ரத்த மகுடம்-128பல்லவர்களின் பிரதான துறைமுகமாக இருந்தபடியால் காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே ராஜபாட்டை அகலமாகவே அமைக்கப்பட்டிருந்தது.
அரச வம்சத்தவர் அடிக்கடி காஞ்சியிலிருந்து மல்லைக்கு சென்று வந்தபடியால் அந்த ராஜபாட்டையை பல்லவர்கள் மட்டுமல்ல... இப்போது காஞ்சியை ஆளும் சாளுக்கியர்களும் முக்கியமாகவே கருதினார்கள்.

எனவே சிறிதளவு பழுது கூட ஏற்படாதவண்ணம் அந்த ராஜபாட்டையை பராமரித்தார்கள். குறிப்பிட்ட எல்லைக்கு ஒரு காவல் கோபுரம் வீதம் அந்த ராஜபாட்டை முழுக்கவே பல காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களும் தத்தம் குழுவினருடன் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் கோபுரத்தில் இருந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அதற்கு காரணமும் இருந்தது.

மாமல்லபுரத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மரக்கலங்களில் வந்து சேரும் சரக்குகள் காஞ்சி மாநகரத்துக்கு அந்த ராஜபாட்டை வழியாகவே வரவேண்டியிருந்தது. சாலையின் இரண்டு ஓரங்களிலும் பார வண்டிகளில் சரக்குகள் வந்து போய்க் கொண்டிருந்ததாலும், அந்த வண்டிகளோடு வணிகர்கள் பயணம் செய்ததாலும் காஞ்சி - மல்லை ராஜபாட்டை, ஒருவகையில் வணிகர் சாலை போலவே காட்சியளித்தது.

அப்படிப்பட்ட ராஜபாட்டையில்தான் அந்தப் புரவி நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.அதன் மீது சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் பதற்றம் பூத்திருந்தது. புரவிக்கும் அது தொற்றியது. எனவே ராஜபாட்டையில் அது பறந்தது.ஆங்காங்கே காவல் கோபுரத்தில் நின்றிருந்த சாளுக்கிய வீரர்களும், ராஜபாட்டையில் முன்னும் பின்னுமாக குதிரைகளில் சென்று கொண்டிருந்த அவ்வீரர்களின் தலைவர்களும் விநயாதித்தனைக் கண்டதும் ஆச்சர்யம் அடைந்தார்கள். தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தார்கள்.

அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் விநயாதித்தன் இல்லை. அவன் மனம் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது. என்னதான் சோழ இளவரசனான கரிகாலன், தங்கள் உளவாளி... பல்லவர்களுக்குள் ஊடுருவியபடி சாளுக்கிய நலனுக்காக பாடுபடுபவன்... என தன் தந்தையும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தர் தெரிவித்திருந்தாலும் அதை விநயாதித்தனால் ஏற்க முடியவில்லை.

மதுரையில் நடைபெற்ற சம்பவங்களும், தன் கண்களால் கண்ட காட்சிகளும், சாட்சியாக, தானே நின்ற நிகழ்வுகளும் அவனைத் தொந்தரவு செய்தன; கரிகாலன் நம்பத்தகுந்தவன் அல்ல என்பதை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டிருந்தன. போலவே சிவகாமியின் நடவடிக்கைகளும். என்னதான் அவள் தங்கள் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரின் ஆயுதமாக இருந்தாலும், பல்லவ இளவரசியாக பல்லவர்கள் மத்தியில் நடமாடியபடி தேவையான விவரங்களை அவ்வப்போது தங்களுக்குத் தெரிவித்தாலும் அவள் மர்மம் நிறைந்த பெண்ணாகவே தென்பட்டாள். எந்தளவுக்கு அவள் சொல்வதை நம்புவது என்ற குழப்பம் விநயாதித்தனுக்குள் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனாலேயே அவளை சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக அவனால் ஏற்க முடியவில்லை.

இதையெல்லாம் தன் தந்தையிடம் சூட்சுமமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டான். ஆனாலும் அதை அவர் நம்பியது போல் தெரியவில்லை. அத்துடன் முன்பை விட அதிகமாக கரிகாலன் - சிவகாமியின் பேச்சைக் கேட்கவும் தொடங்கி விட்டார்.எனவே, சொல்வதை விட செயலில்... அதுவும் தகுந்த ஆதாரங்களுடன் கரிகாலனையும் சிவகாமியையும் அம்பலப்படுத்தினால்தான் அவர் நம்புவார் என்ற முடிவுக்கு விநயாதித்தன் வந்துவிட்டான். அதன் ஒரு பகுதியாகவே இப்பொழுது ராஜபாட்டையில் விரைந்து கொண்டிருக்கிறான்.சரியாக இரு நாழிகைகள் பயணம் செய்தபிறகு திருக்கழுக்குன்றத்தை அடைந்தான்.

தொலைவில் இருந்து பார்த்தால் அந்த மலை சூலத்தைப் போல் காட்சியளிக்கும். அதனாலேயே சூலம் என்னும் சொல்லை உணர்த்தும் ‘கழு’ அம்மலையின் பெயரில் இணைந்தது. ஈசன் அங்கு கோயில் கொண்டிருந்ததால் அது ‘திருக்கழுக்குன்றம்’ ஆனது.கழுகுப் பட்சிகள் இரண்டு தினமும் அங்கு வந்து குன்றின் உச்சியில் அமர்ந்து பிரசாத உணவை அருந்திவிட்டு அங்குள்ள கோயிலையும் தீர்த்தத்தையும் வலம் வரும். இதனால் அம்மலைக்கு ‘பட்சி தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு.

போலவே மலையின் ஒரு பக்க தோற்றம் காக்கையைப் போல் காணப்பட்டதால் ‘காக்கைக் குன்றம்’ என்றும்; நான்கு விதமான வேதங்களே மலை வடிவாக இருந்து வருவதாகக் கருதப்பட்டதால் ‘வேதகிரி’ என்றும் திருக்கழுக்குன்றம் அழைக்கப்பட்டது.இதெல்லாம் காஞ்சியில் அவனுக்கு சொல்லப்பட்ட தகவல்கள்.

அனைத்தையும் அசை போட்டபடி மலையடிவாரத்தில் புரவியை விட்டு இறங்கியவன், அங்குள்ள கொட்டடியில் குதிரையைக் கட்டிவிட்டு மலையேறத் தொடங்கினான்.சிவபெருமானால் பிரம்மபுத்திரர்கள் எட்டு பேர் கழுகுகளாகும்படி சபிக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் கிருத யுகத்தில் கழுகுகளாக சில காலம் இக்குன்றில் இருந்து சாப விமோசனம் அடைந்தார்கள். அதேபோல் திரேதா யுகத்தில் இருவரும், துவாபர யுகத்தில் இருவரும் கழுகுகளாக இக்குன்றுக்கு வந்து சாப விமோசனம் பெற்றார்கள்.

இப்போது கலி யுகத்தில் எஞ்சியிருக்கும் புஷா, விதாதா ஆகியோர் கழுகுகளாக வந்து தினமும் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் - தாங்களும் சாப விமோசனம் பெற வேண்டுமென்று.இது உண்மையா அல்லது கட்டுக் கதையா என்று தெரியாது. ஆனால், இந்த கர்ண பரம்பரைக் கதையை மக்கள் நம்பினார்கள்; மதித்தார்கள்.

எனவே, தினமும் இந்த மலைக்கு வந்து பெருமானை வணங்கிவிட்டு நடுப்பகலில் பட்சி தரிசனத்தையும் முடிப்பதை கடமையாகக் கருதினார்கள்.
அப்படித்தான் அன்றும் விநயாதித்தன் மலையேறத் தொடங்கியபோது பட்சி தரிசனம் முடித்துவிட்டு மக்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் சாளுக்கிய இளவரசனை வணங்கினார்கள்; வேறு சிலர் புன்னகைத்தார்கள்; மற்றவர்கள் தங்கள் உடல் மொழியில் மரியாதையை வெளிப்படுத்தினார்கள்.

ஒரேயொரு மனிதன் மட்டும் விநயாதித்தனை நெருங்கி வணங்கினான். ‘‘வணக்கம் இளவரசே...’’சிந்தனை அறுபட சாளுக்கிய இளவரசன் நிமிர்ந்தான். தன் முன்னால் நின்றவனுக்கு வயது அதிகபட்சம் முப்பதிருக்கும் என்பதை பார்வையால் உணர்ந்தான். மூங்கில் கூடையை முதுகில் சுமந்து கொண்டிருந்தவனை முன் எப்போதும், தான் கண்டதில்லை என்பதை உணர்ந்தான். இருந்தாலும் மரியாதை நிமித்தமாகத் தலையசைத்து அந்த வணக்கத்தை ஏற்றான்.

‘‘குடைவரைக் கோயிலுக்கு செல்கிறீர்களா..?’’
ஆம் என்றோ இல்லை என்றோ பதில் அளிக்காமல் அந்த மனிதனை உற்றுப் பார்த்தான்.‘‘பிரமாதமான கோயில்... வாதாபியை எரித்து தீக்கிரையாக்கினாரே நரசிம்ம வர்மர்... அவர் எழுப்பிய குடைவரை ஆலயம் அது...’’ சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அந்த மனிதன் இறங்கத் தொடங்கினான்.

விநயாதித்தனின் நயனங்கள் தீப்பிழம்பாகின. ‘வாதாபியை எரித்த’ என்ற சொற்கள் அவனை தகித்தன. ‘சாதாரண குடி மக்களில் ஒருவன் ஓர் இளவரசனைச் சீண்டுகிறான்... அவனை... வேண்டாம்... மனமே அமைதி கொள்... காலம் வரும்... போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன... யுத்தத்தில் பல்லவ வம்சத்தையே எரித்துச் சாம்பலாக்கிக் காட்டுவோம்... அப்பொழுது இவன் என்ன சொல்கிறான் என்று பார்க்க வேண்டும்... அதற்காக இதே திருக்கழுக்குன்றத்துக்கு வரவேண்டும்...’ உணர்வுகளை வெளிப்படுத்தாத முகத்துடன் மலையேறினான்.

விநயாதித்தன் மட்டும் திரும்பி தன்னைச் சீண்டிய மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பார்த்திருந்தால் இந்தக் கதையின் போக்கே மாறியிருக்கும்!ஏனெனில் இறங்கிய அந்த மனிதன், பத்தடிகள் சென்றதும் நின்று திரும்பினான்.சாளுக்கிய இளவரசன் மலை மீது ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது.சில கணங்கள் அப்படியே நின்று பார்த்தவன், பிறகு தன் முதுகில் இருந்த கூடையை இறக்கினான். கூடைக்குள் இருந்த புற்களை வெகு எச்சரிக்கையாக எடுத்து மலை மீது தூவுவது போல் வீசத் தொடங்கினான்.

பாதி கூடை காலியானதும் மீண்டும் சில கணங்கள் தன்னைச் சுற்றிலும் ஆராய்ந்தான்.யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும் கூடையைப் பார்த்தான்.அதனுள் ஐந்து வெள்ளைப் புறாக்கள் இருந்தன.ஒவ்வொன்றாக எடுத்து பறக்கவிட்டான். பின்னர் நிதானமாக கூடையைச் சுமந்தபடி இறங்கத் தொடங்கினான்.மலையின் உச்சியை நெருங்கிய விநயாதித்தன், அங்குள்ள குடைவரைக் கோயிலுக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை. பரம எதிரி உருவாக்கிய ஆலயத்தினுள், தான் ஏன் நுழையவேண்டும்..?

உதட்டைச் சுழித்தவன் வலப்புறமாகத் திரும்பினான். மனிதர்களின் பாதங்கள் படாத புதர்களைக் கடந்தான்.பழமையான ஆலமரம் அவனை வரவேற்றது.அதன் முன் பத்மாசனத்தில் அவன் தேடி வந்த நபர் அமர்ந்திருந்தார்.நரம்புகளும் எலும்புகளும் தெளிவாகத் தெரிய... தாடியும், ஜடைகளும் விழுதுகளைப் போல் வளர்ந்திருக்க... அந்த வயதான மனிதர் தியானத்தில் இருந்தார்.அவர் முன் சென்று விநயாதித்தன் நின்றான்.

சரியாக அந்த நேரம் பார்த்து ஐந்து புறாக்கள் பறந்து வந்து தியானத்தில் இருந்தவரின் தலை மீது ஒன்றும், தோள்களில் இரண்டும், தொடைகளில் இரண்டுமாக அமர்ந்தன.வியப்புடன், அமர்ந்த புறாக்களை சாளுக்கிய இளவரசன் பார்த்தான்.அவை வெள்ளைப் புறாக்கள் அல்ல.சாம்பல் நிற புறாக்கள்!கடகடவென்று கரிகாலன் நகைத்தான். ‘இப்படித்தான் நடக்கும் என்று நினைத்தேன் புலவரே... ராஜதந்திரங்களை அடியேனுக்கு கற்றுக் கொடுத்தது நீங்கள்தான்... அதற்கான குருதட்சணையை உங்களுக்கு வழங்கப் போகிறேன் - குருவை மிஞ்சிய சீடன் என்று பெயர் வாங்கி! நீங்கள் அனுப்பியது வெண்மை நிற புறாக்கள்... அடியேன் அனுப்பியிருப்பது சாம்பல் நிற புறாக்கள்! யாருடைய ஆட்டம் களை கட்டுகிறது என்று பார்ப்போம்!’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்