லவ் ஸ்டோரி-காதலுக்குத் தினம் ஏது... தினமும்!
இயக்குநர் ஃபெரோஸ் நடிகை விஜயலட்சுமி
கொஞ்சமும் கணிக்க முடியாத திரைக்கதை, புதிய களம் என ‘பண்டிகை’யில் இறங்கி அடித்தார் இயக்குநர் ஃபெரோஸ். அவரோடு காதலில் கனிந்து வாழ்க்கையில் இணைந்தவர் நடிகை ‘சென்னை 28’ விஜயலட்சுமி. வேறுவித சூழல், மதம் என குறுக்கீடாக இருக்கிற காலத்தில் காதல் உணர்வாக பொங்கி பெருக்கெடுத்ததில் இயல்பாகப் பொருந்தினார்கள். தேடலில் தீராததுதானே காதல்! இதோ அவர்களே பகிர்ந்து கொள்கிறார்கள்...
 ஃபெரோஸ் விஜியைப் பார்க்காமல் அதிகபட்சம் இரண்டு நாளைக்கு மேல் தாக்குப் பிடிச்சதில்லை. காதல் பரிசா என்னென்ன தருவாங்க? பூக்கள், மோதிரம், ஐஸ்க்ரீம், கிரீட்டிங் கார்டு… ஆனால், நாங்கள் பதினைஞ்சு வருஷங்களையே காதலுக்குப் பரிசாகத் தந்தோம்! ‘காதலுக்குத் தினம் ஏது... தினமும்!’னு ஒரு கவிதை உண்டு. ஒவ்வொரு நாளும் புதுசாப் பிறக்கிறோம். தினம் தினம் காதலுடன்தான் வாழ்கிறோம்.
 எங்க இரண்டு பேருக்குமே ஒருத்தருக்கொருத்தர் விட்டுட்டு இருக்கமுடியாது. என்னோட ஆபீஸ் கூட வீட்டுக்குள்ளேதான் இருக்கு. அழகான ஆரம்பங்கள் ரசிக்கும்படியானவை. முதல் தடவையாக என் சிநேகிதி அஸ்வினி வீட்டிற்கு பிறந்தநாளுக்கு போயிருக்கேன். கொஞ்ச நேரம் இருந்திட்டு சரி கிளம்பலாம்னு நினைக்கிறபோது உள்ளே விஜி நுழையறாங்க.
திடீர்னு அந்தப் பொண்ணு என் மனசை அள்ளிருச்சு, ‘நம்ம ஆளு இதுதான்டா’னு மணியடிக்குது. இப்பவும் நம்ப முடியாத, அழகான தருணமாக அந்தக் கணம் உறைஞ்சு போய் நிற்குது. 20 வயதிலேயே இவளைப் பார்த்திட்டேன். முதலில் மனதில் நுழைந்த பெண் இவள்தான். முதல் தடவை, ‘தயவு செய்து அறிமுகப்படுத்தேன் அஸ்வினி’னு கேட்கிறேன். ‘ஐயா சாமி, முடியாது. அவள் அவ்வளவு சுலபத்தில் பேசமாட்டாள்’னு சொல்றாள்.
புறப்படத் தயாராக இருந்தவன், அங்கேயே சுத்தி சுத்தி வர்றேன். அப்படியே சின்னச் சின்னதா, அழகா வார்த்தைகளைக் கோத்து எடுத்துப் பேசுறாங்க. அப்படியே கிறங்கி விழணும் போல இருக்கு.இத்தனைக்கும் நான் வேற மதம். ஆனால், ஒரு நாளும் அதைக் குறிப்பிட்டு பேசினதில்லை. வேடிக்கையாகக் கூட சொன்னதில்லை. எனக்கு முதலில் அவங்களை சந்திக்கும் போது இயக்குநர் அகத்தியன் சார் பொண்ணுன்னே தெரியாது. விஜிங்கிற பெயர் அப்படியே கூடி கூடி மனசுக்குள்ளே சுத்துது.
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு மியூசிக் டைரக்டர் ஆதித்யன் பொண்ணுன்னு நினைச்சுக்கிறேன்! பிறகு அகத்தியன் சாரை சந்திக்கிறேன். அப்படியே நண்பன் மாதிரி அவ்வளவு இயல்பாக பேசுகிறார். அவ்வளவு பெரிய டைரக்டர். டயர் ஒட்டிட்டு சின்னப்பிள்ளை மாதிரி இயல்பா இருக்கார். வெளியே பார்த்தா ஒரு மனுசனைத் தெரியும். உள்ளே பார்த்தா வேறு மனுசனா தெரியும். ஆனால், இவரோ ஒரே ஆள். நான் அந்த வீட்டுக்குப் போய் சகஜமா இருக்கிறதும், சந்தோஷமா பேசுறதும், சினிமா பத்தி விவாதிக்கிறதும் அவ்வளவு சுலபமாக இருக்கு.
பேரன்பு நிறைஞ்சு கிடக்கிற தகப்பனைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. அப்புறமும் கல்யாணம் நடக்க சில சிரமங்கள் இருந்தது. விஜயலட்சுமி என் மேல் அவருக்கு அன்பு மிகுந்து போச்சுன்னு பார்த்தாலே தெரியுது. ஐயா பாட்டுக்கு காதலைச் சொல்லிட்டார். பதில் சொல்ல நான்தான் நாற்பது நாளுக்கு மேலே எடுத்துக்கிட்டேன்.
நான் விரும்பின ஒருத்தரை விட்டுடக்கூடாதுன்னு தீர்மானம் வந்திடுச்சு. அப்பாகிட்டே சொன்னால் பளிச்னு சிரிச்சு சரி சொல்றார். அப்புறம்தான் ஃபெரோஸ்கிட்டே சரி சொல்றேன். எதுவுமே வேண்டாம். ஃபெரோஸ் மட்டும் போதும்னு தோணிச்சு. அப்பவே மனசால் நான் ஃபெரோஸோடு வாழ ஆரம்பிச்சிட்டேன். அப்படி எங்க காதலை ஆரம்பிக்கும் போதே அவங்க வீட்டில் அவரை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பறாங்க. நாலு வருஷப் படிப்பு. அய்யா என்னைப் பார்க்க முடியாமல் தவிச்சுப்போய் நாலு மாதத்திற்குள்ளே மறுபடியும் இங்கே வந்திடுறார்.
மறுபடியும் அவங்க வீட்டில் துபாய்க்கு வேலைக்கு அனுப்புறாங்க. அங்கேயும் நிலை கொள்ளாமல் சார் ரிடர்ன் ஆகிவிடுகிறார். ‘நீதான் எனக்கு எல்லாமே... நீயில்லாத உலகத்தை என்னால் நெனச்சுக்கூட பார்க்க முடியாது’ என்று முறுக்கிக்கொண்டு திமிறுகிற காலங்கள். எங்கள் மனதிற்குள் வானவில் மாதிரி ஒரு வாழ்க்கையை ஆரம்பிச்சு சேர்ந்து வாழ பிரியப்பட்டோம்.
ஃபெரோஸ் வீட்டில் எங்களை இறுதியாகப் புரிந்துகொண்டார்கள். எங்களின் அன்பு நிஜமாகியிருப்பதைப் பார்த்து அவர்கள் வீட்டில் சம்மதம் சொன்னார்கள். சக பயணியாக, புன்னகைக்கிற முகமாக, கூடவே நடந்து வரும் தோழனாக... எல்லாமுமாக இருக்கிறார் ஃபெரோஸ். 15 வருஷங்கள் காதலிச்சு, 5 வருஷங்கள் தாம்பத்தியத்தில் இருந்து இன்னும் எங்களுக்குள் காதல் தீரலை…
சொன்ன நேரத்திற்குப் பிந்தினால் தவித்துப் போகிறோம். ஹாலுக்கும், வாசலுக்குமாக நடந்து, நிலா பார்த்து, வானம் வெறித்து கிடக்கிறோம். இப்பவும் அப்படித்தான். லாக்டவுன்ல பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலைன்னு நண்பர்கள் புலம்பினால் நாங்க ஒருத்தருக்கொருத்தர் பார்த்து மௌனமா சிரிச்சுக்கிறோம்!
ஃபெரோஸ் அப்புறம் மகன் நிலன் வந்து சேர்ந்தான். வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதுன்னு சட்னு புரிஞ்சது. எங்களின் தீராத அன்பின் அடையாளத்தை துள்ளத் துடிக்க என் கைகளில் கொண்டு வந்து கொடுக்கும் போது பரவசமாகிடுச்சு. கண்ணீர் ஆனந்தமா பெருகி வெளியே வரவான்னு பார்க்குது.
எங்க அம்மா ஞாபகம் வருது. என்னை ஆறாவது படிக்கும்போது கூட இடுப்புல வைச்சு தூக்கிட்டுப்போய் சமையலறை திண்டுல வைச்சு சாதம் ஊட்டியது ஞாபகம் வருது. எட்டாவது படிக்கிற வரைக்கும் அம்மா மடியில் படுத்திட்டுத்தான் தூக்கக் கலக்கத்தில் எழுந்து படுக்கைக்கு போனது கண்ணில் நிக்குது!
நான் குழந்தையாக இருந்தது கடந்து, என் கையில் குழந்தைன்னு கண்ணுல தண்ணி கட்டுது!மனசுக்கு சந்தோஷம் தருகிற எல்லாமே அழகானதுதான். வாழ்க்கையில் அப்பப்போ ஏதாவது அற்புதம் நடந்துகிட்டுத்தான் இருக்கு. எனக்கான ரசனைகளுக்கும், அவளுக்கான விருப்பங்களுக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். நான் நானாகவும், அவள் அவளாகவும் இருக்கக் கடவதே காதல்!
நா.கதிர்வேலன்
|