தமிழ்ச் சுவடிகள் திருடப்பட்டு பல கோடிகளுக்கு விற்கப்படுகின்றன!
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் காப்பாற்றப்படுமா?
உலகப் புகழ்பெற்றது தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். இத்தாலியின் வாடிகன் நூலகத்துக்கு அடுத்து மிகப்பழமை வாய்ந்த நூலகம் இது. சில வருடங்களாகவே இங்குள்ள நூல்களும், ஓலைச்சுவடிகளும், பொக்கிஷங்களும் காணாமல் போகின்றன என பல புகார்கள். உதாரணத்துக்கு, 1715ம் ஆண்டு சீகன் பால்கு என்பவரால் அச்சிடப்பட்ட முதல் தமிழ் அச்சு நூலான ‘முதலாம் வேத ஆகமம்’ நூல், 2005ல் களவாடப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக ஒரு வழக்கு. இது ஒரு சோறு பதம் மட்டுமே.
 ‘‘39 ஆயிரம் ஓலைச் சுவடிகள், 69 ஆயிரம் புத்தகங்கள் என தமிழர்களின் புகழ்பேசும் இந்த நூலகம் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது என்று நம்புகிறார்கள். இது உண்மையல்ல. சோழர்கள் காலத்திலேயே இப்படிப்பட்ட ஒரு நூலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு ‘சரஸ்வதி பண்டாரம்’ என்னும் நூலகமாக செயற்பட்டது.
 ஆனால், சுவடிகள், புத்தக சேகரிப்பில் சரபோஜிதான் இதை பிரமாண்டமாக வளர்த்து எடுத்தார். அவரது காலகட்டத்தில்தான் இது ‘சரஸ்வதி மகால் நூல் நிலையம்’ எனும் பெயரில் உலகப்புகழ் அடைந்தது...’’ என்று ஆரம்பிக்கும் குடவாயில் பாலசுப்ரமணியன், நூலகம் தொடர்பாக வரும் புகார்கள் பற்றி விவரித்தார்.
‘‘நான் 27 வருடங்கள் புத்தக வெளியீட்டுத் துறையில் மேலாளராக பணியாற்றிவிட்டு 2006ல் ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து இந்த நூலகம் தொடர்பாக 6 வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் போட்டிருக்கிறேன். எல்லா வழக்குகளுமே அங்கே பணி செய்த கீழ்நிலை ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பானது. சில வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வந்ததால் சுமார் 25 குடும்பங்களின் உறுப்பினர்கள் அதன் பலனை அனுபவித்து வருகின்றனர்.
தவிர, ஒரு பொது வழக்கு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஒரு கோரிக்கையையும் வைத்திருக்கிறேன். மொத்தத்தில் நூலகத்தின் நிர்வாகம் கடந்த 20 வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது...’’ என்கிற குடவாயில் அதன் காரணங்களையும் அடுக்கினார். ‘‘நூலகத்துக்கு என தனிப்பட்ட இயக்குனரையோ அல்லது நிர்வாக அதிகாரிகளையோ அரசு இன்னும் நியமிக்கவில்லை. அதனால் சர்ச்சைகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
எங்கேயும் கிடைக்காத அரிய வகை சுவடிகள் இங்குள்ளன. இதைக் காப்பாற்றுவதற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் எந்த வழியுமில்லாமல் நிர்வாகம் சீர்கெட்டுக் கிடக்கிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு மொழிக்கும் சில ஜாம்பவான்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு சுவடியையும் சோதித்து புத்தகங்களாக பதிப்பிப்பார்கள்.
இப்போது அதில் பெரிய குறைபாடு நிலவுகிறது. நல்ல அதிகாரிகள் இந்த நூலகத்துக்குப் பொறுப்பேற்கும்போது எதிர்கால சந்ததிக்குப் பயன் படும்படியான ஒரு காரியத்தை ஆற்றமுடியும்...’’ என்று குடவாயில் பாலசுப்ரமணியன் முடிக்க, இளம்வயது முதலே இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வரும் அறிஞர் பொ.வேல்சாமி தொடர்ந்தார்.
‘‘நம்மைவிட பிரிட்டிஷ் அரசே இந்த நூலகத்தை சிறந்த முறையில் பராமரித்தது. அவர்கள் காலத்தில்தான் ஆங்கிலேயரான பர்னல், தமிழரான உலகநாதன் பிள்ளை போன்றவர்கள் நூலகத்தில் இருந்த சுவடிகளுக்குப் பட்டியல் தயாரித்தார்கள். சரபோஜி இறந்தபிறகு மன்னரின் சொத்துக்களைப் பராமரிக்க ஆங்கிலேயர்கள் ஒரு துறையை ஏற்படுத்தினார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட அந்தத் துறையே நூலகம் போன்ற சொத்துக்களைப் பராமரித்து வந்தது.
இதனால் நூலகத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு மிக சொற்ப ஊதியமே வழங்கப்பட்டது. அந்த ஊழியர்களும் இந்த சொத்துக்களின் மதிப்பு தெரியாமலேயே இருந்தார்கள். உதாரணத்துக்கு, இந்த நூலகத்தில் வேலை செய்த ஒருவரின் பேரன் எங்கள் பள்ளியில் படித்தான். அவன் ஒவ்வொரு நாளும் நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை பள்ளிக்கு எடுத்து வருவான். இதுமாதிரி பல புத்தகங்கள் காணாமல் போயிருக்கலாம்..’’ என்ற பொ.வேல்சாமி, இளமையில், தான் நூலகத்தில் பார்த்த புத்தகங்கள் பற்றியும் பேசினார்.
‘‘இங்கே மராத்தி, தெலுங்கு, சமஸ்கிருத சுவடிகள்தான் அதிகம். தமிழ்ச் சுவடிகள் மிக காலந்தாழ்த்தியே வந்தன. காரணம், தமிழில் சுவடிகள் இருக்கின்றனவா என்பதே ஒரு விபத்தான கேள்வி மூலமே நிகழ்ந்தது. இந்த வரலாற்றை தமிழ்த் தாத்தா உ.வே.சா தன் சுயசரிதையில் சொல்கிறார். அதாவது, சரபோஜி ஒருமுறை காசி சென்றிருக்கிறார். அப்போது ஓர் ஆங்கிலேயன் திருக்குறள் பற்றிக் கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொல்ல சரபோஜிக்கு விருப்பமில்லை. ஊர் திரும்பிய சரபோஜி தமிழ்ச் சுவடிகளைத் தேடும்படி அரண்மனை ஊழியர்களுக்குக் கட்டளையிடுகிறார். அதன்பிறகே தமிழ்ச் சுவடிகள் நூலகத்தில் இடம்பிடிக்கிறது.
அத்துடன் சரபோஜி ஒரு மராட்டியரா என்பதே சர்ச்சையான விஷயம்தான். காரணம், சரபோஜியை வளர்த்தது ஸ்வார்ட்ஸ் என்ற ஒரு வெளிநாட்டுப் பாதிரியார். தஞ்சை மராத்திய ஆட்சியில் வாரிசு பற்றிய ஒரு பிரச்னையால் சரபோஜி மன்னராக முடிசூட்டுகிறார். பாதிரியாரிடம் படித்ததால் சரபோஜிக்கு பல மொழிகள் அத்துப்படி. இதனால்தான் அவர் 5000க்கும் மேற்பட்ட ஜெர்மன், ஆங்கில, மற்றும் பிரஞ்சு மொழியிலான புத்தகங்களைச் சேமித்தார்.
ஹிட்லரைப் பற்றிய ‘என் சரித்திரம்’ என்ற இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகம் எல்லாம் அங்கே படித்திருக்கிறேன். அதேபோல் தமிழரான சாமிநாத சர்மா 1936ல் எழுதிய இட்லர் புத்தகத்தையும் அங்கேதான் படித்தேன். 1800ல் வெளியாகிய ‘கிழக்கிந்திய கம்பெனி’ எனும் ஆங்கில நூலையும் அங்கே படித்தேன்...’’ என்று சொல்லும் பொ.வேல்சாமி, நூலகத்தில் வெளியாகிய தமிழ் மற்றும் இன்னும் பிற வெளியீடுகள் பற்றியும் நினைவுகூர்ந்தார்.
‘‘இன்றைய மொழியியலுக்கு சவால்விடக்கூடிய தொல்காப்பியத்துக்கான ‘தெய்வச்சிலையார் உரை’, ரிக்வேதத்தின் பல சொற்களுக்குப் பொருள் கூறும் ‘யாஸ்கர் நிருக்தம்’, கதிரைவேற்பிள்ளை என்னும் ஈழத்து தமிழ் அறிஞர் பற்றி திரு.வி.க எழுதிய ‘வாழ்க்கை வரலாறு’, தமிழ் இலக்கணங்களுக்கு சரியான விளக்கம் சொல்லும் தி.வே.கோபாலய்யர் உரையுடன் பதிப்பித்த ‘இலக்கண விளக்கம்’ மற்றும் ‘இலக்கண பிரயோகம்’, உலகளவில் முதல்முறையாக ஒரு பெண் காமம் தொடர்பாக பேசிய புத்தகமான ‘ராதிகா சாந்தவனம்’, மராத்தியர் காலத்தில் தமிழ் நிலத்தில் பெண்களுக்கு இருந்த மோசமான நிலையைப் படம்பிடித்துக் காட்டும் 3 பாகங்களாக வெளியிடப்பட்ட ‘மோடி ஆவணங்கள்’, சிவாஜியின் வரலாற்றைச் சொல்லும் ‘சிவபாரத சரித்திரம்’ ஆகிய இந்த நூலகத்தின் பொக்கிஷங்கள் தமிழர்கள் மறக்கக்கூடாதது...’’ என பெருமூச்சுவிடும் பொ.வேல்சாமி, ‘‘நூலகம் நசிந்ததற்கான காரணம் நிர்வாக ஒழுங்கின்மை...’’ என்று குற்றம் சாட்டினாலும் அதையும் தாண்டி உள்ள சில கோளாறுகளையும் சுட்டிக் காட்டினார்.
‘‘நம்மிடையே உள்ள பல பொக்கிஷங்களின் மதிப்பு நமக்கே சரிவர தெரிவதில்லை. ஒருகாலத்தில் இங்கே பெரும் ஆசிரியர்கள் எல்லாம் இருந்தார்கள். ஒவ்வொரு சுவடியையும் புத்தகமாக வெளியிடும்போது ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு முன்னுரையை எழுதுவார்கள். இந்த முன்னுரையே ஒரு கடலாக இருக்கும்.
அதேபோல ஒவ்வொரு சுவடியும் முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணமாக, 1750களில் முத்துப்பழனி எனும் ஒரு தேவதாசியால் எழுதப்பட்ட ‘ராதிகா சாந்தவனம்’ ஒரு தெலுங்குச் சுவடி. பிரதாப சிங்கன் என்னும் மன்னனின் பல மனைவியருள் முத்துப்பழனியும் ஒருவர்.
முத்துப்பழனி அழகும், திறமையும் நிறைந்த ஒரு பெண்மணி. அந்தக் காலத்தில் ‘கத்திக் கல்யாணம்’ என்னும் ஒரு முறை இருந்தது. அதாவது மன்னன் நகர்வலம் வரும்போது பாதையில் ஓர் அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் அரண்மனைக்கு வந்தபிறகு தாம்பாளத்தில் ஒரு கத்தியை வைத்து வீரனிடம் கொடுத்து அந்தப் பெண் வீட்டுக்கு அனுப்புவான்.
வீட்டுக்கு வரும் வீரனின் தாம்பாளத்தில் ஒரு பூமாலையை சாத்திவிட்டு அந்தப் பெண் அந்த வீரனுடன் வந்துவிடவேண்டும். இல்லையேல் நடக்கிற காரியம் வேறு. இதைத்தான் ‘கத்திக் கல்யாணம்’ என்பார்கள். இதன் மூலம் மன்னனின் மனைவியானவர் முத்துப்பழனி. ஆனால், பிறகு இந்த முத்துப்பழனி கணவனை இழந்து வீழ்ச்சி அடைவார். அந்தக் காலத்தில் கணவன் இறந்தபிறகு வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது. செய்தால் அரண்மனை கொடுக்கும் உதவி எல்லாம் நின்றுவிடும். இப்படியான ஒரு காலத்தில்தான் முத்துப்பழனி இந்தப் படைப்பை எழுதுகிறார்.
1895ல் இதை சுவடியிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுகிறார் இன்னொரு தேவதாசி. அவர் பெயர் பெங்களூர் இராஜரத்தினம் அம்மாள். இந்தப் புத்தகத்தை வெளியிட பல தடைகள், எதிர்ப்புகள் வருகின்றன. அனைத்தையும் மீறி இது திலகரின் செல்வாக்கால் வெளியாகிறது.
இப்படி சரஸ்வதி மகாலின் ஒவ்வொரு சுவடியிலும், புத்தகத்திலும் இந்தியரின், தமிழரின் வரலாறு ஒளிந்திருக்கிறது. இதுபோலத்தான் மோடி ஆவணங்களும், பெண்கள் எப்படி போகப்பொருள் மாதிரி விலைக்கு விற்கப்பட்டார்கள் அல்லது கடத்தப்பட்டார்கள் என்பதை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தது.
இந்த மோடி ஆவணங்கள் 3 தொகுதிகள்தான் வந்திருக்கிறது. இன்னும் ஏராளமான மோடி ஆவணங்கள் மூட்டை மூட்டையாகக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்றால் நூலகத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எல்லோரும் முன்னெடுக்க வேண்டும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் பொ.வேல்சாமி.
டி.ரஞ்சித்
|