தென்னிந்தியர்களை புறக்கணிக்கிறதா இந்தித் திரையுலகம்..?
தன் தரப்பை முன்வைக்கிறார் மும்பையில் அசத்தும் நம்மூர் ஒளிப்பதிவாளர்
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ‘‘நான் இந்திப்படங்களில் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது...’’ எனச் சமீபத்தில் டுவிட்டினார்.இதனைத் தொடர்ந்து ஆஸ்கார் விருதை வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, ‘‘இந்திப் படங்களில் எனக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை...’’ என ஏ.ஆர்.ரஹ்மானை ஆமோதிக்க...பற்றி எரிகிறது. தென்னிந்திய நடிகர்கள், டெக்னீஷியன்களை பாலிவுட் புறக்கணிக்கிறதா என்ற கேள்வி 360 டிகிரியில் வலம் வரத் தொடங்கியிருக்கிறது.
 இதுபற்றி மும்பையில் பதினைந்து வருடங்களாக ஒளிப்பதிவு செய்துவரும் நம்மூர் டெக்னீஷியனான மனுஷ் நந்தனிடம் கேட்டோம். அமிதாப், அமீர்கான் கலக்கிய ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’, ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், செய்பவர். தமிழுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். கமலின் ‘மன்மதன் அம்பு’, பிரபுதேவாவின் ‘தேவி’ படங்களுக்கு மனுஷ் நந்தன்தான் கேமராமேன்! ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் சிஷ்யர் இவர்.
 ‘‘நான் சவுத் இந்தியன்தான். மும்பையில்தான் படங்கள் பண்ணிட்டிருக்கேன். என்னை ஒரு கேமராமேனா அடையாளம் காட்டினது இந்திப் படங்கள்தான். இந்தியே தெரியாமல் ரவி.கே.சந்திரன் சாரோட அசிஸ்டென்ட்டா மும்பை வந்து அஞ்சு வருஷம் இந்திப் படங்கள் ஒர்க் பண்ணினேன். என்னைப் பொறுத்தவரை, எனக்கு கிடைச்ச அனுபவத்துல பாலிவுட்ல சவுத் இந்தியன் கேமராமேன்கள்னாலே தனி மரியாதை உண்டு. சந்தோஷ்சிவன் சார், ரவி கே.சந்திரன் சார், மணிகண்டன் சார், கே.வி.ஆனந்த் சார், திரு சார், நட்டி சார்னு அவங்களோட ஒர்க்குக்காகவே மதிக்கப்பட்டிருக்காங்க.
அவங்க எங்களுக்கு ஒரு பாதை அமைச்சுக் கொடுத்திருக்கறதால, எங்களுக்கு எப்பவுமே நல்ல வரவேற்பு இருக்கு...’’ என ஆரம்பித்தார் மனுஷ் நந்தன். ‘‘நான் மும்பைக்கு வந்து பதினைஞ்சு வருஷங்களாச்சு. இங்கேயேதான் இருக்கேன். ஒர்க் பண்றேன். ஆனா, என்னை அடையாளப்படுத்தும்போது, ‘சவுத் இந்தியன் கேமராமேன்’னு தான் சொல்றாங்க. இவ்வளவுக்கும் மும்பைலதான் செட்டில் ஆகியிருக்கேன்.
சொல்லப்போனா இங்கே அது உல்டாவாதான் அமைஞ்சிருக்கு. ‘சவுத் இந்தியன் கேமரா மேனா..? அப்ப கேமரா ஒர்க் குவாலிட்டியாதான் இருக்கும். ஃபாஸ்ட்டா ஒர்க் பண்ணுவாங்க’னு சொல்லி கொண்டாடுவாங்க. இன்னொரு விஷயம், பாலிவுட்லேயே இருந்து கத்துக்கிட்டு, இந்திப்படம் பண்ணும்போது, அவங்க தெற்கா வடக்கானு வித்தியாசம் பார்க்கறதில்ல. ஆனா, நீங்க ரிஜனல் லாங்குவேஜ்ல டாப் கேமராமேனா இருந்தாலும், இங்க (இந்தியில்) படம் பண்றது டஃப்பாதான் இருக்குது. ஏற்கெனவே இந்தியில் பண்ணியிருந்தா மட்டுமே உங்கள ஒளிப்பதிவாளரா பார்க்க ஆரம்பிப்பாங்க. ‘இவர் தென்னிந்திய ஆளு. இவருக்கு படம் கொடுக்க வேணாம்’னு இதுவரை எனக்கு எந்த பிரச்னையும் வந்ததில்ல.
ரசூல் பூக்குட்டி சார் விஷயத்துல, அவர் தென்னிந்திய ஆளுங்கறதுனாலதான் படங்கள் இல்லாமல் போயிடுச்சுனு சொல்லலை. உதாரணமா, சிலர் பெரிய படங்கள் பண்ணும் போது, நார்த், சவுத் என்பதையும் தாண்டி... அவரை சின்ன, மீடியம் பட்ஜெட் படங்களுக்கு கூப்பிடத் தயங்குவாங்க. ‘அவர் பெரிய இடத்துக்கு போயிட்டார், அவரைக் கூப்பிட்டா செலவு வச்சிடுவாரோ’னு பேச்செல்லாம் எழும்.
ரசூல் சாரைப் பொறுத்தவரை அவர் ஆஸ்கார் அவார்டு வாங்கின பிறகுதான் ரிஜனல் லாங்குவேஜ் ஆட்களுக்கே அப்படி ஓர் ஆள் இருக்கார்னு தெரிய வந்தது. சிங் சவுண்ட் முறை, மும்பைல இருபது வருஷங்களுக்கு மேலா இருக்கு. ஆனா, தமிழ், மலையாளத்துல, ஒரு சில படங்கள்லதான் சிங் சவுண்டை யூஸ் பண்ணியிருக்காங்க. ரசூல் மாதிரி ஒருத்தர் ஆஸ்கார் வாங்கினதுக்குப்பிறகு தான், அந்த சவுண்டுக்கான முக்கியத்துவமே கொடுக்கப் பட்டிருக்கு.
இதை அவரே, ‘ஆஸ்காருக்கு அப்புறம், பாலிவுட் படங்களை விட, ரிஜனல் படங்கள்தான் அதிகம் தேடி வந்தது’னு சொல்லியிருக்கார். ரஹ்மான் சாருக்கு சொல்லப்பட்ட பிரச்னை வேறு. ரசூல் சாருக்கு சொல்லப்பட்ட பிரச்னை என்பது வேறு. நான் சொல்ற பிரச்னை வேறு. ஸோ, பொத்தாம் பொதுவா சவுத் இந்தியன்ஸ் புறக்கணிப்புனு சொல்லிட முடியாது. இங்க பெங்காலி கேமராமேன்ஸ், மலையாளி ஒளிப்பதிவாளர்கள்னு பலரும் இருக்காங்க.
சஞ்சய் லீலா பன்சாலியின் பூர்வீகம் குஜராத். ஆனா, அவரோட ஃபேவரிட் கேமராமேன் சுதீப் சாட்டர்ஜி, ஒரு பெங்காலிக்காரர். ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்வாவதி’ எல்லாம் சுதீப் சாட்டர்ஜி பண்ணினதுதான். சஞ்சய் லீலா பன்சாலி சாருக்கே ரவி கே.சந்திரன் சார் ரெண்டு படங்கள் பண்ணியிருக்கார். அவர் குஜராத்தி கேமராமேனை தேடிப் போகல. திறமை எங்கிருக்கோ, அங்கே வாய்ப்புகள் அமையும்...’’ என்கிறார் மனுஷ் நந்தன். பாலிவுட்ல நெப்போட்டிசம் அதிகம்னு பேச்சு இருக்கே..?
நெப்போடிசம் கிடையாதுனு சொல்ல முடியாது. ஆனா, எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. எங்க அப்பா பத்திரிகையாளரா இருந்தவர். நான் ரவி கே.சந்திரன் சார்கிட்ட சேர்ந்து மூணு மாசத்துக்குப் பிறகுதான் அவருக்கே நான் ஞாநியோட பையன்னு தெரியும்.
எங்க அப்பா என்னை நெப்போடிசம்னாலதான் சேர்த்துவிட்டார்னு சொல்லவும் முடியாது. நம்ம ஊர்லயும், எல்லா துறைகள்லயும்தான் நெப்போடிசம் இருக்கு. அதேநேரம், எந்தத் தொடர்புகளும் இல்லாம இந்தத் துறைக்கு வந்து சக்சஸ் ஆனவங்களும் உண்டு. ஸ்டார் கிட்ஸா இருந்து ஃபெயிலியரானவங்களும் உண்டு.
புதுசா வர்றங்க, எந்தவித தொடர்புகளும் இல்லாமல் இருந்தா, இங்க வந்து சேருவதற்கான கால அவகாசம் அதிகமாகும். ஷாரூக்கானில் இருந்து ரன்வீர் சிங் வரை பலருக்கும் எந்த ஃபேமிலி பேக்ரவுண்டும் கிடையாது. அதைப் போல தீபிகா படுகோனேல இருந்து கத்ரீனா வரை அவங்களுக்கும் பின்னணி கிடையாது.
பாலிவுட்ல ஒர்க்கிங் ஸ்டைல் எப்படி? இன்னமும் அங்கே எல்லாரும் லேட்டாதான் ஷூட்டுக்கு வருவாங்களா?
நம்ம ஊர்ல ரொம்ப வருஷமா சொல்லிட்டிருக்கற ஒரு கட்டுக்கதை இது. எப்பவோ அப்படி இருந்திருக்கலாம். ஏன், நம்ம ஊர்லயும் அந்தக் காலத்துல காலைல ஷாட் வச்சா தமிழ்லேயும் ஒருசில ஹீரோக்கள் ஷூட்டிங் வரமாட்டாங்கன்னு சொல்வாங்க. அந்த மாதிரி ஒருசில ஹீரோக்கள் இங்கேயும் இருந்திருக்காங்க; இருக்காங்க.
அதுக்காக ஒட்டுமொத்த தமிழ் இண்டஸ்ட்ரீலயும் லேட்டாதான் ஷூட் நடக்கும்னு சொல்ல முடியாது இல்லையா! ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ ஷூட்டிங் தாய்லாந்துல போச்சு. காலைல ஏழு மணிக்கு அமீர்கானுக்கு ஷாட் வச்சோம். ஷூட்டிங் நடக்கற இடத்துல இருந்து அமீர்கான் தங்கியிருக்கற இடத்துக்கு ட்ராவல் பண்ணவே மூணு மணி நேரமாகும். அமீர்கான் அதிகாலை மூன்றரை மணிக்கு ஹோட்டல்ல இருந்து கிளம்பி செட்டுக்கு ஆறே முக்காலுக்கு வந்திடுவார்.
அவர் போர்ஷன் ஷூட் பண்ணின பதினைஞ்சு நாளும் தினமும் ஆறே முக்காலுக்கு ஸ்பாட்டுல இருந்தார். அதேமாதிரி அமிதாப் சாரும். அக்ஷய்குமார் சாரும்... காலையில நாலு மணிக்கு வரச் சொன்னாலும் டாண்னு வந்து நிற்பாங்க. அக்ஷய்குமார் சார் எட்டு மணிநேரம்தான் ஒர்க் பண்ணுவார். அந்த எட்டுமணி நேரமும் நமக்கு ஃபுல் அவைலபிளா இருப்பார். நடுவுல கிளம்பி வேனுக்கு போற பழக்க வழக்கம் எல்லாம் அவர்கிட்ட கிடையாது. எல்லா ஹீரோக்களும் அவர்கிட்ட கத்துக்க வேண்டிய பாடமிது.
அங்கே படப்பிடிப்புகள் எப்ப ஆரம்பிக்கப் போறாங்க?
இப்ப விளம்பரப் பட ஷூட்டிங்குகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் நடந்திட்டிருக்கு. நான் ‘Gunjan Saxena’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். இந்தியாவின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட்டின் வாழ்க்கை வரலாறு பத்தின படம். அதுல தேவி மகள் ஜான்வி கபூர் நடிச்சிருக்காங்க. இந்த மாசம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுது. அடுத்து அக்ஷய்குமார் நடிக்கும் பீரியட் ஃபிலிமான ‘பிருத்விராஜ்’ பண்றேன். பெரும்பகுதி ஷூட் முடிஞ்சிடுச்சு. நிலைமை சரியானதும் பேலன்ஸ் ஷூட்டுக்கு கிளம்பிடுவோம்.
மை.பாரதிராஜா
|