் சற்றே ஒல்லியான உடல்வாகும், அதற்கு ஏற்றாற்போல அவர் போட்டிருந்த ஜீனும், நெக் கவர் செய்த முழுக்கை டீசர்ட்டும் அதன் மேல் ஒரு லெதர் கோட்டும் கூலிங்கிளாஸும் போட்டிருந்தார்.

“வணக்கம் செங்கர்...”தலையாட்டியபடி “இருங்க வண்டி எடுத்துட்டு வரச் சொல்லுறேன்...” என்று ஏர்போர்ட் பார்க்கிங் கொள்ளைக்கு பயந்து வெளியே நண்பர் ஒருவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு வந்திருந்தேன். அவருக்கு போன் செய்து உள்ளே வரச் சொன்னேன்.
என் சாண்ட்ரோ கார் அழுக்காய் வர, தில்லையின் பெட்டி படுக்கைகளை எடுத்து டிக்கியில் வைத்துவிட்டு, அவரை ஏற்றிக் கொண்டு கிளம்பினேன். காரில் ஏறியதிலிருந்து அவர் பேசவே இல்லை.

“இப்ப என்ன படம் பண்ணுறீங்க?” என்று பேச்சை ஆரம்பிக்க, காதில் விழாதது போல வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தார். “ஏசியை இன்னம் கொஞ்சம் பெருசா வையுங்கோ...” என்றார்.“ஏற்கனவே ஃபுல்லாத்தான் சார் இருக்கு...” என்றதற்கு கொஞ்சம் முறைத்தார்  போல பார்த்தார். என் வண்டி செகண்ட் ஹேண்ட். அவ்வளவுதான் குளிரும். முதல் பார்வையில் இருந்த சிரிப்பு இப்போது சுத்தமாக இல்லவே இல்லை. என்னவோ மூடு சரியில்லை என்று முடிவெடுத்து அவருடன் பேசாமலேயே ஜி.ஆர்.டிக்குப் போய் செட்டிலானோம்.

“சார்... நான் கிளம்புறேன். சுந்தர் சார் மதியமா உங்களுக்கு கால் பண்ணிட்டு வருவாரு...” என்றேன்.இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு தலையாட்டியவர் கதவு வரைக்கும் போனவுடன் “நீங்கள் என்னை இன்ஸல்ட் செய்திட்டீங்கள்...” என்றார் கோபத்துடன்.
ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன்.“உங்க அண்ணன் லண்டனுக்கு வந்தால் அவரை எப்படியெல்லாம் கவனிப்பன்னு தெரி
யுமா? ரோல்ஸ் ராய்ஸ் கார்லதான் அவரை பிக்கப் செய்வன். ஆனா, நீங்க என்னை எதுல கூட்டி வந்தீகள்?”
“அய்யோ... சார்... அதான் உங்க கோபமா? சாரி. என்கிட்ட இந்த கார்தான் இருக்கு...” என்றேன்.

“எத்தனை பெரிய ஆக்களோட தம்பி நீங்கள்? இப்படி பழைய சாண்ட்ரோ வைச்சிருக்கீங்கள் என்று சொன்னத நம்ப சொல்லுறீயள்?”
சுந்தர் எப்போது என்னைப் பற்றி யாரிடம் அறிமுகப்படுத்தினாலும் அவரின் தம்பி என்றுதான் குறிப்பிடுவார். “ஆஹா... இப்ப புரியுது  என்ன பிரச்னைன்னு. அவரு எப்பவும் என்னை ‘தம்பி தம்பி’னுதான் சொல்லுவாரு. ஆனா, நான் அவரு நிஜ தம்பி இல்லை. தம்பி மாதிரி. நான் ஒரு ரைட்டர். உதவி இயக்குநர். படம் டைரக்ட் பண்ணுறதுக்காக ப்ரொடியூசர் பார்த்திட்டிருக்கேன்.

அவருக்கு திடீர்னு கமல்ஹாசன் கிட்டேர்ந்து கால் வந்திருச்சு. அதனால போய்ட்டாரு. ஒரு பெரிய படம் ரெடியாகுது. அதான்...” என்றதும் தில்லையின் முகம் அப்படியே வாடி வதங்கி, கண்கள் கலங்கிவிட்டன. மிக நெருக்கமாய் என்னிடம் வந்து கட்டி அணைத்து “என்னை மன்னிக்கோணும். ரொம்ப சாரி. தவறா நினைச்சிட்டன்...” என்று கிட்டத்தட்ட அழுதார்.

அப்போதிலிருந்து தில்லை எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். தமிழ் சினிமாவின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைத்திருந்தார். பெரும் சினிமா ரசிகர். குறிப்பாக உலக சினிமாக்கள், பயோபிக்குகளின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தினசரி செய்தித்தாள்களில் வரும் செய்திகளை வைத்து எடுக்கப்படும் படங்களை மிகவும் சிலாகிப்பார். அவர் சொல்லும் பல ஆங்கில, ஐரோப்பிய படங்கள் பெரும்பாலும் எனக்குத் தெரிந்த படமாக இருந்ததேயில்லை.

”உங்க ஆட்களாலதான் தமிழ் சினிமாவுக்கு உலக சந்தை வந்திச்சு...” என்றேன்.“பஞ்சம் பொழைக்க வந்தவங்களாலனு சொல்லுங்க...” என்பார்.
இலங்கைத் தமிழர்கள் பற்றி கருத்து சொல்வது என்பது இரண்டு பக்க கூர் கத்தி போல. எதை ஆதரிப்பது, எதிர்ப்பது எனும் குழப்பம் எப்போதும் உண்டு. அதனால் பொது வெளியில் பகிர என்றைக்கும் நான் விழைந்ததேயில்லை. ஆனால் யாரோ ஒருவரை தில்லை இழந்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.

“உங்க ரிலேஷன்ஸ் யாராச்சும் இறந்துட்டாங்களா இதுல?”

“ஊரை விட்டு வரும்போது எனக்கென்று ஆருமில்லை. மொத்த குடும்பத்தையும், போர்ல தொலைச்சோம். தூரத்து சொந்தமொருத்தி இருந்தா. அக்கா முறை. அவளை பாக்கத்தான் எப்பவாச்சும் ட்ரான்சிட்டுல போய் வருவேன். போன வாரம் பேசுனப்ப கூட சொன்னன். எப்படியாச்சும் வெளிய போயிருனு சொன்னேன். திட்டுனா. அன்னைக்குதான் நான் கடைசியாய் பேசினது. மண்டை ரெண்டா பொளந்து செத்துப் போயிருக்கா. பாடி கூட யாருக்கும் கொடுக்க இயலல...” என்று கடைசி பெக்கை ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.

அடுத்த சில மாதங்களில் லண்டனிலிருந்து போன் செய்த போது, இயல்பாகியிருந்தார். ‘‘லேட்டஸ்டாய் ஒரு ஜார்ஜியா மூவி பார்த்தன் செங்கர். அட்டகாசம். என்ன ஒரு வடிவான கதை. நடிப்பு. அந்த ஆக்களெல்லாம் எப்படி படமெடுக்குறானுவோ? இங்கேயும் அப்படியான படமெடுக்க வேணும். நல்ல வடிவான கதை ஒண்டு ரெடி பண்ணுங்கோ. செப்டம்பர்ல நான் திரும்ப வாரென். சைனா போய்ட்டு ஒரு பிஸினெஸ் எடுக்குறனாங்க. நல்ல காசு வரும். சின்னதா ஒரு நாலு கோடில எடுப்பம்...” என்றார்.

“சரி...” என்றேன்.“என்ன செரி. நான் பண்ண மாட்டென்னு நினைக்கிறியளோ?”

“அய்யோ... அப்படியில்லை தில்லை. எல்லாம் செட்டாகி வரணுமில்லை...”“நான் நிச்சயம் உங்களை வச்சி படம் பண்ணுவன்...” என்ற அவர் குரலில் உறுதி இருந்தது.செப்டம்பரில் தில்லை வரவில்லை. பதிலாய் சைனாவிலிருந்து போன் செய்திருந்தார். ஏதோ ட்யூப்லைட் போன்ற சமாச்சாரத்தைப் பற்றி அரை மணி நேரம் கதைத்தார். ‘‘அடுத்த முறை பிப்ரவரில இந்தியா வாரென். படம் தொடங்கிருவோம்’’ என்று போனை வைத்தார்.

கடந்த பத்து வருடங்களில் ரெண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது இந்தியா வருவார். வரும் போதெல்லாம். “நாம நிச்சயம் வடிவான ஒரு படம் பண்ணுவம் செங்கர். கொஞ்சம் ஃபைனான்ஸ் பிரச்னை... என்ன? அதனால்தான் தடை படுது. உங்கட படம் பார்த்தன். எனக்கு பிடிச்சிருந்தது. பட்ஜெட்தான் ரொம்ப சின்னதா எடுத்திட்டிங்களோ?” என்று கேட்டார்.

மையமாய் சிரித்தேன். “அடுத்த படம் நாம எடுப்பம். நிச்சயம் எடுப்பம். நம்புங்கோ செங்கர். என்ன?”

நடுவில் ஒரு முறை சைனாவில் செய்த பிசினெஸில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி வருந்தினார். “நான் மேல வந்திருவன் செங்கர். ஒண்டுமில்லாம லெண்டனுக்கு வந்தவன்தான் நான். இழக்குறதுக்கு ஒண்டுமில்லை. ஆனால், நான் நிச்சயம் உங்களை வச்சி படமெடுப்பன். என்னை நம்புறியள்தானே?”

”அட நம்பாமயா உங்க கூட பேசுறேன்?”

“நிச்சயம் பண்ணுவன். நம்புங்கோ. வாழவேணும்னு நம்பித்தான் கள்ளத்தோணி, பேக் பாஸ்போர்ட் எல்லாம் ரெடி பண்ணி முப்பது வருஷத்துக்கு முன்னாடி இங்கட வந்தனம். நான் செயிக்க பிறந்தவன் மட்டுமில்லை, செயிக்க வைக்குறவனும் கூட...” என்று வீராவேசமாய் பேசினார்.
ஒவ்வொரு முறை போன் செய்த போதும், நேரில் சந்திக்கும் போதும் “என்னை நம்புங்க செங்கர். நாம படம் பண்ணுவோம். நிச்சயம் படம் பண்ணுவோம். நான் முடியலைண்டா சொல்லிட்டுத்தான் சாவன்...” என்றார் ஒரு முறை.

“அட எதுக்கு இத்தனை பேச்சு. நான் உங்களை நம்புறேன் தில்லை. நிச்சயம் ஒரு படம் பண்ணுவோம். நம்பிக்கையில்லாம நான் ஏன் உங்களோட பேசணும். சினிமாவுல யாரு எப்ப என்னவா ஆவாங்கனு யாராலயும் சொல்ல முடியாது...” என்றேன்.

கொேரானா லாக்டவுன் என்று உலகெங்கும் செய்திகள் வர ஆரம்பித்த நேரத்தில் அவருக்கு கால் செய்தபோது வீட்டிலேயே இருப்பதாய் சொன்னார். தொழில், பணப்பிரச்சனை என பல விஷயங்கள் முளைத்திருப்பதாகவும், வீட்டிலேயே இருப்பது மன உளைச்சலைக் கொடுப்பதாகவும் சொன்னார். அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம் என்று நம்பிக்கையாக அவருக்கு பதில் சொன்னாலும் என் மனநிலையும் அதேபோலத்தான் இருந்தது.
“எல்லாம் சரியான பொறவு நாம சின்னதா ஒரு படம் பண்ணிருவோம் செங்கர். இந்த முறை என் சேவிங்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வர்றேன்...” என்றார்.

ஒரு வாரம் முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு கால் வந்தது. “செங்கரா?” என்ற கேள்வியோடு. தில்லையின் குரலில்லை.
“ஆமாம். நீங்க?”

“நான் அரவிந்தன். தில்லையோட நண்பர்...”
”சொல்லுங்க. என்ன விஷயம்?”
“தில்லை போயிட்டார்...”
“எங்க?”

“கொேரானாவுல இறந்து போயிட்டாரு...” என்றதும் நான் அதிர்ந்துதான் போனேன்.“ஒரு வாரமாய் ஹாஸ்பிட்டல்ல இருந்தாரு. உங்களைப் பத்தி சொல்லிட்டே இருந்தாரு. உங்களுக்கு ஒரு படம் பண்ணித்தரதா சொல்லிட்டே இருந்தாராம். ஒரு வேளை நான் கொேரானாவுல செத்துட்டா அவர் கிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிருங்கனு சொன்னாரு. அத்தோட அவரோட இந்திய நண்பர்களை உங்களுக்கு தெரியுமாம். அவங்ககிட்ட தகவல் சொல்லிடச் சொன்னாரு...” என்று போனை வைத்தார்.

“என்னை நம்புங்க செங்கர். நாம படம் பண்ணுவோம். நிச்சயம் படம் பண்ணுவோம். முடியலைண்டா சொல்லிட்டுத்தான் சாவன்...” என்கிற தில்லையின் குரல் எனக்குள் ஓங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

பூஜா vs ராஷ்மி

டோலிவுட்டில் பூஜா ஹெக்டேவிற்கு போட்டியாக இருப்பது ராஷ்மிகா மந்தனா என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. ‘ஆலவைகுந்தபுரம்லு’ ஹிட்டுக்குப் பின், அல்லு அர்ஜுனின் அடுத்த படமான ‘புஷ்பா’விலும் பூஜாதான் ஜோடி சேருவார்... ஹிட் ஜோடி என்ற எதிர்பார்ப்பு பூஜா மத்தியிலும் நிலவியது. இந்நிலையில் ‘புஷ்பா’வில் ராஷ்மிகா ஜோடி சேர்ந்திருப்பது, பூஜாவை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளதாம்.

70 முறை விழுந்தேன்!

மாலத்தீவில் ரிலாக்ஸ் ட்ரிப் அடிக்கும் நடிகைகள் லிஸ்ட்டில் பளபளக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அங்கே நடுக்கடலில் டூவீலர் டைப்பில் நின்றபடி பறக்கும் அட்வென்ச்சர் படகில் பயணித்து மகிழ்ந்திருக்கிறார். ‘‘செம த்ரில்லாக இருந்தது. ஏழு முறை விழுந்தவன்... எட்டாவது முறை எழுவான் என்கிற லாஜிக்படி, இந்த சாகசத்துல நான் எழுபது முறை விழுந்து கத்துக்கிட்டேன்...’’ எனச் சொல்லி சிரிக்கிறார் ரகுல்.

ஒன்றரைக் கோடி ஸ்ருதி!

மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஸ்ருதிஹாசன். அவரது இன்ஸ்டாவை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியைத் தாண்டிவிட்டதுதான் அந்த பூரிப்புக்குக் காரணம். தவிர, தெலுங்கில் ரவிதேஜாவின் ‘கிராக்’கை முடித்துவிட்டு, பவன்கல்யாண் படத்துக்கு பறந்துவிட்டார். இதில் ‘க்ராக்’ பொங்கலுக்கும், ‘வக்கீல் சாப்’ ஏப்ரலிலும் ரிலீஸ் ஆகிறதாம். இதற்கிடையே தமிழில் ‘லாபம்’ படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

கேபிள் சங்கர்