ரத்த மகுடம்-110



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘காபாலிகன்...’’ ஒன்றுக்கு இருமுறை உரக்கப் படித்தார் சாளுக்கிய மன்னர். ‘‘சுங்கத் தலைவரே...’’ நிமிர்ந்தார் விக்கிரமாதித்தர். ‘‘புலவர் தண்டியின் ஒற்றர் படையில் சைவ, வைணவ, சாக்த, கெளமார, புத்த, சமணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பணிபுரிவதாகவும்... எட்டுத் திசைகளிலும் அலைந்து திரிந்து ஒற்று அறிந்து அதை அவரிடம் ஒப்பிப்பதாகவும் கேள்விப்பட்டேன்... உண்மையா..?’’

‘‘தெ...ரி...யா...து... மன்னா... அது... அரசு உள்விவகாரம்... என்னைப் போன்ற சாமான்யனுக்கு இந்த விஷயங்கள் குறித்த அறிவு மருந்துக்கும் இல்லை.. சுங்கச் சாவடி அரசு உள்விவகாரத்தில் வராதா..?’’ சாளுக்கிய மன்னர் சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்தி அங்கிருந்த அலுவலர்களை அலசினார். ‘‘புலவர் தண்டியின் ஒற்றர்கள் இந்த சுங்கச் சாவடியிலும் இருக்கிறார்களா..?’’ சுங்கத் தலைவருக்கு வியர்த்தது.

‘‘புரிகிறது... ஒற்றர்கள் எப்பொழுதும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்... எனவே உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...’’
அப்பாடா என சுங்கத் தலைவர் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் அவரது சுவாசத்தையே இறுகப் பிடிக்கும் வகையில் வினா ஒன்றைத் தொடுத்தார் விக்கிரமாதித்தர்.‘‘கையும் களவுமாக பிடிபட்டாலும், தான் ஒற்றர்தான் என்பதை எந்த சாமான்யன் ஒப்புக் கொள்வான்..?’’
பூமி பிளந்து தன்னை அப்படியே உள்ளே இழுக்காதா... சுங்கத் தலைவர் தவித்தார்.

‘‘நீங்கள் காபாலிக பிரிவைச் சேர்ந்தவரா..?’’

‘‘இல்லை மன்னா... சைவன்...’’‘‘ஆமாம்... உங்கள் நெற்றியிலுள்ள பட்டையும் கழுத்தில் தொங்கும் ருத்திராட்சமும் நீங்கள் சைவர்தான் என்பதை அறிவிக்கின்றன... ம்... சுங்கத் தலைவரே... பல்லவர்களின் ராஜகுருவான புலவர் தண்டியின் ஒற்றர் படையில் ஒரேயொரு காபாலிகன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்... காஞ்சியை நாங்கள் கைப்பற்றிய அன்று கரிகாலனுடன் அந்த காபாலிகன் மல்லைக் கடற்கரையில் சுற்றியதை என் ஒற்றர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அதன் பிறகு அவனைக் குறித்த எந்த விவரத்தையும் நான் கேள்விப்படவில்லை.  எங்கு சென்றான் அந்த காபாலிகன்... உங்களுக்குத் தெரியுமா..?’’‘‘சகலமும் அறிந்த தங்களுக்கே தெரியாத விவரம் எ...ன...க்...கெ...ப்...ப...டி...’’ ‘‘...தெரியாமல்தான் காபாலிகன் கொடுத்திருக்கும் இந்தச் சுவடியை புலவர் தண்டியிடம் ஒப்படைப்பதற்காக உங்கள் இடுப்பு அஸ்திரத்தில் மறைத்து வைத்திருந்தீர்களா..?’’
‘‘...’’

‘‘இதற்கு மேலும் நீங்கள் மெளனமாக இருப்பதில் அர்த்தமில்லை சுங்கத் தலைவரே... சொல்லுங்கள்... இந்த காபாலிகன் யார்..? புலவரின் ஒற்றர் பிரிவைச் சேர்ந்த அதே காபாலிகனா..?’’ கேட்டபடியே எழுந்த விக்கிரமாதித்தர், நிதானமாக சுங்கத் தலைவரை நெருங்கி அவரது கண்களை நெருக்கமாக உற்றுப் பார்த்தார்.

‘‘அல்லது காபாலிக வேடம் தரித்த பல்லவர்களின் முக்கியஸ்தனா..?’’‘‘பல்லவ அரச குலத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒருவராக அந்த காபாலிகன் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்...’’ அழுத்தமாகச் சொல்லிவிட்டு ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனையும் பார்த்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.

‘‘எதன் அடிப்படையில் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் மன்னா..?’’ விநயாதித்தன் கேட்டான்.‘‘உன் பாட்டனார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து பாண்டிய மன்னர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்...’’ அமைதியைக் கிழித்தான் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன்.

தன் மகனைப் பார்த்து அரிகேசரி மாறவர்மர் புன்னகைத்தார். ‘‘ரணதீரன் குறிப்பிடுவது சரி... பெரும் படையுடன் வாதாபியில் இருந்து புறப்பட்டு வந்த சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை சாதாரண ஓவியன் வேடம் அணிந்த ஒருவர் சந்தித்து பேசினார்... ஓவிய வேடத்தில் வந்தவர் வேறு யாருமல்ல... அப்போதைய பல்லவ மன்னரான மகேந்திரவர்மர்! தமிழகம் முழுக்க அன்றும் இன்றும் பரவலாக சிலாகிக்கப்படும் இந்த சம்பவத்தைத்தான் நானும் என் மகனும் குறிப்பிடுகிறோம்...’’

‘‘அப்படியானால்... அப்படியானால்...’’  ஸ்ரீராமபுண்ய வல்லபர் மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் திணறினார்.‘‘வாய்ப்பில்லை மன்னா...’’ பட்டென்று விநயாதித்தன் பதில் அளித்தான். ‘‘தன் நாட்டைக் காப்பாற்ற வக்கற்று ஓடி ஒளிந்தவர் பல்லவ மன்னனாக அரியாசனத்தில் அமர்ந்திருந்த பரமேஸ்வர வர்மர். தன் பாட்டனார் போல் அவர் ஒன்றும் ராஜதந்திரி அல்ல. அப்படியிருந்திருந்தால் சாளுக்கியப் படைகள் காஞ்சியை நெருங்கும் வரை எதுவும் தெரியாதவராக இருந்திருக்க மாட்டார்.

அடிப்படையில் அவர் கோழை. எந்நேரமும் ஈசனைத் துதித்து பொழுதைக் கழிப்பவர். அரசராக இருக்கத் தகுதியற்றவர். அப்படிப் பட்டவர் காபாலிகன் வேடமணிந்து... ம்ஹும்... வாய்ப்பில்லை மன்னா...’’இரணதீரனின் கண்கள் இடுங்கின. ‘‘ஒரு நண்பனாக சொல்கிறேன் விநயாதித்தா... ஒருபோதும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடாதே... அதுவும் நாளை சாளுக்கிய தேசத்தையே ஆளுப் போகிறவன் நீ... அப்படியிருக் கையில் அண்டை நாட்டு அரசர்களை...’’‘‘...பகையாளியை...’’ விநயாதித்தனின் கண்கள் கனலைக் கக்கின.

‘‘சரி, எதிரியை... சாதாரணமாக நினைத்து விடாதே...’’‘‘ரணதீரா... நடைபெறவிருக்கும் போரில் பல்லவ அரசகுலமே பூண்டோடு அழிந்து விடும்...’’
‘‘எண்ணம் வேறு நடப்பு வேறு விநயாதித்தா...’’ அரிகேசரி மாறவர்மரின் குரலில் ஆழ்ந்த சிந்தனை வெளிப்பட்டது.‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... நடப்பை... நடக்கப் போவதைத்தான் குறிப்பிடுகிறேன்... பல்லவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு படைகளைத் திரட்டி வந்திருக்கிறோம்...’’

‘‘பிறகு ஏன் பாண்டியர்களின் உதவியை நாடி இங்கே வந்திருக்கிறீர்கள்..?’’ புருவத்தை உயர்த்தியபடி கேட்டார் பாண்டிய மன்னர். ‘‘பொறு... நட்பு சக்தி தேவை என்ற எண்ணத்தில் என்றுதானே பதில் அளிக்க முயல்கிறாய்..? சாளுக்கியர்கள் சார்பில் நீங்கள் இருவரும் மதுரைக்கு வந்திருப்பதையோ பாண்டியர்களிடம் தோழமை பாராட்ட முயல்வதையோ நான் தவறென்று சொல்லவில்லை... போலவே போரில் பல்லவ குலத்தை அழித்து விடுவோம் என்ற உன் நம்பிக்கையையும் நான் தகர்க்க விரும்பவில்லை... ஆனால்... இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதே என்றுதான் நினைவூட்டுகிறேன்...’’‘‘யார் அவன்..?’’  ராமபுண்ய வல்லபர் கேட்டார்.

அரிகேசரி மாறவர்மரும் இரணதீரனும் ஒரே குரலில் பதில் அளித்தார்கள். ‘‘சோழ இளவரசனான கரிகாலன்...’’ கரிகாலனின் பின்னந்தலை சிகையை கெட்டியாகப் பிடித்தாள் சிவகாமி. ‘‘நீங்கள் யார்... என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... என்பதை அறிவேன்...’’ பரந்து விரிந்திருந்த அவன் மார்பில் தன் கொங்கைகளை அழுத்தினாள். ‘‘நீங்கள் ஆடும் ஆட்டத்தின் விளைவாக இந்நேரம் மதுரை மன்னர் சாளுக்கிய இளவரசனிடமும் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடமும் தமிழகத்தின் வேர்களாக இருக்கும் பதினைந்து சிற்றரசர்களைக் குறித்து சொல்லிக் கொண்டிருப்பார்...

சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரோ மல்லை சுங்கச்சாவடி தலைவனிடம் பதினைந்து வணிக சாத்துகளைக் குறித்து விசாரித்துக் கொண்டிருப்பார்... ஆனால், நீங்கள் உட்பட ஒருவராலும் நான் எழுதிய ஓலையில் இருக்கும் மறைபொருளைக் கண்டறியவே முடியாது... நடக்கவிருக்கும் போரில் பல்லவர்கள்...’’‘‘...தோற்க மாட்டார்கள்...’’ சிரித்த கரிகாலன் தன் முகத்துக்கு நேராக இருந்த அவளது கீழுதட்டைக் கவ்வி தன் நாக்கால் அவளது ஈறுகளைத் தேய்த்தான். ‘‘அடி வேஷக்காரி! உன் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கிவிட்டேன்!’’  

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்