Coffee day குழுமத்தில் என்ன நடக்கிறது..? கோடீஸ்வரரின் தற்கொலை மர்மம்..!



கடந்த வருடம் ஜூலை மாதம் ‘காபி டே’ குழுமத்தின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டபோது இந்திய வணிக உலகமே அதிர்ச்சியடைந்தது. தாங்கவியலாத கடன் சுமை மற்றும் வரி நிலுவைகள் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக மறைந்த சித்தார்த்தா எழுதி வைத்திருந்த கடிதம் பற்றியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

அவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு அப்படி என்ன கடன் என்றே அனைவரும் நினைத்தனர். சித்தார்த்தா இறந்த கையோடு ‘காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்கள், மறைந்த இயக்குநரின் கடிதம் உட்பட நிறுவனத்தின் பல்வேறு ஆவணங்களை விசாரிக்க ஆணையிட்டனர்.
சிபிஐயின் பொது இயக்குநர் அசோக்குமார் மல்ஹோத்ரா, அவஸ்தா சட்ட நிறுவனத்தின் எம்.ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் இந்தப் பணியை முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் தொடக்க கட்ட ஆய்வில் ‘காபி டே’ நிறுவனம் மற்றும் ‘மைசூர் அமால்கமேடட் காபி எஸ்டேட்’ ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான முறையற்ற பணப் பரிவர்த்தனைகள், குளறுபடிகள், போதிய ஆவணங்கள், காரணங்கள் ஏதுமற்ற கணக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இவை சட்டத்துக்குப் புறம்பானவை. ஏமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்யப்பட்டவை என்கிறார்கள்.

சித்தார்த்தாவின் குடும்பத்தினரும் ‘காபி டே’ குழுமத்தினரும் இந்த ஆய்வறிக்கை பற்றி எந்தவிதமான எதிர்வினையும் செய்யவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.சுமார் 3500 கோடி முதல் 4000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தத் தொகை வேண்டுமென்றே திட்டமிட்டு ‘மைசூர் அமால்கமேட்டட்’ கம்பெனிக்கு திருப்பப்பட்டு அங்கிருந்து ‘காபி டே’வுக்கும் சித்தார்த்தாவுக்கும் தனிப்பட்ட முறையில் வாரி வழங்கப்பட்டிருக்கிறது.

‘காபி டே’ பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை அதிக விலைகொடுத்து வாங்குவது (பின்னர் விலை உயர்ந்த பிறகு திருப்பித் தருவதான உத்தரவாதத்தின் பேரில்) உட்பட பல்வேறு செயல்களுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சித்தார்த்தாவின் கடித்ததில் குறிப்பிட்டிருப்பதைப் போன்ற பெரிய வரிச்சுமைகள் எதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்கிறார்கள்.

சித்தார்த்தாவின் மிதமிஞ்சிய கடன் வாங்கும் போக்குதான் ‘காபி டே’வை முடக்கியிருக்கிறது. சில சமயங்களில் 18 - 20% வட்டிக்குக் கூட கடன் வாங்கியிருக்கிறார்கள். இதனால் கடந்த 2019ம் ஆண்டு வரை பத்தாயிரம் கோடியை கடன் சுமை நெருங்கிவிட்டிருக்கிறது.
சரி, இத்தனை கோடி கடன் வாங்கும் அளவுக்கு ‘காபி டே’ பெரிய நிறுவனமா..?

இல்லை என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். கடந்த 2015ம் ஆண்டுதான் சித்தார்த்தா தனது ஹோல்டிங் கம்பெனியான ‘காபி டே’வின் பங்குகளை பொதுவில் வெளியிட்டார். அப்போது ‘காபி டே’வுக்கு அப்படி ஒன்றும் பெரிய வருமானம் இல்லை. ஆனால், அதனிடம் 49 துணை நிறுவனங்கள் இருந்தன.

இதில், ‘காபி டே க்ளோபல்’ என்னும் காபி விற்பனை கஃபேக்கள், சிகால் லாஜிஸ்டிக்ஸ், டேங்கிளின் ரியல் எஸ்டேட் டெவலப்மெண்ட், காபி டே ரெசார்ட், வே டு வெல்த் செக்யூரிட்டிஸ் ஆகியவையே செயல்படும் நிறுவனங்கள்.

இத்தனை நிறுவனங்களும் சேர்ந்துதான் ‘காபி டே’ குழுமத்தின் வருமானம், கடந்த மார்ச் 2019 அன்று, நான்காயிரத்து நானூற்று அறுபத்து ஆறு கோடியாக இருந்தது. மற்றபடி ‘காபி டே’ என்ற காபி கஃபேவின் உண்மையான வருமானம் வெறும் 124 கோடிகள்தான். இது காபி விற்பனை மற்றும் ஆய்வுகள் மூலம் கிடைத்த விவரம்.

பனிரெண்டாயிரம் ஏக்கர் அளவிலான காபி எஸ்டேட்கள், மரம் மற்றும் அறைக்கலன் வணிகம், தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள், மைண்ட்ரீ போன்றவற்றிலான முதலீடுகள், பார்மா நிறுவன முதலீடுகள் ஆகியவை சித்தார்த்தாவின் தனிப்பட்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பலவற்றால் ஆனது.

இதில் மைசூர் அமால்கமேட்டட் நிறுவனத்துக்கு ஆயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் உள்ளது. இந்த நிறுவனத்தின் 90% பங்குகள் சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டேவிடம் உள்ளது. அவர் தனது மகன் இறந்த மறுமாதமே உயிரிழந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் ஒரே ஒருமுறைதான் பெங்களூர் மற்றும் சென்னை பங்கு வர்த்தக மையத்தில் விற்பனையைச் செய்துள்ளது. இதில் மிகச் சிறிய அளவே மக்களின் பங்குத் தொகை இருக்கிறது.

கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தின் ஆதாரங்களின்படி இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு மிகச் சிறியதாகவே உள்ளது. அதாவது கடந்த 2019ம் நிதியாண்டில் வெறும் முப்பது கோடி ரூபாய் அசையா சொத்து மட்டுமே உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2017 - 18ம் ஆண்டுகளில் நான்கு கோடி ரூபாய் மட்டுமே வருமானம் என்றும், சுமார் எண்பது கோடி ரூபாய் நஷ்டம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு குறைவான வருமானமும் நஷ்டமும் உள்ள நிறுவனம் நான்காயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது!
இதில் பெரும்பகுதிக் கடன் தொகை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கியவைதான்.

சரி... இப்படி வாங்கப்பட்ட கடன் தொகை எங்கே சென்றது..? அது சித்தார்த்தாவுக்கும் அவரின் நிறுவனங்களுக்கும் கடனாகச் சென்றுள்ளது!
இந்த நிதிச் சுழற்சி ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு என்று மாறி மாறிச் சென்றுள்ளது. ‘காபி டே’வின் துணை நிறுவனங்களிடமிருந்து தொகை பெறப்பட்டதாக சில குறிப்பேடுகள் சொல்கின்றன. அதே சமயம் அந்தத் தொகைகள் முழுதாகவோ, பகுதியாகவோ திரும்பச் செலுத்தவும்பட்டுள்ளன.

உதாரணமாக, மைசூர் அமால்கமேட்டட் காபி நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் மூன்றாயிரத்து ஐநூற்று முப்பத்தேழு கோடியை சித்தார்த்தாவுக்கு கடனாக வழங்கியுள்ளது. அதே ஆண்டில் டேங்கிளின் டெவலப்மெண்ட் இரண்டாயிரத்து நூற்று எழுபத்தேழு கோடியை மைசூர் அமால்கமேட்டட் நிறுவனத்துக்கு திரும்பக் கொடுத்திருக்கிறது.

‘காபி டே க்ளோபல்’ பெற்றுக்கொண்ட தொகை மூன்றாயிரத்து எந்நூற்று நாற்பது கோடி. இதில், மூன்றாயிரத்து எழுநூற்று எழுபத்தொன்பது கோடி ரூபாய் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.சித்தார்த்தா போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை முற்றிலும் வட்டியற்றது மற்றும் எப்போது செலுத்த வேண்டும் என்ற கால வரையறையும் இல்லாதது!

இதில் இன்னொரு பெரிய நகைச்சுவை என்னவென்றால், இவ்வளவு பெரிய தொகைகள் சுழற்சியில் கடனாக பெறப்பட்டும் திருப்பித் தரப்பட்டும் இருப்பதைப் பற்றி எல்லாம் ‘காபி டே’ குழுமத்தின் பிற இயக்குநர்கள் உட்பட எவருக்குமே எதுவுமே தெரியாது என்பதுதான்! போர்டு மீட்டிங்குகளிலும் இதற்கான பதிவுகள் எதுவுமே இல்லை என்கிறார்கள்.

பூனையைத் தூக்கி பானையில் போடு... பானையைத் தூக்கி யானையில் வை... யானையைக்கொண்டு போய் ஆற்றில் விடு... என்பதுபோல் எதையோ செய்ய முயன்றிருக்கிறார்கள். கடைசியில் எல்லாமும் கெட்டு குட்டிச் சுவராகியிருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொரு விஷயமாக வெளியே வரத் தொடங்கியிருக்கிறது!  

இளங்கோ கிருஷ்ணன்