சூப்பர் ஹீரோ(யின்)!



‘சூப்பர் மேன்,’ ‘ஸ்பைடர் மேன்,’ ‘பேட் மேன்’ என்று திரைப்படத்துறைக்கு அசாதாரணமான பங்களிப்பை வழங்கியிருப்பவர்கள் சூப்பர் ஹீரோக்கள்.
தங்களின் உயிரை துச்சமென மதித்து தீய சக்திகளிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற அரும்பாடுபடும் இவர்கள் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.  

இந்த வரிசையில் மூன்று வருடங்களுக்கு முன் சூப்பர் ஹீரோவாக  களமிறங்கியிருந்தாள் ‘வொண்டர் வுமன்’. சாகசம் செய்தது பெண்ணாக இருந்தாலுமே கூட ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படம் என்றே அழைக்கப்பட்டது ‘வொண்டர் வுமன்’.  இப்படம் சமீபத்தில் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி OTTயிலும் சக்கைப்போடு போடுகிறது. அதுவும் தமிழ் சப்டைட்டிலுடன்.

மனிதர்களின் நிழல் கூட படாத ஒரு ரகசிய தீவு தெமிஸ்கீரா. அங்கே அதீத சக்தி படைத்த அமேசான்ஸ் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இளவரசி டயானா. தீய சக்தியான ஆரிஸை அழித்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே அவள் வாழ்க்கையின் ஒரே நோக்கம். அதற்காக சிறு வயதில் இருந்தே போர்க்கலையையும், சாகசங்களையும் கற்றுவருகிறாள்.

மற்றவர்களிடம் இல்லாத அமானுஷ்யமான ஒரு சக்தி தன்னிடம் இருப்பதை உணர்கிறாள். அந்த சக்தி கிரேக்க கடவுளால் அவளுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டது. எதிர்பாராத ஒரு சமயத்தில் அமெரிக்க பைலட்டான ஸ்டீவ் வந்த விமானம் நொறுங்கி தெமிஸ்கீரா தீவைச் சுற்றியிருக்கும் கடலில் விழுந்துவிடுகிறது.தன் சக்தியைப் பயன்படுத்தி ஸ்டீவின் உயிரைக் காப்பாற்றுகிறாள் டயானா. அவன் மூலம் வெளி உலகில் நடந்துகொண்டிருக்கும் போரைப் பற்றி தெரிந்துகொள்கிறாள்.

இந்தப் போருக்கு ஆரிஸ்தான் காரணம் என்று நினைத்து, வொண்டர் வுமனாக அவதாரம் எடுக்கிறாள். ஸ்டீவுடன் வெளி உலகத்துக்குச் சென்று போரில் பலியாகின்ற அப்பாவி மக்களை வொண்டர் வுமன் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை ஆக்‌ஷன் தெறிக்க படமாக்கியிருக்கிறார்கள்.

வொண்டர் வுமனாக இஸ்ரேலிய நடிகை கேல் கடோட் நடித்திருக்கிறார். சில சண்டைக்காட்சிகளைப் படமாக்கியபோது கேல் கடோட் ஐந்து மாத கர்ப்பிணி! அதை கிராபிக்ஸ் மூலம் மறைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ்.

ஒரு பெண் நடித்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய முதல் பெண் இயக்குனர் இவர்தான்! வெறுமனே சூப்பர் ஹீரோ படத்துக்கு உண்டான அதிரடியான சண்டைக்காட்சிகள், சாகசங்கள், பிரமாண்டம் மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமாகவும் படம் நகர்கிறது.

அதீதமான சக்தி வாய்ந்த வொண்டர் வுமனின் இதயத்தில் சாதாரண மனிதனான ஸ்டீவ் மீது சுரக்கின்ற காதலை முகத்தில் வெளிப்படுகின்ற உணர்வு, புன்னகை வழியாக சொல்லியிருப்பது அழகு. இவையெல்லாம் ஆண்கள் இயக்கிய சூப்பர் ஹீரோ படங்களில் காணக்கிடைக்காதவை. கொரோனா மனது வைத்து திரையரங்குகள் திறக்கப்பட்டால் இதன் அடுத்த பாகமான ‘வொண்டர் வுமன் 1984’ வரும் அக்டோபரில் வெளியாகும்.