கணித தேவி!



‘மனித கம்ப்யூட்டர்’ என்று புகழப்பெற்றவர் கணித மேதை சகுந்தலா தேவி. கம்ப்யூட்டரைவிட வேகமாகவும் துல்லியமாகவும் கணக்குப் போடுவதால் அவருக்கு இந்தப் புகழ். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பெங்களூருவில் பிறந்து, முறையான கல்வி கற்காமல், ஆங்கிலேயர்களே வியக்கும் அளவுக்கு கணிதத்தில் ஜீனியஸாகத் திகழ்ந்தார்.

கணிதம் சார்ந்து நிறைய புத்தகங்களை எழுதியிருக்கும் சகுந்தலா தேவியின் கணிதத் திறமை கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. அவரைப் பற்றிய இந்திப்படம்தான் ‘சகுந்தலாதேவி’.கடந்த வாரம் நேரடியாக ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் சகுந்தலாதேவியின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.

சகுந்தலா தேவியின் மீது அவரது மகள் அனுவே வழக்குத் தொடர்கிறார். எதற்காக அந்த வழக்கு? உலகம் போற்றும் ஒரு கணித மேதை தன் சொந்த மகளுக்கு எதிராக என்ன குற்றம் செய்துவிட்டார்? பார்வையாளன் யோசித்து முடிப்பதற்குள் சகுந்தலாதேவியின் வாழ்க்கை திரையில் விரிகிறது.

பள்ளி போகும் முன்பே பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ள கணக்குகளுக்கு அசால்ட்டாக விடை சொல்லும் திறன் வாய்ந்த குழந்தையாக இருக்கிறார் சகுந்தலாதேவி. அதுவும் மனதுக்குள்ளேயே கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போடும் திறமைசாலி.

மகளுக்கு இருக்கும் திறமையை அறிந்து பள்ளிக்கு அனுப்பாமல் கணக்கு ஷோவுக்கு அழைத்துப் போகிறார் தந்தை. நாடகம், இசைக் கச்சேரி போன்றவற்றுக்கு எப்படி மேடையிருக்கிறதோ அதுபோல கணிதத் திறமைகளைக் காட்ட ஒரு மேடை இருக்கிறது. அதில் பார்வையாளர்கள் கணிதம் சார்ந்து கடினமான கேள்வியைக் கேட்பார்கள். அதற்கெல்லாம் சில நொடிகளில் சகுந்தலா தேவி பதில் அளித்து ஆச்சர்யப்படுத்துவார்.

இப்படி கணித மேடையில் பங்கேற்பதால் சகுந்தலாவிற்கு கொஞ்சம் வருமானம் கிடைப்பதோடு அவரது புகழ் பரவத் தொடங்குகிறது.
சின்ன வயதில் இருந்தே யாரையும் சாராமல் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் இருக்க விரும்பும் சகுந்தலாவிற்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு துர்சம்பவத்தின் காரணமாக அம்மா மீது கடும் கோபம். அந்தக் கோபம் வெறுப்பாக மாறி அம்மாவுடன் எந்தவிதமான ஒட்டு உறவுமில்லாமல் சகுந்தலாதேவியை ஆக்கிவிடுகிறது.

வளர்ந்தபிறகு லண்டன் செல்கிறார். அங்கேயும் தன் கணிதத் திறமைகளைக் காட்டி புகழடைகிறார். அவரைப் பற்றி கேள்விப்படும் நாடுகள் எல்லாம் தங்களின் ஊர்களுக்கு வந்து கணித ஷோ நடத்த கோரிக்கை வருகிறது. அதனால் எப்போதும் பயணத்திலேயே இருக்கிறார். பணம் கொட்டுகிறது. இதற்
கிடையில் மனதுக்குப்  பிடித்தவரைத் திருமணம் செய்து ஒரு மகளுக்கு அம்மாவாகிறார். தான் செல்லும் இடங்களுக்கு மகளை அழைத்துச் செல்ல விரும்புகிறார். கணவர் மறுக்க, குடும்ப வாழ்வில் விரிசல் விழுகிறது.

மகள் வளர, வளர அம்மாவுக்கும் மகளுக்கும் முரண்பாடும் சண்டையும் அதிகரிக்கிறது. அது, மகளே அம்மா மீது வழக்கு தொடரும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. வழக்குக்குப் பின் நடக்கும் நெகிழ்ச்சி சம்பவங்கள்தான் க்ளைமேக்ஸ்.வெறும் சுயசரிதைப் படமாக மட்டுமல்லாமல் அம்மா - மகள் உறவுச் சிக்கலைப் பேசும் படமாகவும் ‘சகுந்தலா தேவி’யை இயக்கியிருக்கிறார் அனு மேனன்.

தான் அம்மாவாகி மகளுடன் பிரச்னைகள் ஏற்படும்போதுதான் தன் அம்மாவைப் புரிந்துகொள்கிறார் சகுந்தலாதேவி. அதேபோல் அனு அம்மாவான பிறகுதான் தன் அம்மாவைப் புரிந்துகொள்கிறாள்.வித்யா பாலன் சகுந்தலா தேவியாகவே வாழ்ந்திருக்கிறார்.  உண்மையில் இது வித்யா பாலனின் ஷோ!