தல! sixers story -29



மேட்ச் வின்னர்!

கேப்டன் திராவிட் தன் விக்கெட்டை இழந்ததுமே வழக்கம்போல வால் வீரர்கள் பிட்ச்சுக்கும், ஃபெவிலியனுக்குமாக ரேம்ப் வாக் நடத்தினார்கள்.சச்சின் தன் விக்கெட்டை இழக்கும்போது மீதம் 5 ஓவர்கள் இருந்தன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. ஸ்கோரும் 305 ஆக இருந்தது.
அடுத்த 5 ஓவர்களில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் கபளீகரம் செய்தார்கள் பாகிஸ்தான் பவுலர்கள்.50 ஓவருக்கு 2 பந்துகள் மிச்சமிருக்க 328 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்திய அணி.

இருப்பினும் -இதுவே கூட 15 ஆண்டுகளுக்கு முன்பு சேஸிங் செய்ய ஓர் அணிக்கு இமாலய இலக்குதான்.தொடர்ந்து ஆடத் தொடங்கிய பாகிஸ்தானுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சல்மான் பட் செஞ்சுரி அடித்து அருமையான தொடக்கத்தை தந்தார்.ரன் மழைக்கு இடையே நிஜ மழையும் புகுந்து விளையாடியது.

47 ஓவரில் 311 ரன்களை அந்த அணி எட்டியிருந்தபோது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியை எட்டியது.டெஸ்ட் போட்டியை கோட்டை விட்டிருந்த இந்திய அணி, ஒருநாள் தொடரின் முதல் போட்டி யில் இமாலய ஸ்கோர் அடித்திருந்தும் தோற்றது, இந்திய அணியின் தன்னம்பிக்கையையே குலைத்தது.

ஆனால் -மீதமிருந்த நான்கு போட்டிகளையுமே இந்தியாதான் வென்றது.பாகிஸ்தான் மண்ணிலேயே அந்த அணியை 4 - 1 என்கிற அளவில் இந்தியா பெற்ற தொடர்வெற்றி, இதுவரையிலான இந்தியா - பாகிஸ்தான் தொடர்களிலேயே வெகுசிறப்பான வெற்றி.

மூன்றாவது போட்டியிலும், ஐந்தாவது போட்டியிலும் தலா 72, 77 ரன்கள் அடித்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் தோனி நின்றது குறிப்பிடத்தக்கது. தான், விளையாடிய மூன்று இன்னிங்ஸில் இரண்டு செஞ்சுரிகள் விளாசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.‘தோனி ஒரு மேட்ச் வின்னர்’ என்கிற நம்பிக்கை அத்தொடரில்தான் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம், தோனியின் ஆட்டத்தை வெகுவாக ரசித்தார்.ஆஸ்திரேலிய ஜாம்பவான் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் தோனியை அவர் ஒப்பிட்டார்.இத்தொடருக்குப் பிறகு தோனி ஆடிய ஆட்டமெல்லாம் பிரேக்கிங் நியூஸ்தான்.
அடுத்து இந்தியாவுக்கு இங்கிலாந்து வந்த தொடரிலும் தோனி, பிரகாசிக்கத் தவறவில்லை.

கேப்டன் திராவிட்டுக்கும், பயிற்சியாளர் கிரேக் சாப்பலுக்கும் தோனி மீது முழு நம்பிக்கை ஏற்பட்டது.ரசிகர்களோ, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக தோனி யைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் 50 போட்டிகளை ஆடுவதற்கு முன்பாகவே ஐசிசி ரேங்கில் நெம்பர் ஒன் பொசிஷனை எட்டிய பேட்ஸ்மேன் ஆனார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி சென்றபோது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்ச்சைக்குக் காரணமானார்.டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7வது வீரராக வந்து ருத்ரதாண்டவம் ஆடினார்.52 பந்துகளில் 69 ரன்களை விளாசியிருந்தார். ஒரு ஹாட்ரிக் சிக்ஸர் உள்ளடக்கி, மொத்தம் 6 சிக்ஸர்களைப் பறக்க விட்டார். எதிரணி கேப்டனான உலக கிரிக்கெட் ஜாம்பவான் லாராவையே கடுப்பேற்றின இந்த அதிரடி
சிக்ஸர்கள்.

7வது சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தோனி அடித்த ஷாட்டை எல்லைக் கோட்டில் டேரன் கங்கா கேட்ச் பிடித்தார்.அவர் எல்லைக்கோட்டை மிதித்து விட்டதால் அதுவும் சிக்ஸரே.ஆனால் -அவர் எல்லைக்கோட்டை தொட்டாரா இல்லையா என்பது டிவி ரீப்ளேயில் சரியாகத் தெரியவில்லை.இதற்குள்ளாக களத்தில் லாரா, ருத்ரதாண்டவமாடத் தொடங்கிவிட்டார்.

தோனிக்கு அவுட் கொடுத்தே ஆகவேண்டும் என்று அம்பயர்களை அச்சுறுத்தினார். அம்பயர்களின் கையில் இருந்த பந்தை பிடுங்கினார்.தோனியை நோக்கி வந்தவர், “பெவிலியனுக்கு நட…” என்றார்.தோனி, அம்பயர்களைப் பார்த்தவாறே ‘அவுட்’ கொடுப்பதற்கு முன்பாகவே பெவிலியனுக்குத் திரும்பி விட்டார்.சுமார் கால் மணி நேரம் பிரச்னை ஓடியது.

மேற்கிந்திய அணி வீரர்கள், அவுட் கொடுத்தே ஆகவேண்டும் என்று கிட்டத்தட்ட மறியல் செய்ய, கேப்டன் திராவிட், பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்து ‘கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம், இந்தியர்கள் ஜென்டில்மேன்கள்’ என்று நிறுவினார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு அவுட் கொடுப்பதற்கு கால் மணி நேரத்துக்கும் மேல் அம்பயர்கள் எடுத்துக் கொண்ட சம்பவம் என்பது தோனிக்கு மட்டுமே இதுவரையில் நடந்திருக்கிறது.அந்த டெஸ்ட் சீரிஸை இந்தியா வென்றது.எனினும் -2006ம் ஆண்டின் பிற்பகுதியில் அதிர்ஷ்ட தேவதை இந்திய அணியின் பக்கமில்லை.

ஒட்டுமொத்தமாக அந்த ஆண்டே இந்திய கிரிக்கெட்டுக்கு படுசோதனையான ஆண்டாக ஆகிவிட்டது. விளையாடிய 30 ஒருநாள் போட்டிகளில் 13 போட்டிகளை மட்டுமே இந்தியாவால் வெல்ல முடிந்தது.குறிப்பாக -உலகக் கோப்பைக்கு டிரையலாக நடந்த ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்த சுற்றுக்கே முன்னேற முடியாத அளவுக்கு படுமோசமான நிலையில் இருந்தது இந்தியா. டெஸ்ட் போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை.

பயிற்சியாளராக நீடித்த கிரேக் சேப்பல், கேப்டன் திராவிட் ஆகியோரின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதானது.இந்த படுசோதனையான காலக்கட்டத்திலும் தோனி, யுவராஜ் போன்ற சில இளம் வீரர்கள் ஒளிரத் தவறவில்லை என்பது மட்டுமே ஆறுதல்.2007ம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருந்தன.

படுமோசமான ஃபார்மில் இருக்கும் இந்தியாவால் இதில் என்ன சாதிக்க முடியும் என்று ரசிகர்கள் சந்தேகப்படத் தொடங்கி னார்கள்.எனினும் -2007ன் தொடக்கத்தில் மேற்கு இந்தியத் தீவு, இலங்கை அணிகளோடு நடந்த ஒருநாள் தொடர்களில் இந்தியா வென்று, தானும் உலகக்கோப்பை ஆட்டத்தில் இருப்பதை உறுதி செய்தது.

அணிக்குத் திரும்பியிருந்த தாதா கங்குலியும், தான், ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார்.இளம் வீரராக தன்னுடைய முதல் உலகக்கோப்பை கிரிக்கெட்டை எதிர்கொண்டார் ‘தல’ தோனி.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்