சேலம் எக்ஸ்பிரஸ்!



மாம்பழத்துக்கு உலகளவில் பேர் போன ஊர் சேலம். சின்ன வயதில் மாங்காய் அடித்து பழகினாரோ என்னமோ, நடராஜன் போடும் யார்க்கர் எல்லாம் ஸ்டெம்புகளின் கில்லியை எகிறச் செய்கிறது.பிரெட்லீயில் தொடங்கி பிரதமர் மோடி வரை டுவிட்டரில் வாழ்த்து மழையால் நனைக்கிறார்கள் நடராஜனை. பேரில்தான் ‘நட’ இருக்கிறதே தவிர, நடராஜனின் வாழ்க்கையே பரபர ஃபாஸ்ட் பவுலிங் ஓட்டம்தான்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர் அறிமுகமானபோது அவருக்கு என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதே சிவப்புக் கம்பள வரவேற்பு நம் ‘சேலம் எக்ஸ்பிரஸ்’ நடராஜனுக்கும் கிரிக்கெட் உலகில் கிடைத்திருக்கிறது!யெஸ். இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் ஒரே பெயர் நடராஜன்தான். செல்லமாக ‘நட்டு’; பெருமையாக ‘யார்க்கர் கிங்’. எந்தவித பின்புலமும் இல்லாமல் திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்திருக்கும் தமிழக வீரர் இவர்.

கடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசஸ் சார்பாக பந்து வீசி விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். துல்லியமாக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதால் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என இவரை அனைவரும் புகழ்கின்றனர். லைன் & லெங்ந்த்தை சீர் செய்து பந்து வீசினால் மிகச்சிறந்த பிளேயராக உருவாகலாம் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.

சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ருத்ரதாண்டவம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.“பள்ளி விட்டுட்டு வந்தா பேட்ட எடுத்துட்டு போயிடுவான். கிரிக்கெட் அவன் ரத்தத்துல ஊறிப் போச்சு. சோறே இல்லைனாலும் பொழுதன்னைக்கும் அவனுக்கு விளையாட்டுதான்.

நாங்க ஏழ்மையான குடும்பம். என் வீட்டுக்காரரு தறி ஓட்டிட்டு இருந்தாங்க. நான் சில்லி கடை வச்சிருந்தேன். எங்க ஊர் தம்பி ஜெயப்பிரகாஷ்தான் வெளியூர்ல இவன விளையாட கூட்டிட்டு போவாங்க. சரி; அவன் ஆசைப்படுறான், விளையாடட்டும்னு ஜெயப்பிரகாஷ்கிட்டயே
விட்டுட்டோம். அவர் இல்லைனா இவ்வளவு தூரம் நட்டு வந்திருக்க மாட்டான்.

வூட்டுக்கு வந்தாக் கூட சும்மா இருக்கமாட்டான். பந்த எடுத்துட்டு கைய, கால ஆட்டிக்கிட்டுதான் இருப்பான். ஃபிரண்டுங்க கூட ஜாலியா பேசுவான். சினிமால நடிக்கக் கூட கேட்டாங்க. அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லனு மறுத்துட்டான். விளையாட்டுதான் மூச்சு. ஐபிஎல்ல விளையாடும்போது எப்ப இந்தியாவுக்கு விளையாடுவான்னு ஏங்கினோம். எங்க ஆச நிறைவேறி இன்னிக்கு பேர் வாங்கிக் கொடுத்துட்டான்...” பூரிக்கிறார் நடராஜனின் அம்மா சாந்தா.

‘‘எங்க வீட்டுல ஐந்து பேர். அண்ணாதான் மூத்தவர். இன்னிக்கு அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது எங்களோடு சேர்ந்து ஊரே கொண்டாடுது. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் பேசாத சொந்தக் காரங்க எல்லாம் எங்ககிட்ட இப்ப வந்து பேசுறாங்க.
அண்ணா கவுர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சாங்க.

அந்த கிரவுண்டுலதான் எப்பவும் இருப்பாங்க. இங்க இருக்குற பசங்க எல்லோரையும் உள்ளூர் டோர்னமெண்டுக்கு ஜெயப் பிரகாஷ் அண்ணாதான் கூட்டிட்டு போவாங்க. அவங்கதான் ‘எங்கண்ணன் பவுலிங் நல்லா போடுறதா’ சொல்லி சென்னையில் போய் சேர்த்து விட்டாங்க...” என்கிறார் நடராஜனின் சகோதரி தமிழ் அரசி.

இவை எல்லாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எல்லா விளையாட்டு வீரர்களும் சந்திக்கும் பிரச்னைகள்தான். ஆனால், சென்னையில் நடராஜன் எதிர்கொண்டது வேறு யாரும் எதிர்கொள்ளாத சிக்கல்கள்.ஆம். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கனவுகளோடு சென்னை வந்த நடராஜனுக்கு அப்போது தெரியவில்லை விளையாட்டில் ஜெயிப்பதைவிட அணியில் இடம் பெறுவதற்குத்தான் முதலில் ஜெயிக்க வேண்டும் என்பது.

அணியில் இடம் பெறுவதற்காக நடராஜன் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்கள், எடுத்த முயற்சிகள்… என்று கூடவே இருந்து பார்த்த பெயர் சொல்ல விரும்பாத அந்த கிரிக்கெட் கோச் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை.
“ஜெயப்பிரகாஷ் கண்ணில் பட்டு சென்னை வந்த நடராஜ், லோயர் டிவிஷன்ல முதலில் ஆடினார். இங்க ஐந்து டிவிஷன் இருக்கு. அதில் ஃபர்ஸ்ட் டிவிஷன்ல இருந்து ரஞ்சி டிராஃபிக்கு தேர்வு பண்ணுவாங்க.

நடராஜன் லோயர் டிவிஷனுக்கு அப்புறம் செகண்ட் டிவிஷன் ஆடப் போனார். அங்க நல்லா பண்ணியும் நெட் பவுலராவே வச்சிருந்தாங்க. ஆனா, இவர் போடுற ஸ்பீடை வச்சு ஃபர்ஸ்ட் டிவிஷனுக்கு எடுத்தாங்க.சென்னை முழுக்க நடராஜனுக்கு ‘ஸ்பீடு’னு பேர் வந்தது. ‘நரம்பு மாதிரி இருந்துட்டு பயங்கரமா போடுறான்’னு பேசுவாங்க. கெம்ப்ளாஸ்ட்டுக்கும், இந்தியா சிமெண்டுக்கும் லீக் மேட்ச் நடக்கும்போது அண்டர் 19
இந்தியால ஆடிய ஹேமந்த் குமார் விக்கெட்டை ஷார்ப் பவுன்சர் போட்டு எடுத்தார்.

டாப் பிளேயர் விக்கெட்டையே எடுத்துட்டார்னு கெம்ப்ளாஸ்ட் ஒரு பெரிய தொகையை சம்பளமா நிர்ணயித்து கூப்பிட்டாங்க. இதுக்கு அப்புறமாதான் தங்கச்சிங்க படிக்க உதவி செய்ய ஆரம்பித்தார்.இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் இந்த மாதிரி லீக் சிஸ்டம் வச்சு, பிளேயர்ஸுக்கு நல்லா பே பண்றாங்க. அதில் கெம்ப்ளாஸ்ட், இந்தியா சிமெண்ட் கிளப் முதன்மையானது. கெம்ப்ளாஸ்ட்ல இருந்துதான் எல்.பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின், சடகோபன் ரமேஷ், ப்யூஸ் சாவ்லானு நிறைய பிளேயர்ஸ் இந்திய அணிக்கு போனாங்க.

நம்ம ஊர்ல ஃபாஸ்ட் பவுலருக்கு அதிகமா இன்ஜுரி வரும். வெயில்… பிட்ச்... எல்லாம் கட்டாந்தரை மாதிரி இருக்கும். தண்ணீர் இல்லாததால கிரவுண்ட் முழுசும் கல்லு மாதிரி ஆகிடும். ஃபாஸ்ட் பவுலருக்கு இவ்வளவுதான் போடணும்னு ஒரு லோடு இருக்கு. நடராஜன் ஓவர் லோடு, தவிர ஒவ்வொரு கோச்சும் ஒவ்வொரு விதமா ஆக்‌ஷன் மாத்துனதால ஷோல்டர், எல்போ இன்ஜுரி அவருக்கு வந்துட்டு இருந்தது.

இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டுக்கு அவர் தேர்வானப்ப த்ரோ பால்னு கால் பண்ணிட்டாங்க. அந்த ஆக்‌ஷனை சரிபண்ணாதான் லீக் ஆட
முடியும். தன்னுடைய தன்னம்பிக்கைனால இதை சரி செய்தார். எல்லாமே புதுசா மாறினதால ஸ்விங் மாறிடுச்சு. ஸ்பீடும் கம்மியாகிருச்சு. எல்போ பெயின் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துல கெம்ப்ளாஸ்ட்டை சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட்டான ஷ்யாமும், பாலாவும் அவரை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.

இருந்த கிளப்ல சம்பளம் உயர்த்தாததால ஏற்கனவே இருந்த கிளப்கிட்ட பேசினார். அங்க இருந்த சிலர், ‘அவன் வேஸ்ட் ஆகிட்டான்’னு தட்டிக்
கழிச்சாங்க. இந்த நேரத்துலதான் சரியா டிஎன்பிஎல் வந்தது. சூப்பர் ஓவர் மேட்ச்சுல ஆறு யார்க்கர் போட்டு எல்லாரையும் மிரள வைச்சார். இதைப் பார்த்துட்டு தான் கிங்ஸ் 11 பஞ்சாப்புக்கு சேவாக் பிக் பண்ணார். அங்க ஒரு மேட்ச் கூட ஆடல.

தனக்கு கிடைச்ச பேரை வச்சு ஊர்ல கிரிக்கெட் அகடமி ஆரம்பிச்சார். கிரிக்கெட்ல இருந்து ஒதுங்கி அதுல ஃபோக்கஸ் பண்ணலாம்னுதான் இருந்தார். காரணம், இங்க அவருக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு. ஐபிஎல், இந்தியா எல்லாம் ஆடுவோம்னு நடராஜன் நினைச்சே பார்க்கலை. எல்லாரும் அவர் குறையைத் தான் பார்த்தாங்க. நிறையை கண்டுக்கவே இல்ல.

ஆனா, இந்த வருஷம் ஐபிஎல்ல ஹைதராபாத் சன் ரைசஸ் டீம்ல ஆடினார். டீம்ல இருந்த பெரிய பவுலர்ஸை எல்லாம் உட்கார வச்சு நடராஜை எல்லா மேட்ச்சும் ஆடவச்சாங்க. முரளி தரனுக்கு இவர்மேல ஒரு ஹோப் இருந்தது. முதல் மேட்ச்சுல இருந்தே நல்ல ரிதம்ல இருந்தார்.

கடைசி ஆறு மாசம் ஃபிட்னஸ்ல நல்லா ஃபோக்கஸ் பண்ணார். இவ்ளோ பெரிய சீசன் தொடர்ந்து ஆடுவது அவ்வளவு ஈசி கிடையாது. ஐபிஎல் முழுதும் ஆடி, ஒன் டே, டி 20னு ஃபிட்டாவே இருப்பது நல்ல விஷயம்.

சின்ன வயசுல இருந்தே டிரைனிங் பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. சாப்பாடும் பெருசா இருக்காது. இதையெல்லாம் மீறிதான் நடராஜன் ஜெயிச்சிருக்கார். வீட்டு மொட்டை மாடி உட்பட கிடைச்ச இடங்கள்ல எல்லாம் அவர் பயிற்சி எடுத்தது முக்கியமான விஷயம்...’’ என்று வியக்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத கோச்.  நடராஜனின் தாண்டவம் தொடரட்டும்!

அன்னம் அரசு