காபூலில் முதல் டாட்டூ கலைஞர்



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் டாட்டூ சலூனைத் திறந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டார் சொரயா. இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் டாட்டூ கலைஞர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியுள்ளார்.

இஸ்லாம் மதத்தில் டாட்டூ கலைக்குத் தடை இருப்பதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றனர். அதனால் இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இருந்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார் சொரயா. மட்டுமல்ல, இஸ்லாமில் டாட்டூவுக்கு எந்த தடையுமில்லை; அது முறையானது என்று சுட்டிக்காட்டி அசத்துகிறார்.

27 வயதான சொரயா, டாட்டூ கலையை துருக்கியிலும் ஈரானிலும் கற்றிருக்கிறார். துருக்கியில் கை நிறைய சம்பளத்துடன் அவருக்கு வேலை கிடைத்தாலும் ஆப்கானிஸ்தானில் டாட்டூவைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியிருக்கிறார்.
சொரயாவின் சலூனில் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் டாட்டூ போட வருவது ஹைலைட்.

த.சக்திவேல்