இடஒதுக்கீடு இந்திய மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியிருக்கிறது திமுக!



கடந்த வாரம் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்ப்பைத் தந்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.இதற்காக உச்சநீதி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரை தொடர்ந்து வாதிட்டும் பேசியும் வந்தவர் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன்.

‘‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் கடந்தாண்டு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது என் முதல் பேச்சே இடஒதுக்கீடு பத்தினதுதான். இதை எங்கள் தலைவர் ஸ்டாலின்தான் பேசச் சொன்னார்.
தவிர, சிறப்பு கவனஈர்ப்பு மூலமும் மக்களவையில் பேசினேன். பிறகு, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு ஒரு கடிதமும் எழுதினேன். அதில், எப்படி தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக 50% இடஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் மறுக்கப்படுகிறது என்றும், மாநிலத்திலுள்ள 69% இடஒதுக்கீடு கொடுக்காமல் வஞ்சிப்பது பற்றியும் எடுத்துக் கூறினேன்.

அதற்கு மத்திய அமைச்சர் 18.12.2019ல் ஏன் இடஒதுக்கீடு தர முடியாது என்பதற்கு மூன்று காரணங்களைக் கூறி பதில் கடிதம் அனுப்பினார்.
அதன்பின்பு அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நான் நேரடியாகச் சந்தித்து அரசு இழைக்கும் அநீதியை சுட்டிக் காட்டினேன். அவர், அதிகாரிகளைக் கலந்தாலோசித்து என்னை விவாதத்திற்கு அழைப்பதாகச் சொன்னார். ஆனால், 11.4.2020ல் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாமல், முதுநிலை படிப்புக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது...’’ என்ற வில்சனிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

இடஒதுக்கீடு ஏன் தேவை?
காலம் காலமாக சில சமூகப் பிரிவினர் அரசு நிர்வாகத்திலும், கல்வியிலும் ஒதுக்கி வைக்கப்பட்டே வந்தனர். இது பல தலை
முறைகளாக நடந்து வந்தது. அந்த சமூகப் பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஒரு தீர்வாகவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. இதுக்கும் பொருளாதாரத்திற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. இது அதிகாரம், கல்வி, நிர்வாகம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் உரிமை.

1950ல் சம்பகம் துரைராஜன் என்ற ஒரு மாணவி வகுப்புவாரி அரசாணையை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அப்போது நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு இருந்தது வந்தது. அந்த வழக்கில் சம்பகத்துக்கு ஆதரவாக இடஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பானது.

பிறகு மாநில அரசு, உச்சநீதி மன்றம் போனது. அங்கேயும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரி எனத் தீர்ப்பானது. இதனால், பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. தமிழகத்தில் திமுக பல கட்ட போராட்டங்கள் நடத்தியது. 1951ம் ஆண்டு நேரு தலைமையிலான மத்திய அரசு, அரசி யலமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் ஒரு உட்பிரிவை ஏற்படுத்தி சாதிவாரி இடஒதுக்கீட்டுக்கு சட்ட ஏற்பு வழங்கியது.

இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தம். இந்தத் திருத்தமே அன்று முதல் இன்று வரை இடஒதுக்
கீட்டுக் கொள்கைக்கு ஆதாரமாக விளங்குகிறது. பின்னர், 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி வி.பி.சிங் அரசு ஓபிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது.

இப்போதைய பிரச்னை என்ன?

இப்படி போராடிப் பெற்ற ஒதுக்கீட்டை நேர்மையாக அமல்படுத்தாமல் ஒரு தரப்பினருக்குக் கொடுத்து ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினரை ஏமாற்றி வஞ்சிப்பதுதான் பிரச்னை.அதற்கு முன்பு அகில இந்திய கோட்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 1984ல் பிரதீப்குமார் ஜெயின் வழக்கின் வழியே இந்த அகில இந்திய கோட்டா உருவாக்கப்பட்டது.

அதற்கு என்ன காரணம் என்றால்... 1984க்கு முன்பு இந்தியாவில் சில மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளே கிடையாது. அந்த மாநிலங்களில் நன்றாக படித்து மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை.

இதனால், அவர்கள் சில மாநிலங்களுக்குப் போகும்போது அங்கே இடஒதுக்கீட்டுக் கொள்கை இருந்தது. அதன்படி மாநிலத்தில் வசிப்பவர்களுக்கே இடஒதுக்கீடு உரிமை என இருந்தது. இதனால், பிரதீப்குமார் ஜெயின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ‘மாநிலத்தில் வசிப்பவர்களுக்கே உரிமை எனச் சொல்லக்கூடாது. இளநிலையில் 15%மும், முதுநிலையில் 50%மும் எந்த இடஒதுக்கீடும் இல்லாமல் வைக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதேபோல் மத்தியஅரசும் தன் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதே சதவீத இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்
என்றது. இந்த இடங்கள் எல்லாமும் சேர்ந்து அகில இந்திய கோட்டாவாக வரவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒரு பொது நுழைவுத் தேர்வை நடத்தி அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும், இந்தத் தேர்வை எல்லா மாநில மாணவர்களும் எழுதி அந்த இடங்களுக்குப் போகட்டும் என்றும் அந்த வழக்கில் தீர்ப்பானது.

இப்படியாக அகில இந்திய கோட்டா உருவானது. ஆனால், இதன்பிறகே சிக்கல் ஆரம்பமானது. இந்த பிரதீப்குமார் ஜெயின் வழக்கில் எந்த இடஒதுக்கீடும் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியிருந்தது. ஆனால், நாளடைவில் மாநிலங்களில் இடஒதுக்கீடு அதிகரித்ததும் அவர்களால் இந்த அகில இந்திய கோட்டாவுக்குப் போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியவில்ைல.

அதாவது, மாநிலங்களுக்கே இடங்கள் போதவில்ைல. இதனால், 2007ல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அபேநாத் என்பவர் ெதாடுத்த வழக்கில் அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டது. அப்போது எஸ்சி, எஸ்டிக்கும் சேர்த்து உச்சநீதிமன்றம் அனுமதி தந்தது. இதனால், அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு வந்தது.

இதற்கிடையில் 2006ம் ஆண்டு, ‘மத்திய கல்வி நிறுவனங்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு சட்டம்’ வந்தது. அதில், ஓபிசிக்கு 27%, எஸ்சிக்கு 15%, எஸ்டிக்கு 7.5% கொடுக்கப்பட்டது. மொத்தமாக, 49.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினர்.

இந்தச் சட்டம் 2008ல் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது 2019ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (EWS) கொண்டு வந்த 10% ஒதுக்கீட்டை செயல்படுத்துகின்றனர். ஆக மொத்தம் 59.5% இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி மத்திய கல்வி நிறுவனங்களில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆனால், மாநில மருத்துவக் கல்லூரிகளில் இருந்து கொடுக்கப்படும் அகில இந்திய கோட்டா இடங்களுக்கு எஸ்சி 15%, எஸ்டி 7.5% பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்தனர். அபேநாத் வழக்கைக் காரணம் காட்டி ஓபிசிக்கு இடஒதுக்கீட்டை மறுத்தனர்.பிறகு, 2010ம் ஆண்டு மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா ஓர் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தது.

அதன் ஒரு பிரிவில், எல்லா மருத்துவ இடங்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும் என்றும், அந்த இடங்களுக்கு மாநிலத்தில் என்ன இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதோ அதையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அகில இந்திய கோட்டாவுக்கு மட்டும் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஹெல்த் சர்வீஸஸ், அதாவது சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் ஒரு கவுன்சிலிங் அதிகாரியாக இருந்து தேர்வை நடத்துவார் என்றும் சொல்லப்பட்டது.

இதன்மூலம் முதன்முதலில் மாநில அரசு அளிக்கும் அகில இந்திய கோட்டாவிற்கான இடங்களில் மாநில இடஒதுக்கீடு உருவானது.
ஆனால், 2013ல் உச்சநீதிமன்றத்திற்கு நீட் வழக்கு போனதும் அங்கே அகில இந்திய கோட்டாவிற்கான மாநில இடஒதுக்கீடு ரத்தாகி விடுகிறது. பல் மருத்துவ படிப்புகளுக்கு 2012ல் கொண்டு வந்த ஒழுங்குமுறையும் ரத்தானது.

அதன்பிறகு, 2014ல் பதவியேற்ற பாஜக அரசும், மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவும் நீட் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு, 2010 மற்றும் 2012ம் ஆண்டு களில் கொண்டு வரப்பட்ட அந்த ஒழுங்குமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

இதன்படி மாநிலம் தரும் அகில இந்திய கோட்டாவிற்கான இடங்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என்னும் விதிகள் உயிர்பெற்றன.
ஆனால், மத்திய அரசு இடஒதுக்கீடு விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2016ல் இருந்து அகில இந்திய கோட்டாவுக்கான மாநில மருத்துவ இடங்களுக்கு இடஒதுக்கீடு தரவில்லை. இதற்காகவே வழக்குத் தொடுத்தோம்.

வழக்கு பற்றி..?

இந்த வழக்கை கடந்த மே 28ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். கடந்தாண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த இடஒதுக்கீடு சம்பந்தமாக நான் மாநிலங்களவையில் பேசியதையும், அமைச்சருக்கு கடிதமும் எழுதியதையும், அதற்கு அவர் பதில் கடிதம் அளித்ததையும் மேலே சொன்னேன் அல்லவா?

அந்தக் கடிதத்தில், இடஒதுக்கீடு கொடுக்க முடியாததற்கு அமைச்சர் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்று மாநிலத்துக்கு மாநிலம் இடஒதுக்கீடு மாறுபடுகிறது. இரண்டு, மாநிலங்களில் இடஒதுக்கீடு சட்டம் இல்ைல. மூன்றாவது, சலோனி குமாரி வழக்கு நிலுவையில்
இருக்கிறது.

இதில், மாநிலங்களில் இடஒதுக்கீடு சட்டம் இல்லை என்பது தவறானது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.அடுத்து, சலோனிகுமாரி வழக்கு. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சலோனிகுமாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ‘மத்திய அரசு ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு தருகிறது. அதேபோல மாநிலத்திலும் ஓபிசிக்கு 27% ஒதுக்கீடு ஏன் தருவதில்லை’ எனக் கேட்டிருந்தார்.

அந்த வழக்கில் மத்திய அரசு ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், ‘அகில இந்திய கோட்டாவில் அந்த மாநிலத்தில் இருக்கும் இடஒதுக்கீட்டைத் தரத் தயார். ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்தமும் 50%குள்தான் இருக்க வேண்டும்’ என்றது. நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்யும்போது இங்கேயும் அதையே மத்திய அரசின் வழக்கறிஞர் சொன்னார்.

அதற்கு நான், ‘நீங்களே மாநிலத்தில் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டை தரத் தயார் எனச் சொல்கிறீர்கள். எங்கள் மாநிலத்தில் 69% இடஒதுக்கீடு இருக்கிறது. அப்படியிருக்கும் போது 50%குள் கொடுக்கலாம் எனச் சொல்வதில் நியாயமில்ைல.
 
அடுத்து, நீங்கள் மத்திய தொகுப்பு இடங்களில் 59.5% ஒதுக்கீட்டை கொடுக்கும் போது மாநில ஒதுக்கீட்டை ஏன் தடுக்கிறீர்கள்? இது சரியில்ைல. 2010ல் கொண்டு வந்த ஒழுங்குமுறையில் மாநில இடஒதுக்கீடு தரவேண்டும் எனத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால், அதையே நீங்கள் பின்பற்ற வேண்டும்’ என வாதிட்டேன்.

இந்த வழக்கு முதலில் உச்சநீதிமன்றத்துக்குப் போனபோது நீதிபதிகள் உயர்நீதிமன்றத்துக்குப் போங்கள் என்றனர். உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் சலோனிகுமாரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்றனர்.

அதனால், மறுபடியும் உச்சநீதிமன்றத்துக்குப் போனோம். என் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், சலோனி குமாரி வழக்கிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனத் தீர்ப்பளித்தனர். அத்துடன், உயர்நீதிமன்றத்திலே விசாரணை செய்ய அனுமதி தந்தனர்.

அதன்படி ஜூலை 17ம் தேதி வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. எங்கள் வாதங்களை எல்லாம் முன்வைத்தோம். அதில்தான் அகில இந்திய கோட்டாவில் மாநில அரசு தரும் ஒதுக்கீட்டு இடங்களில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பானது.

மத்திய, மாநில அரசுகளின் சுகாதார செயலாளர்கள் மற்றும் மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவை அமைத்து மூன்று மாதத்திற்குள் இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அப்போது மாநில இடஒதுக்கீடான 69%ஐ மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் எவ்வளவு இடங்கள்?

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஆண்டுக்கு 860 சீட் கொடுக்கின்றனர். நம் மாநில இடஒதுக்கீட்டுப்படி ஓபிசிக்கு 50%. ஆக, 430 இடங்கள் ஓபிசிக்கு முதுநிலைப் படிப்பில் வரும். இளநிலையில் 506 சீட். இதில் ஓபிசிக்கு 253. ஒட்டுமொத்தமாக இளநிலை, முதுநிலை ஒதுக்கீடுகளில் ஓபிசி ஒதுக்கீடு மூலம் நமக்கு 683 இடங்கள் இருக்கிறது.

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக 2,732 இடங்கள் ஒதுக்கீடு மூலம் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கிறது. இந்த ஆண்டையும் கணக்கில் சேர்த்தால் 3,415 இடங்கள்! இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டிருக்கு. இதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இதுதான் எங்கள் கேள்வியாக இருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் இனி அடுத்த ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு 683 இடங்கள் ஓபிசி ஒதுக்கீட்டில் கிடைக்கும்.

இதுதவிர, மாநில இடஒதுக்கீடான பட்டியல் இன மாணவர்களுக்கு 18% என்பதற்கு பதில் 15% ஒதுக்கீடு என 3% குறைவாக மத்திய அரசு கொடுக்கிறது. இதிலும் ஒவ்வொரு வருடமும் முதுநிலை படிப்பில் 25 இடங்களும், இளநிலை படிப்பில் 15 இடங்களும் பட்டியல் இன மாணவர்களுக்கு கொடுக்காமல் வஞ்சித்தது.

இந்த தீர்ப்பினால் இனி அவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அந்த இடங்கள் கிடைக்கும்.இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாணவர்களும் இடஒதுக்கீடு பெற வழிவகை செய்கிறது.

எனவே, மத்திய அரசு இந்தத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதன்மூலமே சமூகநீதிக்கு இழைத்த அநீதியை சரி செய்யமுடியும்!l

பேராச்சி கண்ணன்