கன்னடத்தில் ஹிட் அடித்து தமிழுக்கு வருகிறது!



‘‘ஒரு செமையான த்ரில்லர் தமிழில் வந்து எவ்வளவு நாளாச்சு… யோசிச்சுப் பாருங்க. வைரஸ் வந்து பாடுபடுத்திட்டு இப்ப தியேட்டர் திறந்தபிறகு உங்கள் ஞாபகத்திற்குள் அது அடங்காது. இது அடுத்தடுத்த ஆச்சர்யங்களோட அழுத்தமாக இருக்கிற த்ரில்லர்.
‘கபடதாரி’ங்கிற பெயருக்கு பாசாங்குக்காரன், பசுத்தோல் போர்த்திய புலின்னு எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் உண்டு. அருமையாக உட்கார்ந்து பார்க்க ஒரு படம். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் தயாரிக்க செம ஹிட்டடித்த படம். அதன் உரிமை வாங்கி இங்கே தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறோம்.

முதல் பாதி முழுக்க அடுக்கடுக்கா வந்து விழுகிற முடிச்சுகள், அடுத்த பாதி அவிழ்கிற விதம்னு ரொம்ப பிரமாதமாக வந்திருக்கு. கொஞ்சம் உளவியலும் உள்ளே இருக்கு. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதுசாயிருக்கும்...” நிதானித்துப் பேசுகிறார் டைரக்டர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ‘சைத்தான்’, ‘சத்யா’ படங்களினால் பரவலாக தெரிய வந்தவர்.த்ரில்லரில் உட்கார வைப்பது கஷ்டமான வேலை இல்லையா..?

அதை உணர்ந்தே இருக்கிறோம். கதையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறோம். மூலக்கதையே பிரமாதமாக இருக்கும். நிறைய விவரங்கள் சேகரித்து செய்த கதை. பொதுவாக இதுமாதிரி படங்களில் ஒளிப்பதிவில் பயமுறுத்தி, பின்னணி இசையில் திடுக்கிட வைப்பாங்க. அதோடு இதில் யார் கபடதாரிங்கிற உண்மையும் சேர்ந்து கலந்து வந்திருக்கு.

40 வருஷத்திற்கு முன்னாடி நடந்த ஒரு க்ரைமில் மறுபடியும் உண்மை தேடி ஒரு பயணம் செய்திருக்கோம். இப்ப அந்த குற்றவாளி எப்படியிருப்பான், எந்த மாதிரி அதன் தேடுதல் நீள்கிறதுனு அடுத்தடுத்து பரபரப்பில் உங்களை ஸ்கிரிப்ட் கூட்டிட்டு போகும். திருப்பங்கள் உங்களுக்குத் தேவையான திருப்தியைத் தரும்.

இதில் சிபிராஜுக்கு நடிக்க இருக்கிற வாய்ப்புகள் என்ன..?

எனக்கு குவாவிட்டியில் கொஞ்சமும் குறை வைக்கக்கூடாதுன்னு ஆசை. அதற்கு சிபிராஜ் கொடுத்தது பெரிய ஒத்துழைப்பு. அவர் இப்போது செய்திட்டு வர்ற எல்லா படத்திலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இப்படி யொரு நல்ல பாடி லாங்குவேஜில் நீங்க சிபியை பார்த்திருக்க மாட்டீங்க.

எனக்கு ஏற்கனவே அவரை டைரக்ட் செய்து பழக்கமானதால் அவரோடு வேலை செய்வது சுலபமாக இருந்தது. வேண்டிய ஆக்‌ஷன், சுவாரஸ்யம் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும்.

கன்னடத்தில் படத்தைப் பார்த்ததும் புரடியூசர் தனஞ்செயன் சாருக்கு இதை தமிழில் செய்ய, முதலில் ஞாபகம் வந்தது சிபிராஜ்தான். படத்திற்கு அவர் கொடுத்த நல்ல ஒத்துழைப்பிற்கும், அவரோட அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நான் பதில் மரியாதை செலுத்தணும். அதுக்கு ‘கபடதாரி’ படத்தை ஒரு வெற்றியாக சமர்ப்பிக்கணும்னு நினைச்சு உழைச்சிருக்கேன்.

ஹீரோயின்…

நந்திதா ஸ்வேதா. இதில் அவங்களுக்கு ரொம்பவும் முக்கியமான கேரக்டர். ஆனால், லவ் போர்ஷன்னு நெருக்கமெல்லாம் கிடையாது. பரபரக்கிற த்ரில்லரில் அதற்கெல்லாம் அவசியமில்லாமல் போய் விட்டது. மனதில் பதிகிற இடங்களாகப் பார்த்து வருவார்கள். மிக முக்கியமான கட்டங்களில் படத்தின் முக்கிய இடத்தை வகிக்கிறார்.

இந்தப் படத்தில் நிறையப்பேர் புதுமுகங்கள்தான். இந்தக் கதைக்கு அப்படித்தான் தேவைப்பட்டார்கள். நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே போன்றவர்
களுக்கு முக்கிய ரோல்கள். கேமராவும், பாடல்களும் குறிப்பிடும்படியாக இருக்கின்றன...

இந்தப் படத்துக்கு கேமரா ரொம்ப முக்கியம். சதா பரபரப்பும், த்ரில்லும் ஒவ்வொரு நிமிஷமும் துரத்திக்கிட்டு ஓடுற படம். இதில் கேமராவைத் தூக்கிச் சுமந்த ராசாமதி பிரமாதப்படுத்தியிருக்கார். சைமன்தான் மியூசிக். நான்கு பாடல்கள் வந்திருக்கு. நாம் எல்லோரும் பாடல்கள் கேட்டே வளர்ந்து வந்திருக்கோம்.

உணர்ந்து எழுதுகிற கவிஞனின் பாடல் வரிகளும், அதை நல்ல மனநிலையில் பாடல் ஆக்குகிற இசையமைப்பாளனும் நேர் கோட்டில் இணைந்தால்தான் நல்ல பாடலுக்கு வழிவகை பிறக்கும். அப்படிப் பார்த்தால் எனக்கு அந்த ஆசீர்வாதம் ஒவ்வொரு படத்திலும் வந்துகிட்டே இருக்கு. அதற்கு ‘கபடதாரி’யும் விதிவிலக்கல்ல.  நல்ல த்ரில்லருக்கும், பதைபதைப்புக்கும், எதிர்பாராத திருப்பங்களுக்கும், நல்ல கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட்டுக்கும் ‘கபடதாரி’ உத்தரவாதம் அளிக்கும்!  

நா.கதிர்வேலன்