கொரோனா தடுப்பூசி Latest update



ஒரு நல்ல செய்தி… கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவிட்டது. கடந்த வருடம் இந்நேரம் உலகையே மிரட்டிக் கொண்டிருந்த கொரோனா என்னும் கொடிய அரக்கனை மனித குலம் வெல்லப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. “நெடிதான இந்த இருள் பாதையில் வெளிச்சத்தின் புள்ளிகள் வேகமாக பிரகாசமாகி வருகின்றன. விரைவில் நாம் இதைக் கடப்போம்...” என்று கவித்துவமாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்
உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அந்தோனம் ஜிப்ரேசியஸ்.

உலகம் முழுதும் ஒவ்வொரு நாடும் தடுப்பூசிக்காக தனித் தனியாகவும் கூட்டாக இணைந்தும் பல நூறு ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு நாடும் தத்தம் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் நமக்கான தடுப்பூசிகளை தயாரித்துக் கொள்வதற்கான தன்னிறைவில் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதாவது, இந்தியாவுக்கான தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொண்டி ருப்பது இந்திய நிறுவனங்கள்தான். இதில் உள்ள ஒரே நடைமுறைச் சிக்கல், தடுப்பூசிகளை அனைவருக்கும் விரைவில் கொண்டு சேர்ப்பதுதான்.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் சொல்வது போல், உலகம் முழுதும் உள்ள மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவ சமூகங்கள் கொரோனா தடுப்பூசிக்கான புதிய நடைமுறைகளை உருவாக்கிவிட்டன. இனி, உலக சமூகங்கள் அந்த தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுசெல்வதற்கான புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு ஆய்வகங்களில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. பூனேவை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. அஸ்ட்ரா ஜெனக்கா என்ற நிறுவனத்தின் தடுப்பூசியும் இப்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி லேபாரட்டரிஸ் நிறுவனம் ரஷ்ய டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட் பண்ட் என்ற நிறுவனத்துடன் கூட்டாண்மை அமைத்து தயாரிக்கும் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும் தயாராகிக் கொண்டிருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அமைப்புடன் இணைந்து தயாரித்த தடுப்பூசிதான் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

அரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் உட்பட பலருக்கும் இந்த தடுப்பூசி பரிசோதனை முயற்சியாகப் போடப்பட்டது. இதில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மீடியாவில் தடுப்பூசி முயற்சி தோல்வி என்ற பிரசாரம் அனலடித்து வருகிறது. இது சிறு சறுக்கல்தான்; விரைவில் தடுப்பூசி முயற்சி வெற்றியடையும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

குஜராத்தைச் சேர்ந்த இன்னொரு மிகப் பெரிய மருத்துவ நிறுவனமான ஜெய்டஸ் கேடில்லா லிட் என்ற நிறுவனமும் பிரத்யேகமாக கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி வருகிறது.இந்த முயற்சிகள் ஒவ்வொன்றுமே புதிய தடுப்பூசி நடைமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
பொதுவாக, ஒரு தடுப்பூசி என்பது ஆய்வகங்களிலேயே மூன்று வருடங்கள் வரை கண்காணிப்பில் வைக்கப்படும். இந்த கொரோனாவின் வேகமான பரவல் காரணமாக, இதற்கென பிரத்யேக ஆய்வு நடைமுறைகளை உருவாக்கி, சுமார் ஒரு வருட காலத்தில் இதனைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன உலக மருத்துவ சமூகங்கள்.

எனவே, இந்தத் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டின் (2021) தொடக்கம் முதலே உலகம் முழுதும் நடைமுறைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட செலவுகளுக்கு உலகம் முழுதும் சுமார் முப்பத்திரண்டாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இதைவிட எட்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும் என்றும் அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நமக்கு இந்தக் கொரோனாவை எதிர்கொள்ள பெரும் நிதி தேவை என்று சொல்லப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி சந்தையாக இந்தியாதான் இருக்கும் என்று ஓர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. உலகம் முழுதும் முதல் கட்டமாக நூற்று அறுபது கோடி டோஸ்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 80 கோடி டோஸ்கள் அல்லது சுமார் அறுபது சதவீதம் இந்தியாவுக்கே தேவைப்படும் என்கிறார்கள். இது நடந்தால்தான் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பாற்றல் சாத்தியப்படும்.

ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா ஜெனக்கா இணைந்து தயாரிக்கும் தடுப்பூசியில் ஐம்பது கோடியை இந்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. மேலும் பத்து லட்சம் தடுப்பு மருந்துகளை அமெரிக்காவின் நோவாக்ஸ் நிறுவனத்திடமும் பத்து கோடி மருந்துக்கான ஆர்டரை ரஷ்யாவின் கமேலியா ரிசர்ச்சின் மூலம் தயாராகும் ஸ்புட்னிக் வி மருந்துக்காகவும் செய்துள்ளோம். இதனை அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக் கழகத்தின் உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது.

நமக்கு அடுத்த நிலையில் ஐரோப்பிய யூனியன் கிட்டத்தட்ட அதே அளவு தடுப்பு மருந்துகளை ஆர்டர் செய்துள்ளது. ஆனால், மிக மோசமாகப் பாதிப்படைந்த அமெரிக்காவோ சுமார் பத்து லட்சத்துக்கும் சற்று அதிகமான டோஸ்களை மட்டுமே ஆர்டர் செய்துள்ளது.
பிரேசில், இந்தியா போன்ற மருந்தை தயாரிக்கும் சாத்தியமுள்ள நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை ஆய்வு நிறுவனங்க
ளிடம் பேரம் பேசி வாங்குவதற்கான போட்டியில் முதலிடம் வகிக்கின்றன.

கடந்த மாதம் இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘‘சுமார் ஐம்பது கோடி டோஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் சுமார் முப்பது கோடிப் பேருக்கு அடுத்த ஆண்டு (2021) ஜூலைக்குள் போடப்பட்டுவிடும்...” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கேடில்லா நிறுவனங்கள் நம்மால் வருடத்துக்கு நாற்பது கோடி மருந்துகளை தயாரிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக அடுத்த ஆண்டுக்குள் இருபத்தைந்து கோடிப் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பார்கள். படிப்படியாக அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும். ஹெர்டு இம்யூனிட்டியை நெருங்கிவிட்டாலே நமக்கு பிரச்னை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் இருபத்தைந்து கோடி தடுப்பூசிகள் அத்தியாவசியமான தேவை இருக்கும் முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கும்; கொரோனா தடுப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதார நிபுணர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கியமான கொரோனா போராளிகளுக்கும் முன்னுரிமை தந்து போடப்படும் என்றும் சொல்கிறார்கள்.
கொரோனா மருந்தை எடுத்துச் செல்வது, சரியான வெப்பநிலையில் பராமரிப்பது, முறையாக பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து அதனை ஒவ்வொருவருக்கும் போடுவது உட்பட ஒவ்வொரு கட்டத்திலுமே நமக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது.

உலகம் முழுதுமே கொரோனா அச்சம் இருந்தாலும் பெரும் மக்கள் தொகை கொண்ட நமக்கு இந்த சவால் வேறு யாரைவிடவும் மிகப் பெரிது. இத்தனை கோடி மக்களுக்கும் ஒரு பெருந்தொற்று தடுப்பூசியைப் போடுவது என்பது எளிதல்ல. ஆனால், அதனையும் நாம் சமாளிப்போம். நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றுகள் பிரகாசமாகவே உள்ளன. ஆம், நாம் கொரோனாவை வெல்லத்தான் போகிறோம்.

இளங்கோ கிருஷ்ணன்