பாதுகாப்புடன் கேரவன் ரெடி! ஷூட்டிங் எப்ப..?



‘‘கொரோனா டைம்ல பலரும் கேரவன்களை வாடகைக்கு எடுக்கறாங்க. டூரிஸ்ட்கள் ஃபிளைட்டுல வந்தாலும் கூட, விமான வசதி இல்லாத இடங்களுக்கு பயணிக்க கேரவன்களை விரும்பறாங்க. ஏன்னா, தனிமையா, இனிமையா, பாதுகாப்பா பயணிக்க இதுதான் பெஸ்ட்னு நினைக்கறதால, இந்த டைம்லயும் கேரவன் பிசினஸ் கொஞ்சம் நகருது.

ஆனா, எங்க மெயின் ஏரியா சினிமா. வேனிட்டி வேன்களின் பயன்பாடுகள் சுத்தமா ஸ்டாப் ஆகிடுச்சு. எல்லா மார்வாடிகளையும் சேட்டுனு சொல்ற மாதிரி, படப்பிடிப்புக்கு அனுப்பற அனைத்து வண்டிகளையும் கேரவன்னு சொல்லிடறோம்...’’ கலகலக்கும் ‘ரிலாக்ஸ் கேரவன்’ அருணாசலம், பத்திரிகையாளர், செய்தி வாசிப்பாளர், ஆர்ட்டிஸ்ட் மேனேஜர், நடிகர், யூடியூப் ஓனர் என பன்முகம் கொண்டவர்.

‘‘கேரவன்ல மூணு வகைகள் இருக்கு. முதலாவது கேரவன். இதுல நீங்க  இண்டி பெண்டன்டா பயணிக்க முடியும். அதாவது ஃபேமிலியாகவோ, தனியாகவோ ஆல் இண்டியா டூர் மாதிரி ட்ராவல் பண்றதுக்கு உதவக்கூடியது.  அடுத்த வகை, கேம்பர் டிரெய்லர் வேன். டோவ் பண்ணி கட்டி இழுத்துட்டு போற வண்டிகள். டோவ் (tow) பண்ணி இழுத்துட்டு போற வண்டி இல்லைனா, அது உயிரில்லாத ஜடம் மாதிரிதான். மூவ் ஆகாது. பவர் சப்ளை எதுவும் கிடைக்காது.

இந்த வகை வண்டிகளை இந்தியாவுல இப்ப யாரும் பயன்படுத்துறது இல்ல. பர்மிஷன்ல இருந்து பல விஷயங்கள் அதுல சிரமம். அதனால அது காணாமப் போச்சு. மூணாவது வகை, வேனிட்டி வேன். வேனிட்டினாலே மேக்கப், ரெஸ்ட் எடுக்கறது, டிரெஸ் சேஞ்ஜ் பண்றதுதான். சினிமா, சீரியல், விளம்பரப் படப்பிடிப்புகள்ல பயன்படுத்துவது வேனிட்டி வேன்கள்தான்.

எங்ககிட்ட கேரவன்கள், வேனிட்டி வேன்கள் ரெண்டுமே இருக்கு. கேரவன்களை டூரிஸ்ட்களுக்கும், வேனிட்டியை சினிமா ஷூட்டுக்கும் வாடகைக்கு விடறோம். ஒருநாளைக்கு மூவாயிரத்துல இருந்து ஏழாயிரம் வரை வாடகை.அடிப்படையில நான் பத்திரிகையாளன். பார்மஸி கிராஜுவேட். பூர்வீகம் காரைக்குடி பக்கம் ராங்கியம். ஆனா, படிச்சதெல்லாம் திருச்சிலதான். ஸ்கூல் படிக்கும்போதே, புத்தகங்கள் படிக்கற பழக்கத்தை எனக்குள் விதைச்சவர் என் தாய்மாமா.

பாடப்புத்தகங்கள் தவிர மத்த புக்ஸையும் படிச்சதால ‘விகடன்’ மாணவர் நிருபரானேன். அதுல சிறப்பா ஒர்க் பண்ணினதால சென்னைக்கு கூப்பிட்டாங்க. அங்க ஒர்க் பண்ணும் போதே, சேனல் வாய்ப்பு வந்துச்சு. ஒரு தனியார் சேனல்ல செய்தி வாசிப்பாளரானேன். சில வருஷங்களுக்குப் பிறகு அந்த சேனலை மூடினதால, மறுபடியும் ‘விகடனு’க்கு வந்தேன். என் நல்ல நேரம் சன் நெட் ஒர்க் சேர்மன் கலாநிதி மாறன் சாரை பேட்டி எடுக்கற வாய்ப்பு அமைஞ்சது. மறுபடியும் அதிர்ஷ்டம் என் பக்கம். சாரே கூப்பிட்டு ‘சன்’ல செய்தி வாசிப்பாளராக்கினார். இனிமையான அனுபவம்.
 
இப்படி நான் மீடியாவுல இருக்கும்போதுதான், விக்ரம் சாரை பேட்டி காணப் போயிருந்தேன். ‘அந்நியன்’ பட ஷூட்டிங் அது. அங்கதான் முதன்முதலா நான் கேரவன் வண்டியை பார்த்தேன். அது, ப.சிதம்பரத்தோட மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வண்டி. அப்ப அவர் மட்டும்தான் 12 வண்டிகள் வச்சிருந்தார். எல்லாமே ஃபாரீன்ல இருந்து இறக்குமதியான வண்டிகள். Tow பண்ணி இழுத்துட்டு போற வண்டி. விக்ரமுக்கு மோட்டார் பத்தி நாலேஜ் அதிகம். அதனால, அவர்கிட்ட கேரவன் பத்தி நிறைய கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.

ஆர்வம் அடங்கல. ஃபாரீன்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ்கிட்ட அது தொடர்பான புக்ஸ் எல்லாம் கேட்டு வாங்கி, படிச்சு பார்த்தேன்...’’ என ரீவைண்ட் போனவர், முதல் கேரவனை மும்பையில்தான் வாங்கியிருக்கிறார். ‘‘அப்பவே மும்பையில கேரவன் கல்ச்சர் இருந்துச்சு. இப்ப அங்க நானூறு வண்டிகள் இருக்கு. சீரியல், சினிமானு எல்லா படப்பிடிப்புகளுக்கும் வாடகைக்கு விடறாங்க.

அங்கிருந்து ஒரு கேரவனை விலைக்கு வாங்கிட்டு வந்தேன். அந்த வண்டியை சென்னைக்கு கொண்டு வந்ததும், உடனே வாடகைக்கு விட்டுடல. அதை அக்கு அக்கா பிரிச்சு மேய்ஞ்சேன். அதுல பிளம்பிங் ஒர்க் எப்படி பண்ணினாங்க... எலெக்ட்ரிக் ஒர்க் எப்படி பண்ணியிருக்காங்க... இப்படி பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

வீட்ல எலெக்ட்ரிக், பிளம்பிங் ஒர்க் பாக்கறது ஈஸி. ஆனா, வண்டி அப்படியில்ல. வண்டி ட்ராவல்ல இருக்கறதால, அசைவு இருக்கும். ஸோ, அதுக்கேத்த மாதிரி விஷயங்கள் பண்ணியிருப்பாங்க. மும்பையில் இருந்து கார்பெண்டர்ஸ், எலெக்ட்ரீஷியனை கூட்டிட்டு வந்து, மறுபடியும் கேரவனை ரீசெட் பண்ணினேன். கேரவன் ரெடியாகிடுச்சு.

ஆனா, யாருமே வாடகைக்கு கேட்டு வரல! நான் ‘விகடன்’ல இருந்ததுல ஒரு ப்ளஸ், எனக்கு சினிமா கான்டாக்ட்ஸ் அதிகம் கிடைச்சது.
மறைந்த காமெடி நடிகரும், புரொடக்‌ஷன் மேனேஜருமான கிருஷ்ணமூர்த்தி முதன்முதலா ஆர்டர் கொடுத்தார். அவர் கையால பணம் வாங்கின ராசிதான் இப்ப பதினாறு வண்டிக்கு சொந்தக்காரனா என்னை உயர்த்தியிருக்கு!

இப்ப நாங்களே டிசைனிங், ஃபேப்ரிகேஷனும் பண்றோம். கேரவன்கள்ல இப்ப நிறைய வசதி வந்துடுச்சு. வைஃபை உட்பட எல்லா வசதியும் உண்டு. வீட்ல உட்கார்ந்து லேப்டாப்ல ஒர்க் பண்ற மாதிரி, இதிலும் ஒர்க் பண்ண முடியும். சின்னதா கிச்சன் செட்டப்பும், கரண்ட் அடுப்பும் வச்சுக்க முடியறதால, டூர் போற இடங்கள்ல சமைச்சு சாப்பிட முடியும்.

எங்க வண்டிகள் எல்லாமே முழு ஆட்டோமெடிக். ஒரு பட்டனை தட்டினா, டாய்லட்ல இருக்கற செப்டிக் டாங்க் ஆட்டோமெடிக்கா க்ளீன் ஆகிடும்...’’ புன்னகைக்கும் அருணாசலம், இந்தத் துறைக்கு வந்து 18 வருடங்களாகிறது.

‘‘ஒவ்வொரு வருஷமும் புதுசு புதுசா கத்துக்கிட்டிருக்கேன். 2001ல முதல் கேரவன் வாங்கினப்ப சந்தோஷப்பட்டேன். ரெண்டாவது வண்டி வாங்கறப்ப நிறைய படிப்பினைகள். மதுரைல பாடிபில்டிங், இன்டீரியர் பண்ணினேன். வண்டி டாப்ல ஓட்டைகள் நிறைய இருந்திருக்கு. அதை தெரிஞ்சுக்காம, பிளைவுட் வச்சு இன்டீரியர் பண்ணிட்டோம்.

ஆறேழு மாசத்துல பிளைவுட்ல ஃபுல்லா தண்ணி இறங்கிடுச்சு. டோட்டல் இன்டீரி யரும் டேமேஜ். எட்டு லட்ச ரூபாய் லாஸ். எனக்கு அது பெரிய தொகை. இன்டீரியர் பண்றதுக்கு முன்னாடி ரெயின் டெஸ்ட் பண்ணணும்னு அப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒவ்வொரு கேரவன் ரெடி செய்யறப்பவும் மினிமம் இருபது புது விஷயங்களாவது கத்துக்கறேன். எல்லாமே என் சொந்த காசு. சொந்த முயற்சி, சொந்த ஐடியா. அதனாலதான் இப்ப பதினாறு வண்டிகளா பெருகியிருக்கு.

சில வண்டிகளை சேஸி மட்டும் வாங்கி, நாங்களே பாடி பில்டிங், இன்டீரியர்களும் பண்றோம். அப்படித்தான் ஆந்திரா சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ மூலமா ஜெகன்மோகன் ரெட்டி சாருக்கு தேர்தல் பிரசார வண்டி ஒண்ணு ரெடி பண்ணிக் கொடுத்தோம்! இப்ப அவர் சிஎம் ஆனதுல எங்களுக்கும் ஒரு ஹேப்பி. அது தவிர மஹேந்திரசிங் தோனி, சச்சின், பி.வி.சிந்து, லியாண்டர் பயஸ்னு பல ஸ்போர்ட்ஸ் ஆட்கள் விளம்பர ஷூட்டுக்கு சென்னை வரும் போதெல்லாம் நாங்கதான் வண்டி அனுப்பறோம்.

நம்ம பிரதமரும் சீன அதிபரும் சென்னை மகாபலிபுரத்துல சந்திச்சாங்க இல்லையா..? அப்ப அவருக்கு கேரவன் அனுப்பினோம்!
இங்க எல்லா ஹீரோக்களுக்கும் வண்டி அனுப்பியிருக்கோம். ‘சிவாஜி’ ஷூட்டிங் அப்ப ரஜினி சாருக்கு கேரவன் வேணும்னு திடீர்னு கேட்டாங்க. சொகுசு வசதி கேரவன்கள் எல்லாம் வேற படப்பிடிப்புகளுக்கு அனுப்பினதால, ரொம்ப ரொம்ப சுமாரான வண்டிதான் அன்னிக்கு எங்கிட்ட ஃப்ரீயா இருந்துச்சு.

அதை எப்படி அனுப்ப முடியும்னு யோசிச்சோம். ஆனா, அவங்க ‘என்ன கண்டிஷன்ல இருந்தாலும் பரவாயில்ல. உடனடியா வண்டி வேணும்’னு கேட்டு வாங்கிட்டுப் போனாங்க.ரஜினி சார் இதைப் பொருட்படுத்தாம தங்கினார். ‘இதுவே கம்ஃபர்டபிளா இருக்கு’னு ஹேப்பியானார்.
கமல் சார் அப்படியில்ல. வண்டியைப் பார்த்த செகண்ட்ல கண்லயே ஸ்கேன் பண்ணிடுவார். சின்ன ஃபால்ட் இருந்தாலும் கண்டுபிடிச்சிடுவார்.
மலையாள இண்டஸ்ட்ரீக்கு பிருத்விராஜ்ல இருந்து மோகன்லால் சார் வரை வண்டி அனுப்பியிருக்கோம். இப்ப எல்லார்கிட்டயும் சொந்த கேரவன் இருக்கு. கோலிவுட்ல விஜய் சார்கூட சொந்தமா கேரவன் வச்சிருந்தார். அப்புறம் அதை பராமரிக்க முடியலைனு வித்துட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார், சிவராஜ் குமார், சுதீப், இந்தி மாஸ் ஹீரோவான அக்‌ஷய்குமார்னு பலருக்கும் அனுப்பியிருக்கோம்...’’ என புன்னகைப்பவர், லாக்டவுனுக்குப் பிறகு கேரவன்களில் செய்திருக்கும் மாற்றம் குறித்தும் பேசினார்.

‘‘அடுத்தடுத்த லாக்டவுன்களால் திரையுலகமே திக்குமுக்காடிப் போயிருக்கு. பொதுமக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்போ, ஈவென்ட்டோ, அல்லது கட்சிக் கூட்டமோ பொதுக்கூட்டமோ நடக்கற இடங்களுக்குத்தான் கேரவன்கள் (வேனிட்டி வேன்கள்) தேவைப்படும். லாக்டவுனால எங்க தொழிலும் முடங்கிடுச்சு. வண்டியை ஓரிடத்தில் சும்மாவே நிறுத்தி வச்சா ரிப்பேராகிடும். சீட்டுகளை எலி கடிச்சுக் குதறிடும். அதுவாவது பரவாயில்லை. ஏசி, ஒயர்களை எல்லாம் கடிச்சி துண்டாக்கிடுது.

ஸோ, தினமும் பராமரிப்பு அவசியம். கடந்த சில மாதங்களா பிசினஸ் நடக்கல. வெளிய எங்கேயும் போகமுடியல. இந்த சூழல்ல என்னை ஆக்டிவ்வா வச்சிக்க, யூடியூப் சேனல் துவங்கியிருக்கேன். அதில் செய்திகளையும் வாசிக்கறேன். லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கும்போது, கேரவன் அனுப்ப ரெடியா கண்டிஷன்ல இருக்கு.

கேரவன்னாலே பிரைவசிதான். கூட்டம் கூடாது. கொரோனாவை தடுக்க சீட்களை மாத்தி அமைக்க வேண்டிய அவசியமில்ல. ஆனா, சானிடைசர் வச்சிருக்கோம். டிஷ்யூ, தண்ணீர் பாட்டில்கள், சோப் வசதிகளை அதிகப்படுத்தியிருக்கோம். டாய்லட்களை கூடுதல் கவனத்தோடு மேலும் சுகாதாரமா மாத்தியிருக்கோம்.

வண்டிகள்ல தடையில்லா தண்ணீர் வசதி இருக்கறதால, எப்பவும் கை, கால்களைக் கழுவி சுத்தம் பண்ணிக்க முடியும். படப்பிடிப்பு இருக்கும்போது அரசின் அறிவுறுத்தல்கள்படி, டெம்ப்ரேச்சர் பரிசோதனை செய்தபிறகே கேரவனைப் பயன்படுத்துவார்கள்...’’  புன்னகைக்கும் அருணாசலத்தின் யூ டியூப் சேனலை அவரது மனைவி வள்ளிதெய்வானை கவனித்துக் கொள்கிறார்.

மகனை கேரவன் பிசினஸில் ஈடுபடுத்தும் எண்ணத்தில் ஆட்டோமொபைல் படிக்க வைத்து, இப்போது என்ஃபீல்ட் கம்பெனியில் பயிற்சி பெற அனுப்பி வைத்திருக்கிறார். மகள் பி.காம் முதலாமாண்டு படிக்கிறார்.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்